தமிழ்ச்சினிமா உலகின் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளில்  ஒருவரான வசந்தபாலனின் படம் இது.கதாநாயக பிம்பங்களின் மீது கட்டமைக்கப்பட்ட தமிழ்ச்சினிமா ரசிக மனதில் ஆரோக்கியமான தாக்குதல்களைத் தொடுத்து வரும் இளம் இயக்குநர் படைவரிசையில் முன்னணியில் நிற்பவராக வசந்தபாலனை அடையாளம் காட்டும் இன்னொரு படமாக அங்காடித்தெரு வந்துள்ளது.ஆனால் எவ்வகையிலும் இது ‘இன்னொரு’ படம் அல்ல.

வசந்தபாலன் வித்தியாசமான சினிமா எடுத்துப் புகழ் பெற வேண்டும் என்கிற ஆவலில் சினிமாத்துறைக்கு வந்தவராகத் தெரியவில்லை. விருதுநகரில் போராடும் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தோழர்களோடு நட்போடு வாழ்ந்து ஒரு கட்டத்தில் ஒரு முழுநேர ஊழியராக வாழ்வைத் தொடர்வதா சினிமாத்துறைக்குப் போவதா என்கிற கேள்வி வந்தபோது சினிமாவைத் தன் வாழ்க்கைப் பாதையாகத் தேர்வு செய்து அங்கே தன் போராட்டத்தைத் தொடர்பவராகவே படுகிறது.

தமிழ் சினிமா இதுவரையிலும் பேசாப்பொருள் ஒன்றைக்குறித்து இப்படத்தில் வசந்தபாலன் பேசியுள்ளார்.முறைசாராத்தொழிலாளர் என்றும் அணிதிரட்டப்படாத தொழிலாளிகள் என்றும் அறியப்படும் சென்னைப் பெருநகரத்தின் பெரும்பெரும் வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கையே படத்தின் கதைக்களனாக அமைந்துள்ளது. அப்படி மட்டும் கூறிவிடமுடியாது. தமிழகக் கிராமங்களில் வாழும் வாய்ப்புக்கள் குறைந்து வாழ்விழந்து போன மக்கள் பெருநகரங்களுக்குப் பிழைப்புத் தேடி அலைவது இன்று தமிழ்ச்சமூக வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சமாக மாறியுள்ளது. திருப்பூரும் ஓசூரும் சென்னையும் இன்று தமிழகத்தின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் குவிந்து கிடக்கும் மையங்களாக மாறியுள்ளன. இந்த யதார்த்தத்தை மனம் கசியும் வண்ணம் நமக்கு எடுத்துச் சொல்லும் கதையாகவும் அங்காடித்தெரு அமைந்துள்ளது.

வெறும் சோற்றுக்கு வந்த பஞ்சத்தால் உலகின் ஏதேதோ மூலைகளில் எல்லாவிதமான அவமானங்களையும் அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொண்டு கொத்தடிமைகளாகவும் சுமங்கலித் திட்டத்துக்கூலிகளாகவும் நவீன கணிணித்துறை அடிமைகளாகவும் எனப் பிழைத்து மடிகிற நம் உழைப்பாளி மக்களின் கதை இது. அவ்ர்களின் பக்கம் உறுதியாக நின்று அழுத்தமாகக் குரல் எழுப்பி அவர்களின் கதையைப் பேசியுள்ள படம் இது.

சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் மண்ணைவிட்டு அந்தரத்தில் தொங்கும் கதைகளைச் சொல்லிச் சொல்லித் தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் ரசிக மனோபாவம் இந்தக்கதையை வெறும் ‘டாக்குமெண்டரி’ என்று புறக்கணித்துவிடும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகக் கதையைப் பின்னியுள்ளார் வசந்தபாலன். எத்தனையோ மனித உரிமைகளை மறுக்கும் இந்நிறுவனங்கள் மனிதக்காதலையும் ஏற்க மறுப்பதை கதையின் மையமாகக் கொண்டு இச்சுரண்டல் வாழ்க்கை நம் முன்னே அப்பட்டமாக விரிகிறது. பூச்சும் மெழுக்கும் இன்றி உழைப்புச் சுரண்டலும் பாலியல் சுரண்டலும் ரசிகமனம் அதிர்ந்து உள்வாங்கும் விதமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றில் சிஐடியு ஒரு படத்துக்கு படம் வெளியான 15 நாளிலேயே பிரம்மாண்டமான பாராட்டு விழாவை நடத்தியிருக்கிறதெனில் அது அங்காடித்தெருவுக்கு மட்டும்தான். அத்தகைய பெருமை இப்படத்தின் உள்ளடக்கத்துக்காக மட்டும்தானா? இல்லை. அழகியல்பூர்வமாக தமிழ் சினிமாவுக்கு வசந்தபாலன் வழங்கியுள்ள கொடை அங்காடித்தெரு எனலாம். இப்படி ஒரு அழுத்தமான கதையை அழுத்தமான கதாபாத்திர வார்ப்புகளுடன் அதற்கேற்ற சினிமா மொழியிலும் வண்ணத்திலும் கோணங்களிலும் இசையிலும் செதுக்கியிருக்கிறார் வசந்தபாலன். ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனியின் இசையும் நா.முத்துக்குமாரின் பாடல்களும் ஜெயமோகனின் வசனமும் இத்திரைக்காவியத்தின் வெற்றிக்குக் கை கொடுத்துள்ளன.

உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஹாலிவுட் சினிமாவுக்கு மாற்றாக பிரஞ்சு சினிமா நியூவேவ் இயக்கத்தை முன்வைத்தது சோவியத்திலிருந்து மக்களை முன்னிறுத்தி ஐசன்ஸ்டீன் போர்க்கப்பல் பொடெம்கின் படத்தை வழங்கினார்.பிரஞ்சு மற்றும் சோவியத் பாணி சினிமாக்களின் சரியான கலவையாக வசந்தபாலன் கம்பீரமாக வளர்ந்து வருகிறார் என்பதற்கு உதாரணமாக இப்படம் விளங்குகிறது. போர்க்கப்பல் பொடெம்கின் படத்தின் ஒடெஸ்ஸா படிக்கட்டுக் காட்சி இன்றைக்கும் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கும் காட்சியாக இருக்கிறது. மார்க்சிய வரலாற்றாய்வாளர் எரிக் ஹோப்ஸ்வாம் அவருடைய அதீதங்களின் நூற்றாண்டு என்கிற 20 ஆம் நூற்றாண்டு வரலாறு பற்றிய நூலில் ஒடெஸ்ஸா படிக்கட்டுக் காட்சி இந்த நூற்றாண்டின் வரலாற்றின் மிக முக்கியமான பகுதி என்று அக்காட்சிக்கு ஒரு வரலாற்று அந்தஸ்தை வழங்கினார்.

அங்காடித்தெரு படத்தின் பல காட்சிகள் தமிழ்ச்சமூகத்தின் - உழைப்பாளி மக்களின் வரலாற்றிலும் பண்பாட்டு வரலாற்றிலும் இடம்பெறும் தகுதி வாய்ந்தவை. வாழ்க்கையை எல்லோரும் முன் வாசல் வழியாகவே பார்த்துக்கொண்டிருக்கும்போது ஜி.நாகராஜன் புழக்கடையிலிருந்து வாழ்வைப்பார்த்துக் கதை சொல்லுகிறார் என்று சுந்தரராமசாமி ஒருமுறை குறிப்பிட்டார். அது வசந்தபாலனுக்கும் பொருந்தும். ஆனால் நாகராஜன் சிதைவே வாழ்வெனச் சித்தரித்தார்.ஆனால் வசந்தபாலன் இவ்வளவு துயரமும் தோல்விகளுக்குப் பிறகும் வாழ்க்கை தொடரும் என்கிற நம்பிக்கையைத் தருபவராக இருக்கிறார். அவருடைய முந்தைய படமான வெயில் படத்திலும் அங்காடித்தெருவிலும் குப்பையும் கூளமுமான ஒரு காட்சிப்பின்புலத்திலேயே கதை நகர்வதைப் பார்க்கிறோம். வாழ்வின் பின்பக்கத்தை- இன்னொரு பக்கத்தை-யாரும் காணாத பக்கத்தை-காட்டாத பக்கத்தைக் காட்டுவதுதான் ஒரு கலைஞனின் பணி என்பதில் ஒரு தெளிவும் உறுதிப்பாடும் அவருக்கு இருக்கிறது. காட்சிக்குக் காட்சி மக்கள் திரள் திரளாக திரை முழுக்க ஆக்கிரமித்து வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். இவ்வளவு ஜனங்களைக் கேமிராவின் ஒரு  ஃபிரேமுக்குள் கொண்டு வந்தது படத்தின் பேரழகு என்று சொல்வோம்.

கதாநாயகனாக மகேஷ், நாயகியாக கற்றது தமிழ் அஞ்சலி, வில்லன் மேஸ்திரியாக இயக்குநர் வெங்கடேஷ், முதலாளியாக பழ.கருப்பையா, நண்பனாக பிளாக் பாண்டி என ஒவ்வொருவரும் இது வாழ்வுதான் என்ற நம்பிக்கையை உண்டுபண்ணும் விதமாக நடித்திருக்கிறார்கள். சோபியாவாக வரும் பெண்ணின் முகபாவங்களும் நடிப்பும் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இப்படியெல்லாம் இப்போது எந்த முதலாளியும் இல்லை. இப்போதெல்லாம் அவுங்க ரொம்ப நல்லவுங்களாகி விட்டார்கள். வசந்தபாலன் ரொம்ப ஓவராகக் காட்டியுள்ளார். போலி கம்யூனிஸ்ட்டுகள்தான் இப்படத்தைப் பாராட்டுவார்கள் என்று அதிரடி நவீன இலக்கியவாதி சாரு நிவேதிதா எழுதியுள்ளதாக அறிகிறோம். நவீன எழுத்தாளர்களில் ஓரிருவர் சில ஜவுளிக்கடை அதிபர்கள் வழங்கும் நிதியுதவிக்காக முதலாளித்துவத்தின் சுரண்டலின் அடிவருடிகளாக மாறிப்போனார்கள் என்பதன் உதாரணமாகத்தான் இதை நாம் எடுத்துக்கொள்ள முடியும். நிஜவாழ்க்கை இப்படத்தில் காட்டியதைவிடக் கொடூரமான முகத்தோடும் வடிவங்களோடும் இருக்கிறதென்பதை சாரு போன்ற எழுத்தாளர்கள் தாம் வாழும் சிங்காரச் சென்னையின் தெருக்களில் இறங்கி ரெண்டு நாள் நடந்தாலே தெரிந்து கொள்ளலாம்.

இப்படம் உண்டாக்கும் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க இது கொஞ்சம் ஓவராகச் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லிச் சிலர் தண்ணீரைக் குடிக்கிறார்கள்.அதை நாம் குற்றமெனச் சொல்லவில்லை. எதுவானாலும் சமீப ஆண்டுகளில் இப்படித் தமிழ்ச்சமூகத்தில் ஒரு சலனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள படம் அங்காடித்தெருதான் என்பதில் சந்தேகமில்லை. ஆட்டோக்காரர்களை ஒரு காட்சியில் மோசமாகச் சித்தரித்திருப்பதை படத்தின் ஒட்டுமொத்த முற்போக்கான நோக்கத்தைக் கருதி நாம் பெரிதாகப் பேசாமல் விட்டு விடுகிறோம்.

துவக்கக் காட்சியிலிருந்து ஒருவித பதட்டத்தை ரசிகமனதில் தேக்கி நிறுத்தி இறுதிவரை அந்தப் பதட்டத்துடனும் கவலையுடனும் நம்மை இருக்கையில் அமர வைக்கும் இப்படம் கலாபூர்வமாகவும் கருத்துரீதியாகவும்  பெரும் மனப்பாதிப்பை ரசிக மனதில் உண்டாக்கியுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகமும் கொண்டாட வேண்டிய  மீண்டும் மீண்டும் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய படம்.

- சதன்

Pin It