“சிரம் அறுத்தல்

வேந்தர்க்குப் பொழுதுபோக்காம்

நமக்கெல்லாம் உயிரின் வாதை’’

  - பாரதிதாசன்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு செயல்படாத அரசு என்று யார் சொன்னது? தாடி வைக்கவும், கண்ணீர் விட்டு அழவும், மொட்டையடித்து பூஜை, யாகம் செய்யவும் அலைந்து கொண்டிருந்த அ.தி.மு.க அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் கடந்த டிசம்பர் 28 முதல் 30 வரை போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க ஏவிய அடக்குமுறைகளைப் பார்க்கும்பொழுது இந்த அரசு செயல்படாத அரசு என்று யார் சொல்லு வார்?

ஆதாயத்திற்காக அண்டிப் பிழைக்கிற அ.தி.மு.க. வினரின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு பணிய வைத்து, உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் அரசுக்குப் பாடம் புகட்டியுள்ளனர். பேச்சுவார்த் தைக்கு வரமுடியாது என்ற போக்குவரத்துத் துறை அமைச்சரின் அடாவடித்தனத்தை முறியடித்து சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்துள்ளது போக்கு வரத்துத் தொழிலாளர் நடத்திய ஒன்றுபட்ட போராட்டம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 1.45 இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சேலம், கோவை, விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி என எட்டு கோட்டங்கள் மூலமாக 22,635 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 286 பணிமனைகள் உள்ளன.

1956ஆம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தின் கீழ் 01. 01. 1972 முதல் போக்குவரத்துக் கழகங்கள் வரையறுக் கப்பட்ட நிறுவனங்களாயின. சுமார் 16 கோடி ரூபாய் மூலதனத்தில் பல்லவன், சேரன், சோழன், பாண்டியன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள் இன்று எட்டு கோட்டங்களாக பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனத்தோடு இயங்கி வருகின்றன.

1977 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, தொ.மு.ச, அ.தொ.பே. ஆகிய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

1998இல் நிர்வாகப் பணியாளர் சங்கம் தங்களையும் பேச்சுவார்த் தைக்கு அழைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பத்தாயிரம் வாக்குகளுக்கு ஒரு பிரதிநிதி பேச்சு வார்த்தையில் பங்கேற்க அனுமதிக் கப்படுவார் என்ற அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர் தலில் தொ.மு.ச. _ 2, அ.தொ.பே. _ 2, சி.ஐ.டி.யூ. _ 1, நிர்வாகப் பணியாளர் சங்கம் -_ 1 என்ற அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

2001இல் தமிழக முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் ஆட்சி யில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகள் என்பது 5 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்கள் பெற்றுவந்த 20 விழுக்காடு போனஸ் 8.33 விழுக் காடு தான் என்று அறிவிக்கப் பட்டது. (8.33 விழுக்காடு போனஸ், 11.67 விழுக்காடு கருணைத் தொகை) தமிழக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண் டித்து 2001இல் 17 நாட்கள் போக்கு வரத்துத் தொழிலாளர்கள் போ ராட்டம் நடைபெற்றது.

ஊதிய ஒப்பந்தம் பேச்சு வார்த் தையில் (2004, 2007) பழைய முறை யில் 6 மத்திய சங்கங்கள் கலந்து கொண்டு ஒப்பந்தங்கள் முடிக்கப் பட்டன. 2010ஆம் ஆண்டு ஒப்பந்த காலத்தில் பல்வேறு சங்கங் களும் தங்களையும் பேச்சுவார்த் தைக்கு அழைக்கக்கோரி வழக்குத் தொடர்ந் தன.

சென்னை உயர் நீதிமன்ற முன் னாள் நீதிபதி அப்துல் ஹாதி மேற் பார்வையில் 25.11.2010 அன்று தேர்தல் நடைபெற்றது. அதிக வாக் குகள் வாங்குகின்ற ஒரு சங்கத் துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது. தொ.மு.ச. 73,450 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றது. போக்குவரத்துத் தொழி லாளர் களின் 11வது ஊதிய ஒப்பந் தம் தொ.மு.ச.வுடன் பேசப்பட்டது. 24.11.2015 வரை தொழிற்சங்க அங்கீகாரம் தொ.மு.ச.வுக்கு உள்ளது.

01.09.2013 முதல் 12ஆவது ஊதிய ஒப்பந்தம் அமுலுக்கு வர வேண்டும். ஒவ்வொரு சங்கமும் தனித் தனியாக கோரிக்கைகளை உருவாக்கி தமிழக அரசுக்குக் கொடுத்தன. அரசோ பேச்சு வார்த் தையை நடத்தாமல் காலம் கடத் தியது.

அண்ணா தொழிற் சங்கப் பேரவை மற்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்த மனு வில் கடந்த 2013 நவம்பர் 30ஆம் நாள் நிலவரப்படி அ.தொ.பேரவை யில் 91,440 (70.90 விழுக்காடு) உறுப்பினர்களும், தொ.மு.ச.வில் 18,000 (13.96 விழுக்காடு) உறுப்பி னர்களும் உள்ளனர். இதனால் தொ.மு.ச. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்து விட்டது என்று கூறியுள்ள னர்.(எது ஆளும் கட்சியோ அதுவே அதிக உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கமாக இருக்கும் என் பதே போக்குவரத்துக் கழகத்தின் நிலைமை).

12ஆவது ஊதிய உயர்வுக்காக 11 சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பு (அ.தொ.பே. தவிர்த்து) உருவாக்கப் பட்டு தமிழக அரசிடம் பொது மனு செப்டம்பர் மாதத்தில் வழங் கப் பட்டது. பல்வேறு போராட் டங்கள் நடைபெற்றன. 2014 டிசம் பர் 2 அன்று திருச்சியில் நடை பெற்ற பேரணி முடிவில் டிசம்பர் 19க்குப் பிறகு வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இப் போராட்ட இயக்கங் களில் கலந்து கொண்டவர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது. இந்நிலை யில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 2015 சனவரி முதல் ரூ. 1000 இடைக்கால நிவாரணத் தொகையாக வழங்கப் படும் என்று அறிவித்தார்.

1.9.2013க்கும் _ 1.1.2015க்கும் இடைப்பட்ட காலத்திற்கு எந்த உயர்வும் இல்லை என்பதை இதன் மூலம் அவர் மறைமுகமாக தெரி வித்தார்.

01.09.2013 முதல் 31.12.2014 வரை உள்ள 15 மாதங்கள் பற்றிய கவலை தமிழக முதல்வருக்கு இல்லாதது பெருத்த கோபத்தை போக்கு வரத்துத் தொழிலாளர்கள் மத்தி யில் உருவாக்கிய நிலையில் தான் வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் தொழிற்சங்கங்களுடன் பேச மறுத்தார். அ.தொ.பேரவைத் தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் சின்னச்சாமி வேலை நிறுத்தத்தை முறியடிப்போம் என்று முழங்கி னார். 94,000 உறுப்பினர்கள் அ.தொ.பேரவையில் இருக்கிறார் கள் என்றார்.

2014 டிசம்பர் 26 _ 27இல் நடை பெற்ற பேச்சுவார்த்தைகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட அதிகாரிகள் பேரணி மற்றும் இயக்கங்களில் கலந்து கொண்டவர்களுக்கு ஆப்சென்ட் போட்டதை திரும்பப் பெறுகி றோம் என்றார்கள். ஆனால் சொன்னபடி ஆப்சென்ட் திருத்தப் படாததால் சம்பளம் பிடிக்கப்பட்ட செய்தி அறிந்த தொழிலாளர்கள் (5 நாட்கள் சம்பளம் இழப்பு) 28ஆம் தேதியே போராட்டக் களத்தில் குதித்தனர்.

தமிழ்நாட்டின் நரம்பு மண்டல மாக இருந்து மக்களை இணைக்கக் கூடியது போக்குவரத்துத் துறை. 15 மாதங்களாக போராடிக் கொண்டி ருக்கிற தொழிலாளர்கள் பிரச்சி னைகளை இந்த அரசு காது கொடுத்து கேட்கவில்லை. பொது மக்களுக்கு ஏற்படும் துயரம் குறித்து அக்கறைப்படவில்லை. மாறாக போராட்டத்தை ஒடுக்குவதிலேயே அரசு மும்மரமாக செயல்பட்டது.

போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பச் சொல்லி வேலை நிறுத் தத்தை உடைக்க ஆட்களை தேர்வு செய்தது. தமிழக முதல்வர், 91,490 தொழிலாளர்கள் அ.தொ.பேர வையில் உள்ளனர், தொ.மு.சவுடன் எப்படி பேசமுடியும் என்று வினா எழுப்பினார். 91,490 தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டுமா இல்லையா? இவர் களின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு உண்டா இல்லையா? 1.5 இலட்சம் தொழிலாளர் பிரச்சனையை தி.மு.க _ அ.தி.மு.க.வின் பகை அரசியலா கவே முதன்மைப்படுத்துகிறார் தமிழக முதல்வர். அ.தொ.பேர வையுடன்தான் தமிழக அரசு பேசும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

90 விழுக்காடு பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று தமிழக முதல்வரும் ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாலும் உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை. தொழிலாளர்கள் ஒன்று பட்டு போராடினர். ஆளும் கட்சி யினர், காவல் துறையினர் அடக்கு முறைகளுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் ஒன்றுபட்டு களத்தில் நின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் களாக மாறி போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பல ஊர்களில் மிரட்டியுள்ளனர்.

போக்குவரத்துத் துறையில் ஊதிய உயர்வு மட்டுமல்ல, தொழி லாளர்களின் பல்வேறு பிரச்சி னைகளைத் தெரிந்து கொண்டு அதுகுறித்து ஆக்கப்பூர்வ நட வடிக்கை எதையும் போக்குவரத் துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எடுக்கவில்லை. 240 நாட்கள் பணிமுடித்த பின்னும் பலர் பணி நிரந்தரம் செய்யப் படவில்லை. ஓட்டுனர், நடத்துனர் களுக்கு முறையே ரூ. 540, ரூ. 530 என்பதை குறைத்து நிரந்தரம் செய்யாததால் தொழிலாளர்களுக்கு ரூ. 240, ரூ. 230 வழங்கப்படுகிறது. அதாவது சமவேலைக்கு சம ஊழியம் இல்லை.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டுக் கழகம், அஞ்சல் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளுக்கு செலுத்திய ரூ. 4,500 கோடி அதிகாரிகளால் நிர்வாகச் செலவு செய்யப்பட்டு விட்டது. இதனால் மருத்துவம், திருமணம், கல்வி உள்ளிட்ட தொழிலாளர்களின் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் தொழி லாளர்கள் திண்டாடி வருகின்ற னர். கடன் சுமையில் சிக்கித் தவிக் கின்றனர். வேலைப் பளு _ விடுப்பு மறுப்பு _ மன உளைச்சல் இவற் றோடு தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். 2003க்குப் பிறகு சுமார் 50.000 தொழி லாளர்கள் பணியில் சேர்ந் துள்ளனர். இவர்களுக்கு பென்சன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழிலாளர்களின் இரத் தத்தை அம்மாவின் பிறந்த நாளுக்கு தானமாக வழங்கச் சொல்லி கின்னஸ் சாதனை என்று பெருமையாகப் பேசினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இரத்தம் கொடுத்து தனக்கு பெருமை சேர்த்த தொழிலாளர் களுக்கு இந்த அமைச்சர் செய்தது என்ன? இந்த அரசு செய்தது என்ன? பணிபுரியும் தொழிலாளர் களுக்கு மட்டுமல்ல, ஓய்வு பெற்ற சுமார் 4,500 தொழிலாளர்கள் பணப்பலன் எதுவுமின்றி துன்பப் படுகின்றனர். 2004, 2007 ஒப்பந்த பலன்கள் கூட ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு வழங்கப்படவில்லை. போக்குவரத்துத்துறையில் ஊழலும், இலஞ்சமும் தலைவிரித் தாடுகிறது. போக்குவரத்துத் துறை இழப்பில் இயங்குவதாக சொல் கிறார்கள். ஆனால் போக்கு வரத்துத் துறை அமைச்சர்களோ கோடீஸ்வரர் களாக கோலோச்சுகிறார்கள். ஆம்னி பஸ் முதலாளிகளாக வலம் வருகிறார்கள்.

வேலை நிறுத்தம் நடைபெறும் போது சூலை முதல், டிசம்பர் வரை 107 விழுக்காடு பஞ்சப்படி உயர்வு என்று அரசின் சார்பில் அறிவிக்கப் படுகிறது. அரசு ஊழியர் மற்றும் பிற துறையினர் 107 விழுக்காடு பஞ்சப் படியினை பெற்று செல வழித்த நிலையில் போக்குவரத்துத் துறைக்கு அறிவிக்கப்படுகிறது. இதைவிட கொடுமை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 100 விழுக்காடு பஞ்சப்படி 4 மாதம் நிலுவையில் இருக்கிறது. துறையின் இலட் சணம் இதுதான்.

அரசுக்கு தர்ம சங்கடத்தையும் பொதுமக்களுக்குப் பாதிப்பையும் தருவதுதான் வேலை நிறுத்தத்தின் நோக்கம் என்று தினமணி, துக்ளக் இதழ்களும் பல்வேறு ஊடகங்களும் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தின. ஆயினும் இவற்றையெல் லாம் மீறி போக்குவரத்து ஊழியர் களின் ஒன்றுபட்ட போராட்டம் போக்குவரத்துத் துறை அமைச் சரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. டிசம்பர் 31 அன்று போ ராட்டம் திரும்பப் பெறப்பட்டது. அரசு சார்பில் 14 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, 11 சங்கங் களுடன் பேசுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.

அரசுப் போக்குவரத்துத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும். போக் குவரத்துத் தொழிலாளர்களும் பொதுமக்களை அன்புடன் மதித்து சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

Pin It