ருவரும் இணையானவர் என ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நிருபித்து வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஸ் குடியிருப்பு, காமன்வெல்த், கே.ஜி(கோதாவரி,கங்கை) ஊழல் என காங்கிரஸ் போட்டியில் முன்னேறுவதைக் கண்ட பி.ஜே.பி. சுரங்க ஊழல் மூலம் எடியூரப்பாவை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. கூட்டணியில் உள்ளவர்களும் தங்கள் கூட்டணியைப் பிரிக்க யாராலும் இயலாதென சபதம் விடும் அளவிற்கு ஊழலில் உறுதியாகவே உள்ளனர்.

“ஜென்டில்மேன்” என புகழப்படும் மன்மோகன்சிங்கிடம், ஊழலுக்கு எதிராக என்ன செய்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டபோது எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் யாரும் கேட்காமலேயே கூட்டணி தர்மம் பற்றி பேசியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போது இரண்டு முன்னாள் அமைச்சர்களும், ஒரு திமுக எம்.பி.யும் திகார் சிறையில் உள்ளனர். மற்றொருவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு எப்போது சம்மன் வருமென சி.பி.ஐ. விசாரணைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஊழலுக்கு எதிராக இரும்புக்கரம் காட்டியிருக்க வேண்டிய பிரதமர் புதிய மந்திரிசபை மாற்றம் மூலம் மிக மோசமான ஒரு அரசியல் நடவடிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கூட்டணி தர்மம் என்ற பெயரில் இரண்டு மந்திரி பதவிகளை திமுகவிற்காக காலியாக விட்டு வைத்திருப்பதாக வெட்கமே இல்லாமல் கூறுகிறார் எனில், என்ன அர்த்தம்? கூட்டணி தர்மத்துக்காகத்தான் ஊழலை அனுமதித்தேன், நடவடிக்கை எடுக்காத என்னை உச்சநீதிமன்றம் கண்டித்தபோதும் அமைதி காத்தேன், இனிமேலும் அவர்களை காப்பாற்றுவதே என் தர்மப்பணி என சொல்வதாகத்தானே அர்த்தம். அதாவது, ஆட்சியைக் காப்பாற்ற எதுவும் செய்வோம், சட்டத்தை மீற அதிகாரத்தை பயன்படுத்துவோம் என வெளிப்படையாக அறிவிக்கிறார். அப்படியெனில், இடதுசாரிகள் ஐ.மு.கூ.அரசு க்கு கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டபோது 2008, ஜூலை22 அன்று நாடாளுமன்றத்தில் அரசை காப்பாற்றிக்கொள்ள நம்பிக்கை வாக்கு கோரியபோது பி.ஜே.பி. எம்.பி.யை கோடிகளில் விலை பேசியதும் உண்மை என்று மறைமுகமாக ஒத்துக்கொள்வதாகத்தானே அர்த்தம். அதனால் தான், 2008ல் தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் இரண்டு ஆண்டுகளாக எவ்விசாரணையும் செய்யாமல் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தபோதும் தாமதப்படுத்த முயற்சித்துள்ளார் போலிருக்கிறது.

ஊழல்களின் அடிப்படையாக ஊற்றுக்கண்ணாக மேற்கண்ட பல வழக்குகளில் தெரியவருவது ஒன்றுதான். ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள்,உயர் அரசு அதிகாரிகள் ஆகியோரிடையே உள்ள தாராளமய கருத்தொற்றுமை அடிப்படையிலான வலுவான கூட்டணியே அனைத்து மெகா ஊழல்களுக்கும் அடிப்படை. ஆனால் ஊழல்களை ஒழிப்பதற்கான சரியான கட்சி நாங்கள் தானென்று இருவரும் கூறிக்கொள்வது நகைச்சுவையாக உள்ளது. பி.ஜே.பி.யின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தொலைத்தொடர்பு ஊழல், சவப்பெட்டி ஊழல், பங்காரு லட்சுமணன் ஊழல் என நாறிய கதையை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்திருப்பார்கள் போல. ஆட்சியில் இல்லாததால் கடந்த ஏழு ஆண்டில் மத்திய அரசில் அவர்கள் ஊழல் செய்யவில்லை. ஆனால் பி.ஜே.பி.ஆளும் மாநிலங்களில் ஊழல்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை.

தற்போது கர்நாடகத்தில் சுரங்க ஊழலில் முதல்வர் எடியூரப்பாவிற்கு நேரடிப் பங்கென லோக் அயுக்தாவே தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே, நில மோசடி குற்றச்சாட்டு அவர் மகன் மீது வந்தபோது நிலத்தை திருப்பிக்கொடுத்தார், ஆனால் பி.ஜே.பி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கும் முன்னதாக ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுத்தியதையும் நாடு பார்த்தது. ஆக, ஆட்சியைப் பிடிக்க வாக்குக்கு பணம் கொடுக்கும் காங்கிரஸும், பி.ஜே.பி.யும் ஆட்சி நடத்துகையிலும் சரி, ஆட்சியை தக்க வைக்கவும் சரி நம்புவது ஊழலை மட்டுமே. பிராந்திய கட்சிகள் பெரும்பாலும் இவர்களைச் சார்ந்தே உள்ளதால் ஊழல்களே அவர்களை இணைக்கின்றன.

லோக்பால் வந்தால் எல்லா ஊழலும் ஒழிந்துவிடும் என்று பேசுவோர் இந்த உண்மைகளை மட்டுமல்ல, வேறு சில உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. தனியார் மயம் மற்றும் தாராளமயத்துக்கு எதிரான ஒரு கட்சியால்தான் ஊழலின் அடிப்படையை ஒழிக்க இயலும். அப்படியெனில் அந்தக்கட்சி தனி முதலாளிகளிடமும், அன்னிய முதலாளிகளிடமும் கையேந்தாத கட்சியாக இருக்கவேண்டும்.

ஆம். கட்சியை நடத்தவும், தேர்தலை சந்திக்கவும் பல நூறு கோடிகள் தேவைப்படும் நிலையில், கட்சி என்பது மக்கள் தரும் நன்கொடையில் இருந்து நடத்தப்படுவதாக இருக்கவேண்டும். பெரும் முதலாளிகள் தரும் பிச்சையில் இருந்து நடத்தப்படுவதாக இருந்தால் பிச்சை எடுப்பதையே ஆட்சிக்கு வரும்போதும் செய்வார்கள். அதுதான் தற்போது நடக்கிறது. இடதுசாரிகள் 35 ஆண்டுகளாக ஆண்ட மேற்குவங்கம் வரலாற்றில் என்றென்றும் போற்றப்படும். ஊழல் இல்லாத ஆட்சி நடத்துவது மட்டுமல்ல, ஊழலை ஒழிக்கவும் இடதுசாரிகளால் மட்டுமே முடியும்.

-ஆசிரியர் குழு

Pin It