rajiv-murder-issue- 600செய்தி ஒன்றுதான்; ஆனால் அது தெரிவிக்கப்படும் முறைவேறு, வேறு! அதாவது நடந்த செயல் ஒன்று தான்; அதைப்பற்றிய தகவல் வேறு, வேறு!

எடுத்துக்காட்டாக 20.2.2014 அன்று நாளேடுகளில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை பற்றி செய்தி வந்தது. ஒவ்வொரு ஏட்டிலும் ஒவ்வொரு வகையாக அச்செய்தி வெளியிடப்பட்டது.

தினமலர் : “ராஜீவ் கொலையாளிகள் மூணு பேருக்கும் விடுதலை - மேலும் நாலு பேரை விடுவிக்கவும் தமிழக அரசு முடிவு’’

தினமணி: “ராஜீவ் கொலையாளிகள் ஏழுபேரும் விடுதலை - ஜெயலலிதா அறிவிப்பு’’

தினதந்தி: “ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் 3 நாளில் விடுதலை’’

தி இந்து: (ஆங்கிலம்) “ராஜீவ் வழக்குக் கைதிகளை விடுதலை செய்வதில் நடுவண் அரசும் தமிழக அரசும் மோதல்”

தி இந்து: (தமிழ்): “ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலை’’

தினமலர், தினமணி ஏடுகள் “ராஜீவ் கொலையாளிகள்’’ என்றன. ராஜீவ்காந்தியைக் கொன்ற கொடியவர்களை விடுதலை செய்கிறார்களே என்ற சினம் வாசகர்களிடம் வரவேண்டும் என்ற நோக்கில் இவ்விரு ஏடுகளும் தலைப்புக் கொடுத்தன. இதே பாணியில்தான் தமிழில் வெளிவரும் இந்து ஏடும் தலைப்புக் கொடுத்தது.

அதற்கும் மேலே, இவ்வேடுகள் மரண தண்ட னையை ஆதரிக்கின்றன.

ஆங்கில இந்து ஏடு, இந்த ஏழு பேர் விடுதலையை எதிர்க்கவில்லை. காரணம் இவ்வேடு சாவுத் தண்ட னையை எதிர்க்கிறது. 23 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தது போதும் என்று கருதுகிறது. ஆனால் தமிழில் வெளிவரும் இந்துவின் ஆசிரியர் குழு மரண தண்டனையை எதிர்க்கவில்லை என்று கருத இட மிருக்கிறது. மேலும் ராஜீவ் கொலையாளிகள் என்று சட்டத்திற்கு புறம்பான சொல்லை தமிழ் இந்து பயன்படுத்துகிறது. ஆங்கில இந்துவோ ராஜீவ் கொலை வழக்கு என்று கூடக் கூற விரும்பவில்லை. ராஜீவ் வழக்குக் கைதிகள் என்று கூறுகிறது.

தினத்தந்தியோ இப்படியும் அப்படியுமாக சிந்திக்கிறது. எனவே “ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள்’’ என்று போடுகிறது.

நீதிமன்ற மொழி குற்றவாளி என்றோ, கொலையாளி என்றோ யாரையும் கூறாது. கொலை வழக் கில் தூக்குத் தண்டனை வழங்கும் போது கூட “குற்றம் சாட்டப்பட்ட வர்’’ என்று மட்டுமே கூறும்.

சிறையில் அடைக்கப் பட்டவர் கள் சிறையாளி (நீஷீஸீஸ்வீநீt) தண்டிக் கப்பட்டவர் என்று மட்டுமே குறிப் பிடப்படுவர். திரு நடராஜ் அவர்கள் சிறைத் துறை தலைமை அதிகா ரியாக இருந்த போது சிறைவாசி என்பதை இல்லவாசி என்று மாற்றினார்.

நீதிமன்றமும், சிறையும் எப்பொ ழுதும் பொதுவானவையாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு அடிப் படையில் யாரையும் சட்டத் திற்குப் புறம்பான சொற்களால் அழைத்து இழிவு படுத்தக் கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் “குற்றம் சாட்டப்பட்ட வர், தண்டிக் கப்பட்டவர்,’’ “சிறையாளி’’ என்று மட்டுமே அழைக்கின்றன.

கொலை வழக்கொன்றில், குற்றம் சாட்டப்பட்டு காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது ஆங்கில இந்து உட்பட பல ஏடுகள் “ சிறையில் சங்கராச்சாரியர்’’ என்று தலைப் பிட்டன. கொலை வழக்குக் கைதி சங்கராச்சாரியார் என்று எழுத வில்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, சொற்களையாரும் சும்மா பயன்படுத்துவதில்லை. பொது நிலையில் பயன்படுத்துவதுமில்லை. அவரவர் விருப்பு வெறுப்புக் கேற்ற சொற்களையே தேர்வு செய்து பயன் படுத்துகின்றனர் என்பதுதான்.

அண்மையில் சென்னையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறு பேருந்துகளில் இரட்டை இலைப் படங்களை செயலலிதா அரசு வரைந்துள்ளது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் - தி.மு.க. வழக்குத் தொடுத்தது. தேர்தல் ஆணையம் இரட்டை இலைப் படங்களை அழித்திட ஆணையிட்டது. அதை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சென்னை உயர் நீதி மன்றம் தேர்தல் ஆணையத்தின் ஆணை செல்லும் என்று 25.3.2014 அன்று தீர்ப்பளித்தது. அதன் படி சிறிய பேருந்துகளில் வரையப்பட்ட இரட்டை இலைப் படங்களை அழிக்க வேண்டும். இச்செய்தி ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு வகையாக வெளியிடப்பட்டது.

தினத்தந்தி (26.3.2014) “இலை ஓவியத்தை மறைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் உத்தரவு சரியே - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு’’

தி இந்து (ஆங்கிலம் - 25.3.2014) “இரட்டை இலை வழக்கில், தேர்தல் ஆணையத்தின் ஆணை செல்லும் என்றது உயர்நீதி மன்றம்.’’

தி இந்து தமிழ் இதழ் - தினத்தந்தி பாணியில் தலைப்பிட்டுள்ளது.

தினத்தந்தி, எப்பொழுதும்- தமிழ கத்தில் ஆட்சியிலுள்ள கட்சியை ஆதரித்துச் செய்திகள் வெளியிடும். எதிர்க்கட்சிச் செய்திகளையும் வெளியிடும். ஆனால் ஆளுங்கட்சியை முழுக்க முழுக்க பெரிய அளவில் ஆதரிக்கும். எனவே “இலை ஓவியம் - மறைத்தல்’’ என்ற அளவில் அது செய்தி வெளியிட்டது. ஆங்கில இந்து ஏட்டுக்கு, அரசுப் பேருந்து களில் இரட்டை இலையை நினைவூட்டும் ஓவியம் வரைந்ததில் உடன்பாடில்லை. எனவே தலைப் பில் “இரட்டை இலை’’ என்று நேரடியாகக் குறிப்பிட்டது.

இதே ஆங்கில இந்து, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான, இட ஒதுக் கீட்டைஆதரிக்கவில்லை. அதனால் மண்டல் குழு பரிந்துரை தொடர்பான செய்திகளை வெளியிடும் போது “B.C. Quota - “பின் தங்கியோர் பங்கு’’ என்றுதான் கொச்சையாக தலைப் பிடும். இட ஒதுக்கீடு (Reservation) என்ற சொல்லை இந்து ஆங்கில ஏடு பயன்படுத்தாது.

இவ்வளவையும் நாம் பட்டியலிடக் காரணம், சமூக மாறுதல், சமூக சமத்துவம், தமிழின விடுதலை, தமிழ்த் தேசியம் ஆகிய கொள்கை களை ஏற்றுக் கொண்டுள்ளோர், சொல் பயன்பாட்டைத் துல்லியமாகப் புரிந்து சரியாகப் படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ப தற்காகவே.

சொற்களைத் துல்லியமாகவும், சொல்லவந்த கருத்தை குழப்பமில் லாமல் தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்பதை தமிழ்ச் சான்றோர்கள் பண்டைக் காலத்தில் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்கள். ஆனால் அந்த மரபில் வந்த தமிழர்கள் இன்று ஆதிக்க ஆற்றல்களிடம், எளிதில் ஏமாறத் தக்க வகையில், கருத்துச் செறிவற்று சீரழிந்துள்ளார்கள்.

“தீயாடியப்பர்’’ என்ற தமிழ்க் கடவுளை, வந்தேறி ஆரியக் கும்பல் “அக்னீசுவரர்’’ என்று சமற்கிருதத் தில் பெயர் மாற்றியது. ஏமாளித் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். “மயிலாடுதுறை’’ என்ற அழகிய ஊர்ப் பெயரை சமற்கிருதத்தில் “மாயூரம்’’“மாயவரம்’’என்று வந்தேறி ஆரியக் கும்பல் பெயர் மாற்றியது. ஏமாளித் தமிழர்கள் இன்றுவரை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தமிழக அரசு மயிலாடுதுறை என்று பெயரை மீட்டு அறிவித்த பின்னரும் மாயவரம் என்று சொல்வதில் மதிப்புத் தேடும் அடிமை இன்பம் தமிழர்கள் சிலரிடம் இன்றும் உள்ளது.

வணிகக் கொள்ளை நடத்த வந்து நாடு பிடித்த ஆங்கிலேயக் கும்பல் திருநெல்வேலி என்ற தமிழ் ஊரை “டின்னவேலி’’ என்று சிதைத்து அழைத்தது. இன்றும் கூட “டின்ன வேலி’’ என்று அழைக்கும் போலி அறிவாளிகள் தமிழரிடையே உள்ளனர்.

இந்தப் பெயர் மாற்றங்கள் எல்லாம் அயல் இனங்கள் தமிழ் இனத்தை ஆதிக்கம் செய்வதற்கான கருத்தியல் திணிப்புகள் என்று தமிழர் பலர் கண்டு கொள்ளவில்லை. தமிழ்மொழி அநாகரிகமானது, சமற்கிருதம், ஆங்கிலம் ஆகியவை உயர் நாகரிக மொழிகள் என்ற உளவியலைத் திணிக்கவே இந்தப் பெயர் மாற்றங்கள் என்பதைத் தமிழர்கள் பலர் புரிந்து கொள்ளவில்லை.

வந்தேறிகள் திணித்த அந்தச் சொல் மாற்றங்களை அப்படியே ஏற்றனர் தமிழர்கள்.

அந்த வந்தேறிகள் தங்கள் கை வரிசையை இன்றும் காட்டிக் கொண்டு தான் உள்ளனர். சென் னையில் உள்ள அண்ணா சாலை- 1969 இல் அப்பெயர் பெற்றது. ஆனால் துக்ளக் சோ இன்றும் அதை மவுண்ட் ரோடு என்றுதான் எழுதுகிறார் ஏன்? அண்ணா என்ற சொல் தமிழர் அடையாளமாக இருக்கிறது; அது கூடாது. இருந் தால் சமற்கிருதத்தில் இருக்க வேண்டும்; இல்லையேல் ஆங்கிலத் தில் இருக்க வேண்டும். தமிழில் இருந்து விடக் கூடாது என்பது ஆரியப் பார்ப்பனர்களின் நிலை பாடு. இந்த சூழ்ச்சியை அறிந்து கொள்ளாத ஏமாளித் தமிழர்கள் சிலரும் தங்கள் ஆங்கில அறிவைக் காட்ட “மவுண்ட் ரோடு” என்பார்கள்.

தினமலர் ஏடு “பெரியார்’’ என்று எழுதாது. ஈ.வெ.ரா. என்றோ, ஈ.வே.இராமசாமி நாயக்கர் என்றோ தான் எழுதும். தமிழர்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட வரை மதிப்புடன் “பெரியார்’’ என்று எழுதக் கூடாது என்பது ஆரியப் பார்ப்பனியத்தின் உளவியல் (தமிழ்த்தேசியக் கருத்தியல் அடிப் படையிலோ அல்லது சமூகவியல் அடிப்படையிலோ, அண்ணா, பெரியாரைத் திறனாய்வு செய்யலாம். ஆனால் அதே வேளை அவர்களை இழிவுபடுத்துவதையோ, முற்றிலும் புறக்கணிப்பதையோ நாம் ஏற்கவில்லை)

இன்னொன்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஆரியப்பார்ப் பனர்களால், ஆங்கிலேயே ஏகாதி பத்தியவாதிகளால் பல நூறு ஆண்டுகளாக “அடிமைப் பெருமை’’ உளவியல் வளர்க்கப்பட்ட தமிழர்கள் இன்று தங்களிடையே தோன்றியுள்ள கங்காணித் தேர்தல் கட்சித் தலைவர்களை அவர்களின் அசல் பெயர்களைச் சொல்லி அழைக்கக் கூடாது. புனைபெயர் களில்தான் அழைக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள்.

கருணாநிதி என்று அழைக்கக் கூடாது, கலைஞர் என்றுதான் அழைக்க வேண்டும். செயலலிதா என்று அழைக்கக் கூடாது புரட்சித் தலைவி என்றுதான் அழைக்க வேண்டும் என்று தமிழகச் சட்டப் பேரவைக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.இதன் பொருட்டு, வெளிநடப்புகள், வெளியேற்றல்கள் அங்கு நடக்கின்றன. இச்சண்டை மூட நம்பிக்கையாலோ, முட்டாள் தனத்தாலோ போட்டுக் கொள்ளப் படவில்லை. ஏமாளித் தமிழர்களை ஏமாற்றி மக்களுக்குரிய செல்வத் தைச் சுருட்டிட சூறையாடிட சூதாடித் தமிழர்கள் செய்யும் சூழ்ச்சி இது!

சர்வ வல்லமை படைத்த ஒரு தெய்வீகப்பிம்பம் போல் தலைவர், தலைவி பிம்பத்தை உருவாக்கி நிலைத்திறுத்துகிறார்கள் அந்தத் தரகுத் தமிழர்கள்.

இவ்வாறான சீரழிவுச் சிந்தனைகளுக்குப் பழகிப் போனவர்கள், செயலலிதாவை “மனித தெய்வம்’’ என்றும், கருணாநிதியை வாழும் வள்ளுவர் என்றும் மு.க.ஸ்டாலினை தென்னகத்தின் சேகுவேரா என்றும் போட்டி போட்டுக் கொண்டு வர்ணித்து சொற்சாலம் கட்டுகின்றனர். இவையெல்லாம் அறியாமையால் விளைந்த அதீதங்கள் அல்ல, மக்களை ஏமாற்றி வசப்படுத்திக் கொள்ளும், சூழ்ச்சியால் விளைந்த சொல் சூதாட்டங்கள்!

சொல் என்பது வெறும் சொல் அன்று. அது ஓர் ஆயுதம். அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதை ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளவும் கூடாது; ஏனோ தானோ என்று பயன்படுத் தவும் கூடாது.

சாலையில் மகிழ்வுந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டுநர் அருகில் உட்கார்ந்து ஒருவர் வழி சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்கிறபடி ஓட்டுநர் வண்டியை செலுத்த வேண்டும்; திருப்ப வேண்டும். வழி சொல்பவர் சாலை மொழியில் வழி சொல்ல வேண்டும். சாலை மொழி என்பது என்ன? இடது பக்கம் போ - வலது பக்கம் போ - நேரே செல் என்பது சாலை மொழி. அவற்றிற்கு மாறாக இந்தப்பக்கம் திருப்பு, அந்தப்பக்கம் திருப்பு என்பது குழப்பமான சொல். எந்தப்பக்கம் திருப்ப வேண்டும் என்பது தெரியாமல் ஓட்டுநர் குழம்பி இடையூறுகளுக்கு ஆளா வர். விபத்து நேரிடும்!

சமூகவியலில் அரசியலில் சொல் லாட்சி மிகமிக முகாமையான ஒன்று. எடுத்துக் காட்டாக “தமிழே கல்வி மொழி, தமிழே ஆட்சி மொழி’’ என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’’ என்பது ஆபத்தா னது. ஏன்? துல்லியப்படுத்தாதது; பொத்தாம் பொதுவானது. கேட்பதற்கு அடுக்கு மொழியாய், இனிமையாய் இருக்கும். ஆனால் துல்லி யப்படுத்தாததால்- எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என்பது மக்களிடையே துல்லியமான பொருளை உணர்த்தாது; பதியவைக்காது. தமிழே கல்வி மொழி, தமிழே ஆட்சி மொழி என்ற கொள்கை மக்கள் மனதில் உறுதியாகப் பதிந்து விடக் கூடாது என்பதற்காகவே தமிழகத் தலைவர்கள் “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’’ என்ற மேம் போக்கான அடுக்கு மொழி. முழக்கத்தை உண்டாக்கினர்.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It