தமிழ்த் தேசியம் பாசிசமல்ல

நமது தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் (2012 மார்ச்சு 1-_15) இதழில் “முல்லைப் பெரியாறு மீட்பு: இன எழுச்சியை மடை மாற்றுகிறது ம.க.இ.க”, என்ற தலைப்பில் கட்டுரை வந்தது. இதற்கு எதிர்வினையாக ம.க.இ.க.வின் ஏடான புதிய சனநாயகத்தில் (ஏப்ரல் 2012) “தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அக் கட்டுரையை அவ்விதழின் ஆசிரியர் குழுவே எழுதியுள்ளது.

“த.தே.பொ.க. தலைமையினர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் தொப்புள் கொடி உறவினர்’’ என்றும், “நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குப்பை கொட்டியவர்கள்’’ என்றும் சாடுகிறது. புரட்சியாளர்கள் பலர் இளமைக் காலத்தில், அப்போதுள்ள புரிதலுக்கேற்ப, புரட்சி பேசும் ஓர் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு, பின்னர் அவ்வமைப்பிலிருந்து விலகி சரியான புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுத் துள்ளார்கள்.

நக்சல்பாரித் தலைவர்களான சாருமஜும்தார், நாகிரெட்டி உட்படப் பலரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர்களே! அதற்காக அவர்களை இடித்துக் காட்டி ஏளனம் செய்யுமா ம.க.இ.க.?

ம.க.இ.க. மருதையன் கூட தஞ்சாவூரில் பள்ளிப் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் இராமரத்தினத்துடன் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களுக்கு அலைந்தவர்தான்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் சி.பி.எம். கட்சியில் சொகுசு அரசியலில் ஈடுபடவில்லை. உழவுத் தொழிலாளி உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தும் போது பிற்போக்கு சக்திகளின் ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தவர். இந்த ஆபத்துகளை அவர் மட்டுமின்றி சி.பி.எம். கட்சியில் செயல்பட்ட தோழர்கள் பலரும் சந்தித்தவர்களே. சாதி ஒடுக்குமுறை, தீண்டாமை ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தில் 1984 ஆம் ஆண்டு பிற்போக்கு சக்திகள் அவரைத் தாக்கி வெட்டினர். அவர் தலையில் அவ்வெட்டுக்காயத் தழும்பு இப்போதும் இருக்கிறது. மக்களுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும் சி.பி.எம். கட்சி நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டு பல தடவை திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார்.

அக்கட்சி இந்திராகாந்தியின் எதேச்சாதிக்கார நெருக்கடி நிலைப் பிரகடனத்தை எதிர்த்தது. ஒருபகுதித் தோழர்கள் தலைமறைவாக இருந்து செயல்படவேண்டும் என்று முடிவெடுத்தது. அம்முடிவிற்கேற்ப தலை மறைவாக இருந்து தஞ்சை வட்டத்தில் கட்சியின் பொறுப்பை ஏற்று பெ.மணியரசன் செயல்பட்டார். பிடி கட்டளையுடன் காவல்துறையினர் அவரைத் தேடிய போதும் ஓராண்டு பிடிபடாமல் தலைமறைவாக செயல்பட்டு கட்சி முடிவை நிறைவேற்றினார்.

ம.க.இ.க. மருதையன்கள் நேரடியாகக் கண்டகளங்கள் எத்தனை? சென்ற சிறைகள் எத்தனை? அவற்றை வெளியிட்டால் ஒப்பிட்டுப் பார்த்து கொள்ள உதவியாக இருக்கும். சி.பி.எம். கட்சியில் “மணியரசன் குப்பைக் கொட்டினாரா”, போராளியாக செயல்பட்டாரா, என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது, தர்க்கத்திற்குரிய பொருளோடு விவாதத்தை நிறுத்திக் கொள்ளாமல், விமர்சித்தவர்களின் பூர்வோத்திரம் பற்றிப் பேசுவது ம.க.இ.க.வின் வாடிக்கையாகி விட்டது. இது ஒரு வகை உளவியலிலிருந்து வருகிறது. அது என்ன உளவியல்? பார்ப்பன உளவியல்! அரசியல் பிறப்பு, மனிதப்பிறப்பு போன்றவற்றை சுட்டிக் காட்டாமல் ம.க.இ.க. வால் விமர்சிக்க முடியாது.

பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் பிராமண வகுப்பில் பிறந்தவர்கள் தாம் ம.க.இ.க.வின் தலைவர்களான மருதையன், வீராச்சாமி போன்றவர்கள். இவர்கள் விரும்பியிருந்தால், தங்களின் பார்ப்பனக் குணத்தைக் கைவிட்டிருக்க முடியும். பார்ப்பனியத்தை எதிர்த்துப் பகட்டாகப் பேசி அந்தரங்கத்தில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் உத்தி கொண்டவர்களே மேற்படியார்கள்.

எனவே அவர்கள் தங்களின் வர்ணாசிரம வழக்கப்படி யாரையும் பிறப்பிலிருந்து ஆராயத் தொடங்குவார்கள். அந்த ஆராய்ச்சி தங்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை அறிந்து கொள்ளும் நிதானம் அவர்களிடம் இல்லை.

ஒரு முறை பேராசிரியர் அ.மார்க்சை அந்தோணிசாமி மார்க்ஸ் என்று திரும்பத் திரும்ப எழுதினார் மருதையன். அ.மார்க்ஸ், கிறித்துவர் என்பதை அம்பலப்படுத்துகிறாராம்! இது இந்துத்துவ மனப்பான்மை தானே! பதிலடி கொடுத்த அ.மார்க்ஸ், “நான் உழைக்கும் தமிழ்ச் சாதியில் பிறந்தவன். நீ எந்த சாதியில் பிறந்தாய்? மடிசார் மாமியாகிய உன் தாயாரின் படத்தை வெளியிடத் தயாரா” என்று கேட்டார். அ.மார்க்சின் பல கருத்துகளோடு முரண்பாடு கொண்டுள்ளது த.தே.பொ.க. ஆனால் அவரை விமர்சிக்கும் போது அவரது அரசியல் பிறப்பு, மனிதப் பிறப்பு போன்றவற்றைத் த.தே.பொ.க. விமர்சித்ததில்லை. அவரும் மேற்படி பிறப்புகளை அடிப்படையாகக் கொண்டு த.தே.பொ.க.வை விமர்சிப்பதில்லை.

மருதையன் வகையறாப் பார்ப்பனர்கள் மேற்படிக் கட்டுரையில் மணியரசனைப் பார்த்து “பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே’’ என்று விளித்து எழுதியுள்ளார்கள். உங்களின் பார்ப்பனப் பார்வையின்படி மணியரசன்கள், பிரம்மாவின் கால்பாதத்தில் பிறந்த கடை நிலைக் கழிசடைகள் தான்! மருதையன்கள், வீராச்சாமிகள் பிரம்மாவின் முகத்தில் பிறந்த மேலோர்கள் தான்! இவ்வகைப் பார்ப்பனிய மேலோர் கீழோர் புரட்டுகளை ஒழிப்பதும் தான் தமிழ்த் தேசப் புரட்சியின் கடமைகளுள் ஒன்று.

“அலசி ஆராய்ந்து கரைகண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே’’ என்றும் அக்கட்டுரை, விளிக்கிறது. சூத்திர வர்ணத்தில் பிறந்த மணியரசன் சிந்திக்கத் தகுதியற்ற நபர் என்று ம.க.இ.க. வஞ்சப் புகழ்ச்சியாக ஏளனம் செய்கிறது. மருதையன்கள் மனதில் உள்ள பார்ப்பன வெறி படம் எடுத்தாடுகிறது. தமிழினம் உலகச்சிந்தனைகளின் ஊற்று என்பது பார்ப்பனத் திரிபுவாதிகளின் அறிவுக்கு எட்டாத ஒன்றுதான்.

மக்களுக்கான அமைப்புகளில் பார்ப்பனர்கள் தலைமைப் பொறுப்பிலோ அல்லது உறுப்பினர்களாகவோ இருப்பதைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்க்கவில்லை. ஒரு நிபந்தனைதான் போடுகிறது த.தே.பொ.க.

பிறப்பின் வழியாகத் தங்களைத் தொடர்ந்து வரும் பார்ப்பனியத்தை நூற்றுக்கு நூறு கைவிட்டு விட்டு, அதை நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்பதே அந்நிபந்தனை. இந்நிபந்தனை தண்டனை அல்ல, மனித நேயத்தின் வெளிப்பாடு. பார்ப்பனரல்லாதாரும் ஓர் இலட்சிய அமைப்பில் சேர வேறு வகை நிபந்தனைகள் இருக்கத்தானே செய்கின்றன.

பார்ப்பனியத்தை விட்டொழித்த பார்ப்பனர்கள் பலர் தமிழகத்தில் செயல்பட்டுள்ளார்கள். பி.சீனிவாசராவ், சி.பி.எம் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம், சி.பி.ஐ. தலைவர் ஏ.எஸ்.கே. அய்யங்கார், சின்னக்குத்தூசி என்கிற தியாகராசன் போன்றோர் அவர்களில் சிலர். ஏ.எஸ்.கே. பிற்காலத்தில் “ஐயங்கார்” என்ற தமது பெயரை மாற்றிக் கொண்டார்.

ம.க.இ.க.விற்குத் தலைமை வகிக்கும் பார்ப்பனர்கள் தங்களுடைய பார்ப்பனியத்தை விட்டு விடவில்லை என்பதற்கு ஒரே ஒரு சான்று போதும். அவர்கள் சமூகநீதியின் உயிர் மூச்சாக உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்க்கிறார்கள். இந்திய அரசு அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க மண்டல் குழு அளித்த பரிந்துரையை வி.பி.சிங் அரசு செயல்படுத்திய போது அதை எதிர்த்தது ம.க.இ.க.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குக் கல்வியிலும் வேலையிலும் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்கிறது ம.க.இ.க. பார்ப்பனர்களின் ஏகபோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தினால்தான் ம.க.இ.க. பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது. ஆனால் தமிழ் மக்களை ஏமாற்றப் போலியாக வேறு காரணங்களைக் கூறிக் கொள்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக அது ஆதரிக்கவில்லை. அவர்களுக்கு வேண்டுமானால் அது இருந்து விட்டுப் போகட்டும் என்கிறது.

வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்ற த.தே.பொ.க. முழக்கம் ம.க.இ.க.விற்கு எட்டிக் காயாய்க் கசக்கிறது. அம் முழக்கத்தைத் தான் பாசிசம் என்று பழிதூற்றுகிறது. இச்சிக்கலில் தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சியின் தெளிவான நிலைப்பாடு வருமாறு:

தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்க வேண்டும். வரைமுறையின்றி மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் குடியேறினால், பிறகு, தமிழகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்காது. கலப்பினங்களின் தாயகமாக மாறிவிடும். கலப்பினத் தாயகமாக மாறி விட்டால், சொந்த மண்ணிலேயே, தமிழர்கள் இரண்டாந்தர, மூன்றாந்தரக் குடிமக்களாக மாற்றப்படுவர். இந்நிலையில் தான் இந்தியா தமிழ்நாட்டை வைத்துள்ளது. எனவே தமிழர்கள் தங்கள் தாயகத்தைப் பாதுகாத்துக்கொள்ள, மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளிமாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும். புதிதாக வந்த வெளிமாநிலத்தவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கக் கூடாது.

த.தே.பொ.க.வின் இந்நிலை பாடு உலகெங்குமுள்ள ஒவ்வொரு நாடும் கடைபிடிக்கும் விதிமுறைகளை ஒட்டியது தான்.!

தமிழ்த் தேசியக் கொள்கைப்படி தமிழ்நாடு ஒரு தனி நாடாக இருக்கத் தகுதி உடையது. ஒரு தனிநாட்டில், அந்நாட்டின் தேவைக்கேற்ப விசா வழங்கி, வெளிநாட்டினரை அனுமதிக்கின்றனர். யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் நுழையலாம், குடியிருக்கலாம் என்று எந்த நாடும் அனுமதிப்பதில்லை. அதே நடைமுறை தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம். இது பாசிசமா? இல்லை. தற்காப்பு!

இந்தியாவில் உள்ள பிறமாநிலங்கள் இந்நடைமுறையைக் கடைபிடித்தால் த.தே.பொ.க.வுக்கு அதில் எதிர்க்கருத்தில்லை. பெரும்பாலும் தமிழர்கள் பிற மாநிலங்களின் உழைப்புத் தேவையை நிறைவு செய்யவே போயுள்ளார்கள். வெளிமாநிலங்களிலிருந்து தமிழர்கள் திரும்பி வரும் நிலை ஏற்பட்டால், தமிழ்நாட்டிலிருந்து வெளியேறும் வெளியாரின் இடங்களில் அவர்களை அவரவர் தகுதிக்கேற்ப இருத்தலாம்.

இட்லர் செயல்படுத்திய பாசிசம் என்பது என்ன? பல நூறு ஆண்டுகளாக, ஜெர்மனியில் வாழ்ந்து வந்த யூதர்களை வெளியேற்றுதல், கூட்டம் கூட்டமாகக் கொலை செய்தல் போன்ற கொடுஞ்செயல்களைக் கொண்டது இட்லரின் பாசிசம். நாம் கூறுவதென்ன? பல நூறாண்டுகளாகத் தமிழகத்தில் குடியேறி, வேற்று மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் சிறுபான்மையினர் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கிணையான சமஉரிமைகளுடன் தொடர்ந்து வாழலாம். அவர்களை மண்ணின் மக்களாக ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் தமிழைத் தங்களின் கல்வி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லையோரங்களில் வாழும் சிறுபான்மை மொழி பேசுவோர் தங்கள் தாய் மொழியை ஒரு மொழிப் பாடமாகக் கற்க இப்போதுள்ள வசதிகள் தொடர்ந்து அளிக்கப்படவேண்டும். இதுவே த.தே.பொ.க.வின் நிலை. இது பாசிசமா? இல்லை, இது சனநாயகம்!

1956 நவம்பர் 1 – மொழிவழி மாநில அமைப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைத்து வெளியாரையும் வெளியேற்ற வேண்டும் என்கிறது த.தே.பொ.க. தமிழகம் தனது தேவைக்காக, வெளியார் சிலரை வைத்துக் கொள்ள வேண்டியிருந்தால், அதைத் தமிழகம் முடிவு செய்ய வேண்டும். அதற்குரிய சட்ட திட்டங்களைத் தமிழகம் வகுத்துக் கொள்ளவேண்டும். இதில் தில்லிக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்கிறது த.தே.பொ.க.

இது தான் வெளியார் சிக்கலில் த.தே.பொ.க.வின் தெளிவான நிலைபாடு!

ம.க.இ.க. இதில் எங்கே பாசிசத்தைக் கண்டு பிடித்தது? த.தே.பொ.க.வின் நிலைபாடு உலகில் ஒவ்வொரு தேசமும், நாடும் கடைபிடிக்கும் வெளியார் கொள்கைதான்!

“பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடித் தமிழகத்தில் குடியேறும் பிறமாநிலத்தவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள், தமிழர்களுக்கு எதிராக ஆதிக்கம் புரிபவர்கள், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறி சிவசேனாக்களின் பாசிச இனவெறி பாணியில் நஞ்சு கக்குகிறது த.தே.பொ.க. தலைமை” என்கிறது புதிய சனநாயகம் ஏடு. தமிழர்களுக்குத் தேனாக இனிப்பது, பார்ப்பன சக்திகளுக்கு நஞ்சாகவும் பாசிசமாகவும்தான் கசக்கும்! தமிழர்-ஆரியர் வரலாற்றுத் தொடர்ச்சி தானே இந்த முரண்பாடு!

வெளிமாநிலத்தவர் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள் என்று த.தே.பொ.க. கூறவில்லை. கிரிமினல் குற்றவாளிகள் என்பதால் வெளியாரை, வெளியேற்றக் கோருகிறது த.தே.பொ.க. என்பதும் உண்மையில்லை. அண்மையில் பெருகி வரும் குற்றங்களில், பெரும் பகுதி வட மாநிலத்தவரால் செய்யப்பட்டவை என்பதால், காவல்துறை வடமாநிலத்தவரைப் பதிவு செய்கிறது. அந்நடவடிக்கை சரி என்று த.தே.பொ.க. ஆதரிக்கிறது.

சுரண்டல் பெருச்சாளிகள், கிரிமினல் குற்றவாளிகள், உழைப்பாளிகள் உள்ளிட்ட 1956க்குப் பின் வந்த அனைத்து வெளியாரையும் வெளியேற்றக் கோருகிறது த.தே.பொ.க. இங்கு த.தே.பொ.க. முன்வைக்கும் கருத்து, வெளியார் நல்லவரா, கெட்டவரா என்பதல்ல. தமிழக மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டிற்கு மேல் வெளியார் இருக்கக் கூடாது என்பது தான்!

த.தே.பொ.க.வின் வெளியார் கொள்கை என்பது சாரத்தில் மக்கள் தொகை விகிதம், தமிழர்களுக்கான தாயகப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பானவை.
ஒரு தேசிய இனத்தாயகத்தில் வெளியாரின் ஆக்கிரமிப்பு மற்றும் மிகை நுழைவு ஏற்படுவது பற்றி ம.க.இ.க.விற்கு நேர்மையான, தன்முரண்பாடற்ற நிலைபாடு இருக்கிறதா? இல்லை. “ஈழம்: தேவை – ஒரு நேர்மையான மீளாய்வு!” என்ற பெயரில் 2009-இல் ம.க.இ.க. ஒரு குறுநூலை வெளியிட்டது. புதிய ஜனநாயகம் வெளியீடாக வந்த அதன் இரண்டாம் பதிப்பில் பக்கம் 19-20 களில் பின்வருமாறு கூறுகிறது:

“……. அதுமட்டுமின்றி, ஈழத் தமிழர்கள் பெரும் பான்மை யாக வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களைச் சிங்கள அரசு புகுத்தியது. 1948-இல் அதிகார மாற்றம் நிகழ்ந்த போது இலங்கையில் மக்கள் பரவியிருந்த நிலைமை என்ன வென்றால், வடஇலங்கையில் அறுதிப் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற வடக்குப் பிரதேசங்களில் தமிழர்கள்தான் பெரும்பான்மைக் குடிமக்களாக இருந்தார்கள். ஆனால் கிழக்கு மாவட்டத்தில் திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 60 முதல் 70 சதவீதம் மக்கள் தமிழர்கள், கிட்டத்தட்ட 30 சதவீதம் மக்கள் முஸ்லீம்கள், மிகமிகச் சிறு பான்மையாக 5 முதல் 10 சதவீதம் மட்டுமே சிங்களவர்கள் இருந்தார்கள்.

“ஆனால் அதிகார மாற்றம் நடந்தவுடன் தொடங்கி, 1950க்குள் புறம்போக்கு நிலங்களாக, அரசு நிலங்களாக இருந்த பகுதிகள் அனைத்திலும், வீடுகள் கட்டிக் கொடுத்து, நிதியும் கொடுத்து தமிழ் மக்கள் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் கணிசமான அளவு குடியமர்த்தினார்கள்.

“ ‘தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக் குடியேறிவிட்டதாலும், வடக்கே, கிழக்கே, ஈழத் தமிழர்களுடைய ஆதிக்கம் இருப்பதாலும் சிங்களவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் வேலை தேடி பல இடங்களில் குடியேறுகின்றனர்.’ என்று கூறினார்கள். தமிழர்களின் பிரதேசங்கள் கைப்பற்றப்படுவது அப்போது தான் முதன்முறையாக நடந்தது. ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும் என்பது மிகவும் முக்கியமான விசயம். காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசும் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடியமர்ந்து, அங்கே கணிசமான அளவு பொருளாதாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பதை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வந்தது. ஆனால், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒட்டி அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அங்கு அன்னியர்கள் யாரும் சொத்து வாங்குவதைத் தடை செய்யும் 370 ஆவது சட்டப் பிரிவு இன்னமும் உள்ளது.”

ஈழம், காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் அயல் இனத்தார் மிகையாகக் குடியேறுவதை எதிர்ப்பது போலவும், வெளியாரை எதிர்த்துக் காசுமீர் மக்கள் போராடியது ஞாயம் என்பது போலவும் மேற்படிக் கூற்றில் ம.க.இ.க சொல்கிறது. அதே நிலைபாட்டை தமிழ்நாட்டில் த.தே.பொ.க. எடுத்தால் அதைப் பாசிசம் என்று சாடுகிறது. இதில் ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசை திருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன்முரண்பாடற்ற கொள்கை.

வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள், அவர்களின் மாநிலங்களில் நிலவும் வறுமையாலும், வேலையின்மையாலும் பிழைப்புத் தேடி வருகிறார்கள். அவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்களை வெளியேற்றக் கோருவது ஞாயமா? மனித நேயமா? பொதுவுடைமைக் கட்சியின் வர்க்கப் பார்வைக்கு உகந்ததா? இவ்வாறு பல கேள்விகள் எழுவது இயல்பே!
“தொழிலாளிகள்” என்பதால் அவர்கள் அனைவரும் இயல்பாகவே புரட்சியாளர்கள் என்றோ; முற்போக்காளர்கள் என்றோ கருதக் கூடாது. மார்க்சிய – லெனினியம் அவ்வாறு கூறவில்லை.

காரல் மார்க்ஸ் இலண்டனில் வாழ்ந்தபோது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் வாழ்ந்த ஒரு பகுதித் தொழிலாளிகள் “தொழிலாளர் பிரபுக்களாக” நடந்து கொண்டார்கள். பிரித்தானிய முதலாளிகள் காலனி நாடுகளில் தாங்கள் கொள்ளையிட்ட செல்வத்தில் ஒரு பகுதியை உயர் சம்பளமாக பிரித்தானியத் தொழிலாளர்களில் ஒரு பகுதியார்க்கு வழங்கினார்கள்.

உயர்சம்பளம் பெற்ற தொழிலாளிகள் வர்க்க உணர்ச்சி இன்றி, ஆளும் வர்க்கத்தை ஆதரித்தனர். இதைத் “தொழி லாளர் பிரபுத்துவம்” (Labour Aristocracy) என்றார் மார்க்ஸ். இவர்கள் புரட்சிக்கு எதிரானவர்கள்.

இப்பொழுது தமிழ்நாட்டில் வந்து குவியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எப்படிப்பட்டவர்கள்? சொந்த மண்ணில் வறுமையையும் வேலையின்மையையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தாதவர்கள்; நடத்த முடியாதவர்கள். வந்த மண்ணில் குறைந்த கூலிக்கும், மிகை நேரத்துக்கும் உழைக்கக் கூடியவர்கள். தமிழ்நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தையும், தொழிலாளர் போராட்டங்களையும் பலவீனப்படுத்த இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளதால், பெரும் கூட்டமாக இருந்த போதிலும் இவர்கள் உரிமை கோரும் உளவியலை இழந்துள்ளார்கள். அதாவது மனத்துணிச்சலை இழந்துள்ளார்கள். குறைந்த கூலிக்கு மிகை நேரம் உழைக்கிறார்கள். சட்டம் வழங்கும் உரிமைகளைப் பெற முடியாமல் இருக்கிறார்கள்.

மண்ணின் மக்களாக உள்ள தமிழகத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்குப் போராடினால், வெளிமாநிலத் தொழிலாளிகள் அங்கு போய், குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள். தங்கள் மாநிலத்தில் தொழிற் சங்க இயக்கத்தைக் கட்டிப் போராடி உரிமை பெற முடியாதவர்களாய், உரிய ஊதியம் பெற முடியாதவர்களாய் இங்கு வந்தவர்கள், இங்கும் தொழிலாளர் இயக்கத்தைப் பலவீனப் படுத்தும் அல்லது முடக்கும் அதே பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்களிடம் புலம் பெயர் தற்சார்பின்மை (Migratory Dependency) இருக்கிறது.

எனவே, மக்கள் தொகை விகிதத்தை மாற்றுவது மட்டுமின்றி, தொழிலாளர் இயக்கத்தையும் இவர்கள் சீர்குலைத்து விடுவார்கள்.

புதிய சனநாயகம் ஏட்டின் கட்டுரையில், வெளிமாநிலத் தொழிலாளர்களைத் தங்களது தொழிற்சங்கத்தில் சேர்த்துள்ளதாகப் பெருமையோடு கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் ம.க.இ.க.வின் சீர்குலைவுப் பணிக்குப் பயன்படுவார்கள். தொழிலாளர் இயக்க வளர்ச் சிக்குப் பயன்படமாட்டார்கள்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க இப்போது 13 பாதைகளையும் மூடி கேரளத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடையை செயல் படுத்த வேண்டும் என்று கோரும் ம.க.இ.க. 2010-இல், பொருளாதாரத் தடை விதிக்கக் கூடாது என்று தனது வினவு இணையத்தளத்தில் எழுதியது ஏன் என்று நாம் கேட்டிருந்தோம். அதற்கு அப்போது (2010 இல்) இப்பிரச்சினை இவ்வளவு கூர்மையடையவில்லை. எனவே பொருளாதாரத் தடை கோரவில்லை என்று விடையளித்துள்ளது ம.க.இ.க.

ம.க.இ.க.வின் இக்கூற்றில் உண்மை இல்லை. இச்சிக்கல் 2006லிருந்து கூர்மையடைந்து முக்கியப் பிரச்சினையாக முன்னுக்கு வந்துள்ளது. 2006 பிப்ரவரி 27-இல் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுத் தீர்ப்பளித்தது. 4.12.2006-இல் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் கூட்டமைப்பு இயக்கங்களும் உழவர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து பொருளாதாரத் தடைகோரி கம்பத்தில் மாபெரும் மறியல்போராட்டம் நடந்தது. இதில் த.தே.பொ.க.வும் கலந்து கொண்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 2010 மே மாதம் 28 அன்று ம.தி.மு.க. முன்னெடுப்பில் 13 பாதைகளையும் மறித்துப் போராட்டம் நடந்தது. இதில் த.தே.பொ.க. உள்ளிட்டுப் பல கட்சிகள் கலந்து கொண்டன.

இக்காலத்தில்தான் முல்லைப் பெரியாறு போராட்டம் கூர்மையடையவில்லை என்கிறது ம.க.இ.க.

2011 – இறுதியில் கட்சிகள் கட்டமைக்காமல் இலட்சக்கணக்கில் தேனி மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக சாலை மறியல் நடத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் பொருளாதாரத்தடையை அப்பகுதியில் செயல்படுத்தினர். இந்த இன எழுச்சியைக் கண்டு பீதியடைந்த ம.க.இ.க. தானும் போராடுவதைப் போல் நடித்து அதிலுள்ள இளைஞர்களை ஈர்த்து, இந்தியத் தேசியத்தின் பக்கம் மடை மாற்றிவிடவே 13 பாதைகளையும் மூடச்சொல்லி பரப்புரை செய்ய முன்வந்தது.

“தமிழ்த் தேசியத்திற்குப் பகை சக்தியாக இருப்பது இந்தியஅரசு தான். மலையாள, கன்னட, தெலுங்கு இனங்களோடு ஆற்று நீர்ப்பகிர்வு, எல்லைச் சிக்கல் போன்றவற்றில் முரண்பாடு இருப்பதால், தமிழ்த் தேசிய இனம் அவற்றைப் பகை சக்தியாக, எதிரி சக்தியாகக் கருத முடியுமா”என்று கேட்கிறது ம.க.இ.க.

அவற்றை நட்புசக்தியாகக் கருத முடியுமா என்று த.தே.பொ.க. ம.க.இ.க.வைக் கேட்கிறது.

வரலாற்றுக் காலந்தொட்டு ஓடிவந்து தமிழகத்திற்கு வளம் சேர்த்த காவிரியைத் தடுத்து நிறுத்தியதுடன் 1991 நவம்பர், டிசம்பரில் கர்நாடகத் தமிழர்களைத் தாக்கிப் படுகொலை செய்தும், வீடுகளை எரித்தும், கொள்ளையிட்டும் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டும், இரண்டு லட்சம் தமிழர்களை அகதிகளாக விரட்டியும் இனமோதல் நடத்திய கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு நட்பு முரண்பாடா? பகை முரண்பாடா? பகை முரண்பாடே!

ஆற்று நீர்ச்சிக்கலை இனப்பகையாக மாற்றியவர்கள் யார்? கன்னடர்கள்! அங்கே தமிழர் எதிர்ப்பில், கட்சி வேறு பாடே கிடையாது.

இத்தனைக்கும் பிறகு, கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு, நட்பு முரண்பாடு என்கிறது ம.க.இ.க. இதிலிருந்தாவது ம.க.இ.க.வின் பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

2006 பிப்ரவரி 27-இல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்ததுடன், அணையை உடைப்போம் என்கிறது கேரளம். அதற்காகப் புதிய சட்டம் இயற்றிக் கொண்டது. அத்துடன் ஒரு குற்றமும் செய்யாத தமிழர்களைக் கேரளத்தில் தாக்கினர் மலையாளிகள்; தோட்ட வேலைக்குச் சென்ற தமிழகப் பெண்களைக் கடத்திச் சிறைப் பிடித்து மானபங்கப்படுத்தினர் மலையாளிகள். தமிழகத்திலிருந்து சென்ற அய்யப்ப பக்தர்களைத் தாக்கினர். தமிழக ஊர்திகளைத் தாக்கினர்.

மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ளது நட்பு முரண்பாடா? பகை முரண்பாடா? பகை முரண்பாடு!

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைத்து, முழுமையான பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிறது இப்போது ம.க.இ.க. பொருளாதாரத் தடை விதிப்பது பகை முரண்பாட்டின் வெளிப்பாடா? நட்பு முரண்பாட்டின் வெளிப்பாடா?

வட அமெரிக்கா கியூபாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. பகை முரண்பாட்டின் வெளிபாடு தான் பொருளாதாரத் தடை!

விடுதலை கோரும் ஒரு தேசிய இனத்திற்கு ஒரே ஒரு பகை முரண்பாடு தான் இருக்கும் என்று கருதக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட பகை முரண்பாடுகள் இருக்கலாம். அவ்வகையில் தமிழ்த் தேசிய இனத்திற்குள்ள பகை முரண்பாடுகளில் முதன்மையானது இந்திய அரசுடன் உள்ள முரண்பாடுதான். முதன்மைப் பகை முரண்பாடு தவிர்த்த மற்ற பகை முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துப் போராடக் கூடாது என்று மார்க்சிய – லெனினியம் கூறவில்லை. மாசேதுங்கும் அவ்வாறு கூறவில்லை.

முதன்மை முரண்பாடு தவிர்த்த பிற முரண்பாடெல்லாம் பகையற்ற முரண்பாடாக இருக்க வேண்டுமென்ற கட்டயமில்லை. கன்னடர்கள், மலையாளிகள் ஆகியோர் இன அடிப்படையில் தமிழர்களுடன் பகை கொண்டு மோதுகிறார்கள். இந்தப் பகை முரண்பாட்டையும் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க எழுந்த மாபெரும் மக்கள் எழுச்சி தமிழின எழுச்சியாகப் பரிமாணம் பெற்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ம.க.இ.க. அந்த மக்களின் உணர்வுகளை மடை மாற்றி, இந்தியத் தேசியத்தின் பக்கம் இழுப்பதற்காகச் செய்த பார்ப்பன சூழ்ச்சியே, கேரளாவுக்கெதிரான பொருளாதாரத் தடை என்ற நாடகம்.

2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையோடு சிங்கள இனவெறி அரசால் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்ட போது, போர் நிறுத்தம் கோரி தமிழ் நாட்டில் அனைத்து மக்களும் அவரவர்க்கு இயன்ற வழிகளில் போராடினார்கள். இனவழிப்பட்ட அந்த எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ள ம.க.இ.க. வினரும் கூட்டத்தோடு கூட்டமாகப் புகுந்து கொண்டு தமிழின உரிமை முழக்கங்களை எழுப்பினர். தனி ஈழமே தீர்வு என்றனர். போரில் தமிழினத்திற்குத் தோல்வி ஏற்பட்டு விடுதலைப் போர் பின்னடைவுக்கு உள்ளானது. 2008—2009இல் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டனர்.

இந்தப் பேரழிவுக்குப் பின் ம.க.இ.க. விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் பரப்புரையைத் தீவிரப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என்றும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பாசிசவாதி என்றும் கொலைகாரர் என்றும் தூற்றிக் கொச்சைப்படுத்தினர். இதற்காக மூன்று நூல்களைப் புதிதாக வெளியிட்டது ம.க.இ.க. தமிழகம் கொந்தளிக்கும் போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வது, ஈழத்தமிழர்களுக்குப் பேரழிவு ஏற்பட்ட பின், ஈழத் தமிழர்களின் பெரும் பிரதிநிதியாக விளங்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்பி ஈழத்தமிழர்களின் முதுகில் குத்துவது என்ற உத்தியைதான் ம.க.இ.க. கடைபிடித்தது.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்கப் போர்க்கோலம் பூண்ட மக்கள் எழுச்சியைப் பயன்படுத்தி ஊடுருவி, பிறகு அதைத் திசை திருப்புவது தான் ம.க.இ.க. வின் உத்தி. ஆரியச் சூழ்ச்சிகளில் ஒன்று “அனுகூலச் சத்ரு” சூழ்ச்சி. அதாவது ஆதரிப்பதுபோல் நடித்து எதிரியை வீழ்த்துவது என்பது இதன் பொருள். தமிழினம் குறித்த ம.க.இ.க.வின் சூழ்ச்சியும் இப்படிப்பட்டதே.

Pin It