modi Ambani Adaniகொரோனோ பெருந்தொற்று லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் திடீரென முடித்து வைத்தது. ஒரு பக்கம் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகளையும் மற்றொரு பக்கம் வேலை இழப்புகளையும் ஏற்படுத்தி கோடிக்கணக்கான மக்களை பட்டினிச் சாவை நோக்கி வீசி எறிந்தது.

முதலாளிகள் தங்களின் லாபம் குறைவதை சகித்துக் கொள்ள முடியாமல் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி குப்பையைப் போல தொழிலாளர்களை வீதியில் வீசி எறிந்தனர்.

இந்தியாவிலும் கொரோனோ நோய்தொற்றும் அதைத்தொடர்ந்த நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க சாமானிய மக்கள் மீது இந்த அரசு தொடுத்த உள்நாட்டு போராகவே இருந்தது. திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல நுறு கிலோ மீட்டர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளிகள் நடந்தே கடந்தார்கள். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வழியிலேயே சொந்த ஊரைப் பார்க்காமல் செத்து வீழ்ந்தார்கள்.

உலகமே மரண ஓலமாக இருந்த இந்தக் காலத்தில்தான் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. மார்ச் 18 முதல் டிசம்பர் 31 வரையான காலத்தில் தான் இந்த உயர்வு உச்சத்தைக் கண்டுள்ளது. முதல் 10 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 39 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் 100 பெருங்கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில், 12 லட்சத்து, 97 ஆயிரத்து, 822 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இத்தொகையை, தலா, 94 ஆயிரம் ரூபாய் வீதம், 13.80 கோடி ஏழைகளுக்கு வழங்க முடியும்.

ஊரடங்கின் போது, முகேஷ் அம்பானி, ஒரு மணி நேரத்தில் 94 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்தியாவில் 24 சதவீதம் மக்களின் மாதாந்திர வருமானமே 3 ஆயிரம் ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் ஆக்ஸ்பாம் அமைப்பு தெரிவித்த புள்ளி விவரங்கள்.

சாமானிய உழைக்கும் வர்க்கம் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த காலத்தில்தான் இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் கல்லாப் பெட்டிகளில் பணம் கொட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு சாமானிய மக்கள் வறுமையில் தள்ளப் படுகின்றார்களோ அதற்கு நேர் எதிராக பணக்கார வர்க்கத்தின் சொத்து மதிப்பானது உயர்கின்றது.

இப்படி பெரு முதலாளிகளின் காட்டில் பணமழை ஆளும் வர்க்கத்தின் ஆதரவு இன்றி ஒருபோதும் பொழிவதில்லை. நாட்டின் வளங்களை பெரு முதலாளிகளின் சுரண்டலுக்கு திறந்து விடுவதோடு அவர்களுக்கு இலவசமாக நிலங்களையும், மின்சாரத்தையும், தண்ணீரையும் தருவதோடு அவர்களுக்கு திருப்பித்தரா கடன்களையும் வழங்குகின்றது.

அதற்கு பிரதிபலனாக பெருமுதலாளிகளின் தட்டில் மிச்சமாகும் எச்சிலை தேர்தல் நிதியாக பெற்றுக் கொள்வதோடு தனிப்பட்ட முறையில் தன்னையும் வளப்படுத்திக் கொள்கின்றது.

இப்படிப்பட்ட கைக்கூலிகள் போடும் பட்ஜெட் எப்படி இருக்கும்? அது நாட்டை கூறு கூறாக வெட்டி பணக்கார நாய்களுக்கு படையல் போடுவதாகவே இருக்கும். அப்படித்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டும் பிசிறு தட்டாமல் போடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி, ஒரு மணி நேரத்தில் 94 கோடி ரூபாய் சம்பாதித்தாலும், நாட்டில் 10 சதவீதப் பணக்காரர்களிடம் 77 சதவீத சொத்துக்கள் குவிந்துக் கிடந்தாலும் மானங்கெட்ட அரசு நாட்டின் சொத்தை விற்று தின்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.

தினம் தினம் 20 க்கும் 30 க்கும் உழைத்தே சாகும் சாமானிய மக்களின் சட்டைபைக்குள் கைவிட்டு திருடுவதோடு அந்த மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் கேடுகெட்ட நோக்கில்தான் மோடி அரசின் அனைத்து பட்ஜெட்டுகளும் உருவாக்கப்படுகின்றது.

சென்ற 2019-20 பட்ஜெட்டில் பங்கு விற்பனை வாயிலாக ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. பின்னர் அந்த இலக்கை ரூ.65,000 கோடியாகக் குறைத்துக் கொண்டது. இந்த பட்ஜெட்டில் பங்கு விற்பனை வாயிலாக ரூ. 2.10 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை வாயிலாக ரூ.90,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. மேலும் பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

100 நாள் வேலைத் திட்டம், விதவைப் பெண்களுக்கு பென்சன் போன்ற திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதம் குறைத்துள்ளதோடு, உணவு மானியத்தில் 42.5 சதவீதமும், உர மானியத்தில் 40.6 சதவீதத்தையும், சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் 9.5 சதவீதமும், பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் 66.5 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

இப்படி உர மானியத்தை 40.6 சதவீதம் குறைத்துவிட்டுத்தான் கடந்த பட்ஜெட்டில் விவசாயித்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையான 1,45,355 கோடியிலிருந்து 1,48,301 கோடியாக உயர்த்தி உள்ளது. அதாவது 2% உயர்த்தியுள்ளது.

மேலும் பெட்ரோலுக்கான ஃபார்ம் செஸ் வரி லிட்டருக்கு 2.5 சதவீதமும், டீசலுக்கான ஃபார்ம் செஸ் வரி லிட்டருக்கு 4 சதவீதமும் உயர்த்தப்பட்டிருக்கின்றது. சாமானிய மக்கள் வழக்கம் போலவே “நாசாமாய் போயிருவீங்கடா, உங்க குடும்பமே வெலங்காது” என சாபம் விட்டுக் கொண்டே வண்டிக்கு பெட்ரோல் போட்டுச் சென்றதை நம்மால் பார்க்க முடிந்தது.

அடுத்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முதலாளிகளின் ஷூ நக்கும் திட்டம். மக்கள் தாங்கள் விரும்பும் நிறுவனங்களிடமிருந்து மின் விநியோகம் பெறும் திட்டமாகும்.

தற்போது டெல்லியில் போராடிக் கொண்டு இருக்கும் விவசாயிகள் கடுமையாக எதிர்க்கும் மின்சாரச் சட்டத்திருத்த வரைவு – 2020க்கும் அரசின் இந்த அறிவிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இந்தச் சட்ட வரைவானது வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொடுப்பதையும், அதற்குக் கட்டணம் முடிவு செய்வதையும் தனியாருக்கு வழங்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் மின்சார உற்பத்தியில் ஈடுபடும் அதானி, அம்பானி, டாடா, அப்பல்லோ, ஜே.பி. போன்ற கார்ப்ரேட்டுகள் ஒட்டு மொத்தமாக மின்சார விநியோகத்தில் ஏகபோகமாக கொள்ளையடிக்க கதவு திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்று அரசு வங்கிகளின் வாராக் கடனில் கிட்டதிட்ட 30 விழுக்காடு கடன் மின் உற்பத்தி நிறுவனங்கள் வாங்கிய கடன்தான் என்பதை புரிந்துகொள்ளும் போது மோடி அரசின் இந்தத் திட்டத்திற்கு பின்னால் உள்ள கரிசனத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஏற்கெனவே சென்ற ஆண்டு மோடி அரசு 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு என்ற சதித்திட்டத்தின் மூலம் மே 16 அன்று நிலக்கரி, கனிம வளம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, மின் விநியோக நிறுவனங்கள், விமானம், விண்வெளி துறைகள், அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளை பகுதியாகவோ முழுவதுமாகவோ தனியாருக்கு திறந்துவிட முடிவெடித்தது.

அதன்படி பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49% லிருந்து 74% வரை அதிகரிக்கப்பட்டது. மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டதோடு விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்திய விண்வெளித்துறையை தனியாருக்கு விற்கும் நோக்கில் இஸ்ரோவின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இப்படி பெருமுதலாளிகளின் ஏவல் நாயாக வாழ்வதையே தன் கருத்தியலாக வைத்திருக்கும் ஒரு குற்றக் கும்பலிடம் இருந்து நம்மால் எந்தவித மனித விழுமியங்களையும் ஒருபோதும் எதிர்ப்பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட கொடூர மனம்படைத்த இந்த அயோக்கியர்களால்தான் சாமானிய உழைக்கும் மக்கள் கொரோனோ காலத்தில் நடந்து நடந்தே நெஞ்சுவலியாலும், பட்டினியாலும் செத்து வீழ்ந்தார்கள்.

ஆனால் செத்தவன் எல்லாம் திரும்ப வந்து சாட்சி சொல்ல மாட்டான் என்ற தைரியத்தில் இன்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டதாக இந்த அரசு கூறுகின்றது.

மேலும் இந்தியாவில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளிலேயே பணியாற்றுகின்றார்கள். ஜி.எஸ்.டி பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவற்றால் மட்டும் இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் அமைப்பு சாரா துறையில் வேலையிழந்து இருக்கின்றார்கள்.

அவர்களுக்கான எந்த உருப்படியான திட்டத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. மாறாக இந்தியாவின் வளங்களை கட்டுப்படுத்தும் 10 குடும்பங்களின் நலனுக்காக மட்டுமே இந்த அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் என்ற போர்வையில் நாட்டை விற்பதற்கான அறிக்கையை பராளுமன்றத்தில் தாக்கல் செய்துகொண்டு இருக்கின்றது.

இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு பட்ஜெட் அம்பானியின் அண்டிலாவில் வைத்து கூட வெளியிடப்படலாம். காரணம் மோடி அரசு பராளுமன்றத்தைக் கூட அம்பானி அதானிகளுக்கு கோல்ப் மைதானம் கட்டவோ இல்லை பணக்காரர்கள் மலம் கழிக்கும் நவீன கழிப்பறைகள் கட்டவோ இலவசமாக கொடுத்துவிடும் வாய்ப்பு இருக்கின்றது.

- செ.கார்கி 

Pin It