ஆதிகாலம் தொட்டே இலக்கியங்களும் சமயங் களும் ஒருசேரக் கொண்டாடும் உறவு என்றால் அது தாய் என்னும் உறவுதான். ஆனால் மனித இனம் பார்க்காத பேரழிவை ஏற்படுத்த பயன்படுத்தப் படும் விமானம் ஒன்றிற்கு அதன் இயக்குநர் தனது தாயின் பெயரை வைக்கிறார் என்றால் அவருடைய மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? உலகின் முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவில் வீசப்பட்டது, பல லட்சம் மக்கள் இறந்தார்கள் என்றுதான் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். லிட்டில் பாய் என்றழைக்கப்பட்ட அந்த குண்டைச் சுமந்த B 29 விமானத்தின் பெயர் அந்த விமானத்தை “command” செய்த கேணல். திபெட்சின் அம்மாவின் பெயர் “எனோலா கே”. அந்த குண்டின் கதையைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

அணு குண்டின் கதை :

அது 1939ஆம் வருடம். லியோ சிசிளார்ட் என்கிற அணு விஞ்ஞானி நாஜிக்களின் பிடியிலிருந்து தப்பி அவரது நண்பரும் அணுசக்தியின் அடிப்படை தத்துவத்தைச் சொன்ன அறிஞருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைச் சந்திக்கிறார். ஜெர்மனியின் அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தைச் சொல்லி, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்டுக்கு அணு குண்டைத் தயாரிக்கச் சொல்லி கடிதம் எழுத வற்புறுத்துகிறார். அதனடிப்படையில் நவம்பர் 1941ஆம் ஆண்டு ராணுவ பயன்பாட்டுக்கான அணுகுண்டைத் தயாரிப்பதற்கான குழு அமைக்கப்படுகிறது.

ஜூன் 1942இல் யூரேனியம் குண்டு, புளுடோனியம் குண்டு தயாரிக்கச் சொல்லி உத்தரவிடுகிறார் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட். அதே வருடம் ஆகஸ்ட் மாதம் மான்ஹாட்டன் திட்டம் தொடங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்துவதற்காக அணு குண்டுகள் தயாரிக்க அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத் திட்டம் அது. ராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், பிரிகேடியர் ஜெனரல் லெஸ்லீ க்ரோவ்ஸின் தலைமையின் கீழ் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியது.

மார்ச் 1943ஆம் வருடம் திட்டத்தின் அறிவியல் இயக்குனராக விஞ்ஞானி ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் நியமிக்கப்பட்டார். மிகவும் ரகசியமாக ஆராய்ச்சி தொடங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் அணுகுண்டு தயாரிப்பில் ஜெர்மனியே முன்னனியில் இருந்தது. ஆனால் அவர்களுடைய திட்டம் 1942இல் கைவிடப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் இந்தத் தகவல் அமெரிக்க விஞ்ஞானிகளிடம் சொல்லப்படவில்லை.

bombblast 600

அமெரிக்காவில் அணு குண்டு தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த போது யுரேனியம் செறிவூட்டப் பணிக்கும் புளுடோனியம் தயாரிக்கவும் பல வசதிகள் தேவைப்பட்டன. மிகப்பெரிய சோதனைச் சாலைகள் உருவாக்கப்பட்டன.

1945இன் இறுதிக்குள் இந்த தயாரிப்புப் பணியில் இரண்டு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டன. ராணுவம், ஆய்வு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என தேசத்தின் ஒட்டுமொத்த வளங்களும் மான்ஹாட்டன் திட்டத்திற்கு தேவைப்பட்டது. இன்று பரவலாகச் சொல்லப்படும் ‘பெரும் அறிவியலின்’ ((big science) தொடக்கமே இந்த மான்ஹாட்டன் திட்டம்தான்.

மான்ஹாட்டன் திட்டத்தில் ஒரு யுரேனியம் குண்டும் இரண்டு புளுடோனியம் குண்டுகளும் தயாரிக்கப்பட்டன. ஆனால் புளுடோனியம் குண்டுகளின் வடிவமைப்பு சிக்கலாக இருந்ததால் அதை சோதனைக்குட்படுத்த வேண்டியிருந்தது. எனவே ஜூலை 16, 1945 அன்று நியூ மெக்சிகோவின் அருகில் சோதனை வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. டிரினிடி டெஸ்ட் என்றழைக்கப்பட்ட இந்த சோதனைதான் உலகின் முதல் அணுகுண்டு சோதனை. இதன் முடிவுகள் பெர்லின் நகரத்தில் போட்ஸ்டாம் கருத்தரங்கில் இருந்த அதிபர் ட்ரூமேனுக்கு சங்கேத மொழியில் தெரிவிக்கப்பட்டன.

அணுகுண்டை வீச நடந்த தயாரிப்பு

அணுகுண்டு தொடர்பான எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வது என்று 1943ல் முடிவுசெய்தார்கள் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும். பல்வேறு கலந்தாய்வுகளுக்குப் பிறகு ஜப்பான் மீது அணு குண்டை வீசி சோதித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள்.

செப்டம்பர் 1944ஆம் ஆண்டு குண்டு போடுவதற்கான ஒரு குழு நியமிக்கப்படுகிறது. அதற்கு H 29 விமானத்தில் அனுபவம் வாய்ந்த கர்னல் திபெத்ஸ் படைத்தலைவராக நியமிக்கப்படுகிறார். நான்கு டன் எடை கொண்ட குண்டு போடுவதற்கு ஏற்ற வகையில் வேண்டோவர் என்கிற விமானப்படைத்தளத்தில் H 29 மறுவடிவமைப்புச் செய்யப்படுகிறது. குண்டு வெடிப்புக்கான ஒத்திகைகள் தயாரிப்புகள் எல்லாம் இந்தக் குழுவால் நடத்தப்படுகின்றன. ஒத்திகைகளின் போது எறியப்பட்ட குண்டுகளின் பேர் பம்ப்கின் (பூசணிக்காய்).

பிப்ரவரி 1945இல் யால்டாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகள் ஒரு உச்சி மாநாடு நடத்துகின்றன. அப்போது ரூஸ்வெல்ட் ஸ்டாலினுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ரஷ்யா ஜப்பான் மீது போர் தொடுக்கிறது. அப்போது ஜெர்மனி சரணடைந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. ஏப்ரல் 12, 1945ஆம் ஆண்டு ரூஸ்வெல்ட் மரணமடைந்த பிறகு உதவி ஜனாதிபதியான ஹென்றி ட்ரூமேன் ஜனாதிபதி ஆகிறார். அப்போதுதான் அவருக்கு அணுகுண்டுகள் பற்றிய விவரங்கள் தெரிய வருகின்றன. ஏப்ரல் 27, 1945ஆம் ஆண்டு நடந்த முதல் இலக்கை நிர்ணயிக்கும் கூட்டத்தில் அணு குண்டு வீச ஜப்பானில் 17 நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

மே 11 1945இல் நடக்கும் இரண்டாவது கூட்டத்தில் புவியியல் மற்றும் இட அமைப்பியல் சார்ந்து ஆய்வு செய்து எங்கு எறிந்தால் அணுகுண்டு நிறைய பாதிப்பு ஏற்படுத்தும் என்கிற அடிப்படையில் இந்தத் தேர்வு நான்கு நகரங்களாக சுருக்கப்படுகிறது. கியோடோ, ஹிரோஷிமா,யோகொஹாமா, கொக்குராதான் அந்த நான்கு நகரங்கள். இந்தப் பட்டியலில் நாகாசாகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியல் மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நாகாசாகி சேர்க்கப்படுகிறது.

மே 28 1945ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நகரங்கள் மீதான வான்வழித் தாக்குதல் களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. காரணம், அப்போதுதான் அணு குண்டு வீசும்போது ஏற்படக் கூடிய பாதிப்புகளின் முழுமையை அறிய முடியும் என்பது.

ஜூலை 1, 1945இல் ஓர் தற்காலிக குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அதிகபட்சமாக எந்த இடத்தில் பாதிப்பு நிகழுமோ அங்கு முன்னறிவிப்பின்றி அணு குண்டை வீசுவது என்று அந்தக் குழு முடிவு செய்கிறது. ஆனால் விஞ்ஞானிகளிடமிருந்து அதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்புகிறது. விஞ்ஞானிகளின் எதிர்ப்பு நிராகரிக்கப்படுகிறது.

அணு குண்டின் முழுமையான ‘பலன்’ தெரியவேண்டும் என்று காரணம் சொல்லப்படுகிறது. அணுகுண்டு வீச்சு தேர்வுப் பட்டியலிலிருந்து ஜப்பானின் கலாச்சார தலைநகரமான கியோடோ விலக்கப்படுகிறது. கலாச்சார தலைநகரின் மீது குண்டு வீசினால் அதை ஜப்பான் என்றென்றும் மன்னிக்காது என்பதுதான் காரணம்.

அணு குண்டு சோதனை முடிந்து 9ஆம் நாள் ஜூலை 25ந் தேதி அணு குண்டு வீச நாள் குறிக்க உத்தரவிடப்படுகிறது. அதற்கு மறுநாள் பொஸ்தாம் உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா இணைந்து சரணடையச் சொல்லி ஜப்பானுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. ஜப்பான் அதை மறுத்து விடுகிறது. இதே நேரம், சரணடைவதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது ஜப்பான். அதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டும் உடனடியாக குண்டு வீசுவது என்று அமெரிக்கா முடிவு செய்கிறது. அணுகுண்டு மூலம் போரை முடித்தால் கிழக்காசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா நினைத்தது.

ஜூலை 1945இல் திபெத்சும் அவரது குழுவும் டினேன் தீவுகளுக்கு வருகை புரிந்தார்கள். ஜப்பானுக்கு கீழ் ஹிரோஷிமாவிலிருந்து 2470 கி.மீ தொலைவில் இருக்கிறது டினேன் தீவுகள். குண்டு வீசுவதற்கான இறுதி உத்தரவு ஆகஸ்ட் 2ந் தேதி பிறப்பிக்கப்படுகிறது. ஹிரோஷிமா, கோகுரா, நாகாசாகி மூன்று நகரங்களும் இறுதி இலக்குகளாக முடிவு செய்யப்படுகின்றன.

ஆகஸ்ட் ஆறாம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு (ஜப்பான் நேரம்) அணுகுண்டைச் சுமந்துகொண்டு எனோலாகே என்கிற பெயர் சூட்டப்பட்ட H29 விமானம் புறப்பட்டது. அதோடு மேலும் இரண்டு விமானங்கள் பறந்தன. ஒன்றின் நோக்கம் படம் பிடிப்பது. இன்னொன்றின் நோக்கம் அதிர்வுகளை ஆராய்வது. எனோலாகே விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மூன்று நகரங்களின் தட்ப வெட்ப நிலையை அறிய மூன்று விமானங்கள் கிளம்பிச் சென்றன.

காலை 7.15 மணிக்கு ஹிரோஷிமாவின் தட்ப வெட்பம் சீராக இருப்பதாக தகவல் வந்தது. அந்த தகவல் ஹிரோஷிமாவின் தலையெழுத்தை மாற்றியது. 2740 கி.மீ தூரத்தை ஆறரை மணி நேரம் பயணம் செய்து கடந்த விமானத்தின் ஓட்டிக்கு ஹிரோஷிமாவின் ஆயுய் பாலம் கண்ணில் பட, குண்டுக்கான விசை அழுத்தப்படுகிறது.

43 வினாடிகள் கழித்து ஷிமா மருத்துவமனைக்கு 600 மீட்டர் மேல் குண்டு வெடிக்கிறது. லிட்டில் பாய் என்றழைக்கப்பட்ட அந்தக் குண்டு மூன்று மீட்டர் நீளம், .7 மீட்டர் விட்டம், நான்கு டன் எடை கொண்டது.

இன்று வரையில் உலகம் சந்தித்திராத பேரழிவை ஹிரோஷிமா மீது கட்டவிழ்த்துவிட்டு 185 டிகிரி திரும்பி விமானம் வந்த பாதையிலேயே மீண்டும் பயணிக்கத் தொடங்கியது.

6300 பள்ளிக் குழந்தைகள் உள்பட பல லட்சக்கணக்கானவர்களைக் கொன்று அழித்தது அந்த குண்டு.

ஹிரோஷிமா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

நானூறு வருடங்களுக்கு முன்பு கோட்டை நகரமாக நிர்மாணிக்கப்பட்டது ஹிரோஷிமா. அகன்ற தீவுகள் என்பதுதான் ஹிரோஷிமாவின் பொருள். விவசாயமும் வணிகமும் செழித்த நகரம் அது. விரைவிலேயே வர்த்தக நகரமாக வளர்ந்தது ஹிரோஷிமா. 1800களில் ஒரு ராணுவத் தளமாகவும் ஹிரோ ஷிமா விரிவாக்கப்பட்டது. சாலைகளும் பாலங்களும் கட்டப்பட்ட பிறகு நவீன யுகத்திற்குள் அடியெடுத்து வைத்தது ஹிரோஷிமா. 1889இல் முனிசிபல் நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஜப்பானின் அதிகாரப் பூர்வ நகரங்களுள் ஒன்றாக ஹிரோஷிமா உருவானது.

1894இல் நடந்த சீனஜப்பான் போர், பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தி வளத்தைத் தந்தது. திடீரென்று ஹிரோஷிமா துறைமுக நகரமாகி சீனாவுக்கு பொருட் களையும் ஆட்களையும் அனுப்பும் இடம் ஆனது. இதற்காக செய்யப்பட்ட பல ராணுவ வசதிகள், ஹிரோஷிமாவின் ராணுவ அந்தஸ்தை மேலும் பலப்படுத்தியது. இந்தப் போரால் நவீனமயமான ஹிரோஷிமாவில் தண்ணீர், மின்சாரம், கால்வாய் வசதி என்று எல்லாம் உருவானது. உயர்ந்த கட்டடங்கள் ஹிரோஷிமாவின் முகத்தை மாற்றின.

டிசம்பர் 1941இல் பேர்ல் ஹார்பர் மீது தாக்குதல் தொடுத்து பசிபிக் போரைத் தொடங்கியது ஜப்பான். அதைத் தொடர்ந்து மலாய் பெனின்சுலா மீதும் தாக்குதல் நடத்தியது. ஆனால் விரைவில் போரில் பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது ஜப்பான். இந்த நிலையில் ஏப்ரல் 1945இல், ஜப்பான் மீதான போரை எதிர்கொள்ள இரண்டாம் ஜெனரல் ராணுவ தலைமையகம் ஹிரோஷிமாவில் உருவாக்கப்பட்டது. ராணுவ மையமாக ஹிரோஷிமாவின் முக்கியத்துவதை இது மேலும் அதிகப்படுத்தியது. ஏதோவொரு வகையில் ஜப்பானின் வளர்ச்சியை எல்லாத் தளங்களிலும் பிரதிபலித்த ஹிரோஷிமாவை குண்டு வீச தேர்ந்தெடுத் ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ஹிரோஷிமா இன்று

குண்டு வெடிப்பு நிகழ்ந்து 69 ஆண்டுகள் கழித்து, பேரழிவின் சுவடுகள் மறைந்துவிட்ட போதிலும், அழிவின் வரலாற்றை ஏந்தி நிற்கிறது ஹிரோஷிமா. அழிவின் சுவடுகள் அனைத்தையும் அழித்து விட்டு இன்று மீண்டும் ஒரு நவீன நகரமாய் நிமர்ந்து நிற்கும் ஹிரோஷிமாவில் நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அருங்காட்சியகம் இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் குண்டு வெடிப்பு தொடர்பான 20,000 பொருட்களை வைத்திருக்கிறார்கள் நிர்வாகத்தினர்.

குண்டு வெடிப்பில் இறந்து போனவரின் நகம், தோல், கருகிய சிறுமியின் செருப்பு, தீயில் கருகிய மதிய உணவு என்று போரின் குரூரங்களுக்கு சாட்சிகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது தவிர, இறந்து போனவர்கள் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்துக்கு அந்த மக்கள் வைத்திருக்கும் பெயர்: ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம்.

போரின் அவலங்களை அதற்கான மனித சாட்சியங்களைச் சுமந்து அமைதியின் செய்தியை அதன் தேவையை எப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இதைவிடப் பொருத்தமான பெயர் இருக்குமா என்ன?

hiroshima 650

ஹிரோஷிமாவிற்குப் பிறகு

ஹிரோஷிமா வெடிப்பைத் தொடர்ந்து புளுடோனி யம் அணு குண்டு ஆகஸ்ட் 9ந் தேதி அன்று நாகாசாகி நகரத்தின் மீது வீசப்பட்டு இன்னொரு பேரழிவை ஏற்படுத்தியது. இரண்டு குண்டுகளுக்கு சோதனைக்களங்களாக ஹிரோஷிமாவும் நாகாசாகியும் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் இதில் வரலாற்றுத் துயரம். ஹிரோஷிமா, நாகசாகியில் வெடித்த குண்டுகளை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் இன்று உலகத்தில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அணு யுத்தத்தை சந்திக்கும் அபாயத்துடனேயே உலகம் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறது.

அணு ஆபத்து இல்லாத, அமைதி தவழும் ஓர் உலகம் உருவாகத் தாங்கள் செய்த தியாகம் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகர மக்கள். அணுசக்தியையும் அணு ஆயுதங்களையும் முற்றிலும் ஒழித்துவிடுவதே மட்டும் அவர்களிடம் நாம் கோரக்கூடிய மன்னிப்பு.

Pin It