அரசால் தடை செய்யப்படாத ஒரு புதினம் குறித்து ஒரு சாரார் எதிர்ப்புக் காட்டுகிறார்கள் என்பதற்காக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அமைதிக் கூட்டம் நடத்தி அந்தப் புதினம் எழுதிய ஆசிரியரைத் தமது நூல் படிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதும், மன்னிப்பு எழுதித் தரும்படி நூலாசிரியரை வலியுறுத்தி அவ்வாறே அவரிடம் கடிதம் எழுதி வாங்கியதும் - சனநாயக உரிமைப் பறிப்பு இழிவுகளில் மிகப் பெரிய இழிவாகும். குறிப்பிட்ட ஒரு பகுதியை நீக்கிவிட்டுத் தான் மறுபதிப்பு வெளியிடவேண்டும் என்றும் அந்த அதிகாரி கட்டளையிட்டுள்ளார்.

ஊரில் குடியிருந்தால் உயிருக்கு ஆபத்து, குடும்பத் தோடு வெளியூர் போய்விடுங்கள் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த அநீதிகள் அனைத்தும் “மாதொருபாகன்” என்ற புதினம் எழுதியதற்காக எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனுக்கு இழைக்கப்பட்டுள்ளன.

பெருமாள் முருகன் குடும்பத்தினர் தங்கள் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை விட்டு வெளியேறிவிட்டனர். திருச்செங்கோட்டில் பெருமாள் முருகனை எதிர்த்து முழுக் கடையடைப்பு நடந்துள்ளது. ஒரு சாதிப்பிரிவும், இந்துத்துவ வெறியமைப்பும் சேர்ந்து இந்த அட்டூழியங்களை அரங்கேற்றியுள்ளன.

இசுலாம் மற்றும் இந்துமத வெறியர்கள் படைப்பாளி களுக்கெதிராகத் தூக்குக் கயிற்றைக் கையிலெடுப்பது தமிழ்நாட்டில் இயல்பாகி வருகிறது.

நாகர்கோயில் தக்கலையில் வசித்த எச்.ஜி.ரசூல் என்ற எழுத்தாளரை 2002இல் இசு லாமிய மதவெறி அமைப்பி னர், அவரது ஒரு கவிதைக் காக மதவிலக்கம், ஊர் விலக் கம் செய்தனர். உயர்நீதி மன்றம் வரை அவ்வெறியர் கள் சென்று தோற்றனர். ஆனால் இன்னும் எச்.ஜி. ரசூலை இசுலாம் மதம் ஏற்க வில்லை என்று தெரிகிறது.

மைலாஞ்சி என்ற தலைப் பில் ரசூல் வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் இசுலா மிய மதத்தைச் சேர்ந்த மகள் தன் தந்தையிடம் கேட்கும் ஓர் ஐயமாக ஒரு கவிதை வந்தது.

“இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி?”

இந்த இரண்டு வரிகளுக்காக ஜமாத் அமைப்பு, அச்சடிக்கப்பட்ட மைலாஞ்சி நூல் படிகள் அனைத் தையும் திரும்பப் பெற்று ஜமாத் திடம் ஒப்படைக்க வேண்டும்; அப்புத்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

இப்பொழுது இந்துத்துவ வெறி அமைப்புடன் ஒரு சாதிப்பிரிவும் சேர்ந்து கொண்டு பெருமாள் முருகன் நூலுக்கு எதிராக அரம்பத் தனத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் கொடுமையிலும் கொடுமை நாமக் கல் மாவட்ட அரசு நிர்வாக மும் காவல்துறையும் அந்த அரம்பக் கும்பலுக்கு ஏவல் செய்து அரசமைப் புச் சட்டத்திற்கு எதிராகப் பெருமாள் முருகனின் அடிப்படை உரிமைகளைப் பறித்துள்ளன.

தமிழக அரசு, இது குறித்து எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதிகாப்பது, அரசமைப்புச் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறி மனித உரிமை மற்றும் கருத்துரி மைப் பறிப்பில் ஈடுபட்ட அதிகாரி களின் அட்டூழியங்களுக்கு ஆதரவ ளிப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அனைத்திந்தியஅளவிலும், பன்னாட்டளவிலும் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கெதிராக நடந்த உரிமைப் பறிப்புகள் மற்றும் அட்டூழியங்களைக் கண்டித்து இயக்கங்கள் நடந்துள்ளன. இவற்றையெல்லாம் பொருட்படுத் தாமல் தமிழக அரசு அமைதி காப்பது குற்றமிழைத்த அதிகாரி களுக்கெதிராக நடவடிக்கை எடுத் தால், குறிப்பிட்ட மத மற்றும் சாதி வாக்குகளில் பாதிப்பு வருமோ என்று அஞ்சி அரசமைப்புச் சட்டக் கடமையைக் கைவிட்டதாகத்தான் பொருள்படும்.

பெருமாள் முருகனின் மாதொ ருபாகன் நூல் மீது திறனாய்வு செய்வது தவறில்லை. அதில் தவறுகள் இருக்கின்றன, குற்றங்கள் இருக்கின்றன என்று ஒருவரோ ஒரு குழுவினரோ கருதினால் அதை வெளிப்படுத்தலாம். கூட்டம் கூட்டிப் பேசலாம். கருத்தரங்குகள் நடத்தி விவாதிக்கலாம். அந்த அடிப்படைக் கருத்துரிமைகள் எதிர்வினைஆற்றுவோர்க்கு உண்டு. ஆனால் ஆள்வலிமையைக் காட்டி அந்நூலைத் தடை செய்யக் கட்டாயப்படுத்துவதும் அதற்காகக் கடையடைப்பு நடத்துவதும் அதிகாரிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதத் தடை ஒன்றை நடைமுறைப்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை. தமிழக அரசின் நடவடிக்கைக் குரியவை.

மாதொருபாகன் புதினத்தில் சர்ச்சைக்குரிய பகுதி இதுதான் :

காளியும் பொன்னாளும் கணவன் மனைவி! திருச்செங்கோடு அருகே தொண்டுப் பட்டியில் வசிக்கிறார்கள். திருமணம் ஆகி 12 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இதனால் குழந்தை இல்லாத இருவரையும் ஊர் மக்கள் இழிவாகக் கருதுகிறார்கள். இடித் துப் பேசுகிறார்கள். குடும்பங்களில் வேளாண்மையில் முதலில் செய்யும் சடங்குகளில் வேலைகளில் பொன் னாள் ஈடுபடவேண்டாம் என்று ஒதுக்கி விடுகிறார்கள்.

இன்னொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் காளி மறுத்து விடுகிறான். தன் உடம்பின் ஒரு பாகம் தன் மனைவி பொன் னாள். அதில் இன்னொருத்திக்கு இடமில்லை என்று கருதுகிறான். அது மட்டுமின்றி இன்னொரு திருமணம் செய்து அவளுக்கும் குழந்தை இல்லை என்றால் தான் தான் மலடன் என்றாகிவிடும். எனவே இன்னொரு திருமணம் வேண்டாம் என்று உறுதி கொள் கிறான்.

திருச்செங்கோட்டு மலை உச்சியில் உள்ள கடவுளுக்கு ஆண்டுக்கொரு தடவை திருவிழா 15 நாள் நடக்கும். 14ஆம் நாள் திருவிழாவில் அங்கு கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் விரும்பிய வர்களுடன் அங்கங்கே உடலுறவு கொள்ளலாம். அது தெய்வீகச் சடங்குகளில் ஒன்று. ஆண்கள் எல்லோரும் அப்போது தெய்வ வடிவங்களே!

காளியின் தாயாரே, பொன்னா ளைப் பதினான்காம் நாள் திருநா ளுக்குக் கோயிலுக்கு அனுப்பலாம் என்று மகனிடம் கூறுகிறாள். முதலில் மறுத்து வந்த காளியும் பொன்னாளும் பின்னர் உடன் படுகின்றனர். பொன்னாள் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டு கருத்தரிக்கிறாள். குழந்தை பிறக்கிறது.

இந்தப் பகுதியைத் தான் எதிர்ப்பாளர்கள் எதிர்க்கிறார்கள். இந்தப் பகுதியை மறுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் வன்முறையால் அதிகார சர்வாதி காரத்தால் நூலுக்குத் தடை விதிப் பதை எள்ளளவும் ஏற்க முடியாது.

பெருமாள் முருகனின் எழுத்து பற்றி - புதினமாக இருந்தாலும் கட்டுரைகள் கவிதைகளாக இருந்தாலும் நமக்கு மாற்றுக் கருத்து உண்டு.

இந்தக் கதையில் வரும் 14ஆம் நாள் திருவிழாவில் விரும்பிய ஆணும் பெண்ணும் புணர்ந்து கொள்ளும் நடைமுறை 100 ஆண்டுகளுக்கு முன் திருச்செங் கோட்டுப் பகுதியில் இருந்தது என்பது நம்பத் தகுந்ததல்ல.

பெருமாள் முருகன் தனது அறிக்கையில் “இந்நிகழ்வு உண் மையா, கற்பனையா என்று என்னால் கூறமுடியாது” என்கிறார். உண்மையா, கற்பனையா என்று தனக்கே உறுதிப்படாத ஒரு நிகழ்வை ஓர் ஊரில் இன்று வரை நடைபெற்று வரும் ஒரு குறிப் பிட்ட கோயில் திருவிழாவுடன் இணைத்து ஏன் எழுத வேண்டும்?

பெருமாள் முருகனின் எழுத்து உத்தியில், எப்பொழுதும் நடுவமாக இருப்பது விகாரமான பாலுறவுக் கவர்ச்சியும் பால் உறுப்பு காட்சி களும் தாம்! அந்த உத்தியின் சிகர மாகத்தான் 14ஆம் நாள் திருவிழா வில் விரும்பிய ஆணும் பெண்ணும் யாரும் யாரோடும் புணர்ந்து கொள்ளலாம் என்று ஒரு நிகழ்வை அவர் கட்டமைத்தது.

கணவன் மனைவி உறவுக்கு வெளியே பாலுறவு கொள்வதைத் தமிழில் ஏற்கெனவே பலர் எழுதி யுள்ளார்கள். டி. செல்வராசின் “தேனீர்” நாவலில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியி ருப்புகளில் - தோட்டங்களில் இது இயல்பாக நடைபெறுவதைக் காட் டியுள்ளார். ஆனால் இப்புதினம் எதிர்ப்புக்குள்ளாகவில்லை. காரணம் அப்பாலுறவுச் செய்திகள் அப்புதினத்தின் நடுவம் அன்று, அது தொழிலாளர்களின் உழைப்பு துன்ப துயரம் - அவர்களின் போராட்டம் ஆகியவற்றை நடுவ மாகக் கொண்டு ஒரு சமூக இலட்சிய நோக்கோடு இயங்கிய புதினம்!

பெருமாள் முருகனின் எழுத்து களில் எந்த சமூக இலட்சிய நோக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை. மாதொரு பாகன் புதினத் தின் தொடர்ச்சியாக அதே காளி பொன்னாள் வாழ்க்கையை நடுவப் படுத்தி எழுதியுள்ள அடுத்த புதின மான “அர்த்தநாரி” யில் மிகமிக விகாரமாக வரம்பற்ற புணர்ச்சிகளை விவரிக்கிறார். விவரிக்கிறார் எனில் புணர்ச்சியில் “ஆண்குறி- பெண்குறி செயல்பாடுகளை” விவரிக்கிறார். அர்த்தநாரியில் வரும் தோசைக் கதைப்பகுதி இதற் கொரு சான்று.

கணவன் உறவு கொண்ட பிறகு அதே பெண்ணை அடுத்து எதிர் வீட்டுக்காரன் புணர்வது- மாமியாரை மருமகன் புணர்வது போன்றவற்றை விலாவாரியாக விவரிக்கிறார் பெருமாள் முருகன் .

“பொன்னகரம்” சிறுகதையில் நோயாளிக் கணவனுக்குப் பால் கஞ்சி வாங்கக் காசில்லாமல் பணத் திற்காக ஒரு தடவை தன் உடலை வாடகைக்கு விட்ட ஒரு மனை வியைச் சித்தரித்தார் புதுமைப் பித்தன். பெருமாள் முருகன் எழுத் துகள் டி.செல்வராசு, புதுமைப் பித்தன் பாணி அல்ல. நடுநிசி நாய்கள் வழிவந்தவை.

“கெட்டவார்த்தைகள் பேசு வோம்” என்று கட்டுரைத் தொகுப்பு எழுதியுள்ளார் பெருமாள் முருகன். அதில் அண்ணாவின் கம்பரசத்தை விமர்சிக்கிறார். அடுத்து தமிழ் நாடெங்கும் ஒரு விரலை நீட்டிக் கொண்டு அண்ணாவின் சிலைகள் நிற்கின்றன. அதைப் பார்த்தால் போகின்ற வருகின்ற பெண்களை அவர் கூப்பிடுவது போல் இருக் கிறது என்று எழுதியுள்ளார்.

கழிவறைகளில், விடலைகள் காமச் சொற்கள், பால் உறுப்புப் பெயர்கள் - புணர்ச்சிப் படங்கள் எனப்பல எழுதுவதுண்டு. இவை யெல்லாம் இக்கால இலக்கியங்கள்தாம் என்று எழுதி அவற்றிற்கான ஏற்பிசைவைக் கோரியவர் பெருமாள் முருகன்.

படைப்பிற்கான சமூக நோக்கம் சமூகப் பொறுப்புணர்ச்சி எதுவுமின்றி கவர்ச்சிக்கான உத்தியாக வரம்பற்ற பாலுறவை - பால் உறுப்புகளை வர்ணிப்பவர் பெருமாள் முருகன்.

பெருமாள் முருகன் எழுத்தாளுமை மிக்கவர். அவர் கதை சொல்லும் உத்தி பாராட்டத் தக்கது. ஆற்றலைச் சிறந்த வழியில் பயன்படுத்தலாம்.

இருந்தாலும், பெருமாள் முருகன் எழுத்துகளை ஏற்பதும் மறுப்பதும் வாசகர்கள் முடிவுக்கு விட வேண்டும். அவற்றை விமர் சிக்கலாம். அவற்றிற்கு எதிராகத் தடியைத் தூக்கக் கூடாது என்பதே பன்முகத் தமிழ்த் தேசியத்தின் பார்வை!

Pin It