மகா அலக்ஸாண்டர் 

ஆத்மா ரவி 

வெளியீடு புக் ஃபார் சில்ரன்,

சென்னை-18

பக்: 95 | ரூ. 50

தமிழில் வரலாறு வாசிக்க ஒரு சிறுவனோ சிறுமியோ விரும்பினால் பாடப் புத்தகத்தை தவிர வேறு எந்தப் புத்தகமுமே இல்லை எனும் ஒரு நிலை இருந்தது. இன்று பாரதிபுத்தகலாயம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நூல் மூலம் அந்த பெரிய  குறையை சீர்செய்திருக்கிறது.

வரலாறு சொல்லித்தருகிறேன் என குழந்தைகளுக்காக சிறுவர் மலர் போடும் தினசரி பத்திரிகைகள் கிருஷ்ணர் ராமர் படக்கதைகளை வெளியிடுகின்றன. சிறுவர்கள் அதை சீண்டுவது கூட கிடையாது. ஆனால் ஆத்மா ரவியின் மகா அலெக்ஸாண்டரை கட்டாயம் சிறுவர்கள் பார்த்தவுடன் கையிலெடுப்பார்கள். கிருஸ்துவுக்கு முன்று நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த அந்த ஏதென்ஸ் நகர சாதாரணன் மன்னன் பிலிப்பின் மகன். அரிஸ்டாட்டிலின் மாணவன் எப்படி உலகை ஆக்கிரமிக்கும் வெறிபெற்று உத்வேகத்தோடு படைதிரட்டி அதில் வெற்றியும் பெற்றான் என்பதை ஒரு கதைபோல தோளில் கைபோட்டுக் கொண்டு சிறுவர்களுக்கு சொல்லிச் செல்கிறார் ரவி.

தந்தை பிலிப் இந்தியாவை ஆள விரும்புகிறார் தனையன் அலெக்ஸ் உலகையே ஆள விரும்புகிறார். அலெக்ஸாண்டரின் போர்தந்திரங்கள்... நமது வரலாறு பாடபுத்தகத்தில் இடம் பெறாத அவனது மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை புத்தகம் கவனமுடன் பதிவு செய்கிறது. ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் கடமை அதை விட வேறொன்றும் இல்லை. மாமன்னர்கள் என்போர் வெறும் மனிதர்கள்தான். சாதாரண மனநிலையும் பலவீனங்களும் அவர்களுக்கும் உண்டு. தவறுகளும் ஏமாற்றங்களும் அவர்களுக்கும் நடக்கின்றன அவர்களை மகா ஆக்கியது மக்களே என்பதையும் வரலாற்றை தனிமனிதர்கள் நடத்துகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள இதுபோன்ற நிறைய முயற்சிகள் தமிழில் தேவை.

 

தோல்விகளின் ஒப்புதல் 

தொகுப்பு- வைகறை 

வெளியீடு சாளரம்,

சென்னை -91

பக்: 472 | ரூ. 250

1986-ல் தொடங்கி ஈழத்தமிழ் குரலாய் ஒலித்த இதழ் காலம் அதில் வெளியான 32 இதழ்களின் கட்டுரை களை மொத்தமாக வாசிக்கும் வாய்ப்பு இந்த தொகுப்பின் மூலம் சாத்தியமாகி உள்ளது.

ஈழ ஆதரவு இதழாக இருப்பினும் ‘காலம்’ இலக்கிய சாரமிக்க இதழாகவும் அதன் அரசியல் இயல்பு தோழமை கொள்ளத்தக்கதாகவும் பெரும் போராட்ட மனநிலை கொண்ட உக்கிரபயணமாகவும் இருந்ததை நாம் மறுக்கமுடியாது. இன்றும் ஞாபகமிருக்கிறது. நிகராகுவா பற்றிய எஸ்.வி. ராஜதுரையின் கட்டுரை மார்க்ஸ் முதல் வ. சுப்பையா வரை தியாகு எழுதிய பல முக்கிய கட்டுரைகள் இன்னும் கோ.கேசவன்,நாகார்ஜுனன், ஆ.இரா. வெங்கடாசலபதி, வ. கீதா, இந்திரன் என பலரோடு ஈழ எழுத்தாளர்களும் பங்கேற்ற மனிதவிடுதலை குறித்தான ஒரு பெரும் சமூகப்பணியாக காலம் விளங்கியது.

அவைகளின் ஒட்டு மொத்த ஒரு  தொகுப்பு தமிழின் முக்கிய பதிவு ஆகும். அதைக்கொண்டு ஒரு காலக் கட்டத்தின் சமூக ஆர்வலர் தம் பங்களிப்புகளை உணர்ந்து கொள்ளவும் அதிலிருந்து படிப்பினைகளை பெறவும் முடிகிறது என்பதே எவ்வளவு ஆறுதலான விஷயம்? பல கீழை நாட்டு புரட்சிகர கவிஞர்களை எழுத்தாளர்களை தமிழில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் அறிமுகம் செய்த ‘காலம்’ இதழின் பங்களிப்பை தமிழ் வாசிப்பு உலகம் மறக்காது. மறக்கக் கூடாது.

அந்தவகையில் தோழர் வைகறையின் முன்னுரையும் மிகமுக்கிய தகவல்களை உள்ளடக்கிய வரலாற்று ஆவணங்களாகவே நம்முன் நிற்கிறது. ‘காலம்’ இதழின் சிறுகதைகள் தனியாக ஒரு தொகுதியாக வர உள்ளதெனும்  செய்தியையும் வாசிக்கும் போது மனம் பரபரபாக்கிறது.

அஞ்சலி

சந்திப்பு என்ற வலைத்தளத்தின் மூலம் பல்வேறு சம கால  பிரச்சனைகளை இடது சாரி கண்ணோட்டத்தில் பலமாக விவாதித்தவர். சிங்காரவேலர் சிந்தனையாளர் மன்றம் என்ற ஒன்றை துவக்கி தத்தும், பண்பாடு, மொழியியல், சாதி ஆகியவற்றை விவாதிக்கும் களமாக செயல்படுத்தியவர். இவர் மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய கட்டுரைகளும், பாரதி புத்தகாலயம் வெளியீட்டுள்ள இவர் எழுதிய மே தினம் என்ற நூலும் இவர் தொகுத்த ம. சிங்கார வேலரின் நாம் செய்யவேண்டிய வேலை என்ன என்ற தொகுப்பும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 22.1.2010 அன்று காலமானார். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பில் புத்தகம் பேசுகிறது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலையையும் செலுத்துகிறது.

Pin It