இயற்கை வளத்தைக் குறையாமல் நீட்டித்து, தக்கவைக்க முடியாத சுரண்டலாலும், அதிகப்படியான சமச்சீரற்ற சொத்துப் பகிர்வாலும், உலகமயமான தொழில்மய நாகரிகம் இனிவரும் காலத்தில் வீழ்ந்துபோகும் வாய்ப்பு இருப்பதாக ஒரு புதிய ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது. இந்த ஆய்வு நாசாவின் கோடார்டு விண்கல மைய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

‘வீழ்தல்’ குறித்த எச்சரிக்கைகள் பெரும்பாலும் விளிம்பு நிலைப்பட்டதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் கருதப்படுவதால், கறாரான வரலாற்றுத் தரவுகளை கருத்தில் கொள்ளும் விதத்தில் இந்த ஆய்வு முயற்சி அமைந்துள்ளது; அதாவது, “எழுதலும் வீழ்தலும் என்ற நிகழ்வு, மாறி மாறி வரும் காலச்சுழற்சியாக வரலாறு நெடுகிலும் யதார்த்தமாக அமைகிறது” என்கிறது. “நூற்றாண்டு களாக பெரும்பாலும் நீடிக்கும் அதிவேகமான வீழ்தல் காரணமாகவே கடுமையான நாகரிகச்சிதைவு நிகழ்கின்றன என்பது மிக இயல்பானதே” என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வுத்திட்டம் ‘மனிதன் மற்றும் இயற்கை யின் இயங்கியல்’ [Human And Nature Dynamical (HANDY))]என்ற புதிய பல்துறை சார்ந்த மாதிரியை அடிப்படையாகக்கொண்டு அமைந்தது; அமெரிக்காவின் ‘தேசிய அறிவியல் நிறுவனத்தின்’ ஆதரவோடு இயங்கும் ‘தேசிய சமூகச் சுற்றுச் சூழல் இணைவாக்கமைய’த்தைச்’ சேர்ந்த சஃபா மொடேஷாரி என்ற பயன்பாட்டுக் கணிதவியலாள ரின் தலைமையில், இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகள் கொண்ட குழு இந்த ஆய்வை நடத்தி உள்ளது. HANDY என்ற ஆய்வுமுறைப்படி அமைந்த இந்த ஆய்வு, ‘சுற்றுச் சூழல் பொருளாதாரம்’ என்ற சகதுறைசார்ந்த ஆய்வாளர்களின் மறு ஆய்வுக்குப்பின் வெளியிடப்படும் ‘எல்செவியர்’ ஆய்விதழில் பதிப்புக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வளர்ச்சிஅடைந்த, சிக்கலான பல கூறுகளை உள்ளடக்கிய நாகரிகங்களும் வீழ்தல் தன்மை உடையவையே என்பதை வரலாற்றுப் பதிவுகளின்படி இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதன் அடிப்படையில் நவீன நாகரிகத்தின் நீடித்த வளம் குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது:

“ரோமப்பேரரசின் வீழ்ச்சி, மற்றும் அதைவிட பரந்துபட்டதாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையாக வளர்ச்சி பெற்ற ஹான், மௌரிய, குப்தப் பேரரசுகளும், வளர்ச்சிபெற்ற மெசபடோமியப் பேரரசுகளும், வளர்ச்சிபெற்ற நாகரிகங்களும் நசிந்து போகக்கூடிய தன்மை யையும் நிலையில்லாத் தன்மையையும் கொண் டவையே என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.” என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மனிதன் இயற்கை இயங்கியலில், இவ்வித பழைய வீழ்ச்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தும் இந்த ஆய்வுத்திட்டம், இன்றைய அச்சுறுத்தல்களை மதிப்பிட உதவும் பல காரணிகளை அதாவது, மக்கள் தொகை, தட்பவெப்ப நிலை, நீராதாரம், விவசாயம், ஆற்றல் போன்றவற்றை இன்றைய நாகரிக வீழ்ச்சியை எடுத்துரைக்கும் பல முக்கியமான காரணிகளாக அடையாளப்படுத்துகிறது.

இந்தக் காரணிகள் ஒன்றுகுவிந்து, வீழ்ச்சிக்கு ஏதுவான இரண்டு முக்கியமான சமூக இயல்புகளை உருவாக்க முடியும்: ஒன்று, சுற்றுச்சூழல் தாங்கு சக்தியின்மீது திணிக்கப்படும் அழுத்தம் காரணமாக இயற்கை வளங்களின் சுரண்டலை மேலும் அதிகப் படுத்துவது; மற்றொன்று மேல்குடி மக்கள் (பணக்காரர்) என்றும் மக்கள் கூட்டம் (சாதாரண மானவர், ஏழைகள்) என்றும், பொருளாதாரரீதியாக சமூகத்தை அடுக்குநிலைப்படுத்திப் பிரிப்பது. கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக நிகழ்ந்து வரும் இந்தவித சமூக நிகழ்வு, நாகரிக வீழ்தல் நிகழ்வில் அல்லது தன்மையில் ஒரு மையப் பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறது.

தற்போது, தேவைக்கு அதிகமான இயற்கை வளங்களின் நுகர்வும், அதிகபட்சமான பொருளாதார ரீதியான அடுக்கு முறைப்பிரிவுகளும், தொழில் மயமான நாடுகளில் உள்ள ‘மேற்குடி மக்களோடு’ (அவர்களின் நுகர்வுக் கலாச்சாரத்தோடு) தொடர்பு படுத்திப்பார்க்கப்படுகின்றன. அது கீழ்க்கண்ட இரு காரணங்கள் சார்ந்தது:

“... திரட்டப்பட்ட உபரி, சமூகம் முழுமைக்கும் சரிசமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை; ஆனால் மேற்குடி மக்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன. உற்பத்தியில் ஒரு சிறு பகுதி மட்டுமே பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் வாழ்வாதாரத்துக்காக மேற்குடி மக்களால் பகிர்ந்தளிக்கப் படுகிறது.”

தொழில்நுட்பத்தின் செயல்திறனை மேம்படுத்து வதன்மூலம் இந்தவித சவால்களைத் தீர்க்க முடியும் என்று வாதிப்பவர்களை இந்த ஆய்வு சாடுகிறது:
“வளங்களை (எவ்வளவு கறாராக) உபயோகிப் பது என்பதற்கான திறனை தொழில்நுட்ப மாற்றங்கள் உயர்த்த முடியும். ஆனால் இவ் வித தொழில்நுட்ப மாற்றங்கள் ஒரு தனி நபர் நுகர்வையும், வளங்களை (இயற்கை யிலிருந்து) பிரித்தெடுப்பதையும் அதிகப்படுத்தும். ஆகை யால், செயல்திட்ட அமலாக்கம் இல்லாமல், வளங்களின் உபயோகத்தில் செயல்திறனை மட்டும் அதிகப்படுத்துவது என்பது பெரும் பாலான நேரங்களில் நுகர்வை அதிகமாக்கி (தொழில் நுட்ப வளர்ச்சி மூலம் ஈட்டப்பட்ட வளங்களின் விருத்தியை) ஈடுகட்டுகிறது.”

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வியக்கத்தகுந்த அளவுக்கு (தொழில்நுட்ப) செயல்திறன் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், அதே காலகட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் ஏற்பட்ட உற்பத்தி வளர்ச்சி என்பது இயற்கை வளங்களை உச்சபட்சமாக (குறைந்தபட்சம் அல்ல) பயன் படுத்தியதன் மூலம் நடந்துள்ளது.

(அதாவது, தொழில்நுட்ப வளர்ச்சி, வளங்களின் சுரண்டலை அதிகப்படுத்துகிறது. வளங்கள் அதிகமாக சுரண்டப் படுவதால், நுகர்வும் அதிகமாகிறது) பல்வேறு (சமூக) நடப்பியல்புகளை மாதிரிக்கு உட்படுத்தி, மொடேஷாரியும் அவரது சகாக்களும், “இந்தச் சூழ்நிலைகளில், இன்றைய உலகின் யதார்த்தத்தை உற்றுநோக்கும்போது, இந்த வீழ்ச்சி தவிர்க்கப்பட முடியாதது என்று அறிகிறோம்” என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்தவித (சமூக)நடப்பியல்புகளில் முதலாவதாக, நாகரிகம் என்பது, “... ஒரு சாதகமான (வளங்களின்) தேய்மான வீதத்தில், வெகு குறைந்த எண்ணிக்கையிலான மேற்குடி மக்களோடு ஆரம்பித்ததாகக் கொண்டாலும், நீண்ட காலமாக தன்னைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய வகையில் பயணித்ததைப் பார்க்க முடிகிறது.

ஆனால் கடைசியாக மேற்குடி மக்களின் அதிகப்படியான நுகர்வால் சாதாரண மக்களிடையே ஒரு பஞ்சம் உருவாகி அது கடைசியில் ஒரு சமூகத் தின் வீழ்ச்சியை விளைவிக்கிறது. உழைக்கும் வர்க்கத்தை ஒழித்துக் கட்டும் இந்த விதமான நாகரிக வீழ்ச்சி (TypeL collapse) சமூகசமத்துவமின்மையால் உருவாக்கப்பட்ட (செயற்கையான) பஞ்சம். இந்தப் பஞ்சம் இயற்கையின் வீழ்ச்சியால் உருவானது அல்ல என்பதை நாம் குறித்துக் கொள்வது அவசியம்.”

இயற்கை வளங்களின் தொடர்ந்த சுரண்டல் குறித்தநிலைமையை மற்றொரு (சமூக)நடப்பியல்பு கவனப்படுத்துகிறது. “(வளங்களின்) தேய்மான வீதம் அதிகமாக இருக்கும்போது, மேற்குடி மக்கள் தொடர்ந்து செழித்து வாழ்ந்தாலும், சாதாரண மக்களின் வீழ்ச்சி வேகமாக நடக்கிறது. ஆனால் கடைசியாக சாதாரணமக்கள் முற்றிலும் அழிகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மேற்குடி மக்களும் அழிகிறார்கள்” என்றும் கண்டறிகிறது.

இந்த இரு (சமூக) நடப்பியல்புகளிலும், “சுற்றுச்சூழல் சிதைவின் மிகக் கொடூர விளைவுகளிலிருந்து, சாதாரண மக்களைவிட மேற்குடி மக்கள் மிக அதிக காலத்திற்கு”தாங்கிப் பிடிக்கப் படுகின்றனர்; இந்த நிகழ்வு, பொருளாதாரச் சமத்துவம் இன்மையால் மேற்குடி மக்கள் தங்களுக்கென குவித்துக் கொண்ட ஏகபோக சொத்துகள் மூலம் சாத்தியமாகிறது. “பேரழிவு மிகச் சமீபமாக இருந்தாலும், அதுமேற்குடி மக்களை ‘எப்போதும்போல வழக்கமாகத்’ (தங்களின் வாழ்க்கையைத்) தொடர” அவர்களின் ஏகபோகச் சொத்துக் குவிப்பு அனுமதிக்கிறது.

“பேரழிவை அறியாதவர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்ளக் கூடிய மேற்குடி மக்கள், எவ்விதமாக வரலாற்றுச் சீரழிவுகள் நடைபெற அனுமதித்தார்கள் (ரோம மற்றும் மாயன்வரலாற்று நிகழ்வுகளில் மிகத் தெளி வாக பார்க்கப்பட முடியும்)” என்பதையும் இந்த நிகழ்வு விளக்கும் என்றும் அந்த ஆய்வாளர்கள் வாதிக்கின்றனர்.

நமது தற்காலச் சூழலின் இக்கட்டான நிலை யுடன் இந்தப் புரிந்துணர்வை பொருத்திப் பார்க்கும் இந்த ஆய்வு, “இந்த அமைப்பு மிகச் சமீபமாக உள்ள சீரழிவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே இதனைத் தவிர்க்க, சமூகத்தின் சில நபர்கள் சமூக அமைப்பில் மாற்றத்தை முன் மொழிந்து அபாய ஒலி எழுப்புவார்கள். ஆனால் அந்த மாற்றங்களை எதிர்க்கும் மேற்குடிமக்கள், சீரழிவைக் குறைக்க முயற்சி செய்யாமல் சும்மா இருப்பார்கள். அதற்குச் சாதகமாக, இயற்கை ‘இதுவரை’ நம்மைப் பேணிக்காத்து வந்துள்ளதே? (ஏன் அலட்டிக் கொள்கிறீகள்?) என்றும் கூறுவார்கள்.” என்று எச்சரிக்கிறது.

ஆனாலும், மிக மோசமான (சமூக)நடப்புகள் தவிர்க்க முடியாதது அல்ல என்று குறிப்பிடும் அறிவியலாளர்கள், சரியான செயல்திட்டம் மற்றும் (சமூக) அமைப்பு ரீதியான மாற்றங்கள் போன்றவை, மேலும் வலிமையான நாகரிகத்துக்கு வழிசெய்யாமல் போனாலும் வீழ்ச்சியை தவிர்க்கச் செய்யும் என்றும் சொல்கின்றனர்.

வளங்களை மக்களுக்கு இடையே சரிசமமாகப் பகிரும் வகையில் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதும், புதுப்பிக்கவல்ல வளங்களைச் சார்ந்து வாழ்தலும் அவசியம். இதன்மூலம், வளங்களின் நுகர்வைத் தீவிரமாகக் குறைப்பதும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதும் இரு முக்கியமான தீர்வுகளாக அமையும்.

“தனி நபருக்கான இயற்கையின் அழிவு வீதத்தை, எதிர்காலத்துக்குத் தக்கவைக்கக் கூடிய அளவுக்குக் குறைப்பதாலும், நியாயமான அளவில் சமச்சீரான முறையில் வளங்களைப் பகிர்ந்துகொடுப்பதாலும் மக்கள் தொகையில் சமநிலையை அடையமுடியும் மற்றும் வீழ்ச்சியும் தவிர்க்கப்பட முடியும்.”

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மைய நிதியுதவியில் உருவான HANDY என்ற ஆய்வுமாதிரி, அரசுகள், நிறுவனங்கள், வணிக அமைப்புகள் மற்றும் நுகர்வோர் ஆகியோர் விழித்தெழும்படியாக நம்பகமான அழைப்பைக் கொடுக்கிறது. அது ‘எப்போதும்போல வழக்கமாக வாழ்க்கையைத் தொடருவது’ என்ற பாணியைக் கொண்டிருக்க முடியாது. செயல்திட்ட மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்பதற்கான அழைப்பு இது.

இந்த ஆய்வு பெரும்பாலும் கோட்பாட்டு ரீதியில் அமைந்திருந்தாலும், நடைமுறையை கவனப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் (உதாரணமாக, KPMG பன்னாட்டு தணிக்கை நிறுவனம்) மற்றும் இங்கிலாந்து அரசின் அறிவியலுக்கான அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் போன்றவை) உணவு, நீர் மற்றும் ஆற்றல் நெருக்கடி களின் ஒன்றிணைவு ஒரு ‘பரிபூரணமான புயலை’ இன்னும் பதினைந்து ஆண்டுகளில் உருவாக்கக் கூடும் என எச்சரிக்கின்றன. ஆனால், ‘எப்போதும் போல வழக்கமாக வாழ்வைத்தொடருவோம்’ என்னும் பாணியிலான முன்கணிப்புகள் மிகப் பழமைவாதத்தன்மை கொண்டதாகவே இருக்க முடியும்.

‘த கார்டியன்’ இதழில் வெளியிட்ட கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்: முனைவர். நஃபீஸ் அஹமது ‘செயல்திட்ட ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவன’த்தின் செயலாக்க இயக்குநர்.

Pin It