தமிழ்நாடு மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் அமிழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பொது வழங்கல் நிறுவனங்களும் பற்றாக்குறை நெருக் கடியில் சிக்கியுள்ளன. இந்திய ஏகாதிபத் தியத்தின் காலனியாக தமிழகம் சிக்கியிருப்பதன் விளைவு இது.

வெள்ளை ஏகாதிபத்தியம் தனது பொருளியல் நெருக்கடிகளை தன் கீழ் சிக்கியிருந்த காலனி களின் மீது சுமத்தி தப்பித்து வந்தது போல் இந்திய ஏகாதிபத்தியமும் முயல்கிறது.

தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை இது வரையிலும் இல்லாத அளவிற்கு 1,18,610 கோடி ரூபாயாக இருப்பதை தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் 2012-13 வரவு செலவுத் திட்ட உரை எடுத்துக்காட்டியது. அதாவது தமிழ்நாடு சுமார் ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது என்று பொருள்.

இந்திய அரசு வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறையில் சிக்கியிருக்கிறது. 1991 தொடங்கி இந்திய அரசு பின்பற்றிவரும் தாராளமய, உலகமயப் பொருளியல் கொள்கைகளின் தவிர்க்கமுடியாத விளைவு இது.

பிற்போக்கான இப்பொருளியல் கொள்கைப் படி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய மற்றும் வெளிநாட்டு உலகமய முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியது. எடுத்துக் காட்டாக 2012-13 வரவு- செலவு அறிக்கையில் இந்திய அரசு பெரு முதலாளிகளுக்கு நேரடி வரி விதிப்பில் மட்டும் அளித்துள்ள சலுகை சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ச் சியாக இவ்வாறு உலகமய முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளைச் சேர்த்து கணக்கிட்டால் இம் முதலாளிகள் வாரத்திற்கு 2400 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி பெற்றுள் ளனர் என்பது புரியும்.

இவ்வாறு வரிக்குறைப்பு வழங்கப்பட்ட போதிலும் இம்முதலாளிகள் அந்த வரியையும் கட்ட வில்லை. வரி ஏய்ப்பு செய்தனர். இதனால் கடந்த ஆண்டில் மட்டும் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்திய அரசுக்கு இழப்பு ஏற் பட்டுள்ளது.

ஆனால் புதிதுபுதிதாக உளவுத்துறை செயற் கைக் கோள்கள், படைத்துறை, உள்நாட்டுக் காவல்துறை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களின் பாதுகாப்பு போன்ற முனைகளில் தாறுமாறான அளவு செலவினங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறையிலும் வானளாவிய ஊழல் பெருகிவிட்டது.

இவை அனைத்தும் சேர்ந்து அரசின் வருவாயைத் தாண்டி செலவினங்களை கண்மன் தெரியாமல் அதிகரித்து விட்டன. விளைவு; வரலாறு காணாத வகையில் 5 இலட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தியா பொருளியல் முனையில் மூழ்கிக் கொண்டிருக்கிறது எனப்பொருள். இந்நெருக்கடி ஏற்பட்ட பிறகும் பெருமுதலாளிகளின் மீது கூடுதல் வரி விதித்து சிக்கலை சமாளிக்க இந்திய அரசு விரும்பவில்லை. மாறாக மக்கள் மீதும், மாநிலங்கள் மீதும் இந்நெருக்கடியைச் சுமத்தி, தான் மீள விரும்புகிறது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றிக்கு வழங்கப்பட்ட மானியங்களை முழுவதும் அகற்றி பெட்ரோலிய நிறுவனங்களே அவற்றின் விலையைத் தீர்மானிக்குமாறு கட்டவிழ்த்து விடுவது என இந்திய அரசு முடிவு செய்துவிட்டது. தனது மானியச் செலவைக் கைவிட்டு அதன் சுமை முழுவதையும் மக்கள் தலையில் ஏற்றி விடுகிறது. இதனால் மாதந்தவறாமல் பெட்ரோல் டீசல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிஎண்ணெய் விலையேற்றம் அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்திற்கு இட்டுச் செல்கிறது.

அதே போல் உரமானியத்தை ஏறத்தாழ முற்றிலும் நிறுத்திவிட்டது. எனவே வேதிஉரங்களின் விலை நாள்தோறும் உயர்ந்து வேளாண்மையை நசுக்கி வருகிறது. இன்னொரு புறம் மாநிலங்களுக்கு வழங்கி வந்த வரிப் பங்கீட்டை பல வழிகளில் குறைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு இந்திய அரசு வழங்கி வந்தவரிப்பங்கு, மானியத்தொகை, இடர் நீக்க நிதி ஆகியவை தொடர்ந்து குறைக்கப் படுகின்றன. அதே நேரம் தமிழகத்திற்கு இந்திய அரசு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப் படுகிறது.

எடுத்துக்காட்டாக கடந்த நிதியாண்டில் இந்திய அரசு தமிழகத்திற்கு அளித்த வரிப் பங்கீட்டுத் தொகை 13,100 கோடி ரூபாய் ஆகும். நிலவும் பண வீக்கத்தை கணக்கில் கொண் டால் உண்மையளவில் (Real terms) இது முந்தைய ஆண்டை விட 7 விழுக்காடு குறைவு.

ஆனால் இந்திய அரசு தமிழகத்திலிருந்து 2011-12 இல் திரட்டிய தனி நபர் மற்றும் நிறுவன வருமான வரி மட்டும் 34,586 கோடி ரூபாய் ஆகும். இதைவிட பல மடங்கு கூடுதலாக தமிழகத்திலிருந்து உற்பத்தி வரி, சுங்க வரி, மேல் வரிகள், சேவை வரி போன்ற வழிகளில் பல்லாயிரம் கோடி வரி வரு மானத்தை இந்திய ஏகாதி பத்தியம் அள்ளிச் சென்றது.

இவ்வாறு தமிழகத்தை சூறையாடும் இந்தியா தமிழ் நாட்டிற்கு கொடுத்த வரிப் பங்கீட்டுத் தொகை வெறும் 13,100 கோடி ரூபாய் ஆகும்.

இது போதாதென்று தமிழகத்திற்கு வழங்கிய மானியத் தொகைகளை ஒன்றொன்றாக வெட்டி வருகிறது இந்திய அரசு. தமிழக அரசு வேளாண்மைக்கு வழங்கி வரும் கட்டணமில்லா மின்சாரத்தை நிறுத்துமாறு பல்லாண்டுகளாக இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இலவச மின்சாரத்தை தமிழக அரசால் நிறுத்த முடியவில்லை. இதனால் இரண்டாண்டுகளுக்கு முன்பாக இதில் ஏற்படும் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் இழப்பை முழுக்கமுழுக்க தமிழக அரசே ஏற்க வேண்டும் என இந்திய அரசு கைகழுவி விட்டது.

இப்போது தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேசன் கடைகளில் வழங்கும் மானியவிலை மண்ணெண்ணெய்க்கும் ஆபத்து வந்துள்ளது. தமிழகத்திற்கு வழங்கிவந்த மண்ணெண்ணெயின் அளவை ஆண்டுக்கு 59,780 கிலோ லிட்டரிலிருந்து 44,580 கிலோ லிட்டராக இந்திய அரசு குறைத்து விட்டது. (1 கிலோ லிட்டர்= 1000 லிட்டர்) அதே போல் வேறு இன்றியமையாப் பொருள்களின் அளவும் குறைக்கப் பட்டு விட்டது.

இதனால் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் மற்றும் பிற பொருள்களின் வழங்கல் அளவு குறைக்கப்பட்டு விட்டது. சில கடைகளில் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் மண்ணெண்ணெய் வழங்குவது என்ற முறை கடைபிடிக்கப்படுகிறது.

‘தானே’ புயல் இடர் நீக்கத் துக்காக தமிழக அரசு கேட்ட நிதி வழங்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, இந்திய அரசு ஒத்துக்கொண்ட இடர் நீக்க நிதியும் முழுமையாக வந்த பாடில்லை.

தமிழகத்தில் சிறு சேமிப்புத் திட்டத்தின் மூலம் கிடைத்த நிதியில் ஏறத்தாழ 80 விழுக்காடு குறைந்த வட்டிக்கடனாக தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதை திருப்பிச் செலுத்தும் தவணையும் 25 ஆண்டுகள். இப்போது இந்த எளிய கடன் வழியை இந்திய அரசு அடைத்து விட்டது. சிறு சேமிப்பு நிதியில் கடன் வழங்க மறுத்து விட்டது. இதனால் தமிழக அரசு வெளிச்சந்தையில் இந்திய அரசு வங்கிகளிலும், தனியார் இடத்திலும் அதிக வட்டிக்கு, குறைந்த தவணையில் திருப்பிச் செலுத்தும் கடன் பெற வேண்டியுள்ளது.

நபார்டு வங்கி மூலம் சாலை மற்றும் உள் கட்டமைப்பு மேம் பாட்டிற்காக ஐந்தாண்டுகளில் பகுதி பகுதியாக 2200 கோடி ரூபாய் கடன் பெற தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்திய அரசு அதிலும் கைவைத்தது. இக்கடனுக்கான வட்டியை முன் தேதியிட்டு 1.5 விழுக்காடு தன்னிச்சையாக உயர்த்தியது. இதன் மூலம் தமிழக அரசின் தலையில் 200 கோடி ரூபாய் கூடுதல் வட்டி சுமத்தப்பட்டது.

மாநில மொத்த உற்பத்தி (State domestic product) என்ற கணக்கில் 29.5 விழுக்காடு அளவிற்கு தமிழக அரசு கடன் சுமையில் உள்ளது. நெற்றி மட்டத்திற்கு கடனில் தமிழக அரசு சிக்கியுள்ளது என்பது இதற்குப் பொருள்.

வெள்ளை ஏகாதிபத்திய அரசு அதன் காலனி இந்திய அரசுக்கு கொடு வட்டியில் கடன்கொடுத்து அதைத் திரும்ப பெறுவது என்ற சாக்கில் இந்திய வளங்களை கொள்ளையிட்டது போல் தமிழகத்தைப் பொறுத்து இந்தியா நடந்து கொள்கிறது. இவை குறித்து தமிழக முதலமைச்சர் செயலலிதா முதலமைச்சர்கள் மாநாட்டில் காரசாரமாகப் பேசுவது, பிரத மருக்கு கண்டனக் கடிதங்கள் எழுதுவது என்பதோடு நிறுத் திக் கொள்கிறார். அதைத் தாண்டி பதிலடி நடவடிக்கைகளில் இறங்கவில்லை.

இந்திய ஏகாதிபத்தியத்தின் நிதித்தாக்குதலை எதிர் கொள் ளும் வகையில் உறுதியான மாற்றுக் கோரிக்கைகளை முன் வைத்து பதிலடி நடவடிக் கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்திய அரசு திரட்டும் தனி நபர் வருமான வரி, நிறுவன வருமான வரி (Corporate tax), உற்பத்திவரி, சுங்கவரி, சேவைவரி, மேல்வரி ஆகிய அனைத்திலும் குறைந் தது 50 விழுக்காடு தமிழகத் திற்கே வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அது வரை தமிழக அரசு நிறுவனங் களான மின் வாரியம், போக்கு வரத்துக் கழகங்கள், ஆவின், டாமின், உள்ளிட்டவை செலுத் தும் நிறுவன வருமான வரியை இந்திய அரசுக்கு செலுத்தாமல் நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் உற்பத்தியா கும் பெட்ரோலியம், எரிவளி ஆகியவை தமிழ் நாட்டிற்கே வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

நெய்வேலி மின்சாரம் முழு வதையும் தமிழகத்திற்கேக் கேட்டுப் பெற வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களி டம் பெற்ற கடன்களுக்கான வட்டி முழுவதையும் ரத்து செய்யுமாறு வலியுறுத்த வேண் டும்.

சிறு சேமிப்பு நிதியிலிருந்து பழையபடி கடன் கிடைக்க வலியுறுத்த வேண்டும்.

இத்திசையில் தமிழக அரசு உடன் செயலில் இறங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரப்புரை மேற் கொள்கிறது.

தமிழக மக்கள் தங்கள் உரிமையை உணர்ந்து இவ்வியக் கத்தில் பங்குபெற வேண்டும்.

Pin It