tree 350 தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது. அணைகட்டுகளிலும் தண்ணீர் காலியாகிவிட்டது. இந்நிலையில் தமிழகம் பருவ மழைகளையே நம்பி இருக்கிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் வேளாண்மை நடைபெற்று வருகிறது.

தென்மேற்கு பருவமழையால் குமரி மாவட்டமும் நீலகிரி மாவட்டமும் மட்டுமே பயன் பெறுகிறது. மன்னராட்சி காலத்தில் மாதம் மும்மாரி பெய்த மழை இப்போது சரிவர பெய்வதில்லையே ஏன்? என்ன காரணம்?

மழை பொழிவது குறைந்து வருவது இங்கு மட்டுமல்ல தெற்கு ஆசிய நாடுகள் முழுவது, இதே நிலமைதான் நீடிக்கிறது. குறிப்பாக இந்திய மக்கள் இன்னமும் வேளாண்மையையே நம்பி இருக்கிறார்கள்.

பருவமழையோ பொய்த்து வருகிறது. பருவ மழையைப் பற்றி ஆய்வு செய்த வானிலை ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகிறார்கள். என்பதைப் பார்ப்போம்.

பருவ மழை பொய்த்துப் போவதற்கு காற்று மாசுபாடே காரணம் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவிலுள்ள ஸ்கிரிப்ஸ் என்னும் கடலியல் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் காற்று மாசுபாட்டின் காரண மாகவும், பசுமைக்குடில் வாயுக்கள் (கரியமிலவாயு) அதிகரிப்பதாலும் மழை பொழிவதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகள்.

வானிலை ஆய்வு இதழில் (journal of climate vol No19, ) வெளியான இந்த ஆய்வுகல் எட்டிசுங் மற்றும் வி.இராமநாதன் ஆகியோர் இணைந்து 25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை செலவு செய்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல் மேல் பரப்பு வெப்பநிலை குறித்து புள்ளி விபரங்களை திரட்டினார்கள். இது குறித்த ஆய்வின் முடிவில் ஒன்று பருவமழை அதிகரிக்கலாம். அல்லது குறையலாம் என்கிறார்கள் இந்த வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

இந்தியப் பெருங்கடலில் வட பகுதியில் எதிர் பார்க்கப்பட்டதைவிட குறைவான வெப்பம் இருப்பது காற்று சுழற்சியைப் பலவீனப்படுத்தி, பருவமழையையும் பலவீனப் படுத்தி விட்டது. என்று கல்எட்டிசுங்கும் வி.ராமநாதனும் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக இந்தியாவில் மழை பொழிவது 1950 முதல் 2010 வரை 5 முதல் 12% வரை குறைந்து விட்டது என்றும் மறுபுறம் ஆப்பிரிக்காவில் சகாராபாலை வனத்திற்கு தென்பகுதியில் சாகெல்லின் என்னுமிடத்தில் மழைப் பொழிவு அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் குறிப்பாக பருவ மழை குறைவதற்கு காற்றில் மிக அடர்த்தியாக உள்ள தூசுப்படலம் தான் காரணம் என்று இவ்விரு ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். இந்தியப் பெருங்கடலின் குறிப்பாக குமரி முனையை ஒட்டியுள்ள நிலப் பகுதியின் அருகேயுள்ள கடல் வெப்ப மடைவதை இந்தத் தூசுப் படலம் தடுத்துவிடுகிறது. இதனால் வடக்குப் பகுதி விரைவாக வெப்ப மடைவதில்லை. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் கரையிலிருந்து வெகு தொலைவில் ஏற்படுகின்றன.

மேகங்களை சுமந்து வரும் காற்று தரைப் பகுதியை (நிலப்பகுதி) நோக்கி வீசுவதில்லை. இவ்வாறு உருவாகும்வறண்ட வானிலை தெற்காசியாவில் 2 பில்லியம் மக்களை பாதிப் படையச் செய்கிறது. இதே விஞ்ஞானிகள் சில நேரங்களில் அதிகமான மழைப் பொழிவு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சில காலங்களில் பசுமைக் குடில் வாயுக்கள் (கரியமில வாயுக்கள்) காற்றில் கலந்துள்ள தூசுக் களை கணிசமாக குறைக்கவும் செய் கிறது. அச்சமயம் இந்தியாவில் பருவமழை 10 முதல் 20% வரை அதிகரிக்கும் போது பூமியின் மேற் பகுதி வெப்பமடைவதால் மழைப் பொழிவும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். மழை குறைவதும் மழை அதிகரிப்பதும் இரண்டும் மாறி மாறி நடக்கக்கூடும் என்கிறார்கள் இவ்விஞ்ஞானிகள். ஆனால் எது எப்போது நடக்கும் என்பதை கூறமுடியாது என்கிறார்கள்.

சில வருடங்களில் காற்றில் உள்ள பகுதிகள் பருவ மழையை தீர் மானிக்கலாம். சில வருடங்களில் பசுமைக் குடில் வாயுக்கள் பருவ மழையை தீர்மானிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அக்டோபர் முதல் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தெற்கு ஆசியாவின் மீது இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி மீது இந்தத் தூசிப்படலம் இருந்தது. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, தொழிற்சாலைப் புகை பயிர்களையும் விறகுகளையும் எரிப்பது போன்றவற்றால் உருவாகும். இந்த தூசிப்படலம் சூரிய வெப்பத்தை விண்வெளிக்கே திருப்பியனுப்பு வதின் மூலம் இந்தப் பகுதியின் வெப்பத்தை தணிக்கிறது. அதே சமயம் நீர் ஆவியாதலைத் தடுப்பதன் மூலமாக பருவமழை வலுப் பெறுவதையும் தடுக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் செக்வப்பிரி வின்சென்ட் என்பவரும் மற்றும் அவரது சகாக்கள் சிலரும் இந்திய நெல் அறுவடை விவரங்களையும் வானிலையையும் இணைந்த ‘மாதிர்’ ஒன்றை உருவாக்கி ஆய்வு மேற் கொண்டார்கள். இந்தத் தூசிப் படலம் இல்லாதிருந்தால் இந்தியாவில் நெல் விளைச்சல் 10.6% அதிக மாக இருக்கும் என்றும் கண்டு பிடித்துள்ளார்.

பசுமைக் குடில் வாயுக்கள் ஏற்படுத்தும் விளைவுகளை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளை இன்னமும் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் தூசிப்படலத்தை நீக்குவது மிகவும் எளிதானது என்கிறார்கள். இந்திய அரசு வாகனங்கள் வெளியிடும் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை ஏற்கனவே அமுலாக்கி வருகிறது.

புதுடெல்லியில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் “சுத்தமான” எரி பொருளைக் கொண்டு இயக்கப்படுகின்றன. இதனால் தூசிப்படலம் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.

இதே போன்று இந்தியா முழுவதும் இயங்கிவரும் பேருந்துகளையும் சுத்தமான எரிபொருளால் இயக்கினால் காற்று மாசுபாடு குறையும் அதனால் மழை அதிகரிக் கக்கூடும். தமிழக அரசு அக்கறையோடு இதை செயல்படுத்தினால் நல்லது. தமிழக அரசு காலத்தே சிந்திப்பது தமிழகத்திற்கு நல்லது.

Pin It