"சாதி ஒழித்திடல் ஒன்று நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால்
பாதி துலங்குவ தில்லை" - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
தந்தை பெரியார் (1879-1973 ) அண்ணல் அம்பேத்கர் (1891- 1956 ) தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு சிங்காரவேலர் (1860-1946) போன்ற முக்கிய ஆளுமைகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்தான் பாவேந்தர் பாரதிதாசன் ( 1891-1964 ) எனவே இவர்களது கருத்துக்கள் பாவேந்தரை மிகவும் ஈர்த்தன என்பதை உணர முடிகிறது. ஆனால் அவரது சிந்தனை பல்வேறு பரிணாமங்களுக்குப் பிறகுதான் முழுப்பரிமாணம் பெற்றுள்ளது என்பதும் கருதத்தக்கது.
1913 ஆம் ஆண்டில் சரசுவதி பற்றியும், பராசக்தியைப் பற்றியும் பாரதிதாசன் அவர்கள் "ஆத்மசக்தி" இதழில் எழுதியுள்ளார்.
பசுவைத் தெய்வமாகவும், பாரத மாதாவைப் பராசக்தியாகவும் கண்டு எழுதிய பாடலும், காந்தி புகழ்ப் பாடல்களும், பிற தேசிய கீர்த்தனைகளும் "தேச சேவகன்" இதழில் வெளியாகி உள்ளன.
1920-ல் மயிலம் ஸ்ரீஷண்முகம் வண்ணப் பாட்டு, 1925-ல் மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம், 1926-ல் மயிலம் சுப்பிரமணியர் துதியமுது ஆகிய கவிஞரது பக்திப்பாடல்கள் வெளியாயின.
1922-ல் பாரத தேவியிடம் குடியர் தம் தெளிவு கூறல் எனும் பாடல் வேந்தேமாதரம்" இதழில் வெளியானது.
பாரத நாட்டின் விடுதலை பற்றிய பாடல்கள" மேணிக் கொடி" இதழில் வெளியாகியுள்ளது.
இப்படிப் பக்திப் பாடல்களைத் தொடர்ந்து இயற்றிக் கொண்டிருந்த கனகசுப்புரத்தினம், பாரதி மற்றும் பெரியார் ஆகியோரது செல்வாக்குக்கு உட்பட்டுப் பாரதிதாசனாக உருமாறுகிறார்.
பாரதியுடன் தொடர்பு
"1908-ல் பாரதி, புதுச்சேரி வருகிறார். அவர் புதுச்சேரி வந்த ஓரிரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அவரோடு எனக்குப் பழக்கம் ஏற்படுகிறது. அப்பொழுது நான் 20 வயதுக் காளை............ அவருடனான தொடர்பு என்பழக்க வழக்கங்களிலும் சிந்தனையிலும் என்னை அறியாமலே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைக் காலப் போக்கில் நானும் உணரத் தொடங்கினேன் சுப்புரத்தினமாக இருந்த நான் பாரதிதாசனாக மாறத் தொடங்கினேன்" எனப் பாவேந்தரே கவிஞர் முருகுசுந்தரம் அவர்களிடம் கூறியுள்ளார்.
இந்திய தேசியவாதி
இளமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களோடு இணைந்து செயல்பட்ட மாடசாமி போன்றவர்களுடன் கவிஞர் தொடர்பில் இருந்தார். 1910 காலகட்டத்தில் இந்திய விடுதலைக்குப் போராடி வந்த தேசபக்தர்கள் காவல்துறையிடமிருந்து தப்பிக்க உதவியதோடு அவர்களைப் பாதுகாக்கவும் கவிஞர் உதவினார். பிரித்தானிய ஆட்சியர் ஆஷ் துரையைச் சுடுவதற்கான துப்பாக்கியைப் பாரதிதாசன்தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னாளில் கவிஞர், காந்தியவாதியாக மாறி 1920 ஆம் ஆண்டு சத்தியாக்கிரக இயக்கத்திலும் பங்கு கொண்டார். மேலும் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டி ச்சுதந்திரன்" என்ற ஏட்டில் கவிதைகளை எழுதினார். தொடர்ந்து 1930ல் கதர் இராட்டினப் பாட்டு, சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிட்டார். அத்துடன் கதர்த்துணியைத் தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றார். தவிரவும், மதுவிலக்குப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
பெரியாருடன் பாரதிதாசன்
1928-ல் பெரியார் புதுச்சேரிக்கு ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொழுது, அக்கூட்டத்திலிருந்த பாரதிதாசன் பெரியாரது உரையால் மிகவும் கவரப்பட்டார். இத்தகைய தாக்கம் அவரது சிந்தனைப் போக்கைத் தலைகீழாக மாற்றியது.
"பெரியார் தோற்றுவித்த 'குடி அரசு' இதழ் சாதி மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, வருணாசிரம எதிர்ப்பு ஆகியவற்றைத் தீவிரமாக வெளிப்படுத்தியது. பாரதிதாசன் இந்த இதழால் கவரப்பட்டார். சுயமரியாதை வீரரானார். 1938இல் குடி அரசு ஏட்டில் பெரியார், "தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமன்றி, அவைகளை ஜன சமூகத்தில் பல வழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும் சுருக்கமாகவும் கூற வேண்டுமானால், பாரதிதாசன் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி என்றுதான் கூறவேண்டும் -என்று எழுதியுள்ளதைக் கவிஞரின் மகனார் மன்னர் மன்னன் சுட்டிக் காட்டுகிறார்.
'குடி அரசு' உண்டாக்கிய மாற்றம்
கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், கதரே உடுத்தும் தேசபக்தராகவும் விளங்கிய பாரதிதாசனைச் சுயமரியாதை வீரராக்கியது பெரியாரின் 'குடி அரசு' ஏடு. புதுவையில் நடந்த சுயமரியாதைப் பொதுக் கூட்டத்திற்கு வந்த பெரியாரைப் பாரதிதாசன் பாட்டு வரவேற்கின்றது.
சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா!
- என்று பெரியாரைப் போற்றும் கவிஞரின் கவிதை 'குடி அரசில்' வெளியிடப்படுகின்றது. அதன் பிறகு கடவுளர்களைப் பாடுவதைக் கவிஞர் அறவே விட்டு விட்டார்.
"சாதி வேற்றுமை சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமானால் குடியரசின் கொள்கைகளை அஞ்சாது கொள்ளத்தான் வேண்டும்"
என்று கவிஞர் கூறினார். கவிஞருக்கு ஊரில் இதனால் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. ( தரவு-சுயமரியாதை உலகில் பெரியாருடன் பாரதிதாசன் Tamil Virtual Academy இணையக் கட்டுரை )
1925 ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து தந்தை பெரியார் வெளியேறி, 02/05/1925 அன்று "குடிஅரசு" பத்திரிகையைத் துவக்கிச் சுயமரியாதைக் கொள்கையை விளம்பரப் படுத்தி எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது.
சுயமரியாதைக் கருத்துக்களால் ஈர்க்கப் பட்ட பாவேந்தர், அதைப் பரப்புவதற்காகச் சிவப்பிரகாசம், நோயெல் ஆகிய நண்பர்களோடு இணைந்து "புதுவை முரசு" எனும் இதழைத் தொடங்கினார். அதில் பல புனைப்பெயர்களில் கவிதை, கட்டுரை, தலையங்கம் எனப் பாரதிதாசன் எழுதினார்.
குத்தூசி குருசாமி, பூவாளூர் பொன்னம்பலனார் போன்றோரும் "புதுவை முரசு" பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்துள்ளனர். ஆனால், இவ்விதழ் பிறகு நிறுத்தப்பட்டது.
சீர்திருத்தக்கவி
சுயமரியாதைக் கருத்துக்கள் கவிஞரிடம் மேலோங்கிய பின், காந்தியம் குறித்து அவரது கருத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக 1931 ஆம் ஆண்டில் புதுவை முரசில் கவிஞர் எழுதிய கட்டுரையாகிய "காந்தீயம் சாக்குருவி- தேச காரியத்தை ஏழைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்" எனும் கட்டுரையில் இது தெளிவாகப் புலனாகிறது. குறிப்பாக இயந்திர வளர்ச்சியை முன்னெடுக்காமல், ஏழைகளிடம் தக்ளியைக் கொடுப்பது குறித்துக் கடுமையாக விமர்சிக்கிறார். இயந்திர வளர்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டம் உண்டாகும் எனும் வாதத்தை மறுத்து, அப்படிப்பட்ட நிலை வருமானால் மக்கட்கு வேலை ஏற்படுத்தித் தருவதுதான் அறிவுடைய செயல் என்கிறார்.
மேலும்,
" தயவால்தான் ஏழைகளிடம் தக்ளியைக் கொடுத்து விட்டு அவர்கள் கண்ணையும் மனத்தையும் பழிவாங்கித் தொலைத்து விட்டுப் பணக்காரர்களையும், ஜாதிப் பைத்தியக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, கையோடு கங்கைப் புனலையும் இறந்த மாட்டின் தோலையும் எடுத்துக் கொண்டு சுயராச்சியம் கேட்கப் போக உத்தேசமா? அண்யுண முழுதும் கோணல்! .......... தொழில் துறையையும் கவனிக்காமல் நாட்டுக் கருப்பொருள்களை உபயோகிக்க வழியும் தேடாமல், படிப்பைக் கவனிக்காமல் ஏழைகள் பேரால் சுயராச்சியம் கேட்க ஜாதி சமய வெறிகளை சுயராஜ் ஜியம் சுயராஜ்ஜியம் என்று சொல்லும் காந்தீயத்தை ஏழைகள் தக்ளி சுற்றுவதன் மூலம் அதே நிலையில் வீங்கி வெடிக்கட்டும் என்று சாதியைச் சமயத்தை முதலாளியத் தன்மையைக் காக்க முயலும் காந்தீயத்தைச் சாக்குருவி என்னாமல் வேறென்னவென்று சொல்லுவது என்று தைரியமாய்க் கேளுங்கள்!" என்று கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும், "இறந்த காந்திக்கு இரங்கல்! " எனும் கவிதையை 1948 பிப்ரவரி ஒன்றாம் நாளிலும், காந்தியண்ணல்!" எனும் கவிதையை மார்ச்சு ஒன்றாம் நாளிலும், "அண்ணல் பெயர் வாழ்க! " எனும் கவிதையை ஏப்ரல் ஒன்றாம் நாளிலும் எழுதித் தனது அஞ்சலியைப் பதிவிட்டுள்ளார்.
"மதவெறி தன்னலம் மறைந்திட உழைத்தார்,
மாபெரும் நிலை நோக்கி நாட்டினை அழைத்தார்!
உதவா வேற்றுமை அனைத்தையும் பழித்தார்,
உலகின் நினைவில்தன் பெயரை வைத்திழைத்தார்!
பிறந்தவர் யாவரும் பெற்றறியாப் புகழ்
பெற்ற காந்தி அண்ணலைப் பிரிந்தோமே!"
எனத் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
மூவகைத் தாக்கங்கள்
பொதுவாகப் பாரதிதாசனின் சிந்தனைப் போக்கை மாற்றியவை, பாரதியின் தொடர்பு / பிரெஞ்சுப் புதுச்சேரி / பெரியார் ஈவெரா வின் தன்மான இயக்கம் எனக் குறிப்பிடப் படுவதுண்டு. பிரெஞ்சு மக்களின் வாழ்வு குறித்த கவிஞரது சேமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்" எனும் கட்டுரையில், இம்மூன்று கோட்பாடுகளையும் கைக்கொண்டால், தமிழ்மக்கள் வாழ்வு மேம்பாடு அடையும் எனச் சுட்டிக் காட்டுகிறார்.
வேறு எந்தச் செல்வாக்கை விடவும், கவிஞர் மீது அளவற்ற தாக்கத்தை ஏற்படுத்தியது தந்தை பெரியாரின் சிந்தனைகளே!
1929 முதல் "குடியரசு"," பகுத்தறிவு" ஏடுகளில் பாடல், கட்டுரை, கதைகள் எனப் பாவேந்தர் எழுதி வந்தார். அவரோடு அவரது குடும்பத்தையும் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றச் செய்தார். தமது குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்து வந்தார்.
குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவில் பாட்டெழுதிய முதல் கவிஞராகப் பாரதிதாசன் திகழ்கிறார்.
1930-ஆம் ஆண்டிலேயே பகுத்தறிவுப் பார்வையில் ச் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் " மற்றும் " தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு"ஆகிய அவரது நூல்கள் வெளிவந்து விட்டன.
1933-ல் சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் நோன் ஒரு நிரந்தரமான நாத்திகன்" என்று எழுதிக் கையெழுத்திட்டார்.
1938 ஆம் ஆண்டு "பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி ஆகியோர் வெளியிட்டனர். அது தமிழிலக்கிய உலகில் பெரும் புரட்சியை உண்டாக்கியது..
1930ல் தொடங்கிய அவரது இலக்கியப் பயணம் 33 ஆண்டுகள் தொடர்ந்து, 1963 ஆம் ஆண்டில் பேன்மணித்திரள்" நூல் வெளியீட்டில் வந்து நிறைவடைந்தது.
தந்தை பெரியாரின் தாக்கத்தால் பாரதிதாசன் அவர்களது படைப்புக்களில் சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, பெண் விடுதலை, கைம்பெண் மறுமணம், குழந்தை மணத்தின் கொடுமை, மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தமிழின விடுதலை எனப் பல்வகை முற்போக்குக் கருத்துக்களைத் தாங்கிய எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன.
தமிழ்ச் சமூகத்திற்கான பெரியாரின் அளப்பரிய சேவைகள் பாராட்டி,
" கொடுங்கோல் முறிக்கும் பெரியார் வாழ்க!, பெரியார்!, பெரியார் இயக்கம் வாழ்க! நரியார் கூட்டம் ஒழிக!, பெரியார் அறப்போர், எவர் பெரியார், அவர் வாழ்க!, பெரியார் போர் வெல்லும்! ஞாலப் பெரியார் பாதை!, வாழ்க பெரியார்! "
போன்ற எண்ணற்ற பாடல்களைப் பாவேந்தர் எழுதிக் குவித்தார்.
திராவிடம்
தந்தை பெரியாரின் வழியொற்றித் திராவிடம் என்ற கருத்தியலைப் பாவேந்தர் தனது படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்தார். "திராவிட நாட்டுப்பண்",எனும் இசைப்பாடலை வகுத்தளித்தார். திராவிட நாடு என்பதைப் புவிப்பரப்பின் அடிப்படையில் கண்டு,
"செந்தமிழ் கேரளமும் ஆந்திரமும் அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர்நா டாமோ? அவை
வடவர்நா டாமோ?"
எனப் "பிரிவு தீது" எனும் கவிதையில் குறிப்பிடுகிறார்." இனப் பெயர், திராவிடன் கடமை, எங்கள் திராவிடம்" போன்ற பல பாடல்களை எழுதிக் குவித்தார்.
"திராவிடர்க்கு விண்ணப்பம்" எனும் கவிதையில், கேன்னடரே, கேரளரே, துளுவப் பாங்கீர், கவின் தெலுங்கப் பாங்கினரே உணர்வு மிக்கீர்" என விளித்து, "அடங்காத எழுச்சியினைச் செய்க! வெற்றி அடைமேட்டும் உருவிய வாள் உறை காணாத கடும்போரை வளர்த்திடுக!" என அறைகூவல் விடுக்கின்றார். ஆனால் பின்னாளில் அவரது கருத்து மாற்றமடைகிறது “அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க" என்ற நிலைபாட்டை எடுக்கிறார்.
இத்தருணத்தில் திராவிடம் குறித்த தந்தை பெரியாரின் நிலைபாட்டை இணைத்துக் காணவேண்டும். " பெரியார் சென்னை மாகாணத்திலிருந்துதான் பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சென்னை மாகாணம் என்பது தமிழர்கள் மட்டும் வாழும் பகுதியாக இருக்கவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி மக்கள் வாழ்ந்த சில மாவட்டங்களையும் சேர்த்ததுதான் சென்னை மாகாணம். அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் தேமிழ்நாடு தமிழர்க்கே!" என்றால் எங்கள் கதி என்னவென்று கேட்கிறார்கள். எனவே 1938 ஆம் ஆண்டு தேமிழ்நாடு தமிழர்க்கே!" என்றவர் 1939 ஆம் ஆண்டு "திராவிடநாடு திராவிடர்க்கே!" என்று முழக்கத்தை மாற்றுகிறார். அதற்கு விளக்கமும் அளிக்கிறார். 1940 ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில், நோன் கூறும் திராவிடநாடு திராவிடர்க்கே என்பது சென்னை மாகாணம்தான்" என்று தீர்மானமிடுகிறார். மீண்டும் அந்த முழக்கம் எப்போது மாறுகிறது என்றல் மொழிவாரி மாநிலங்களாக 1956 ஆம் ஆண்டு கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கப்பட்ட பின், இன்னும் எதற்குத் திராவிட நாடு என்ற முழக்கம் தேமிழ்நாடு தமிழர்க்கே!" என்றார். காரணம் அவர் பணியாற்றும் களம் மாறி யிருந்தது. ஆக 1950லேயே திராவிடநாடு திராவிடர்க்கே என்ற முழக்கம் முடிந்து விட்டது." ( தரவு-கொளத்தூர் மணி )
எனவே "திராவிடர்" என்ற சொல்லில் பெரியார் ஏற்றி இருக்கிற பொருள் ச் சாதியத்திற்கு, இந்து மதத்திற்கு, பெண் அடிமைத்தனத்திற்கு எதிரானவர்கள்" என்பதே ஆகும். புவி எல்லைப் பகுதியைக் கொண்டு Ôதிராவிடம்Õ எனக் குறிப்பிட்டது பின்னால் முற்றிலும் மாறிவிட்டது. இதே நிலைபாட்டின் அடிப்படை யில்தான் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அணுகுமுறையும் அமைந்திருந்தது. எனவே அவரது கவிதைகளும்,பிற படைப்புகளும் அந்த தொனியிலேயே வெளிப்பட்டன.
தமிழ்த்தேசியக் கவி
தமிழ்த்தேசியம் எனும் கருத்து தமிழ்நாட்டில் இன்று படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், பாவேந்தரின் தமிழ்த் தேசியம் என்பது சாரத்தில் சாதி ஒழிப்பில் மையம் கொண்டுள்ளது. இந்திய நிலவுடைமை அமைப்பே சாதியைத் தொடர்ந்து காப்பாற்றி வருவதாகவும், சாதிகளின் ஆணிவேர் இந்திய நிலவுடைமை உற்பத்தி முறையில் இருப்பதால், சாதிகளின் அழிவு இந்திய நிலவுடைமை உற்பத்தி முறையின் அழிவோடு தொடர்புடையது என்றும் ஒரு கண்ணோட்டம் முற்போக்காளர் சிலரிடம் இருப்பதை அறிவோம். இது உண்டையே! ஆனால் இது முழு உண்மை ஆகாது. நிலவுடைமை ஒழிந்தால் சாதி ஒழிந்து விடும் என்பது நிலவுடைமைக்கும், சாதிக்குமான உறவை இது சிக்கலற்றதாகவும், கணக்கியல் வாய்ப்பாடாகவும், காரணம் விளைவு (Cause and Effect) என்ற நேர்கோட்டுத் தன்மையிலும் காண்பதாக அமைகிறது. நிலவுடைமை, உலகெங்கும் இருந்தது. ஆனால் அங்கெல்லாம் சாதி வேரூன்றி இருக்கவில்லை. இந்தியாவில் மட்டும் சாதி தொடர்ந்து நீடிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சாதியின் மீது பல்வேறு அரசியல், பொருளியல், பண்பாட்டுச் சக்திகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனவே சாதி ஒழிப்பிற்கான போராட்டம் என்பது நீண்ட காலம் தொடரக் கூடியதாக இருக்கிறது. பொருளியல் தளத்தில் மட்டுமல்லாமல், பண்பாட்டுத் தளத்திலும் இதற்கான போராட்டத்தை நீட்டிக்க வேண்டியுள்ளது. கடந்த காலத்தைப் போல இத்தகைய போராட்டங்களைத் தனித்தனியாக நடத்தாமல், ஒருங்கிணைந்து நடத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இந்தப் பின்னணி யில்தான் சுயமரியாதை இயக்கத்தையும், பாவேந்தரின் சாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தையும் காண வேண்டி உள்ளது.
"இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கிற தென்பானும் இருக்கின் றானே!"
என்பது சாதியின் இருத்தலைச் சகித்துக்கொள்ள முடியாத பாவேந்தரின் மனக்கட்டமைப்பை வெளிப்படுத்தும் வைர வரிகளாகும். அவரது கவிதைகளில் செம்பாதி சாதி ஒழிப்புக் குறித்தானதுதான். தீண்டாமைக் கொடுமை பற்றி வேதனையோடும் வெஞ்சினத்தோடும் அவர் எழுதிய கவிதைகள் மிகவும் குறிப்பிடத் தக்கன.
"சேரிப் பறையர் என்றும் தீண்டார் என்றும் சொல்லும் வீரர் நம் உற்றாரடி-சகியே வீரர் நம் உற்றாறடி"
என்றும்,
"துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்று சொல்லிடும் தீயரைத் தூவென்று உமிழ்வாய்"
என்றும் ஒடுக்கப்பட்டோர் சார்பாக நின்று குரல் கொடுக்கிறார். அது மட்டுமல்ல, சாதி ஒழிப்பு என்பதைத் தீண்டாமை ஒழிப்பு என்பதோடு மட்டும் அவர் நிறுத்திக். கொள்ளவில்லை என்பது கருதத் தக்கது. பார்ப்பனர்கள் அல்லாத இடைநிலைச் சாதியினரிடையே நிலவும் சாதி வேறுபாட்டையும் அவர் சுட்டிக் காட்டிச் சாடியுள்ளார்.
"மேலும் முதலி, செட்டி
வேளாளப் பிள்ளை முதல்
நாலாயிரம் சாதியாம்-சகியே
நாலாயிரம் சாதியாம்!
எஞ்சாதிக் கிவர் சாதி
இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி-சகியே
பஞ்சாகிப் போனாரடி!"
எனக் கண்டிப்பதைக் காண முடிகிறது.
மேலும், இடைநிலைச் சாதியினர் எவ்வாறு தங்களது தேவைக்குத் தாழ்த்தப்பட்ட சாதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை " ஜாதி ஆபத்து எம்டன் கப்பல் வரவு " எனும் கட்டுரையில் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர். எம்டன் கப்பல் வந்த பொழுது, அதன்.தாக்குதலுக்கு அஞ்சி கீழ் சாதி எனக் கருதப்படும் மக்களிடம் "உயர் சாதியினர்" தஞ்சம் புகுவதும், எம்டன் கப்பல் ஆபத்து நீங்கியதுடன் முன்பு பெற்ற உதவியை மறந்து. தாழ்த்தப்பட்ட சாதியை ஏசுவதும், இதனால் பெரும் கலவரம் வெடித்துப் பலரும் கடுமையாகப் பாதிக்கப் பட்டதையும் குறிப்பிட்ட பின் இறுதியில் " வெட்கக் கேடு. ஜெர்மனியின் அக்ரமமான சண்டைக் கப்பலுக்குத் தப்பித்துக் கொள்ளுவது சாத்தியம். ஆனால், மனு வகுத்த ஜாதி என்னும் அக்ரமத்திற்குத் தப்பி உயிர் பிழைப்பது முடியவில்லை" எனப் புதுவை முரசு ((1931) பத்திரிகையில் எழுதினார்.
தவிரவும், நடிகமணி விசுவநாததாசு, தமிழுக்கு உயிர்நீத்த நடராசன் போன்ற ஒடுக்கப்பட்ட தியாகிகளைத் தனது கவிதையால் நிலைபெறச் செய்தார். அண்ணல் அம்பேத்கர் பற்றிய அவரது கவிதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
" ...................பணியில் எவர்க்கும்
அணியில் முன்நின்ற அம்பேத் காரின் எரிமலை எண்ணமும் எழும்புயல் செயலும் விரிவுல கத்தையே விழிப்புறச் செய்தன.
ஆரியக் கொட்டம் அடியோ டழிய
வீரியங் கொண்ட வெஞ்சின வேங்கை முன்
மதத்திமிர் அழிந்தது. சமயம் மடிந்தது" எனும் அவரது கவிதை காலத்தால் அழியாத பதிவாகும்.
பாவேந்தரின் தமிழ்த் தேசியம் என்பது சாதி ஒழிப்பு என்பதோடு மதம், பெண்ணடிமை, இந்தி, சமசுகிருதம், பார்ப்பனியம், வடநாடு ஆகியவற்றுக்கு எதிரான கருத்தியலாக மிளிர்கிறது. இவற்றைக் குறித்து எண்ணற்ற கவிதைகளையும், கட்டுரைகளையும் அவர் எழுதிக் குவித்துள்ளார்.
கல்லும் மண்ணுமாக இருக்கும் ஒரு புவிப் பகுதிக்கு, நாடு எனும் அடையாளத்தையும், கௌரவத்தையும் தருவது மொழியே. ஒரு மக்கள் கூட்டத்தைப் பின்னிப் பிணைக்கும் நோம்" எனும் கூட்டுணர்வைத் தருவதும் மொழியே! உலகெங்கும் இருப்பவர்கள் தத்தம் தாய்மொழிகளை நேசிக்கின்றனர் என்றால், தமிழன் தனது மொழியை வழிபடுகிறான் என்பதுதான் மெய்நடப்பாகும். இதன் வெளிப்பாடுதான் தமிழன்னை எனும் கருத்தாக்கம். இதற்குத் தமிழக வரலாற்றில் நீண்டதொரு வரலாறு உண்டு. அதன் கொடுமுடியாகத் திகழ்பவை பாவேந்தரது கவிதைகள். தமிழை இவரைப் போல ஆராதித்தவர் வேறு ஒருவர் இருப்பாரா என்பது ஐயமே! தமிழ் என்பதை மொழி என்ற எல்லையைக் கடந்து, பெரும் விழுமியங்களைத் தன்னுள் பூட்டி வைத்திருக்கும் ஒரு கருவூலமாகக் காண்கிறார் பாரதிதாசன். அவ்வகையில் அவரது தமிழ்த் தேசியம் என்பது பல்வகைப் பரிணாமங்களைக் கொண்டதாக இருக்கிறது.
தேமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்" என்பது அவரைப் பொருத்தவரை வெறும் முழக்கமல்ல. அது அவரது வாழ்வின் செவ்வியல் நெறியாகும். "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" எனவும்,
"எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம் என்ற தமிழ்நாடு தனக்கும்
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள்எனக்குத் திருநாளன்றோ?
எனவும் சூளுரைக்கிறார்.தமிழுக்காகப் பே"சை இரத்தம் பரிமாறவும்" அணியமாக இருக்கிறார்.
"வேதபுரீசர் நூல் நிலையத்தில்" எனும் கட்டுரையில் தமிழ் குறித்து நடந்த ஒரு நிகழ்வைப் பாவேந்தர் சுட்டிக் காட்டுகிறார். வேங்கத்து அரவிந்தர் கூட முதலில் தமிழ் வளமுடைய மொழி அல்ல என்றுதான் நினைத்திருந்தார். உணர்வும் அறிவும் வேறுவேறு பொருளுடையது என்பதற்குத் தமிழில் ஆதாரம் உண்டா என்று பாரதியாரை அரவிந்தர் கேட்டார். அது பற்றி வருந்தியிருந்த பாரதிக்கு உணர்வு எனும் பெரும்பதம் தெரிந்து," நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்" என்ற ஆழ்வார் செய்"ளை நான் நினைவுபடுத்தி அவருக்குத் தமிழின் பெருமையைக் கூற நேர்ந்தது" எனப் பாரதிதாசனே குறிப்பிடுகிறார்.
தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையில் கருக்கொண்டுள்ளது. சாதி ஒழிப்பு என்பது அதன் முதன்மைக் கூறு. தவிரவும் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்தி / சமசுகிருத ஆதிக்க எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, முதலாளிய எதிர்ப்பு, வடஇந்திய ஆதிக்க எதிர்ப்பு, மனு சாத்திர எதிர்ப்பு
போன்றவற்றையும் அது உள்ளடக்கி உள்ளது. அதனால்தான் தேமிழ்நாடு தமிழர்க்கே!" எனும் தந்தை பெரியாரின் கோட்பாட்டில் பாவேந்தர் இறுதிவரை உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசியக் கூறுகள் அனைத்தையும் வெளிப் படுத்துவதாகப் பாவேந்தரின் படைப்புகள் உள்ளதால்தான் அவரைத் தமிழ்த்தேசியக் கவி என அறிவுலகு கொண்டாடுகிறது.
பொதுவுடைமைக் கவி
ஓர். உண்மையான தமிழ்த் தேசியவாதி என்பவன் உறுதியாகப் பொதுவுடைமைவாதியாகவும் திகழ்வான் என்பதற்குப் பாவேந்தரே சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறார். அவரது
"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் பொதுவுடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம்!"'
என்பது அவரது சாகா வரிகளாகும். நிலவுடைமை, முதலாளியம், வல்லரசியம் ஆகிய ஆதிக்கங்களுக்கு எதிராக உரத்து முழங்கியவர் பாவேந்தர். தவிரவும் இத்தகைய அரசியல், பொருளியல் போக்குகள், பண்பாட்டுத் துறையில் எவ்வாறு ஊடுருவி மக்களை மடை மாற்றுகின்றன என்பதைத் தனது படைப்புகள் மூலம் மக்களிடம் அவர் கொண்டு சென்றார்.
இருப்பினும் கவிஞரின் பொதுவுடைமை ஈடுபாடு குறித்துச் சுயநலமிகள் சிலர் விமர்சனம் செய்தபொழுது, அவர் கொதித்து எழுந்தார்.
" பொதுவுடைமைக்கு பகைவனா? நான் பொதுவுடமைக் காரர் எனக்குப் பகைவரா? இல்லவே இல்லை; இரண்டும் சரியில்லை. பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடமைத் தீ என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்து கொளுந்துவிட்டெரிந்து தொழிலாளரிடத்தும் உழைப்பாள ரிடத்தும் உணர்வில் உணர்ச்சியில் மலர்ந்து படர்ந்ததை மறுப்பவர் யாரே?
சிங்கார வேலர்முதல் சீவாவரையில்
அங்காந் திடுவர் என்பாட்டுனுக்கே!"
எனப் பதிலடி கொடுத்தார்.
தவிரவும், சிங்காரவேலர் குறித்தும், ஜீவா குறித்தும் அவர்களது மாபெரும் சேவைகளைப் போற்றித் தனித்தனியே பாடல்கள் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
"கேமாகிநின்ற லெனின் உலகாகிநின்ற லெனின்
உறவாகிநின்ற லெனினே!
அகமாகிநின்ற லெனின் அறிவாகிநின்ற லெனின்
அரசாளவந்த லெனினே! சுகமாகிவந்த லெனின் துணையாகிவந்த லெனின்
சுதந்திரமா லெனினே!"
எனத் தோழர் லெனின் அவர்களைப் பாராட்டி 1918ல் ஜனவநோதினி இதழில் எழுதியுள்ளார். மேலும் லெனின் கால... சென்ற சமயத்தில் பிப்ரவர் 12 / 1924-ல் கவிதை மூலம் புகழ... சலி செலுத்தினார்.
மேலும், மனிதகுலப் பகைவனான இட்லரின் வீழ்ச்சியை வரவேற்றார். "இட்லர் என்னும் குருவி, நெருப்புக்குழியில் வீழ்ந்தது" எனக் கொண்டாடினார்.
வியட்நாம் மக்கள் மீது போர்தொடுத்த அமெரிக்க வல்லரசைக் கண்டித்து அவர் எழுதிய கவிதை தேசிய விடுதலைப் போராட்டங்களின் மீது கவிஞருக்குள்ள கரிசனத்தைப் புலப்படுத்துகிறது.
மேனவலிமை குன்றாத வியட்நாம் மக்கள் மறுவாழ்வில் ஊடுருவும் முதலாளித்துவ மனப்போக்கை முறியடித்தல் உலகநாட்டு மன்றத்தின் முதற்கடையாகும்! ஒவ்வோர் இனமக்கள் வாழ்நாடும் அவ்வவர்க்கே எனும்உணர்வு விழிப்புணர்ச்சி இயற்கைஎந்த இனமற்ற அமெரிக்க வெறி நாய்கட்கே இனமேது? ஏது மொழி எச்சிற் சோறே அமெரிக்கக் காலடியில் வியட்நாம்மக்கள் ஆயிரம் ஆண்டானாலும் பணிவதில்லை திமிருற்ற ஏகாதிபத்தியத்தைத் திசைதோறும் எதிர்கின்றார்!"
என அமெரிக்க வல்லரசைக்கடுமையாகசோடுகிறார். தொழிலாளர் குறித்தும், உழவர்கள் குறித்தும், கைவினைஞர்கள் குறித்தும், சிறுகுறு வணிகர்கள் குறித்தும் கூலி விவசாயிகள்குறித்தும், அனைத்து வகை உழைப்பாளர்கள் குறித்தும் தனது படைப்புகளில் அவர்களைப் பதிவு செய்து அவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்கிறார்.
தொலை நோக்கு
அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பாவேந்தரின் படைப்புகள் வெளியாகி இருந்தாலும், அவற்றில் பல இன்றும் பொருத்தப்பாடு மிக்கவையாகத் திகழ்கின்றன. குறிப்பாக மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் மதவெறியர்கள் மக்களை எவ்வாறு பிளவு படுத்துகின்றனர் என்பதைத் தெளிவாகக் கவிஞர் பதிவு செய்துள்ளார்.
"மூடத்தனத்தை முடுக்கும் மதத்தை நிர் மூலப்படுத்தக் கை ஓங்குவீர் பலி பீடத்தை விட்டினி நீங்குவீர்!"
என எசேரிக்கிறார். அது மட்டுமல்ல,
"மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால் தக்க முஸ்லீமைத் தாக்கா திருப்பாரோ?"
எனத் துல்லியமாக அன்றே சுட்டிக் காட்டியுள்ளார்.
சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்
தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்"
எனவும் விழிப்புணர்வு ஊட்டுகிறார்.
" நாட்டின் தலைவர்கள் சாதி மத
நாய் வெறி தன்னைந றுக்குதல் வேண்டும்
கோட்சேயைக் கண்டன ரன்றோ-அவன் கூட்டத்தின் உள்ளக்கி டக்கையும் கண்டோர்
கேட்டைத்த விர்த்திட வேண்டும்"
எனவும் கூறுவது எவ்வளவு பொருத்தப்பாடு மிக்கது? அதேபோல், மோட்டை நினைத்தவன், மனிதனை நினைக்கவில்லை"
எனும் கவிதையில் பசுக்குண்டர்களின் மனித நேயமற்ற செயலைச் சாடுகிறார்.
பசிப்பிணி யாலே பரதவிக் கின்ற நசிவினை எண்ணும் நல்லுளம்இல்லையா? உடன்பிறந்தவர்கள் உயிருடன் சாகையில் கடமை கருதி அவர்கள் உயிரினைக்
காக்க ஒருபிடி சாப்பாடு கொடுக்காமல்
நோக்கம் இல்லாமல் ஊக்கம் இலாமல் மாந்தர்மேல் பரிவு ஏந்திடாமல் நீர்
கறவை கட்கும் பறவை கட்கும் சங்கம் வைத்துச் சாதிப்பதென்ன? உயிர்களில் மனிதஉயிர் உயர்வில்லையோ?
எனச் சாட்டையைச் சுழற்றுகிறார்.
'துருக்கன் என்ற சொல்லை நீக்கு! கத்தோலிக்கப் பித்தம் தொலைப்பாய் இந்து என்ற சிந்தனை வேண்டாம்!
யாவரும் மனிதர் என்பது தெரிந்தால் நிலவும் பொதுவே என்பது தெரியும் அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே"
எனச் சுட்டிக்காட்டி மனிதநேயம் வலியுறுத்துகிறார்.
அதேபோல் விநாயக வழிபாடு, தீபாவளி போன்றவை தமிழர் மரபுக்கு ஒவ்வாதவை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இந்தி ஆதிக்கம் குறித்த அவரது எசேரிக்கையையும், அந்த அதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டிய இன்றியமையாத் தேவையையும் அவரது கவிதைகள் நமக்கு உணர்த்திக் கொண்டே உள்ளன. தவிரவும், தமிழ் வழிபாடு, தமிழ்வழிக் கல்வி, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பெயர்ப்பலகை போன்ற அவரது தமிழ்த் தேசியக் கனவுகள் இன்னும் நிறைவேறாமல் இருப்பதையும் உணர முடிகிறது.
முரண்பாடுகள்
ஏராளமாக எழுதிக் குவித்த பாவேந்தரின் கட்டுரைகளிலும், கவிதைகளிலும் ஆங்காங்கு முரண்பாடுகள் இருப்பதையும் காண முடிகிறது. குறிப்பாக குயில் இதழில் 02.02.1960 வந்த "ஏழ்மை ஒழிமோ?" என்ற கட்டுரையைக் குறிப்பிட வேண்டும். அதில் "ஏற்றத்தாழ்வு எப்போதும் இருக்கும். அறிவு அறியாமை அகல முடியாதவை. வறுமையும் செம்மையும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கும். இரப்பானும் ஈவானும் இரப்பதும் ஈவதும் எப்போதும் இருக்கும் இந்த இரண்டில் ஒன்று வேரற்றுப் போவதென்பது முடியவே முடியாது." என்றும் "உலகில் வறுமை வேரற்றுப் போக வழி சொல்லும் நூல், கல்வி, இயக்கம் இருக்கவே முடியாது இருக்கலாம் என்றால், அந்த வறுமையை முழுதும் ஒழிக்கவே முடியாது" என்றும், "இரப்பவர் உலகில் இல்லாவிட்டால் மக்களின் நடைமுறையில் சுவை இராது என்கிறார். (திருவள்ளுவர்) இதனால் இரப்பார் இருப்பர் இல்லாமற் போகார் இல்லாமல் செய்ய முடியாது என்று வைத்து அப்படி அவர்கள் இல்லாவிட்டால் உலக மக்களின் போக்கு வரவு நடைமுறை மரப்பாவை போவதும் வருவதும் போல இருக்கும். சுவையற்ற வாழ்க்கையில் முடியும்" என்று கூறுகிறார்.
இரப்பாரை இல்லாயான் ஈர்ங்காண்பா மாஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
(குறள்)
இவ்வாறு நாம் கூறுவதால், தமிழ்ச் சான்றோர் இவ்வாறு கூறுவதால், ஏழைகளே முன்னேற்றமுறச் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக எண்ணிவிடக் கூடாது. அதுபோலவே பொதுவுடமைக்காரர்கள் செல்வநிலையில் மக்கள் நிகர் என்ற நிலையை உண்டாக்கி விட்டோம், உண்டாக்கி விடுவோம் என்று அவிழ்க்கும் பொய் மூட்டைகளை முழுதும் நம்பி விடவேண்டும் என்று எண்ணிவிடக் கூடாது. ஏழ்மையின் வேரையே அறுத்துவிடுவோம் என்று சொல்வோர் வாய்ப்பந்தல் போடுவோரே என பாவேந்தர் எழுதுவது வியப்பாக உள்ளது. இது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இதே போன்ற முரணான கண்ணோட்டம் காந்தி, நேரு, காமராசு குறித்த அவரது அணுகுமுறையிலும் காணலாம். இருப்பினும் பாரதிதாசன் எனும் மாபெரும் மலையில் உள்ள இப்படிப்பட்ட சறுக்கல்கள் அந்த மலையின் பெருமையைச் சிதைத்து விடாது. என்பதும் உண்மையே.
பிரபஞ்சக் கவி
பாரதிதாசன் பகுத்தறிவுக் கவி மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கவி மட்டுமல்ல, பொதுவுடைமைக் கவி மட்டுமல்ல, உலகு தழுவிய பிரபஞ்சக் கவியும் ஆவார். மனித நேயம், மனித ஆற்றல், மனித சுதந்திரம் போன்றவை குறித்து அவர் யாத்த கவிதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியாது. பாவேந்தரின் கவிதைகளை ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டியது அரசின் கடமையாகும்.
அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப, அவரது படைப்புகளில் சிற்சில முரண்பாடுகள் இருப்பினும், தமிழ் இலக்கியத்தில் ஓர் கலங்கரை விளக்காக அவர் என்றும் திகழ்வார் என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியாது.
பார்வை நூல்கள்
(1) பாரதிராசன் கவிதைகள் தொகுதிகள்
(1) (2) (3) (4) பூம்புகார் பதிப்பகம், சென்னை.
(2) மானுடம் போற்று (பாரதிதாசன் கட்டுரைகள்) பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை.
(3) பாரதிதாசன்-முருகு சுந்தரம்-சாகித்திய அகாதெமி, சென்னை.
(4) பாரதிதாசன் பேசுகிறார் பாவேந்தர் பாரதிதாசன் பூம்புகார் பதிப்பகம் சென்னை.
(5) "பெரியாரின் செயல்வடிவத் தமிழ்த்தேசியம்" கொளத்தூர் மணி- கட்டுரை பெரியாரும் தமிழ்த் தேசியமும் தொகுப்பு நூல் சிற்றுளி வெளியீடு, சென்னை.
(6) தமிழர் தலைவர்-சாமி. சிதம்பரனார்-பெரியார் சுயமரியாதைப் பிரசோர நிறுவன வெளியீடு, சென்னை.
- கண.குறிஞ்சி