பூக்களின் உலகம் அழகானது. பட்டாம் பூச்சிகளின் அழகு விந்தையானது. பறவைகளும் கவர்ச்சியானவை. இந்த வரிசையில் மீன்களின் உலகமும் அலாதியானது. பவளப்புற்றுப் பகுதிகளில் கடற்பாசிகள் அழகு கூட்டுகின்றன. பலவண்ண மீன்கள் அணியணியாய் பவளப்புற்றுகளினூடே துடுப்பசைத்து நீந்திச் செல்கையில் உலகின் வனப்புமிகுந்த ரோஜாத் தோட்டம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கடல் சூழல் அற்புதமானது. மீன்களின் உலகத்தில் சிறுபயணம் போகலாம் வாருங்கள்.
பரிணாமத்தின்போது இயற்கை மும்முறையாவது இறக்கைகளை பிறப்பித்திருக்கிறது. பூச்சிகள் (தாம்) முதன்முதலில் இறக்கையுடன் பறக்கத் துவங்கின. பல இலட்சம் வருடங்களுக்குப் பிறகுதான் பறவைகள் தோன்றின. இறகுகள் பறவைகளுக்கே உரியவை. மூன்றாவது முறையாக பாலூட்டிகள் (வெளவால்கள்) பறக்கத் துவங்கின. அனால் இறக்கைகளில்லாமல். புஜம், முழங்கை, கை இவற்றுக்கிடையில் அமைந்த ஜவ்வுதான் பறப்பதன் உபகரணம். ஆகாயத்தில் காற்றைப் பின் தள்ளிப் பறக்கலாம். கடலிலும் நன்னீர்ப் பறவைகளிலும் நீரைப் பின்தள்ளி முன்னேறலாம். இதன் பெயர் நீச்சல். தவளைகள் தாவும், பல்லிகள் ஊர்ந்து போகும். பூனையும் மனிதனும் நடப்பவை. பறவைகள் நடக்கும், நீந்தும், பறக்கும். மீன்கள் நீந்தும். இவை எல்லாமே முதுகெலும்பிகள், நாற்காலிகள். நகர்தலுக்காக, சூழலுக்கேற்ப, வாழிடத்துக்கேற்ப நான்கு கால்களும் தகவமைத்துள்ளன.
மீன்களின் துடுப்பும் பறவைகளின் இறக்கையும் மனிதனின் கைகளும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. இயற்கைச் சிற்பி வடிவமைத்த அற்புத உறுப்புகள்! மீன்களின் உடலை மூடிப் பொதித்து பாதுகாக்கச் செதில்கள் உள்ளன. பறவைகளுக்கு இறகுகள், மனிதனுக்கு உரோமம். ஆதி மனிதனின் உடல் முழுவதும் உரோமமிருந்தது. நாகரிக மனிதன் உடைகளுக்குப் பழகிய பிறகு உரோமம் அழகு சார்ந்த விஷயமாகவும் கருதப்பட்டது. இமைகளிலும், நாசித்துளைகளிலும் மயிநீட்சியின் தேவை இன்னும் உணரப்படுகிறது. பாலின வேறுபாட்டைக் காட்டி இருதரப்புக் கவர்ச்சியை ஏற்படுத்துவதிலும் மயிர் வளர்ச்சிக்கு முக்கிய பங்குண்டு.
பூமிப்பரப்பில் எல்லாவுயிர்களுமே உறவுக்காரர்கள். மனிதனும் பாக்டீரியாவும் தூரத்துச் சொந்தம். தூரம் கொஞ்சம் அதிகம். மனிதனும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்; ரத்த சம்மந்தம். குரங்குகள் மனிதனின் முன்னோர் அல்ல. குரங்கும் மனிதனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்! இரத்த வெதுவெதுப்பு என்றால் உங்களுக்குப் புரியும். உங்களுக்கும் எனக்கும் பறவைக்கும் காயம்பட்டால் சிந்தும் குருதியில் வெதுவெதுப்பு இருக்கும். பாம்பு, பல்லி, தவளை, மீன் இவற்றின் இரத்தத்தில் இந்த வெதுவெதுப்பு கிடையாது. மேனாட்டினர் குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள். அன்பைப் பரிமாறிக்கொள் வெதுவெதுப்பைப் பகிர்வதாய்ச் சொல்வார்கள். நீதான் என் வாழ்க்கையில் எல்லாமே என்பதற்குப் பதிலாக என் வாழ்க்கையின் சூரிய வெளிச்சம் நீதான்’ என்பார்கள்.
உடல் வெதுவெதுப்பை இழந்துவிட்டால் சடலம். ‘கொடூரமான கொலை’என்பதை ஆங்கிலம் பேசுபவர்கள் ‘குளிர்க் குருதிக் கொலை என்பார்கள். உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை; நிறைய சக்தி செலவாகும். உடல் வெப்பநிலையைச் சூழலே கட்டுப்படுத்த அனுமதித்துவிட்டால் சிரமமில்லை. சக்தி மிச்சமாகும். மேனாட்டினரின் உணவில் பெரும்பகுதி உடல் வளர்ச்சிக்குப் போகிறது. வெப்பப் பிரதேசத்தில் வாழும் நமக்கு உடல் வெப்பத்தை சீர்படுத்துவதிலேயே அதிக சக்தி (சத்து) கரைந்துவிடுகிறது. பிரதமான வெப்பநிலையில் உழைப்பும் உற்பத்தியும் அதிகமாகவே இருக்கும். கதை எழுதுபவர்களும் கலைஞர்களும் கோடை ஓய்விடங்களைத் தேடிச் செல்வதன் இரகசியம் வேறொன்றுமில்லை. வெப்ப இரத்த விலங்குகளினுடையதைவிட குளிர் இரத்த விலங்குகளின் இறைச்சி ஆரோக்கியமானது. பாதுகாப்பானது. தொகுப்பு குறைந்தது. நீர்வாழ் உயிரினங்களை கடலிலும் நன்னீரிலும் கிடைக்கும் மீன் முதலிய விலங்குகளை நாம் விரும்பி உண்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
மீன் என்றால் என்ன? அடிப்படையில் மீன் நீர்வாழ் உயிரினம். உயிரியல் அடிப்படையில் வரையறுத்துச் சொல்வதானால் செதில்களால் மூடப்பெற்று செவுள்களால் மூச்சுவிடுகிற, துடுப்புக்கொண்ட, நீர்வாழ் குளிர் இரத்த முதுகெலும்பி வணிக நோக்கில் நீர்நிலைகளிலிருந்து கிடைக்கப்பெறும் எல்லா விலங்கு உயிரினங்களையும் மீன் என்கிறார்கள். இரால், நண்டு போன்றவை கணுக்காலிகள்; கணவாய் மெல்லுடலி; கடல் அட்டை முட்தோலி; ஆமைகள் ஊர்வன; டால்பின், திமிங்கிலம் போன்றவை பாலூட்டிகள் (குட்டிகளை ஈன்று தரும்) நுரையீரலால் காற்றைச் சுவாசிப்பவை. எத்தனை ஆழத்தில் நீந்தினாலும் உயிர்க்காற்றைப் பெற நீர்ப்பரப்புக்கு மேல் அவ்வப்போது தலைகாட்டியாக வேண்டும்!
மீன்கள் பல நூறுவகைப்பட்டவை. வடிவிலும் அளவிலும் உணவு முறையிலும் மாறுபட்டவை. லாம்ப்ரே போன்ற மீன்கள் தாடையில்லாதவை. உணவைக் கவ்விக் கடித்து மென்று அரைத்து உண்ணத் தாடையும் பற்களும் தேவை. வேட்டையாடும் விலங்குகளைப் பொறுத்தவரை தாடைகள் என்பவை Ôஅசையும் சொத்து’ சுறா, திருக்கை இனங்கள் குருத்தெலும்பிகள். சில மீன்கள் செதிலற்றவை. உலகில் 29,400 மீனினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏராளம் மீன்களை இனிதான் அடையாளப்படுத்த வேண்டும். உலகின் மொத்த நீர்ப்பரப்பில் 0.01 விழுக்காடுதான் (ஆயிரத்தில் ஒருபகுதி) நன்னீர். ஆனால் மீனினங்களில் 40 விழுக்காடு இங்குதான் வாழ்கின்றன. இந்தியாவில் வாழும் 2500 மீனினங்களில் 930 இனங்கள் நதிகள், ஏரி, குளங்களில் வாழ்பவை இவற்றில் 350 இனங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
மீன் ஒரு குளிர் இரத்தப் பிராணி. சில விதிவிலக்குகளும் உண்டு. சில சூரை இனங்கள், சில சுறா இனங்கள், பட்டாம்பூச்சி அயிலை போன்றவை மீன்கள் நீர்வாழ்வன. நீண்ட நேரம் நீருக்கு வெளியே உயிரிடனிருக்கும் சில மீன்களும் உண்டு. மரமேறும் பெர்ச் மீன் ஒரு உதாரணம். இவை தரைக்கு வருகையில் தவளையைப் போன்று தோலால் மூச்சுவிடும், உணவுப் பாதையுடன் இணைந்திருக்கும் சவ்வுப் பைகளில் காற்றை இழுத்தும் மூச்சுவிடும்.
சாதாரண மீன்கள் ஒலி எழுப்புவதில்லை. சையானிடே குடும்பத்தைச் சார்ந்த மத்தள மீன் ஒலி எழுப்பும். மீன்களின் கேள்வித் திறன் இனத்திற்கு இனம் மாறுபடுகிறது. நீச்சல் பைகள் (காற்றுப் பைகள்) சில இனங்களில் கேள்விப் புலனுக்கு உதவுகின்றன. கடலின் ஆழத்தில் 700 மீட்டருக்கு கீழே வெளிச்சம் துப்புரவாக இராது. இங்கு வாகும் பெருமளவு மீன்களும் ஒலி உமிழ்பவை. ஒளி உமிழும் செல்களினால் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இரைகளை கவர்ந்திழுக்க, இணைகளை அழைக்க... இப்படி நிறைய நோக்கங்களை இந்த ஒளிரும் செல்கள் நிறைவேற்றுகின்றன. மீன்களால் ஒலி, ஒளி மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதல்ல. தென் அமெரிக்காவில் கத்தி மீன்களும் ஆப்பிரிக்காவில் யானை மீன்களும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. 20 முதல் 600 வோல்ட் மின்னழுத்தம் வரை Ôநான் அடிச்சா தாங்கமாட்ட, வீடு போயி சேரமாட்ட’ என்று எதிரிகளை எச்சரிப்பதற்கும் இரைகளை இமைப்பொழுதில் லபக்கென்று விழுங்குவதற்கும்தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்!
இனப்பெருக்கம் செய்வதில் கில்லாடி மீன் ஹில்ஷா. இருபது சென்டிமீட்டர் நீளம் கொண்ட ஹில்ஷா மீன் பதினாறு இலட்சம் முட்டைகளை ஏக காலத்தில் இட்டுத்தள்ளும். குஞ்சுகளை பேணுவதில் 25 விழுக்காடு மீன் இனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன. குஞ்சு மீன்களைப் பேணுவதில் தந்தை மீன்கள்தாம் பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன.
பூக்களும் பட்டாம்பூச்சிகளும் நிலத்தில் அழகு சேர்ப்பதுபோல் கடலில் மீன்கள் அழகு கூட்டுகின்றன. பவளப்புற்றுகள் இயல்பான நிறம் சூசாந்தெல்லே என்றும் பாசிகளால் உருவாகின்றன. இங்குள் கர்தினால் மீன், தூண்டில் மீன், பட்டாம்பூச்சி மீன், கிளிமீன், டாம்செல், ராஸ் மீன்கள் எல்லாமே பிரகாசமான நிறங்கள் கொண்டவை. பாதுகாப்பு மற்றும் இரைதேடும் காரணங்களுக்காக மீன்களின் முதுகுப் பகுதியில் பிரகாசமான நிறமும் அடிப்பகுதியில் வெளிறிய நிறமும் கொண்டிருக்கும். மீனை மேலிருந்து பார்த்தால் ஆழக்கடலின் இருண்ட நிறத்தோடு பொருந்தும், கீழிருந்து பார்த்தால் மேற்கடலின் வெளிறிய நிறத்தோடு பொருந்தும்.
கிரேட் பாரியர் ரீஃப் பகுதியில் வாழும் குண்டுப் பாப்பா மீன்தான் (ஷிண்ட்லேரியா ப்ரெவிபிங்குயிஸ்) உலகிலேயே மிகச்சிறிய மீன்வகை. பருவ வயதில் இதன் அதிகபட்ச நீளம் ஏழே மில்லி மீட்டர். மிகக் குறைந்த ஆயுசுள்ள மீன் பவளப்புற்றுகளில் வாழும் மிக்மி கோபி. வெறும் 59 நாள் ஆயுள். இந்தோனேசிய பசிபிக் பாய்மீன் (இஸ்டியோஃபோரஸ் ப்ளாடிடீரஸ்) நீச்சலில் அதிவேகம் காட்டுகிறத. மணிக்கு 110 கிலோ மீட்டர்! ரிங்க்கோடோன் டைபஸ் என்னும் திமிங்கல சுறாக்கள் குருத்தெலும்பி வகையில் நீளமானவை. 18 மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. முதுகுநாண் உள்ளவற்றில் நீளமான இனம் துடுப்பு மீன் (ரெகாவிகஸ் க்ளெனே) 17 மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. எடை அடிப்படையில் சூரிய மீனுக்கு தான் (மோலா மோலா) முதலிடம். 2300 கிலோ!
இராட்சத ஆக்டோபஸ்கள் 5 மீட்டர் வரை வளர்கின்றன. அதிகபட்ச எடை 34 கிலோ. பழங்கதைகளில் வருவதுபோல் இவை இராட்சதத் தன்மை கொண்டவையல்ல. மென்மையானவை. வெட்கி, அஞ்சி ஒதுங்குபவை. சில இராட்சதக் கணவாய் மீன்கள் சுமார் 20 மீட்டர் நீளமும் (ஆறு வழிச்சாலையின் அகலம்) 1000 கிலோ எடையும் கொண்டவை. முதுகு நாணற்ற கடல் இனங்களில் பெரிது இதுதான். ஆம் கடலின் பாதாளங்களிலும் சில மீன்கள் வாழ்கின்றன. கஸ்க் ஈல் எனப்படும் மீனை 8,370 மீட்டர் ஆழமுள்ள போர்டோ ரிகோ கடற் பாதாளத்தில் பிடித்துள்ளனர். பாதாளக் கடலின் விசேஷம் என்ன? காரிருள், பிராணவாயு பற்றாக்குறை,
உணவு பஞ்சம், உயர் அழுத்தம் கடுங்குளிர் இவைதான் அங்குள்ள தனித்துவமான சூழல். கடலில் ஆழத்துக்குப் போகப் போக அழுத்தம் அதிகரிக்கும் காற்று மண்டலத்தின் அழுத்தம் கடல்மட்டத்தில் ஒரு அலகு என்று எடுத்துக் கொண்டால் பத்து மீட்டர் ஆழத்துக்கு ஒரு அலகு அழுத்தம் அதிகரிக்கும். எட்டாயிரம் மீட்டர் ஆழம் என்றால் எண்ணூறு மடங்கு அழுத்தம்! மீன்கள் பொதுவாக புரதம் மிகுந்தவை கொழுப்பு குறைந்தவை. ஆனால் மேற்கடலில் (கரைகடலில்) வாழும் சார்டின் (சாளை) எரிங் போன்ற இனங்களில் கொழுப்பு அதிகம். மீன் கொழுப்புகள் அபாயம் குறைந்தவை மட்டுமல்ல, பிற கொழுப்புகள் ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்கவல்லவை. ஒமேகா- 3- கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது.
உலக அளவில் மீன் சாப்பிடுபவர்களில் இதய நோய் பாதிப்பு குறைவுதான். ஸ்டர்ஜன் மதிப்பு கூட்டிய மீன் பண்டத்துக்கு கவியார் (caviar) என்று பெயர் உலக அளவில் விலையுயர்ந்த உணவு இததான். ஒரு கிலோ கவியாரின் மதிப்பு 700 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் 35,000-. ஈரான்தான் கவியாரை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. இதற்கு அடுத்தபடியாக வரும் மீன் பதார்த்தம் சுறா துடுப்பின் நார்ப் பொருளிலிருந்து தயாராகும் சூப். பாடம் செய்த சுறாத் துடுப்பின் நார்கள் (இழைகள்) ஒரு கிலோ முப்பதாயிரம் ரூபாய் வரை பெறும். சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளில் இதற்கு ஏக கிராக்கி, இரால், நண்டு தோடுகளிலிருந்து பெறப்படும் கைடின், கைடோசான், க்ளுகோஸமைன் ஆகிய மூன்று பொருட்களுக்கும் ஏராளம் ஆனவப் பயன்பாடும் மருத்துவப் பயன்பாடும் உண்டு.
மீன்களில் காற்றுப் பைகளும் உண்டு. நன்னீர் மீன்களின் உடலளவில் ஏழு விழுக்காடு அளவும், கடல் மீன்களுக்கு ஐந்து விழுக்காடு அளவும் காற்றுப் பைகள். இஸின் கிளாஸ் என்னும் பொருள் இதிலிருந்து கிடைக்கிறது. பீர் மதுபானத்தைத் தூய்மைப்படுத்த இஸின் கிளாஸ் பயன்படுகிறது. பாகவத புராணம் திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றாக மச்சாவதாரத்தைக் குறிப்பிடுகிறது. (மச்சம்=மீன்) மனுவையும் ஏழு முனிவர்களையும் காக்க திருமால் மீனாக அவதரித்ததாக பாகவதம் சொல்கிறது. இராட்சத பல்லி இனங்களான டைனோசர்களின் தோற்றத்துக்கு ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே மீன்கள் தோன்றியிருக்க வேண்டும்.
லாடிமேரியா சலும்னி என்கிற வாழும் தொல்லியிரினத்தை முதன்முதலாக 1938இல்தான் கண்டுபிடித்தனர். தென் ஆப்பிரிக்காவின் சலும்னா ஆற்றின் முகத்துவாரத்தில் கிடைத்த இந்த மீனுக்கு ஏராளம் சிறப்புகள் உண்டு. தோடு போன்ற செதில்களுக்குப் பதிலாக கவசம், தரையில் ஊர்ந்து செல்ல உதவும் துடுப்புகள், காற்றைச் சுவாசிப்பதற்கான பைகள்... தரைவாழ், முதுகு நாண் விலங்குகளின் முன்னோர்கள் மீன்கள்தாம் என்பதற்கான ஆதாரங்களில் இவை முக்கியமானவை.
நானூற்று அறுபது கோடி ஆண்டுகளில் (பூமிப்பந்தின் வயது) பல்வேறு தருணங்களில் கட்டுப்பாடற்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொன்மையான உயிரினங்கள் பூண்டோடு அழிந்திருக்கின்றன. இராட்சதப் பல்லிகளின் அழிவு ஒரு உதாரணம். இயற்கைப் பேரிடரின் விளைவாக டைனோசார், டீரோசார், இக்தியோசார் முதலிய பல்லியினங்கள் அழிந்திருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர் மீனின் பல்லுயிர்வளம் அழிய வாய்ப்பிருக்கிறதா? இருக்கவே இருக்கிறது!
புவி வெப்பமாதல், துருவப் பனிப்பாறைகள் உருகிவழிதல், கடல் மாசுபடுதல், மிகை மீன்பிடித்தல், கட்டுப்பாடின்றி கடல்வளத்தை கொள்ளையிடுதல் என்பதாக நீண்ட வரிசையில் பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. நிலம் சார்ந்த உயிரினங்களைப் போலவே மீனினங்களும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. நாம் இல்லாமல் மீன்கள் வாழ்ந்துகொள்ளும்; மீனில்லாமல் மனிதனால் வாழ முடியாது. சூழலியலையும் பல்லுயிர் வளங்களையும் காப்பதில்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.