ஒரு மொழியின் முழு ஆற்றல் வெளிப்படுகிற இடம் கவிதைக் களம். சந்தக் கவிதை யாக இருக்கலாம். அல்லது சந்த மற்ற படிமம், உருவகம், குறி யீட்டுக் கவிதையாக இருக்க லாம். வடிவம் எதுவாக இருப் பினும் மொழியின் ஆற்றல் அங்கே முழுமையாய் வெளிப் படும். இந்த ஆற்றலை வழங்கு பவன் கவிஞன். அந்தக் கவிஞன் சிறந்த - முற்போக்கான சமூகக் கண்ணோட்டம் உள்ளவனாக இருந்தால் அவனது கவிதைகள் படைப்பு ரசனையோடு சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படும். அத்தகைய கவிஞர்களுள் ஒருவர் ஸ்ரீரசா. இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பாக வெளி வந்துள்ளது “எதிர்கொள்”.

எங்கே தப்பித்து
எங்கே செல்வாயாம்
எதனையும் எப்போதும்
எதிர்கொள்ளாமல்?

- என்று கேட்கும் - தலைப்புக் கவிதையின் கடைசி வரிகள் வாழ்க்கையில் தோன்றும் பிரச் சனைகளைக் கண்டு ஒதுங்காமல் நேர்நின்று சந்தித்துத் தீர்வு காணும் துணிவைக் கோருகிறது.

கண்ணாடி வழியே
கண்கள் அலைபாய
அனைத்தையும் தாண்டிக்
கால்கள் இழுத்துச் சென்ற
காசில்லா திசை
கையில் கொண்டுதரும்
பன்னோடு சிங்கிள் டீயும்
அதுவுமின்றேல்
கடைக்காரரின்
முறைப்புடன் கூடிய
ஒன்பை டூவும்

-என்று முடிகிற “சூடு” கவிதை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வதைபடும் சாமான்ய மனி தரின் நிலையை உணர்வுள்ள ஒரு காட்சியாய்த் தருகிறது.

திருட்டுச் சமூகத்தில்
திருட்டை ஒழிக்கத்
துறையொன்றும் வைத்துத்
திருடுகிறார்கள்

“திருட்டு” எனும் கவிதையின் வரிகள் இவை. ஊழல் தடுப்புக் கென்று அமைக்கப்பட்டுள்ள துறையின் அதிகாரிகளே லஞ்சம் வாங்கிய செய்திகளைப் படித் திருக்கிறோம். ஊழல் ஒழிப்பு அதிகாரிகளே ஊழலில் ஈடுபடும் முரண் அவலத்தை இடித்துரைக் கிறது இக்கவிதை.

‘கோடைக்கானல்’ என்றாலே யாருக்கும் மனதில் தோன்றுவது ‘அது ஒரு சுகமான கோடை வாசஸ் தலம்; சுற்றுலாத்தலம்’. அந்த சுக தலத்திலும் கவிஞரின் கண்ணில் சோகக் காட்சிகளும் படுகின்றன. “கானல் கோடை” கவிதையில், கோடைக்கானலின் இயற்கை அழகை வர்ணனை செய்து கொண்டு வருகிறபோதே கடைசி வரிகளில் இப்படி-

முழு உடம்பும்
மறைக்கத் துணியின்றி
விரைக்கும் குளிரில்
விறகு சுமப்போர்...

ஓடும் மேகங்கள்
ஆடித்திரிகின்ற
கோடைக்கானலில்
கோணல்மானலாய்
மலைகளைப்போல்
மேடுபள்ளம்
மனிதருக்குள்
மிக அதிகம்.

ஒன்றைப் பார்க்கிறபோதே, இன்னொன்றையும் சேர்த்துப் பார்க்கிறார், கவிஞர்- இதில் உள்ளோடியிருப்பது மனித நேயம். சமூக மேடு - பள்ளம் சமமாக வேண்டும் என்கிற முற் போக்கான சிந்தனை.

“கவிதை பற்றிய கவிதைகள், காலம் பற்றிய கவிதைகள், வாழ்வு பற்றிய கவிதைகள், தத்து வம் பற்றிய கவிதைகள் என்று பல தளங்களில் இத்தொகுப்பின் கவிதைகள் இயங்குகின் றன” என்று தன் கவி நூலைத் தன்னுரையில் அறிமுகம் செய்கி றார் ஸ்ரீரசா.

யாவருக்கும் புரிகிற எளிய சொற்கள்; நடையழகு; சொல் லும் விதத்தில் மனசைத் தொடும் கவித்வம். இதுவே “எதிர்கொள்”ளின் சிறப்பு.

வெளியீடு: காலம் வெளியீடு,
25, மருதுபாண்டியர் 4-வது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, மதுரை - 625002.
விலை, ரூ.100

- தி.வரதராசன்

Pin It