kuku -movie-- 600காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். கண் பார்வையற்றவர்களுக்குள் காதல் வந்தால் எப்படியிருக்கும், இந்த கேள்விக்கு விடைதான் எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளி வந்துள்ள குக்கூ திரைப்படம்.

சென்னை புறநகர் தொடர்வண்டியில் பொருட்கள் விற்பனை செய்யும் இளைஞன் தமிழ், உள்ளூர் இசைக் குழுவில் இளையராஜா குரலில் பாடும் பாடகராகவும் இருக்கிறான். கல்லூரி மாணவி சுதந்திரகொடியை ஒரு விழாவில் சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே மோதல் உண்டாகிறது.

கண் பார்வையுள்ளவரை திருமணம் செய்து கொண்டு வாழவிரும்புகிறாள் சுதந்திரகொடி. ஒரு கட்டத்தில் தமிழ் சுதந்திரகொடியை விரும்புகிறான். சுதந்திரகொடியும் தமிழை விரும்புகிறாள். கண் பார்வையற்ற இருவரின் காதலும் நிறைவேறியதா? என்பதுதான் குக்கூ படத்தின் கதை.

எத்தனையோ காதல் சார்ந்த படங்களை பார்த்து இருந்தாலும் இந்தபடத்தின் கதைக் களமும், கதை மாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ள விதமும் முற்றிலும் புதிது.

கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் ஆவணப் படமாக மாறிவிடக் கூடிய கதையை நக்கலான, உணர்ச் சியான வசனங்கள் மூலம் மாற்றியிருக்கிற ராஜு முருகன் பாராட்டப்படவேண்டியவர்.

”கண்ணுள்ள ஆம்பளை எல்லா இடத்திலும் இருக்கான். மனசுள்ள ஆம்பளை எங்கிருக்கான்’’

”ஒவ்வொரு ஆம்பளையும் வெளியில புரட்சித் திலகம் வீட்டுக்குள்ள புரட்சி நடிகர்தான்’’

”தல, தளபதி உள்ள இடத்துல மஞ்சுளாவுக்கு என்ன வேலை,’’

”குஜராத் மாதிரி மின்மிகை மாநிலமாக தமிழ்நாடும் மாற ஒரு சிறப்பு பிராத்தனை செய்யலாமா’’

இயக்குநர் ராஜுமுருகனை. எழுத்தாளர் ராஜுமுருகன் பல இடங்களில் பின்னுக்கு தள்ளிவிடுகிறார். தமிழாக அட்டகத்தி தினேசும், சுதந்திரகொடியாக மாளவிகாவும் (அறிமுகம்) சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். மற்ற கதாபாத் திரங்களும் அறிமுகம் என்றாலும் சரியான தேர்வு. தங்கள் கதாபாத் திரத்தை உணர்ந்து சிறப்பாக செய் துள்ளார்கள்.

காதலி நடந்து வரும் ஒலியைக் கொண்டே அவளது வருகையை உணர்வது, பணத்தை எண்ணிப் பார்த்து சரியாக வாங்குவது, பிறர் பயன்படுத்திய துணிகளை வாங்க மறுப்பது, எச்சில் செய்த கேக்கை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் மட்டுமல்ல, இருந்து கொண்டே இல்லையென்று சொல்லச் சொல் லும் அண்ணன் குறித்து சுதந்திர கொடி “என் அண்ணன் இங்க தான் இருக்கான். எங்க அண்ணி யின் கருவாட்டுக் குழம்பு வாசனை எனக்குத் தெரியாதா? என்று சொல் வதன் மூலம் பார்வையற்றவர்களின் உணர்வுகளை, அறிவாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

எண்ணிப் பார்க்காமலேயே பணம் குறைவதைக் கண்டுகொள் கிற பார்வையற்றவர்களின் திறமை வெளிப்படுத்தும் வேளையில், காவல் துறையின் அயோக்கியத்தனத்தையும், நயவஞ்சகக் குணத்தையும் நன் றாக தோலுரிக்கிறார்.

தேவாலயக் காட்சி சிறப்பு. “விவேகானந்தர் தேடிய நூறு இளைஞர்களில் நாங்க இரண்டு பேர், இயேசு நாதருடைய 12 சீடர்களில் நாங்க ரெண்டு பேர் பாதர்’’ என்று தமிழின் நண்பன் சொல்லும் காட்சி அருமை.

பார்வையற்ற பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து பாது காப்பது, விபத்தில் அடிபட்டவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிற நபர் கருப்புச்சட்டையுடன் இருப்பது போன்ற காட்சிகள் இயக்குனரின் தனித்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

இசையமைப்பாளர் சந்துரு நாராயணனின் பின்னணி இசையும்.ஆர்.கே.வர்மாவின் சிறப்பான ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலமாக அமைந்துள்ளன. குழப்பமில்லாத திரைக்கதையில் இரண்டாவது பகுதியில் சற்றுக் கவனம்செலுத்தி நீளத்தைக் குறைத்து இருந்தால் படத்தில் ஏற்பட்டுள்ள தொய்வை குறைத்திருக்கலாம்.

உடல் சார்ந்த அழகால் ஈர்க்கப் பட்டு வரும் காதல் ஒருவகை. பொருளாதார வசதியினால் ஈர்க்கப்பட்டு வரும் காதல் மற்றொரு வகை.

கொள்கை கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வரும் காதல் இன் னொருவகை. ஒருவரின் உடல் அழகில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதார நிலையில் கூட மாற்றம் வரலாம். தான் உயர்வாக ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை கோட்டுபாடு கூட ஒருவ ருக்கு மாறலாம்.

ஆனால், எந்த நிலையிலும் ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள அன்பு மாறாத வகையில் வாழ வேண்டும். இதுவே சிறப்பான வாழ்வு.பார்வையற்ற இருவரின் அன்பு சார்ந்த காதல் உணர்வுகளை ஆபாசமின்றி படமாக்கியுள்ள ராஜுமுருகனின் முயற்சியை பாராட்ட வேண்டும்.

பார்வையற்றவர்களோ, மாற்றுத் திறனாளிகளோ, மற்றவர்களிடம் எதிர் பார்ப்பது கருணையல்ல. சலுகையும் அல்ல. அவர்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்.

கண் பார்வையற்றவர்களை இந்த அரசும், காவல் துறையும் எப்படி ”நாகரிகமாக’’ நடத்தினார்கள் என்பது நாம் அறியாததா!

கண்பார்வையற்றவர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் ஏற்படுத்துகிறது குக்கூ திரைப்படம்.

Pin It