ஒவ்வொரு புதிய அரசும், ஏராளமான புதிய வாய்ப்புகளைத் தன்னோடு கூடவே அள்ளிக் கொண்டு வருகிறது. பிரச்சனை என்னவென்றால். அரசாங்கம் அவர்களுக்குப் புதிது. அதனால், பழச னைத்தையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, எல்லாவற்றையும் புதிதாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறது. கற்றலின் வளர்ச்சிப் பாதையில் புதுசு புதுசாய்க் கற்றுக்கொள்ள விழைகிறது.

இந்த இரண்டு உண்மைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு சற்று முன்பாகவே, பதவியேற்றுக்கொண்ட பா.ச.க. அரசிற்கு, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை (அஜெண்டாவை) முன் வைக்கிறோம்.

முதலாவதாக, அரசு என்ன செய்யக் கூடாது என்பதைச் சொல்லலாம். ஒன்று, சுற்றுச்சூழல், காடுகள், கானுயிர்கள் ஆகியவற்றின் மீதான அக்கறையை, வளர்ச்சியின் பெயரால், புறந்தள்ளக் கூடாது. இப்படிச் சொல்வதனால், ஏதோ, இப்போதுள்ள சுற்றுச்சூழல் திட்டங்கள் எல்லாம், சிறப்பாகச் செயல்பட்டு வருகின்­றன என நாங்கள் நம்புகிறோம் என்று அர்த்தமில்லை. மாறாக, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், முழுமையான சீர்திருத்தங்கள் வரவேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். அதற்கு, தற்போதைய, ‘பல்முனை தடையில்லாச் சான்று (அனுமதி)’ முறையின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும்; அறதப் பழசான, கவைக்குதவாத சட்டங்கள் ஒழிக்கப் பட வேண்டும்; ஒழுங்காற்று முறைமைகள் செழுமையாக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, (பெரும்பாலான மக்களை) உள்ளடக்கிய வளர்ச்சிக்காக (Inclusive growth) அறிமுகப்­படுத்தப்பட்ட திட்டங்களைப் புதிய அரசு தூக்கியெறிந்துவிடக்கூடாது, என்றும் வேண்டுகிறோம். கிராமப்புற வேலைவாய்ப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம், குடியிருப்பு வீட்டு வசதி, சத்துணவு, நல்ல கல்வி போன்றவற்றுக்கான திட்டங்கள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவை இல்லாமல், ‘இந்தியா’ இல்லை.

ஆனால், அதே நேரத்தில். இத்திட்டங்களில் நல்ல விதமான மாற்றத்தை வேண்டுகிறோம். கிராமப்புற வேலைவாய்ப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம், குடியிருப்பு வீட்டு வசதி, சத்துணவு, நல்ல கல்வி போன்றவற்றுக்கான திட்டங்கள் அனைத்துமே மக்கள் எளிதில் பயனடையும் வகையில் அவர்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இந்தத் திட்டங்களைக் காகிதங்களில் உருவாக்குவதற்கு நாம் பெரும் நேரத்தைச் செலவழிக்கிறோம். அதைச் செழுமைப்படுத்த இன்னும் அதிகமான நேரத்தைச் செலவழிக்கிறோம். ஆனால் அது மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதை நாம் கவனப்படுத்துவதில்லை.

எந்த ஒரு திட்டமும் மக்களைச் சென்றடைய வேண்டு­மெனில், செயல் வெற்றியைக் கொணர்ந்த பழைய அரசாண்மை செயல்வழிகளை, அது கோருகிறது. அதாவது, தொடர்ச்சியான கண்காணிப்பும், நுட்பமானத் தகவல்கள் மீதான கவனக்குவிப்பையும் கோருகிறது. திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமெனில், அதிகமான அதிகாரங்களுடனும், நிதியாதாரங்கள் மற்றும் திட்டவடிவமைப்புகளின் மீது முழுக்கட்டுப்­பாட்டைச் செலுத்தும் வகையிலும் மாநிலங்கள் இருக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில், மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது. அதற்கான நிதியாதா­ரங்களை அளிக்கிறது. ஆனால், அதை நடைமுறைப்­படுத்திச் செயல்பட வைப்பதோ மாநில அரசுகள். இவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பு என்பது எப்போதும் இருப்பதே இல்லை. மாநில முதல்வர்கள் இந்தத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்க வைக்கப்பட வேண்டும். அவற்றின் வெற்றிக்கான பாராட்டுகளும் அல்லது குறைபாடுகளுக்கான விமர்சனங்களும் (போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்) மாநில முதல்வர் களையேச் சேர வேண்டும்.

மக்களின் விருப்புகள் நிறையவே மாறிவிட்டன என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களுக்குத் தேவைகளும் நிறையவே உள்ளன. அவர்கள் இன்னும் அதிகமாகப் பெறவேண்டும். வளர்ச்ச்சியின் பெயரால், சிறு மாற்­றங்களை மட்டும் அவர்களிடத்தில் ஏற்படுத்துவதோடு நின்று விடக் கூடாது. ஏனெனில், இதுவரை, ’வளர்ச்சி’ விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கே பெரும் பயனளித்து வந்திருக்கிறது.

புதிய பிரதம மந்திரி ஒன்றைச் மிகச் சரியாகவும். பிரபலமாகவும் சொன்னார்: “கோவில்களை விடவும் கழிவறைகள் முக்கியமானவை”.

இதுதான் புதிய அரசின் உண்மையான, உடனடி நிகழ்ச்சி நிரலாக (அஜண்டாவாக) இருக்க வேண்டும்.

நன்றி: ‘‘Down to Earth’ June 1-15 (2014)

ஆங்கிலம்வழிதமிழில்: சங்கர்

Pin It