நனவில் தேடும் கனவு

சிறு புழுவை சொருகி வீசி

பார்வைகளின் மையம் அசைவற்றிற்க....

மிதக்கும் தக்கை

இழுபடும் கனத்திற்கு எதிராக

செயலாற்றும் விசைக்குச் சிக்கும்

மீனின் வயிறு கிழித்து

கண்டடைய துலாவுகிறான்

பாட்டி சொன்ன கதையில்

தொலைந்த மோதிரத்தை

விட்டு அகன்ற ஞானம்

சப்தங்கள் உறங்கும் சாமம்

கள்ளத்தனமாக வெளியேறியவன்

ஞானமடைந்தான்

யசோதையின் அமைதியில்

பீறிட்டு வழிந்த

துயர்களை சலசலக்கும

இலைகள் நிறைந்த

போதி மரத்தினடியில்

தேகராகம்

முல்லையின் வசிய வாசம்

மூச்சேறி கிறங்குகையில்

மென்னிரு திரட்சியும்

என்னிரு தோளில் அசங்கும்

சொல்லற்ற ஒலிமொழி

சூழலின் பின்திரையாய்ப் பரவ

மேனிகளின் பூத்த நீர் உருமாறும்

சேர்ந்திசையின் சுருதி பேதம்

ஆலாபனையில் ஒருமிக்கும்

தாளலயம் தவறி மீளும்

தந்திகள் துடித்தெழும் வீணை

உச்சமிசைத்து ஓயும்

நரம்புகள் கிளர்கையில்

நாதம் சுவடின்றி நீங்கும்

Pin It