small island

“நாங்கள் -ஏறிப் பிழைப்பதற்கு உயரமான மலைகள் இல்லை; ஓடுவதற்கும் எங்கள் தீவில் வேரிடமில்லை; ஏனெனில் எங்கள்தீவு சிறியது” என்ற துவாலுத் தீவு நாட்டு அதிபரின் உருக்கமான வேண்டுகோளுக்கு அச்சபையோர் செவிமடுக்கவில்லை. அது ஐநாவின் காலநிலை மாற்ற மாநாட்டுச் சபை. துவாலுத் தீவைப் போன்றே பூவுலகில் உள்ள அனைத்துக் குட்டித்தீவுகளும் பேரபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அவை கடல்மட்ட உயர்வால் மூழ்கும் தீவுகள். இதில் தமிழகமும் விதிவிலக்கல்ல...

புவிவெப்பமடைதல்- காரணமும் விளைவுகளும்:

நான்கரை இலக்க ஆண்டுகளில் இல்லாத அளவிலான கரிக்காற்றை, கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகதொழிற்சாலைகள் வளிமண்டலத்தில் உமிழ்ந்துவருகிறது. இன்றைய நவீன காலத்தின் பொருளுற்பத்திமுறைக்கு முக்கியப் பங்களிப்பு செய்கிற நிலக்கரி,கச்சாஎண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருட்களை, உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுத்தப்படும்போது அதிக அளவிலான பசுமைக் குடில்வாயுக்களை (கார்பன் டை ஆக்சைடு (கரிக்காற்று) மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள்)வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. அதாவது ஆண்டுக்குகிட்டத்தட்ட ஏழு கோடிடன் என்ற அளவில்! மற்றொருபுறமோ இப்பசுமைக்குடில் வாயுக்களை உறிஞ்சும்ஆற்றல் கொண்ட மழைக்காடுகள் வர்த்தக லாபத்திற்காகவேகமாக அழிக்கப்பட்டு வருவது சிக்கலை இரட்டிப்பாக்குகிறது.

வளிமண்டலத்தின்மீதான அபரிவிதமான பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வால், பசுமைக்குடில் அடுக்கானது அதிக அளவிளான சூரிய வெப்பக்கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பத் தொடங்குகிறது. இதனால் புவியின் சராசரி வெப்பநிலை, நாளுக்குநாள் உயர்வதோடு வளி மண்டலத்தின் தட்பவெட்ப சமநிலையைச் சீர்குலைய வைக்கிறது. இதன் காரணமாக தற்போது புவியின் வெப்பநிலை 0.8 பாகை (செல்சியஸ்) அதிகரித்துள்ளதாகத் தோராயமாக கணிக்கப் பட்டுள்ளது.

இதன் விளைவாக உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் பனிப் பாறைகள், அண்டார்க் டிக்காவின் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது. 1993ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு 3 மில்லி மீட்டர் அளவாக கடல்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது. இதன் வீதம் அனுதினமும் அதிகரித்துவருகிறது. இவ்வீதம் ஆண்டுக்கு 7 செ.மீ லிருந்து 13 செ.மீட்டர்வரை இருக்கலாம் என விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பனிப்பாள ஆய்வாளர் கார்ல்சன் தெரிவிக்கிறார். கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் மட்டும் உருகினாலே ஒட்டுமொத்த அளவில் கடலின் நீர்மட்டம் இருபத்தி ஏழு மீட்டருக்கு உயர்ந்துவிடும். கடல்மட்டமானது குறைந்தபட்சம் ஒருமீட்டர் அல்லது இரண்டு மீட்டர் உயர நேர்ந்தால், ஆசிய நாடுகளான வியட்நாம், வங்காளதேசம் மற்றும் பிற தீவுநாடுகளில் வாழும் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் அழிவுகளைச் சந்திப்பார்கள். இந்நிலையில், காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சதவீதத்தைக் காட்டிலும் அதிவேகமாக கடல்மட்டம் உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாநாடும் மூழ்கும் தீவுகளும்:

2009ஆம் ஆண்டு பூவுலகை அழிவிலிருந்து காத்து விடப் போவதாகக் கூறிக்கொண்டு ஆண்டுகொரு முறை கூடிப் பேசிக்கொள்கிற ஐநாவின் காலநிலை மாற்ற மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. வழக்கம் போல காலநிலை மாற்றச் சிக்கலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை சந்தையின் பங்கு பாத்திரம் குறித்து தீவிரமாக அம்மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டது. அதாவது சூழலை அழிப்பவர்களிடமே பூவுலகைக் காப்பதற்கான கடமையைக் கையளிக்கும் வகையிலான கார்பன் வர்த்தகத் திட்டம் எனும் “மரணச் சந்தை” குறித்து உரையாடல்கள் மாநாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்தன. அச்சபையில், துவாலுத் தீவு அதிபர் விடுத்த செய்தியானது அத்தீவில் வசிக்கும் பனிரெண்டாயிரம் மக்களின் மரண ஓலமாகத் தனித்து ஓர் ஓரமாக ஒலித்தது. இத்தீவுவாசிகள் மட்டுமல்ல எஞ்சிய நிலப்பரப்பு முழுமைக்கும் வரவிருக்கிற பேரபாயத்தைக் காக்கும் வகையிலான தீர்மான கரமான முடிவை அவர்களால் ஒருபோதும் எடுக்கவே இயலாது என்பதை அக்குட்டித்தீவின் அதிபர் உணரவில்லை. உலக மக்களின் அபயக்­குரல் அவர்களுக்கொரு பொருட்டல்ல என்பதை ஒவ்­வொரு காலநிலை மாநாட்டு முடிவுகளும் அறிவிப்பது போல கோபன்ஹேகனில் மாநாட்டு முடிவும் அறிவித்தது! அம்முடிவானது காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு அவர்கள் லாயக்கற்றவர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்ததோடு உலகின் ஒட்டுமொத்தத் தீவு நாடுகளில் வசிக்கும் மக்களுக்கான மரண சாசன மாகவும் அமைந்தது!

வேகமடைந்துவரும், உலகின் கடல்மட்ட உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டு வீதத்தைக் குறைத்து, புவி வெப்பமடைதலைத்தடுக்க வேண்டும். தற்போது உலகின் வெப்பநிலை, தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் 0.8 பாகையாக உயர்ந்திருக்கிறது. கோபன்ஹேகன் மாநாட்டிலோ உலகின் வெப்ப நிலையை அதிகபட்சமாக இரு பாகை வரை உயர அனுமதித்து அதற்குமேல் மிகாதவாறு வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற முடிவு எட்டப் பட்டது. ஆனால் துவாலுத் தீவின் அறிவியலாளர்களோ, உலகின் வெப்பநிலை 1.5 பாகை என்றளவில் உயர்ந்தாலே (அதனால் ஏற்படும் கடல்மட்ட உயர்வால்) தங்கள் நாடு மூழ்கிப்போகும் என்று தங்களின் ஆய்வு முடிவை முன்வைத்து விளக்குகின்றனர். இப்பேரபாயத்தை கோபன்ஹேகன் மாநாட்டில் சுட்டிக்காட்டிப் பேசிய அந்நாட்டு அதிபரின் குரலானது, காலநிலை மாற்ற அரசியலுக்குப் பின்னாலுள்ள கார்பன் வணிகச் சந்தை ஏற்பாட்டுக்கு முன்னால் ஏதுமற்றதாகிப்போனது. துவாலுவ நாட்டின் அச்சம் போலவே பிஜி, சாலமன், மார்சல் தீவுகளைச் சேர்ந்த அரசுகளும் அம்மாநாட்டில் புவி வெப்பமயமாக்கலைக் கட்டுப்படுத்தும் வகையிலான தீர்மானகரமான முடிவை எட்ட வலியிறுத்தி தோல்வி யுற்றிருந்தனர்.

புவி வெப்பமயமாக்கலை 1.5 பாகைக்குள் கட்டுப்படுத்தி தங்கள் தீவுகளைக் காக்க முன்வரவேண் டும் என வளர்ந்த, வளரும் முதலாளிய நாடுகளிடம் முன்வைக்கப்பட்ட உருக்கமான வேண்டுகோள்கள் வளர்ந்த முதலாம் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கவில்லை. மாறாக அடுத்த ஆண்டு (2010) கான்குனில் நடைபெற்ற ஐநாவின் காலநிலை மாற்ற மாநாடு எனும் கார்பன் வணிகச் சந்தை மாநாட்டில், குட்டித்தீவு நாடுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பூவுலகையே வர்த்தக லாபத்திற்காக பலிகொடுக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தனர். அதாவது காலநிலை மாற்றச் சிக்கலை நாம் தடுக்க முடியாது. அதற்குத் தகுந்தவாறு உலக மக்கள் தகவமைத்துக்கொள்ள வேண்டும் (Ada ptive) என்ற அதி உன்னத நிலைப்பாடை எடுத்தார்கள். (வெப்பநிலை உயர்வை இரு பாகைக்குள் வைக்க வேண்டும் என்ற வாதமும் காலவாதியாகி விட்டது) அதாவது காலநிலை மாற்றச் சிக்கலுக்கான காரணத்தை ஆராயாமலும் அதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்காமலும் பேரிடர் வந்த பிற்பாடு எப்படி நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் போடுவது முரணின் உச்சமாக நாம் காணவேண்டியுள்ளது. ஒப்பில்லா இத்தகவமைப்புத் தீர்வைத்தான் உலகின் புதிய ஒழுங்கான உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியமானது அனைத்து நாடுகளுக்கும் வழங்குகிறது. இந்நிலையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இத்தக வமைப்புத் தீர்வைச் சுற்ற றிக்கையாக நடுவண் அரசு அனுப்பியுள்ளது.

கடல்மட்ட உயர்வால் மூழ்கும் தமிழகத் தீவுகள்:

மன்னார் வளைகுடா...! தனித்துவமிக்க சூழல் மண் டலங்களைக் கொண்ட ஓர் அற்புதமான உயிர்ச்சூழல் அமைவாகும். பவளப்பாறைகள், அலையாத்திகள், கடற்புல்வெளிகள், வண்ண மீனினங்கள், மெல்லுடலிகள், நண்டுகள், கடற்பாசிகள் எனப் பல அறிய உயிரினங் களின் புகலிடமாக மன்னார் வளைகுடா திகழ்கிறது. இக்கடல்சார் உயிர்ச்சூழலில், இருபத்தியரு தீவுகள் உள்ளன.அவைவான்தீவு, காசுவார்தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லித் தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினி சல்லி தீவு, நல்ல தண்ணித் தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழைத் தீவு, முள்ளித் தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல்தீவு, குருசடைத் தீவு, சிங்களத் தீவு, கச்சத்தீவு என இவ்வனைத்து இருபத்தியரு தீவுக்கூட்டங்களும் தூத்துக்குடி நகருக்கு வடகிழக்காக அமைந்துள்ளது. அதாவது, பாம்பனுக்கும் தூத்துக்குடிக் கும் இடையில், வடக்கு நில நேர்க்கோடு 8047,’ கிழக்குநில நிரைக் கோடு 780 12’ மற்றும் வடக்கு நில நேர்க்கோடு 90 15’, கிழக்குநில நிரைக்கோடு 790 14,’ என்னும் ஆள்கூறுகளால் குறிக்கப்படும் இடத்தில் இத்தீவுகூட்டங்கள் அமைத்துள்ளன. பத்தாயிரத்து ஐந்நூறு சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இவ்வுயிர்ச்சூழலில் இதுவரை மூவாயிரத்து அறுநூறு உயிரினங்கள் அடையாளங்காணப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பவளப்பாறைகள் சூழ்ந்த மன்னார் வளைகுடா பகுதி யானது ஆச்சரியமளிக்கும் வகையில் பல்வேறுபட்ட தாவர விலங்கினங்களைக் கொண்டி­ருக்கிறது. இங்கு மட்டுமே நூற்றி ஐம்பது வகைக்கும் மேற்மேட்ட கடற் பாசிகள் உள்ளன. மேலும் இங்குள்ள பவளப்பாறை களானது கடல்சார் உயிரினங்களின் உணவுச்சங்கிலியில் முக்கியப் பங்களிப்புச் செய்கிறது. மேலும் இவை ஆழிப் பேரலை போன்ற இயற்கைப் பேரிடரைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. செறிவுமிக்க கடல்சார் உயிரி னங்களைக்கொண்ட இவ்வுயிர்ச்சூழலை 1980ஆம் ஆண்டில், பாது­காக்கப்பட்ட கடல்சார் உயிரின தேசியப் பூங்காவாக நடுவண் அரசு அறிவித்தது. இந்நிலையில் வேகமாக அதிகரித்துவரும் மனிதர்களின் உள்ளீட்டால், குறிப்பாக ஏற்றுமதி சார்ந்த கள்ள வர்த்தக வணிகத்தால் மோசமான கடல்வள அழிவை இதுகாறும் இப்பகுதி எதிர்கொண்டு வந்தது. இச்சிக்க லோடு தற்போது மற்று மொரு ஆபத்தும் சேர்ந்துள்ளது. அது புவிவெப்ப மடைதல் எனும் பெரும் அச்சுறுத்தல்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக உலகின் வெப்பநிலை கிட்டத்தட்ட 1.5 பாகையிலிருந்து 5.8 பாகைவரை அதிகரிக்கலாம் என்றும் இதனால் கடல் நீர் மட்டமானது 0.9 மீட்டர் வரை உயரலாம் என்றும் காலநிலை மாற்றத்திற்கான பான்னாட்டு அரசுக்குழுவில் (IPCC) ஆய்வறிக்கை தெருவிக்கிறது. இதன் விளைவை சமீபத்தில் தமிழகமும் எதிர்கொண்டது. மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள இருபத்தியரு தீவுகளில் பூவரசன்பட்டித் தீவும் விலங்குசல்லித் தீவும் கடல்நீர் மட்டஉயர்வால் மூழ்கிவிட்டதை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஜோன்ஸ் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இதே வீதத்தில் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருமானால் மீதமுள்ள பத்தொன்பது தீவுகளும் மூழ்குவதோடு பழவேற்காடு கடற்கரை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரை கிராமங்கள், நகரங்கள், துறைமுகங்களும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இத்தகைய அச்சுறுத்தலோடு மட்டும் இச்சிக்கல் நம்மை விடப்போவதில்லை. புவிவெப்பமாதலின் விளைவால் ஆயிரத்து நூறு கி.மீ நீளமுள்ள தமிழகக் கடல் வெளியானது, கடும் நெருக்கடியைச் சந்திக்கிறது. முன்னதாக வளிமண்டலத்தில் உமிழப்பட்டுள்ள அளவுக்கதிகமான கரிக்காற்றானது கடல் நீரோடு கரைகிறது. இது கடல் நீரின் அமிலப் பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி கடல் நீரை அமிலத் தன்மை அடையச்செய்கிறது. இதன் காரணமாக பவளப் பாறைகள் மற்றும் கடல் பாசிகள் பாதிப்பிற்குள்ளாகி செத்து மடிகின்றன. மேலும் கடல் உயிரியலில் பவளப்பாறைகளின் அழிவும் கடற்பாசி களின் அழிவும் ஈடுசெய்ய முடியாத விளைவுகளை கடலில் ஏற்படுத்துகின்றன. கடற்பாசிகளை உணவாகக் கொண்ட நுண்ணுயிர்களின் அழிவுக்கும், ஏனைய உயிரினங்களின் வீழ்ச்சிக்கும் இவை வித்திடுகின்றன. கடல்சார் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் முக்கிய கண்ணி அறுபட்டு கடல் வளம் உருக்குலைந்து சிதைந்து போகிறது. இது கடலையே நம்பி பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நெய்தல் நில மக்களுக்குப் பேரதிர்ச்சி தரும் செய்தியாகும்.

தீவுகளும் பல்லுயிரியமும்:

உலக மக்கள் தொகையில் அறுபது கோடி மக்கள் தீவுகளிலேயே வாழ்கின்றனர். அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பத்தில் ஒரு விழுக்காட்டினர் தீவுகளில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தீவுவாசிகளும் தங்களுக்கே உரித்தான தனித்துவமிக்க பண்பாட்டு அசைவுகளைக் கொண்டுள்ளனர். அம்மக்களின் பொருளாதார வளர்ச்சிப்போக்கு, பண்பாட்டு இயக்கத்

தன்மைக்கு அத்தீவுகளின் இயற்கை வளங்களே பெரிதும் காரணமாக அமைகின்றன. தீவுகளானது பல்வகைப்பட்ட நிலத்திணைகளை தன்னகத்தே ஒருங்கே கொண்டுள்ளது. மழைக்காடுகள், சதுப்புநிலங்கள், சமவெளிகள் எனப் பல சூழல் மண்டலங்கள் தீவுகளில் உள்ளன. இதுவே அத்தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, நன்னீர், விறகு, மருந்து, கருவிகள் இன்ன பிற பொருட்களை வழங்குகிறது. மேலும் இதுவே அவர்களின் கல்வி, பொருளாதார, பண்பாட்டு மதிப்புகளின் ஆதாரமாகவும் திகழ்கிறது. தீவுகளின் சூழல் மண்டலங்கள் பல வகைகளில் தீவுவாசிகளுக்கு உதவுகின்றன. குறிப்பாக இயற்கைப் பேரிடர் சமயத்தில் இவை அரணாக நின்று தீவைக் காக்கின்றன, உயிர்ச் சத்தின் சுழற்சிக்கும் மண்வள சுழற்சிக்கும் இவை ஆதார மாக உள்ளன. மேலும் பருவநிலையின் சமநிலைத் தன்மைக்கு இவை பெரும்பங்களிப்புச் செய்கின்றன. வளர்ந்துவரும் சிறிய தீவு நாடுகளின் பொருளாதாரமானது பெரும்பாலும் ஆட்டம் கொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில் மாற்றுப் பொருளாதார வாய்ப்பில் பின்தங்கியுள்ள காரணத்தால், இப்பொருளாதார ஊடாட்டத்தை இத்தீவு நாடுகள் சந்திக்க நேருகின்றன.

இறுதி வாய்ப்பு:

கடல் நீர் மட்ட உயர்வின் விளைவுகளைச் சிறுதீவு வாசிகளே முதலில் எதிர்கொள்கின்றனர். பசிபிக் கடலில் மூழ்கிவரும் தீவுகளை தற்போது சர்வதேச சமூகம் கவனிக்கத் தொடங்கியுள்ளது. புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஆய்வு முடிவானது, புவிவெப்பமாதல் சிக்கலால் நூறு கோடி மக்கள் இந்நூற்றாண்டின் மத்தியில் இடம்பெயர்வார்கள் என்று அவதானிக்கிறது. இதைக் கண்கூடாக நாம் இன்று பார்த்துவருகிறோம். உதாரணமாக கடல் நீர்மட்ட உயர்வின் விளைவால், 2008ஆம் ஆண்டில் பல கோடி ருபாய் செலவில் கார்டீட் தீவுவாசிகளை அந்நாட்டு அரசு பௌகைன்விளிக்கு இடம் பெயரச்செய்ததை குறிப்பிடலாம். பெரும்பாலும் வளர்ந்த முதலாம் உலக நாடுகள், மூழ்கும் நிலையுள்ள அரிகிலுள்ள குட்டித்தீவு

வாசிகளுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கிறது. புவிவெப்பமாதல் சிக்கலைச் சூழலிய சிக்கல் என்று சுருக்க முடியாது. அது ஒரு பெரும் சமூகச் சிக்கல். இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த பூவுலகின் உயிர்ப் பிழைப்பையே அது கேள்விக்குட்படுத்தியுள்ள சிக்கல்.

தரவுகள்:

An assessment of Island Biodiversity in Gulf of Mannaar,,Southeast coast of India”-T.Vaitheeswaran

http://climateandcapitalism.com/2008/09/05/sea-level-will-risefaster-than-predicted/

http://climateandcapitalism.com/2010/01/27/ a-death-sentence-forpacific-islanders/

நிகழ்காலம், -பொன்.தனசேகரன், கார்த்திலியா பதிப்பு, மார்ச்-2014

Pin It