“ஆட்சியும் அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க அவர்(கலைஞர்) தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை” - பழ. நெடுமாறன், “கருணாநிதியின் கபட நாடகம்” கட்டுரை - தினமணி -     27.06.2012

“தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, ‘கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்’னு சொன்னேன். - சுப்பிரமணியன் சுவாமி, ‘விகடன் மேடை’ - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறான வையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.

இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோ டொருவர், மோதிக்கொள்ள மாட்டார் கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டி ருக்கும் குள்ளநரித் தந்திரம்.

ஈழமக்களுக்காகக் கலைஞர் தன் சுட்டுவிரலைக் கூட அசைத்ததில்லை என்பது உண்மையானால், ‘விடுதலைப் புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் அவர் செய்தார்’ என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில், 1991இல் தி.மு.கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, அய்யா நெடுமாறன் குமுறி எழுந்திருக்க வேண்டாமா? ஆட்சியைக் கவிழ்த்த சந்திரசேகர் மீதும், சுப்பிரமணியன் சுவாமி மீதும் கண்டனக் கணைகளை வீசியிருக்க வேண்டாமா?

சுப்பிரமணியன் சுவாமியாவது, ‘விடுதலைப் புலிகளுக்குக் கலைஞர் செய்யும் உதவிகளை நெடுமாறன் மறைத்திருக்கின்றார். இது ஒரு பெரிய தேசத் துரோகம்’ என்று கூறி, கண்டதற் கெல்லாம் நீதிமன்றம் செல்லும் அவர் நெடுமாறன் மீதும் வழக்குத் தொடுத் திருக்க வேண்டாமா?

இரண்டு பேருக்கும் நோக்கம் ஒன்றாக இருக்கும்போது, அவர்களுக்குள் மோதல் எப்படி வரும்? ஒருவர் நடவடிக்கை மற்றவருக்கு உள்ளூர மகிழ்ச்சியைத்தானே தரும்.

சரி போகட்டும், இரண்டு பேரும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துப் பார்க்கலாம்.

தி.மு.க. ஆட்சியில், கோவையில் புலிகள் வெடி குண்டுத் தொழிற்சா லையை, ஆட்சியின் ஆதரவில் நடத்தி னார்கள் என்கிறார் சு. சாமி. அதற்கு இன்று வரையில் ஏதேனும் ஆதாரம் உண்டா? சந்திரசேகர் அமைச்சரவை யில் மத்திய அமைச்சராக இருந்த சு. சாமி, தன் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏதேனும் விசாரணைக் கமி­ன் நியமித்தாரா? எந்த ஒரு குற்றச்சாட்டேனும் இன்றுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ளதா?

சரி, நெடுமாறன் அவர்கள் அள்ளி வீசியுள்ள குற்றச்சாட்டுகளையும் பார்ப்போம்.

1973ஆம் ஆண்டு தொடங்கி, ஈழப் போராட்டத்திற்கு எதிரான செயல்களில் கலைஞர் ஈடுபட்டார் என்று கூறுகின்றார். அதனை உண்மையயன்றே வைத்துக் கொண்டு, அய்யா நெடுமாறனிடம் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அவ்வளவு மோசமான ஒருவரோடு, 1984இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நீங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டீர்களே... அது என்ன நியாயம்? ஈழ விடுதலைக்கு எதிரான ஒருவரோடு, தேர்தலில் மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? ஈழத்திற்கு எதிரானவரோடு கைகோத்துக் கொள்ளத் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்கள் மனசாட்சி இடம் கொடுக்குமா?

பிறகு, கலைஞரின் கபட நாடகத்தை விளக்கி, 23.07.1997 அன்று, மேதகு பிரபாகரன் அவர்கள் அய்யா நெடுமாறனுக்கு ஒரு கடிதம் எழுதினாராம்.

சரி அதனையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அவ்வாறு புலிகளின் தலைவரே கடிதம் எழுதிய பிறகும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், ஊர் ஊராகச் சென்று, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்குக் கேட்டீர்களே...

அது எப்படி? தேசியத் தலைவரின் கடிதம் அப்போது உங்களுக்கு மறந்து போய்விட்டதா அல்லது அவருக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையா?

எது கபட நாடகம் என்பதை எதிர்காலம் சொல்லத்தான் போகிறது.

1987ஆம் ஆண்டு கையயழுத்திடப்பட்ட, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைக் கலைஞர் கண்டிக்கவே இல்லை என்று கூறும் நெடுமாறன், கட்டுரையின் தொடக்கத்தில், எம்.ஜி.ஆர். ஈழத்திற்குச் செய்த பல உதவிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை நாமும் மறுக்க வில்லை. ஆனால் எம்.ஜி.ஆர்., இந்திய - இலங்கை உடன்பாட்டை மறுத்தாரா, கண்டித்தாரா?

அப்போது அவருக்கு உடல்நலமில்லை என்று உடனே விடை சொல்வார்கள். உடல் நலமில்லையயன்றாலும், அவர் அப்போதும் அரசியலில்தானே இருந்தார்? தமிழகத்தின் முதல் அமைச்சராகத்தானே இருந்தார்?

அமெரிக்காவிற்குப் புறப்பட்டுக் கொண்டி ருந்த எம்.ஜி.ஆர்., ராஜீவ் காந்தி தொலைபேசியில் அழைத்ததை ஏற்றுத் தன் பயணத்தைக் கூடத் தள்ளிவைத்துவிட்டு, இந்திய - இலங்கை ஒப்பந்த ஆதரவுக் கூட்டத்தில், ராஜீவ்காந்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டார். அது மட்டுமின்றி, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அவர் எவ்வளவு ஆதரவாக இருந்தார் என்பதை, டில்லியிலிருந்து வெளியாகும் ‘ஆசியா டைம்ஸ்’ என்னும் நாளேடு பின்வருமாறு குறிக்கின்றது.

“கூடுதல் ஆதரவு தேவையில்லாத நிலையிலும், ஆளும் காங்கிரஸ் கட்சி வெகுவாகப் பாராட்டும் வண்ணம், அ.இ.அ.தி.மு.க., தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும், எம்.ஜி.ஆர். உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அவருடைய ஒப்புதல் பெறப்பட்ட பின்பே, தில்லி முடிவெடுத்தது” (“The AIADMK consistently backed the Union Government in Parliament, which was greatly appreciated by the ruling Congress Party, eventhough it was not in need of extra support. MGR was consulted and his consent secured before each step taken by New Delhi, even including the Indo - Sri Lankan agreement”)

இதுதான் உண்மை நிலை. ஆனால் இது குறித்து நெடுமாறன் அவர்கள் ஏன் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை?

14.10.2008 அன்று, கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஈழச் சிக்கலுக்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழியப் பட்டத் தீர்மானத்தின்படி, 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவில்லை. இதற்கும் கலைஞரே பொறுப்பு என்கிறது தினமணிக் கட்டுரை.

அய்யா நெடுமாறன் அவர்களே, கலைஞர்தான், ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலையும் அசைக்காதவர் ஆயிற்றே! அவரை விட்டுத் தள்ளுங்கள், தங்கள் உடல் முழுவதையும் அசைக்கக் கூடியவர்கள் கூடத் தங்கள் பதவிகளை விட்டு விலகவில்லையே, ஏன் என்று கேட்டீர்களா?

இந்தக் கேள்வியை ம.தி.மு.க., பா.ம.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியனவற்றை நோக்கி ஏன் நீங்கள் கேட்கவில்லை. ஏதோ, எல்லாக் கட்சி உறுப்பினர்களும் பதவி விலகி விட்டதைப் போலவும், தி.மு.க.வினர் மட்டுமே பதவிகளில் ஒட்டிக் கொண்டி ருந்ததைப் போலவும் காட்சி அமைப் பதன் நோக்கம் என்ன?

உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள், மீண்டும் தொடங்கப் பெற்றிருக்கும் ‘டெசோ’ அமைப்பை ஆதரிக்க வேண்டாமா?

ஈழத்தைக் காட்டிலும், கலைஞரைப் பற்றித்தான் எங்கள் கவலை என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்?

அறிஞர் அண்ணாவையும், தி.மு.கழகத்தையும், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கிவிட்டு, 1961இல் சம்பத் அவர்களோடு இணைந்து தி.மு.க.வைவிட்டு வெளியேறிய அய்யா நெடுமாறன் போன்றவர்கள் இன்னும் அந்தப் பகையை மறக்கவில்லை என்றே தோன்றுகிறது.

கலைஞரின் மீது - நெடுமாறன் அவர்களுக்குப் பழம் பகை!
சு. சாமிக்கோ பரம்பரைப் பகை!!

Pin It