(சென்ற இதழ் தொடர்ச்சி)

ஈழத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற இரு சொற்கோவைகளும் ஒரே இனத்தைத்தான் குறிக்கின்றன; ஆனால் எதிர் எதிரான இரு வேறு நிலைபாடுகளை அவை சுட்டுகின்றன. ஈழத் தமிழர் என்பது தனித் தேசிய இனத்தின் பெயர்; தமிழ் ஈழம் என்ற தேசத்தை நிறுவிக் கொள்ள உரிமை படைத்த தேசிய இனம் ஈழத்தமிழர் என்ற சொற்கோவை. இலங்கைத் தமிழர் என்பது, இலங்கை என்ற நாட்டில் வாழும் தமிழர்கள்; இவர்களுக் கென்று தனித்தேசம் இல்லை என்ற பொருள் குறித்தது.

ஈழத் தமிழர் என்பதும் இலங்கைத் தமிழர் என்பதும் ஒன்றுதான் என்றும், இவ்விரண்டில் எதைச் சொல்லியும் அம் மக்களை அழைக்கலாம் என்றும் தமிழ் ஈழவிடுதலை ஆதரவாளர்களில் சிலர் கருதக்கூடும். அவ்வாறு கருதுவது தவறு.

ஆரியப் பார்ப்பனியர்களும், பாரதமாதா பசனைக் காரர்களும் ஈழத்தமிழர் என்று ஒரு போதும் ஒலிக்க மாட்டார்கள். மிகை எச்சரிக்கையுடன் “இலங்கைத் தமிழர்’’ என்றே ஒலிப்பர். பகைவர்களைப் பார்த்தாவது தமிழின உணர்வாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

“தமிழ்த் தேசியம்’’ என்ற சொற்கோவை தமிழக அரசியல் அரங்கில் அண்மைக் காலமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. இச்சொற்கோவையின் விளக்கம் தெரியாமல் பொத்தாம் பொதுவாகப் பயன்படுத்து வோர் பலர் இருக்கிறார்கள். பொதுவாகத் தமிழ் மொழிப்பற்றாளர்கள், தமிழினப் பற்றாளர்கள் முதலியவர்களைத் தமிழ்த் தேசியர் என்று அழைக்கும் பழக்கம் உள்ளது.

தமிழ்த் தேசியம் என்ற சொற்கோவை தமிழ்த் தேசம் என்ற சொற்கோவையிலிருந்து உருவானது. தமிழ்த் தேசம் என்பது பருப்பொருளாக (Physical) உள்ள தமிழர் தாயக நிலப்பரப்பு, அதில் வாழும் மக்கள் ஆகியோரைக் குறிக்கிறது. தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேசம் சார்ந்த கருத்தியல்; முன்னது பருப் பொருள் - பின்னது திட உருவமற்ற கருத்துநிலைப் பொருள். (abstract) தமிழ்த் தேசம் இல்லாமல் தமிழ்த் தேசியம் இல்லை. எனவே தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேச விடுதலையை உள்ளடக்கியது.

தமிழ்த் தேச விடுதலையைக் கோராதது தமிழ்த் தேசியம் ஆகாது. தமிழ்த் தேச விடுதலையைக் கோராதவர்கள் தமிழ்த் தேசியர் ஆகார். தமிழக விடுதலையை முன்வைக்காத தமிழன உணர்வு அமைப்புகளை தமிழ்த் தேசிய அமைப்புகள் என்று கூறுவது சரியன்று.

ஆனால் சகட்டுமேனிக்கு வெறும் தமிழின உணர்வு அமைப்புகள் தமிழ்த் தேசிய அமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியம் என்ற சொல்லை நீர்த்துப் போகச் செய்வதற்காக, அரசுத் தரப்பும் ஒரு சார் ஊடகத் துறையினரும் தமிழ்நாடு விடுதலையை முன் வைக்காத தமிழின உணர்வாளர்களைத் தமிழ்த் தேசியர் என்று அழைக்கின்றனர்.

தமிழ்த் தேசியம் என்பதைத் தமிழியம் என்றும் சொல்லக் கூடாது. தமிழியம் என்பது மொழி சார்ந்த வரையறைகளை மட்டும் தரும். தமிழ்த் தேசியமோ தாயகம்- தாயக விடுதலை, தமிழினக் கூறுகள் எனப் பலவற்றை உணர்த்தும்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!’’ (640) என்றார் தொல் காப்பியர். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு குறிப்பான பொருள் உண்டு.

“பொருட்கு திரிபு இல்லை உணர்த்த வல்லின்’’ (873) என்றார் தொல்காப்பியர். ஒரு சொல்லின் பொருளைத் தெளிவாக உணர்த் தும் ஆற்றல் உடையவன் சொல் லைப் பயன்படுத்தும் போது, அச் சொல்லில் திரிபு ஏற்படாது என் றார்.

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்(496); என்றார் தொல்காப்பியர். வினாவும் விடையும் குழப்பமில்லாமல் தெளிவாக இருக்கவேண்டும் என்றார். இந்நூற்பாவுக்கு உரை எழுதிய இளம்பூரணர் எடுத்துக்காட்டாக “நும்நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்’’ என்றார். இளம்பூரணர் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு என்பர். அப்பொழுது சோழ, பாண்டிய அரசுகள் இருந்தன. “என் நாடு சோழநாடு, பாண்டிய நாடு’’ என்று சொல்லக் கூடாது. அரசபரம் பரையை வைத்து ஒரு நாட்டை அழைப்பது நிலையானதன்று. மொழி, இனம் ஆகிய அடிப்படையில் அமைந்த நாட்டுப் பெயரே நிலையானது, சரியானது என்பதை இளம்பூரணர் உணர்த்தினார்.

தர்க்கம் (Logic) பற்றி பேசுவோர் ஆங்கிலத்தில் “Call a Spade a Spade” என்பர். மண் வெட்டியை மண்வெட்டி என்றே அழையுங்கள். “பெரிய களைக் கொட்டு’’ என்று சொல்லக்கூடாது. உப்பை உப்பென்றே சொல்ல வேண்டும்; சர்க்கரை என்று சொல்லக் கூடாது.

பகுத்தும் தொகுத்தும் சொற்களைத் துல்லியமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தமிழர் மரபு. நிலம் எனில் அதைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகவும் பாலையைச் சேர்த்து ஐந்தாகவும் பிரிப்பது தமிழர் மரபு “நானிலம்’’ என்ற சொல் இவ்வாறு பிறந்தது. (பாலை என்பது தனியே ஒரு நிலமாக இல்லை; குறிஞ்சியும் முல்லையும் பெருவெப்பத்தில் திரிதலால் ஏற்படுவது) மற்ற நாடுகளில் இந்த நானிலம் கிடையாதா? உண்டு, ஆனால் அவர்களுக்குத் தமிழர்களைப் போல் நுணுக்கமாக அதனதன் வேறுபாட்டை அறிந்து பிரித்துச் சொல்லும் வழக்கம் பண்டைக் காலத்தில் இல்லை.

இயல், இசை, நாடகம், என்பவை மற்ற மொழிகளில் இல்லையா? உண்டு! தமிழர்கள்தாம் முத்தமிழுக்கும் தனித்தனி இலக்கணம் வகுத்தனர். அக வாழ்வு - புறவாழ்வு என்ற வாழ்க்கை முறை மற்ற இனத்தார்க்கு இல்லையா? உண்டு தமிழர்கள்தாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் தனித்தனி இலக்கணம் வகுத்து ஒழுங்குபடுத்தினர்.

அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் அடிப்படையான பொது ஒழுக்கம் “அறம்’’ என்றனர் பண்டைத் தமிழர்! கணவன் மனைவி குடும்பம் நடத்துவதை இல்லறம் என்றனர்.

இயற்கையாயினும் மக்கள் வாழ்வாயினும் எதிலும் அதனதன் நுட்பம் அறிந்து, வகை பிரித்து, தக்கசொற்களில் அழைத்து வாழ்ந்த வாழ்க்கை தமிழர் வாழ்க்கை!

களப்பிரர் காலம், பல்லவர் காலத்தில் தொடங்கியது தமிழர்களின் அடிமை வாழ்வு. இடையில் சிறிது காலச் சோழ, பாண்டியர் ஆட்சிக்குப் பின் மீண்டும் இன்று வரை அயல் இனத்தார்க்கு அடிமைப்பட்டுப் போனது தமிழினம். அதனால் தமிழினம்தன் அறிவாற்றல், செம்மை வாழ்வு அனைத்தையும் இழந்து, திரிபடைந்து, அண்டிப் பிழைக்கும் உளவியலில் வீழந்து, சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறது. ஆதிக்கம் செலுத்தும் அயலாரும், இனத் துரோகம் செய்யும் சிலரும் சொற்களைத் தங்கள் நோக்கில், பயன்படுத்துகிறார்கள். அச்சூது தெரியாமல் தமிழர்கள் அப்படியே அச்சொற்களைத் தாங்களும் பயன்படுத்துகின்றனர்.

செய்தி ஊடகங்கள் செய்தி தரும் போதேதங்கள் கருத்தையும் சேர்த்துத் தருகின்றன. நாம் அதை அச்செய்தி ஊடகங்கள் தந்த வடிவில் அடுத்தவரிடம் தராமல், உண்மை, அறம், தமிழர் நலம், தமிழர் உரிமை சார்ந்த சொற்களில் அச்செய்தியைத் தரவேண்டும்.

குறிதவறாமல் பாயும் அம்பு போல் சொற்களைத் தேர்ந்தெடுத் துப்பயன்படுத்த வேண்டும்.

“சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச்சொல்லை

வெல்லும் சொல் இன்மை அறிந்து’’ (குறள்: 645)

ஒரு செய்தியைக் கூற, ஒரு பொருளைவிளக்க - தாம் பயன்படுத்தும் சொல்லைவிடத் தகுந்த சொல் வேறொன்று இல்லை என்ற வகையில் சொற்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

“பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற

சில சொல்லல் தேறாதவர்’’ (குறள் 649)

தாம் கருதிய பொருளை குறிதவறாமல் தெரிவிக்கும் சிறந்த சொற்களைத் தேர்வு செய்ய முடியாதவர்கள் வழவழா.. கொழகொழா.. என்று பல சொற்களைக்கூறி நீண்ட நேரம் பேச ஆசைப்படுவர்.

“விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’ (குறள்: 647)

சொற்களைத் தேர்வு செய்து வரிசைப் படுத்தி இனிமையாகப் பேச வல்லவர்களின் கூற்றை, மற்றவர்கள் விரைந்து ஏற்றுச் செயல்படுவார்கள்.

ஆயுதம் போன்றது சொல். சரியான நோக்கத்திற்கு அதைச் சரியாகப் பயன்படுத்த நமக்குத் தெரியவில்லை எனில், எதிரிகள் அதைச் சூதாகப் பயன்படுத்தி நம்மை வீழ்த்துவர் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

Pin It