castemurder 450நம் கண்ணெதிரே நடக்கும் சில நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதுடன், அயர்ச்சிக்குள்ளாக்கி விடுவதுண்டு. சமூகம் சார்ந்த நம்முடைய புரிதல்களை கேள்விக்குள்ளாக்குவதுடன் கேலிக்குள்ளாக்கி விடுகின்றன. வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட சுரேசுகுமாரை திருமணம் செய்து கொண்ட வைதேகி அப்போது ஐந்து மாதம் கர்ப்பம். வீட்டை விட்டு வந்து கேரளத்தில் கூலி வேலை பார்த்தாலும் தன் காதல் மனைவி வைதேகியை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டார், சுரேசு.

இந்த நேரத்தில் வைதேகியின் தாய் வீட்டில் இருந்து சமாதானத் தூது வந்தது. இவர்களின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக பெரிய மனதுடன் பேசிய தாய் வெங்கடேசுவரியின் பேச்சை அப்படியே நம்பினார் வைதேகி. இருவரும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தேனிக்கு வந்தனர். தாயும் மகளும் சந்தித்துக் கொண்டனர்.

மகளின் மேடிட்ட வயிற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த தாய், வைதேகியை சில நாட்கள் தன்னுடன் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார். சுரேசுக்கு இதில் அவ்வளவாக உடன்பாடில்லை. ஆனால் வெங்கடேசுவரியும் அவர்களின் உறவினர் களும் வற்புறுத்தவே வைதேகி மற்றும் சுரேசின் மனம் கரையத் தொடங்கியது.

மனைவியை தாயுடன் அனுப்பி வைத்து விட்டு, கேரளத்துக்குக் கிளம்பிப் போனார் சுரேசு. வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வைதேகி மறு நாள் (மார்ச் 17) கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். கர்ப்பிணி என்றும் பெற்ற மகளென்றும் பாராமல் இந்த படுபாதகச் செயலை அரங்கேற்றினார், வெங்கடேசுவரி. அத்துடன் வைகை ஆற்றங்கரையில் வைதேகியின் உடலை புதைத்தனர். நம் தமிழ்ச் சமூகத்தின் கௌரத்தை குழிதோண்டி புதைக்கும் இக் கொடூரத்துக்கு நம் ஊடகங்கள் இட்டிருக்கும் பெயர் கௌரவக் கொலை.

இப்போது வைதேகியின் தாய், சகோதரன், தாய் மாமன்கள் உள்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத இவர்கள் சுரேசையும் கொலை செய்தே தீருவோம் என்று அடங்காத சாதி வெறியுடன் சொல்லி இருக்கிறார்கள். சுரேசுகுமார் நாவிதர் சாதியைச் சேர்ந்தவர். வைதேகியின் தேவர் சாதி வெறியர்கள் இந்தக் காதலையும் திருமணத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் ஐந்து மாத கர்ப்பிணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.

தர்மபுரியில் ஒரு ஊரையே தீக்கிரையாக்கிய சாதி வெறி, இங்கே கொடூரமாக ஒரு கொலையை செய்திருக்கிறது. அவ்வப்போது தொடரும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே அசைத்துப் பார்த்திருக் கிறது. வைதேகிக்கு நேர்ந்த கொடூரம் கேட்பவரின் தூக்கத்தைக் கெடுத்து விட்ட போதிலும், தேர்தல் நேர பரபரப்பில், நம் முடைய ஊடகங்களால் இந்தக் கொடூரம் போதிய கவனத்தைப் பெறவில்லை.

தோழர் பெ.மணியரசன் “சாதியை ஒவ்வொரு மனிதனின் மனதில் இருந்து ஒழிப்பதுதான் உண்மையான சாதி ஒழிப்பு’’ என்று சொல்லுவார். தமிழினம் தமிழராய் ஒன்றிணையும் போது தான்,சாதிய எண்ணங்கள் செத்துப் போகும். தமிழர் பெருமை உள்ளத்தில் கனன்று விட்டெரியும் போது சாதி சாம்பலாகி காற்றில் கரைந்து போகும். ஆனால் தமிழர்கள் மனதில் சாதி அழிந்து போகாமல் பார்த்துக் கொள்வதில் நம்முடைய தேர்தல் அரசியல் கட்சிகளுக்குள் போட்டா போட்டியே நடக்கின்றன.

குறிப்பாக, தமிழகத்தில் அடுத்தடுத்து ஆளும் திராவிடக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் உதயமாகும் சாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதுடன் அவர்களுக்கு ‘சீட்டு’ வழங்கி சிண்டு முடிந்து விடுகின்றன.

தமிழராய் ஒன்றுபட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படும் போதெல்லாம் ஆளும் வர்க்கம் சாதி கட்சித் தலைவர்களுக்கு சிலைவைத்தும் சிலைகளுக்கு மாலையிட்டும் சாதி தீயில் குளிர்காய்ந்து வருகின்றன.

சாதி ஒழிப்பை முன்வைத்து தமிழர் பெருமையை நம் மக்களுக்கு ஊட்டினால் இனவாதம் பேசுவதாக சில முற்போக்கு மூகமூடி இயக்கங்கள் முகம் சுளிக்கின்றன. இது போன்ற கொடூரங்கள் அரங்கேறும் போது அந்த முற்போக்கு ஆசாமிகள் தமிழ் உணர்வாளர்களைத் தேடிவந்து இதுதான் தமிழரின் லட்சணமா என்று குறை சொல்வது வாடிக்கையாகி விட்டது. சாதி ஒழிப்பை ஓரங்கட்டிவிட்ட தேர்தல் அரசியல் கட்சிகளிடம் கேள்வி கேட்பதை வசதியாக தவிர்த்து விட்டு, சாதிவெறியர்களை ராஜபக் சேவுடன் ஒப்பிட்டு பொய்யாக ஒப்பாரி வைக்கின்றனர்.

வெங்கடேசுவரிகளின் அறியா மையைப் போக்குவதும், வைதேகி களின் சாதி மறுப்பு திருமணங்களை மலர்த் தூவி வரவேற்பதுவுமே சாதி கடந்த தமிழ்த் தேசியம். தமிழர் என்ற கௌரவம் தலை தூக்கினால் தான் போலிக் கௌரவத்தின் பெயரால் அரங்கேறும் கொடூரங்கள் கொலை செய்யப்படும்!!

Pin It