பெண்ணெழுத்து - 9

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு 
நீ விடுதலை பெற்றிருக்கிறாய்,

நாள் தோறும் அமைதியும், 
ஆக்கமும் 
பெற்று வளர்வாயாக.

நமது நாட்டில் இன்னும் 
எத்தனையோ, காரியங்கள் செய்ய 
இருக்கின்றன.

அவற்றிற்கு கலவரமடையாமல், ஒழுங்கிப் பயின்ற திண்ணியமனது தேவை.

-இரவிந்திரநாத் தாகூர்

(கல்பனாதத்திற்கு கடிதத்தில் எழுதிய வரிகள்)

 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல் திணரும் பெண்ணின் மனவெளிக்கான காரணம் விடுதலைக்கு முயன்று தோற்பதாக தனிமையை வெறுமையை அனுபவிப்பதாக, சதா தொடரும் உடலியல் உபாதைகளின் பலவீனமாக, புறக்கணிப்பாக நிராகரிப்பாக என சொல்லிக் கொண்டே போகலாம். இதிலிருந்து மீள்வதற்கு உரிமையைப் பெறுவதற்கு போராட வேண்டியது அவசியம் என்பதுபோலவே போராட்டத்திற்குரிய மனத்தயாரிப்புகளும் அவசியம்.

 

பெண்ணின் சுயம் குறித்தான தேடலும் பெண் தன்னைத்தானே விசாரித்து எழுத்தில் கொணருவதுமாக பெண்ணெழுத்து வீச்சுடன் அமைந்த கவிதைகள் சுகந்தி சுப்பிரமணினுடையது. எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய சுகந்தியின் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. சுகந்தியின் வெளிவராத கவிதைகள் சில கனவு (மே-2009) இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 

சுகந்தியின் கவிதைகள் அடைபட்ட வாழ்க்கையை, சுதந்திரமற்ற வெளியை, பெண் உடலும் மனமும் சந்திக்கிற வெளிப்படுத்தத் திணறிய சிக்கல்களை எழுத்தில் இயல்பாகக் கொண்டு வந்திருப்பவை. சுகந்தியின் ஒரு கவிதை எல்லாம் உனதுதான் ஏன் கவலை கொள்கிறாய் மனசின் ஆசையை முழுவதுமாக தின்றுவிடு எனத் தொடங்கி அலைகிறேன் எனக்குள் நான் எவ்விதம் வென்றெடுப்பேன் என்னை? காலம் சொல்லுமோ பதில்! எனமுடியும் தொய்வுற்ற மனதைத் தேற்றிக்கொள்ளப் போராடி ஓய்ந்துபோன மனம் மீண்டும் எவ்விதம் வென்றெடுப்பேன் என நிலை கொள்ளாமல் அலைகிறது.

 

பெண்ணின் மனசாட்சியாக நின்று பேசும் பெரும்பாலான இவரது கவிதைகளில் மனப்போராட்டம், அதை வென்றெடுக்கும் முயற்சி, தோல்வி, இதுகுறித்தான விவரிப்புகள் என செல்லும். காத்திருப்பின் தவிக்கும் நொடிகளையும் நினைத்ததைக் கைக்கொள்ள முடியா பதைப்பைப் பேசும் கவிதைகளும் இவருடையவை. எனக்குள் சிதைந்து போகிறேன் எனத் தொடங்கும் கவிதையில் என் கைகள் உனக்காக என்பதை மீறி இந்த உலகத்துக்காகவும் என்றாகிவிடத்தான் வேண்டும் என எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள பெண் முனைய வேண்டும் என்ற ஆவலை தன்னைத் தற்காத்துக் கொள்ளவேண்டிய முனைப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

 

தனிமை கொடுமையானது தனக்கெனயாருமற்ற உணர்வின் தெறிப்பாக தனிமையும் வெறுமையும் சட்டெனச் சூழும். எத்துனைபேர் உடனிருந்தாலும் அணுக்கத்தை உணரமுடியாதபோது மனதுக்கென ஆத்மார்த்த நட்புகளும் உறவுகளும் ஒட்டாமல்போகும். இவரது சுற்றமும் தோழிகளின் நட்பும் விலகலைக் கற்றுக்கொடுத்தாக, உயிர்படும் துயர் தண்டவாளமும் இரயிலும் இணையும் தருணத்தில் சிக்கித் தவிப்பதாக, மனம் வேவுபார்ப்பதாகக் கூறுகிறார். பெண்ணின் சுயம் வீட்டின் இருண்டமூலையில் எலிகளோடு பதுங்கிக்கிடக்கிறது.

 

பெண்ணின் இருப்பு பெண்மையையும் தாய்மையையும் முழுதாய் பூண்டுகொண்டு சுயத்தைத் தொலைப்பதாக சுயம் பற்றிய பிரக்ஞை அற்றதாக இருக்கிறது. அவளது இருப்பு குறித்து ஆராயமுற்படும் அறிவு அவளை நிலைகொள்ளாது தவிக்க விடுகிறது. ஒப்பிடுவதாக, ஒப்பீட்டின் அடிப்படையில் கேள்விகளை அடுக்குவதாக, இதிலிருந்து மீட்டெடுக்க உணர்வை வெளிப்படுத்திக் கொள்வதாக, வெளிப்படுத்துதலின் எதிர்வினை அடுத்த கட்டத்தை நோக்கிக் செல்கையில் தன்னம்பிக்கையும், தன்முனைப்பும் அவளை முன்னோக்கியோ, பின்னோக்கியோ நகர்த்துகிறது. இத்தனையையும் பெண் எதிர்கொள்ளும் தருணங்களில் மனதெங்கும் நிகழும் போரட்டமும் உணர்வெழுச்சியான உச்சமும் அவளது சிந்தனையை உறங்கச் செய்யாது வாட்டுகிறது.

 

சுகந்தியின் கவிதை வாழ்க்கை முழுவதும் தியாகம் செய்வதா என்ற கேள்வியை முன்வைத்து பெண்ணின் மனோபாவங்களை விவாதிக்கிறது. தியாகம் செய்வதை வாழ்க்கை என ஏற்றுக்கொள்பவள், பிடிக்கவில்லை என்பவள், ஐடமாய் உணர்கிறேன் என்பவள், விரதமிருந்தால் தீர்வுகிடைப்பதாக சொல்பவள் என அனைவரின் அனுபவங்களும் தன்னுள் அடங்க மறுத்து அதிர்வை ஏற்படுத்துகிறது. வாழ்வின் தாக்குதல்புரியாமல் ஓய்ந்த கால்கள் தலைநிமிரமுடியாமல் நடக்கின்றது என்ற மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். தன்னைச் சுற்றிய பெண்ணுலகம் விழிப்புணர்வற்று சிதறிக்கிடக்கின்ற மனோபாவங்களோடு இருப்பதை ஏற்கவியலாத ஒவ்வாமை வெளிப்படுகிறது.

 

குழந்தைகளோடு, தண்ணீர் பிடிக்கும் சண்டைகளோடு, இறப்பின் நிகழ்வு, கேஸ்தீர்ந்த அலுப்பில் ஸ்டவ்வின் இம்சை, ஓசியில் டி.வி பார்க்க கதவு தட்டும் குழந்தைகள், சின்னம்மாவின் மெனோபாஸ் கஷ்ட அழுகைகள் என ஒவ்வொரு வரியாக எழுதியாயிற்று ஏழாவது வரியில் இன்னும் சமையல் ஆகவில்லை கடைசியாய் கவிதையை முடிக்க ஒருவரி சொல்லேன் பெண்ணே என பெண்ணின் வாழ்க்கையில் ஒரே விஷயங்கள் அலுப்பூட்டும் விதமாகத் தொடர்வதை அங்கதமாக்கியிருக்கிறார்.

 

வீட்டு வேலைகள் பெண்ணுக்குரியவையாக மட்டுமே இருக்கிற இந்தியக் குடும்பங்களில் ஆண்கள் வேலைப் பகிர்வுக்கு முன்வரவேண்டியதுமிருக்கிறது. வேலைப்பகிர்வு உள்ள குடும்பங்களில் வீட்டுவேலை என்பது அச்சுறுத்துவதாக இல்லை. பிள்ளை வளரும் காலங்களிலாவது கூடுதல் சுமை குறைய உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

 

சுதந்திர வெளியின் தேடலாக 
வலிகளில் இருந்து விடுபடும் வாழ்க்கையை 
அமைத்துக் கொள்ளவென போராடும் உணர்வினை

என்ன சொல்லித்தேற்றுவது

காலொடிந்த வாழ்க்கையை?

 

முரண்பாடுகளே வாழ்க்கை என்றானபின்

எதுதான் சரி?

எதுதான் தவறு

 

என்று பெண்ணுக்கான விதிக்ப்பட்டிருக்கிற வாழ்க்கையினின்று மீண்டுவர வேண்டியதைப் பேசுகிறார். இவரது கவிதைகளில் நிறைந்திருக்கிற இயலாமையை அதிலிருந்து மீட்டெழுக்கும் உணர்வினுக்கு ஊடாக ஆவேசப்படுகிறார்.

 

நானும் மிக ஆக்ரோஷமாய் 
தடிகளைச் சுழற்றியபடி

வேகமாய் ஒவ்வொருவரையும் 
தாக்குவதாய் நினைக்கிறேன்.

 

என கோபத்தின் கங்குகள் இயலாமையை உடைத்துக்கொண்டு வெளிப்படுகிறது. பெண்ணுக்கு அமைதி, பொறுமை முதலான குணங்கள் மட்டுமே உறித்தாய் இருக்கிற சமூகத்தில் இப்பயிற்றுவிப்புகளிலிருந்து மீண்டு கோபம் கொள்ளுமிடங்கள் சிந்திப்பிற்குரியன.

 

பெண் என்று சொல்லிச்சொல்லி எதிர்கேள்விகள் கேட்கா வண்ணம் வளர்க்கப்படுகிறவளை ரேஷன் கடைக்காரன்கூட எடைகுறைந்ததற்கு காரணம் கேட்டால் பெண்ணுக்கென்ன கேள்வி? எனக்கேட்கிறான் எனக்கூறும் ஒற்றை வரியின் மூலம் அநியாயங்களைத் தட்டிக்கேட்கிற மனோபாவத்திலிருந்து விலக ஆரம்பித்துவிட்ட மனிதர்களைக் குறித்து கவலை கொள்கிறது.

 

சுற்றிலும் நடக்கிற அநீதிகளை, குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துபோகப் பழகிவிட்டிருக்கிறோம் கண்முன் நிகழும் அநியாயங்களைத் தட்டிக்கேட்பதுகூட நாகரிகமற்ற செயல் என்ற புதிய நாகரிகத்தைக் கைக்கொள்ள ஆரம்பித்திருப்பதையும் பார்க்க நேர்கிறது. பயணச்சீட்டினைப் பெற்றுக்கொண்டு சில்லரை தரவில்லை எனப்புலம்பியதிலிருந்து 50 பைசா சில்லரை கேட்பது அநாகரிகம் எனகேட்காமல் விடுகிறோம்.

 

நியாயவிலை கடைகளில் எடைகுறைவதைக் கேட்காமல் இருப்பவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் தொடராது கேட்பவர்களுக்கு மாதா மாதம் பொருள் வழங்கும்போது வாக்குவாதமும் பொருள் இல்லை எனும் பதில்வரலாம் என்பதால் நமக்கேன் வம்புஎன இருந்து விடுகிறோம். தன்னைச் சுற்றிலும் நிகழும் அனைத்தையும் எவ்வித கேள்வியும் கேட்கமுடியாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனம் சுகந்திற்கு வாய்க்க வில்லை. அதனால்தான் குடும்ப நிறுவனத்தைத் துளைத்தெடுக்கும் சுகந்திதான் சந்திக்கும் சமூக நிகழ்வுகளையும் விட்டுவைக்கவில்லை.

 

மதச்சார்பற்ற நாடு

சாபக்கேடாய் ரத்தம் பருகியபடி

மனிதமாமிசத்தின் இருண்ட எல்லையைத்

தாண்டியபின்தான் சக மனிதநேயம்

சாத்தியப்படும்

 

எங்கிருந்து கிடைக்கும்

இந்த ராஜ்ஜியத்தின் சுயநிர்ணய உரிமை

 

மனித நேயத்தைத் தொலைத்துவிட்டு ரத்தம் பருகிக் கொண்டிருக்கும் மதச்சார்பற்ற நேர்மையான நாடு உரிமை கொடுப்பது சாத்தியமா எனக்குமுறுகிறார்.

 

பசிதீர்ந்து போகணும்

போராட்டமாய் இருக்கிறது

இந்திய நதிகள் .....

தெருவுக்கு ஏசி

செலவுக்கு பந்த்

நான் ....

உடம்பு துடைப்பம்       (2007)

நீங்கள் கோவில்

 

நலமின்றி மருந்துகளோடு கழிந்த நாட்களிலும் சுகந்தியால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. தன்னைப் பாதித்த நினைவடுக்கில் இருந்த அனைத்தையும் திரட்டி எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.

 

பெண் விடுதலைன்னா என்ன?

நாங்க டி.வி. பாக்கணும்

சமூகத்தைப்பற்றி

கவிதை தெரியுமா?

நாங்க டி.வி. பாக்கணும்

செரி....

உரிமை....

அழுகை....

தூங்கிப்போதல்  (2008)

 

உரிமையைப்பற்றிய அடிப்படை உணர்வற்று மழுங்கிப் போதலைப் பொறுக்க முடியாததாக காட்டுகிறது. உரிமை வேட்கையுடையவர்களால் அதனை முன்னெடுத்து இயங்க முடியாத பொழுது அதை செரித்துக்கொள்ள முயன்று அழுகையுடன் தூங்கிப்போகிறதைத் தவிர ஏதும் செய்யமுடியாத கையறுநிலையைப் பேசுகிறார்.

 

இன்னும் பிறக்காத வயிற்றிலிருக்கும் குழந்தையுடன் கதைசொல்லி புல்வெளியில் விளையாடி நட்சத்திரம்காட்டி மனசெங்கும் பூரித்துப்போகிறார். வயிற்றில் கால்நீட்டி உடல்முறித்து வயிற்றுக்குள் பரபரப்பைக் காட்டுகின்ற குழந்தைக்கு முத்தங்களை அளிக்கிறார்.

 

தாய் கருவைச் சுமந்தபின் அவளுடலில் நிகழ்கிற மாற்றங்கள் பல. அவளது தாய்மை உணர்வின் பெருமிதம் அலாதியானது. தாய்மைக்கு ஏற்ப அவளது உடல்மெல்ல மெல்ல செதுக்கப்படுகிற நிலையில் உடலோடு மனமும் இயைந்து களிக்கும் உணர்வை அவளே உணரமுடியும். பெண்ணின் கருப்பை என்பது தனிஉலகம் அவ்வுலகத்தின் சூட்சுமங்களோடு பல நூற்றாண்டு காலம் மனிதன் அறிவியலோடு போராடிக் கொண்டிருக்கிறான். இயற்கையின் ஆற்றலை இயற்கையின் செய் நேர்த்தியை உணர்கிற பிரதான இடமாக கருவுறுதல் முதல் குழந்தைப்பேறு வரையான காலங்களைச் சொல்லலாம்.

 

பிரசவ அறை வலி, முனகல், அழுகை இவற்றால் நிறைந்தது இரத்தவாடை நிரம்பியது. ஒவ்வொரு பிரசவிப்பின் போதும் குழந்தையின் அழுகுரல் கேட்கிறதாவென ஆர்வத்தோடும் பயத்தோடும் பக்தியோடும் கண்ணிரோடும் காத்திருப்பவர்களைப் பார்க்கமுடியும். பிரசவ அறைக்குள் இருக்கும் பெண்ணின் வலியும் துடிப்பும் மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவால் இடப்பற்றாக்குறையால் பிரசவத்தின் கடைசித் தருணம் வரும்வரை படுக்கை வசதியற்று தரையெங்கும் துடித்துக் கொண்டிருக்கும் அரசு மருத்துவமனைக் காட்சி மனதெங்கும் துயரத்தின் நெடியைப் படர்த்துகிறது.  சுகந்தியின் கவிதை பிரசவத்தின் அனுதாபத்தைப் பேசுகிறது.

 

 

ஆசைப்படும் மனசுக்குள்

ஓயாத கடலைகள்

காமமுற்ற மனதோ

அணையாத நெருப்பு

மதம் பிடித்த யானையாய்

மனம் மாறிவிட்டது

 

என உணர்வினைக் கட்டுப்படுத்த வியலாமல் மதம்பிடித்த யானையாய் மாறுகிற மனதைப் பேசுகிறார். இவ்வரிகள் முட்டுவென் கொல் தாக்குவென் கொல்லெனும் சங்க வரிகளை நினைவூட்டுகிறது.

 

பெண்கவிஞர்களின் கவிதைகள் பெண்ணுக்கான உலகை திறந்துகாட்டிய முன்னோடிகளுள் மிகமுக்கியமானவர் சுகந்தி. பெண்ணின் உண்மையான இருப்பை கவிதைகளில் கொணர்ந்தவர். பெண்வாழ்வின் அடுக்களை சார்ந்த உழைப்பையும் குடும்பத்திற்குள் சுருங்கிப்போகிற திணறலையும் சுதந்திரத்தின் வெளியை எட்டமுயலும் முயற்சியையும் இவரது கவிதைகளில் காணலாம்.

 

சுகந்தியின் கவிதைகளில் ஒருசில இடங்கள் ஆவேசம் நிறைந்ததாக இருக்கிறது. பல இடங்களில் விவாதங்களை நிகழ்த்துகிறது ஓங்கி ஒலிக்காத குரலில்  ஆற்றாமையைப் பதிவு செய்கிறார். சந்தோஷங்களைத் தேடியலையும் மனக்குரங்கை, அவலங்களை சேற்றில் குளித்து மலம் பூசித் திரிவதாக, மௌனமாய் ஒடுங்கிப் போவதை, தோழிகளின் பிணைப்பை, பிரிவை, அறைக்குள் பரவிய தனிமையை, படுக்கையறையைச் சுற்றி முட்செடிகளின் கிளைப்பை என பெண் பேசத்துணியாத புதுத் தளங்களுக்குள் அழைத்துச் சென்றவர்.

 

தாய் குறித்தவரியில் என்னை ஆயுதத்தோடு வயிற்றில் தாங்கினாள் தாய் என்கிறார். பசியின் அவலத்தைக் காணும் பொழுது குழந்தை மனம் வேண்டும் எனக்கும் என்று துயரத்தினின்று மீட்டுக்கொள்ள போராடுகிறார். பெண் வீடு, மேசை, நாற்காலியைப்போல வீட்டிலிருக்கும் பொருளாக மட்டுமே சமூகமும் குடும்பமும் சொல்லுகிற ஆட்டுவிப்புகளுக்கு உட்பட்டவளாக, மாதவிடாய் துன்பத்தை, சுய முகத்தைத் தேடவேண்டும் என்பதாக, நாட்குறிப்புகூட எனக்கானதில்லை எனவே தனக்கான நாட்குறிப்பைத் தேடுவதாக என தேடலின் தீர்க்கத்துடன் பார்வையைச் செலுத்தி வெறிபிடித்த மிருகத்தின் பசியினைப்போல அலைகிற மனது சுகந்தியின் கவிதைக்கானது.

 

என்னைக்கொன்று இந்த மண்ணில்

புதைத்தாயிற்று ஏற்கனவே

என்றாலும் நான் சுவாசித்திருக்கிறேன்

இலைகளின் சலசலப்பினூடே

 

முட்டையினின்று வெளிவரும் நாளில் வெளிவரமுயன்று தோற்கும் சின்னஞ்சிறு குருவியென போராடி உள்ளொளியாக மனதைக் கீறிக்கொண்ட சுகந்தியின் வரிகளின்படி அவரது கவிதைகள் வாசிப்பவர்களை உறங்கவிடாமல் தர்கங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

-ச.விசயலட்சுமி

 

Pin It