நோபல் பரிசு, புக்கர் பரிசு, ஒலிம்பிக் பதக்கம் போன்ற உயர்ந்த விருதுகளைப் பெறுவது, இப்பொழுது வரை இந்தியர்களால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகவே கருதப்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு பெற்றதை அடுத்து, நோபல் பரிசு மீண்டும் கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

வெங்கட்ராமன் சிதம்பரத்தில் பிறந்தவர். அவரது தந்தை ராமகிருஷ்ணனும், தாய் ராஜலட்சுமியும் பயோகெமிஸ்ட்ரி பேராசிரியர்கள். பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி துறையை உருவாக்குவதற்காக அவர்கள் இருவரும் 1955 ஆம் ஆண்டு அழைக்கப்பட்டனர். இதனால் வெங்கட்ராமனுக்கு மூன்று வயதானபோதே, அவரது குடும்பம் பரோடாவுக்கு இடம்பெயர்ந்தது. சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வமுடைய வெங்கட்ராமன், பரோடா பல்கலைக்கழகத்திலேயே இயற்பியல் பட்டப் படிப்பு முடித்தார்.

அதன்பிறகு அமெரிக்கா சென்ற அவர், 1976ல் ஓஹையோ பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பெற்றார். அதற்குப் பிறகு அமெரிக்காவிலேயே வசிக்க ஆரம்பித்தார். அடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெல்லோவாகப் பணியாற்றியபோது, இயற்பியல் துறையில் இருந்து உயிரியல் துறைக்கு தடம் மாறினார். 1985 ஆம் ஆண்டு முதல் ரிபோசோம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இடையில் உடா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறை பேராசிரியராகச் சேர்ந்தாலும், அவரது ஆர்வம் முழுக்க ரிபோசோம் கட்டமைப்பை கண்டுபிடிப்பதிலேயே இருந்தது. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மாலிக்யுலர் பயாலஜி துறையைச் சேர்ந்த எம்.ஆர்.சி. ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானியாகவும், பின்னர் ஆய்வுப் பிரிவின் தலைவராகவும் வெங்கட்ராமன் பொறுப்பேற்றார். 2000 ஆம் ஆண்டில் ரிபோசோம் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்பை அவரது குழு வெளியிட்டது. அதற்குத்தான் தற்போது நோபல் பரிசு கிடைத்துள்ளது.

அவரது குழு கண்டுபிடித்துள்ள ரிபோசோம் வரைபடம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ரிபோசோம்கள் என்பவை ஒவ்வொரு உயிரின் செல்களிலும் உள்ள நுணுக்கமான துகள்கள். உலகில் உயிருடன் உள்ள தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என ஒவ்வொருவர் உடலில் நடக்கும் வேதியியல் மாற்றங்களை கட்டுப்படுத்தும் புரதங்களை (புரோட்டீன்) இந்த ரிபோசோம்களே வெளியிடுகின்றன. எனவே, இந்த ரிபோசோம்களின் கட்டமைப்பை தெரிந்து கொள்வதன் மூலம், தொற்று நோய்களை எதிர்த்து போராடக் கூடிய நுண்ணுயிர்க் கொல்லி ஆண்டிபயாடிக் மருந்துகளை இன்னும் எளிமையாகவும் சிறப்பாகவும் உருவாக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நம் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் ஒரு புரதம். நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றி, நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ரத்த வெள்ளையணுக்களும் புரதங்களே. நமது உடல் சீராக இயங்கக் காரணமாக இருக்கும் இன்சுலின் போன்ற ஹார்மோன்களும் புரதங்களே. உடல் இயங்கத் தேவையான சக்தியை உற்பத்தி செய்ய, உணவைச் சிதைக்கும் நொதிகளும்கூட புரதமே.

தோல் வளர்வது முதல் நம்மைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளையணுக்கள் வரை நமது உடலில் பல்வேறு செயல்பாடுகள் சப்தமின்றி நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தச் செயல்பாடு எப்படி நடக்க வேண்டும் என்று மரபணுக்கள் (ஜீன்) முடிவு செய்கின்றன. ஆனால் அந்தச் செயல்பாட்டைச் செய்வது இந்த ரிபோசோம்கள்தான். புரதங்களை வேலையாட் களைப் போலப் பயன்படுத்தி, மரபணு போட்ட திட்டங்களை அவை செயல்படுத்துகின்றன.

வெங்கட்ராமன் குழு பயன்படுத்திய எக்ஸ் கதிர் படிகவியல் (எக்ஸ் ரே கிறிஸ்டலோகிராபி) முறை மூலம் ரிபோசோம்களின் உள்கட்டமைப்பை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதன்மூலம் எதிரி பாக்டீரியாவின் ரிபோசோம்களை குறிவைத்து தாக்கலாம். பாக்டீரியா இறந்துவிடும், நோய் குணமடைந்து விடும். இதற்கு ஏற்ற வகையில் ஆண்டி பயாடிக் மருந்துகளை இனிமேல் உருவாக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் நோய்களால் அவதிப்பட்டு வரும் பலரை காப்பாற்ற முடியும்.

இந்த நோபல் பரிசுக்கு தனது குழுவின் கடுமையான உழைப்பே காரணம் என்று குறிப்பிட்டுள்ள வெங்கட்ராமன், குழுவின் சார்பில்தான் நான் அந்த விருதைப் பெறுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் ரிபோசோம் பற்றி ஆராய்ந்தபோதும், 2000 ஆம் ஆண்டில் ரிபோசோம்களைப் பற்றி கண்டுபிடிப்பை வெளியிட்டபோதும்கூட கண்டு கொள்ளாத மீடியா, பத்திரிகைகள் தற்போது அவரை மொய்க்கின்றன. அதற்கு அவர் கோபப்பட்டிருக் கிறார். “இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை நான் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன் என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை. பெரிய விருதுகளை மட்டும் வைத்து ஒருவரது பணியை மதிப்பிடாதீர்கள். அது தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும்’’ என்று கூறியுள்ளார். இவரைப் போன்ற விஞ்ஞானிகள் இந்தியாவிலேயே பணியாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது நமக்கு பலன் தரும். 

Pin It