பொதுவாக மாநாடு என்றால் திருவிழாக் கோலம்தான். அரசியல் கட்சியாக இருந்தாலும், சாதிய அமைப்பாக இருந்தாலும், வேறு பிற அமைப்பாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி சுயபுராணம் பாடி, மக்களின் வாழ்வாதார கோரிக்கைகள் மறக்கப்பட்டு தலைவா வாழ்க, தலைவி வாழ்க, அண்ணன் வாழ்க என காலில் செருப்பு இல்லாமல், கையில் காசு இல்லாமல் பாமரத் தொண்டர்கள் கொண்டாடுகின்றனர். நாடு விடுதலை அடைந்து எத்தனை ஆண்டுகள் உருண்டோடினோலும் மக்களின் வாழ்நிலைமை அதல பாதாளத்தில் உள்ளதே, இவர்களின் பிரச்சனை மாநாட்டில் எழுப்பப்பட்டு இதற்கு விடைகாண போராட்டக் களம் அமைக்கப்படுகிறதா என்றால் வேடிக்கைதான்.
ஆனால் வாலிபர் சங்க மாநாட்டில் வழக்கமான கொண்டாட்டத்திற்கு மாற்றாக, மக்களின் பிரச்சனை விவாதிக்கப்படுகின்ற மாநாடு டிஒய்எப்ஐ மாநாடுதான். சமீபத்தில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் சோழம்பேட்டை கிளை மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அக்கிளை மாநாட்டில் நூற்றுக்கு அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர். அஞ்சலி தீர்மானம், தலைமை, அறிக்கை சமர்ப்பித்தல், பிரதிநிதிகள் விவாதம், தீர்மானம், நிர்வாகிகள் தேர்வு, நிறைவுரை என ஒருநாள் முழுதும் நடந்தது. இம்மாநாட்டில் 12 தோழர்கள் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற வகையில் விவாதித்தனர். அந்தக் கிளையில் இருந்து மட்டும் 23 தோழர்கள் மக்கள் பிரச்சனைக்கான போராட்டத்தில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டனர், அக்கிளையில் மக்களுக்கான வாழ்வாதாரப் பிரச்சனையான 100 நாள் வேலைக்கான போராட்டம் உள்ளிட்ட ஏராளமான போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஏன் மாநாடு நடத்த வேண்டும் ?
நாம் நடந்து வந்த பாதையில் கிடைத்த அனுபவங்களில் களைய வேண்டியதைக் களைந்து, நல்ல அனுபவங்களை இணைத்துக்கொண்டு புதிய தடத்தை உருவாக்குவதற்கான தயாரிப்பு ஏற்பாடுகளை செய்வதற்குத்தான் மாநாடு. எந்த தலைவருக்கும் அதிகாரம் கொடுத்துவிட்டு அடிமட்டத் தொண்டர்கள் வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. தலைவர் பிறந்த நாளில் மாநாடு, அண்ணன் அழைபதற்கான மாநாடு, அம்மா அழைப்பதற்கான மாநாடு, தளபதி அழைப்பதற்கான மாநாடு, சாதிய தலைவர் அழைப்பதற்கான மாநாடுகள் நடக்கும். ஆனால் வாலிபர் சங்கம் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்கும், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும், மக்களின் ஒற்றுமையைக் காப்பதற்கும் என தேச பிரச்சனை முதல் தெரு பிரச்சனை வரை விவாதிக்கப்பட்டு மாற்று சமூகத்தை வடிவமைப்பதற்காகத்தான் வாலிபர் சங்கம் மாநாடு நடத்துகிறது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் உள்ளூரில் காய்கறி, பருப்பு, அரிசி என அனைத்துப்பொருட்களின் விலையும் உயர்கிறது. அமெரிக்காவின் நவீன காலனியாக மக்களை மாற்றுகிறது. கிராமப்புறங்களில் விவசாயம் வீழ்ந்து, வாழ்வதற்கான வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு நாடோடிகளாக புலம்பெயரக்கூடிய உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு டிஒய்எப்ஐ மாநாடு நடத்துகிறது.
வாலிபர் சங்க மாநாட்டின் ஜனநாயகம்
அண்ணனை தலைவராக நியமித்த ஆற்றல்மிக்க தமிழினத் தலைவருக்கு நன்றி என அறிவிப்பு போஸ்டர்களை எல்லாம் நாம் பார்த்தோம். எங்கோ உட்கார்ந்து கொண்டு தலைவர்களை நியமிப்பது அல்ல வாலிபர் சங்கம். இடைக்கமிட்டி மாநாடு என்றால் கிளைகளில் இருந்து பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டு இடைக்கமிட்டிகளில் ஜனநாயக முறையில் பெரும்பான்மை அடிப்படையில் மாநாடு நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதே போல் அனைத்து மட்டங்களிலும் ஜனநாயக அடிப்படையில் மாநாட்டில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். குடும்பத்திற்காக அரசியல் நாகரிகங்களை எல்லாம் கேலிகூத்தாகும் சூழலில். ஜனநாயக ரீதியில் மாநாடு நடத்துவது டிஒய்எப்ஐ அமைப்பு.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 5000 கிளைகளிலும் மாநாடு நடத்தப்பட்டு இடைக்கமிட்டி மாநாட்டிற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 354 இடைக்கமிட்டி மாநாடும் நடத்தப்பட்டு இதில் தேர்ந்தெடுக்கக்கூடிய பிரதிநிதிகளை வைத்து 34 மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் கூடி மாநில மாநாடு நடத்தி, மாநில மாநாட்டில் மாநிலக்குழு, மாநில நிர்வாகிகள் என உயரிய ஜனநாயக அடிப்படையில் தேர்வு நடைபெறும் அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.
வாலிபர் சங்கக் கிளை, இடைக்கமிட்டி, மாவட்டக்குழுவில் இளம்பெண்கள் தலைவராக, செயலாளராக, கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவது பாலின வேற்றுமை இல்லாத ஜனநாயக அமைப்பாக டிஒய்எப்ஐ திகழ்கிறது. மாநாடுகளில் பொதுவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதில் தலைவர்களின் பராக்கிரமங்களை வாழ்த்தியும், சில தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால் மாநாட்டில் போடப்படும் தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கக்கூடிய அமைப்பு டிஒய்எப்ஐ.
விழுப்புரத்தில் 12வது மாநில மாநாட்டில் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, தீண்டாமை பிரச்சனைகளுக்கு முடிவு கட்டு என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை, கோவை முதல் சென்னை, ராமேஸ்வரம் முதல் சென்னை என சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்று, சமூக பாதுகாப்பான வேலை வழங்கிடு என 3000 கிலோ மீட்டருக்கு மேல் சைக்கிள் பயணம் நடத்தி மக்கள் மத்தியில் ஆட்சியாளரை அம்பலப்படுத்தியது, 2010 பிப்ரவரியில் தலைநகர் டில்லியில் நாடாளுமன்றம் முன்பு 24 மணி நேர உண்ணாவிரதத்தை சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியாளரை வலியுறுத்தி நடத்தியது. இப்படி மக்களுக்கான மாநாடுகளாக டிஒய்எப்ஐ மாநாடுகளை நடத்தி வருகிறது.
அதே போல் மாநில மாநாட்டில் விவாதித்ததைப் போல் டிஒய்எப்ஐ, அரைப்படி நெல் கூலி உயர்த்திக் கேட்டதற்காக கீழவெண்மணியில் 44 பேர்களை உயிரோடு கொளுத்திய தினமான டிச. 25 அன்று தீண்டாமை கொடுமைக்கு எதிராக நேரடி இயக்கத்தில் ஈடுபட்டோம். நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை ஈஸ்வரன் ஆலயம், நாகை மாத்தூர் ஆலயம், விழுப்புரம் நெடி ஐயனார் ஆலயம், கடலூர் மாவட்டம் பழைய பட்டினம் அம்பேத்கார் சிலை திறப்பு, என நாம் தலையிட்ட அத்தனை இடங்களிலும் தலித் மக்களின் உரிமை மீட்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி, புதிய ரேசன் அட்டை பெறுவதற்கான போராட்டம் நடத்தி பல மாவட்டங்களில் புதிய ரேசன் அட்டை பெற்றுத் தந்தோம். இப்படி நமது போராட்டங்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
தோழர்களே இன்று ஆட்சியாளர்கள் அதிகார பலம், பணபலம், அடியாள் பலம் இருக்கிறது, எனவே எதையும் செய்து விடலாம், என நினைக்கிறார்கள். ஆனால் வரலாறு நமக்கு கூறுவது மாற்றம் என்பது சுழன்று கொண்டே இருக்கும். ஆம் இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற போது சர்வாதிகாரியான ஹிட்லர் உலகமே என் காலடியில் என கொக்கரித்தான். பல்லாயிரக் கணக்கான யூதர்களை உயிரோடு நெருப்பிலிட்டு பொசுக்கினான். பல ஆயிரக்கணக்கானவர்களை குவியல் குவியலாய் உயிரோடு புதைத்தான். ஹிட்லர் சோவியத் வீரர்களால் நிராயுத பாணியாக்கப்பட்டு வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதுதான் வரலாறு. உலகையே அடிமையாக்க முயன்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமிடம் வாங்கிய வடு இன்னும் மறையவில்லை.
இத்தகைய வரலாற்றை மனதில்கொண்டு, நமது கிளை மாநாடுகள் முதல் மாவட்ட மாநாடு வரை பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை இணைத்து விரிவான விளம்பரம் செய்து மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளை வென்றெடுப்பதற்கான மாநாடாக நாம் நடத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆட்சியாளர்களின் கொடுமைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ‘ரௌத்ரம் பழகு’ என்று சொன்னானே மகாகவி பாரதி அந்த வகையில் மக்களின் கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய வேண்டும். உலக இளைஞர்களின் எழுச்சி நாயகன் சேகுவேரா கூறியதைப் போல கொடுமைகளைக் கண்டு கொதித்தெழும் இளைஞர்களை லட்சோப லட்சக்கணக்காய் உருவாக்குவோம். இந்த எரிதழலில் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் தானாய் மடிவார்கள் என்பது நிச்சயம். மாமேதை லெனின், ஒரு மனிதன் வாழ்ந்து முடிக்கும் தருவாயில் தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கின்ற போது, அந்த வாழ்க்கை சக மனிதனுக்கு, இந்த சமூகத்திற்கு, உழைப்பாளி வாழ்க்கையை நிமிர வைப்பதற்கு எப்படியெல்லாம் பயன்பெற்றது என்று எண்ணி பார்க்கின்ற போதுதான் அந்த வாழ்க்கை முழுமையான வாழ்க்கை என்றார்.
ஆம், தோழர்களே நமது வாழ்க்கை இந்த சமூகத்திற்கு, சக மனிதனுக்கு, உழைப்பாளி வர்க்கத்திற்கு பயன்படும் வகையில் வாழ்க்கை முற்றுப்பெற வாழ்வோம். நாளைய விடியலை நமக்கான விடியலாக உருவாக்கிடுவோம்.