அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் பின்மதியப் பொழுது. பெசண்ட் நகரின் இதமான கடல் காற்றுக்குப் பொருத்தமில்லாத பறை இசை, எங்கிருந்தோ அதிர அதிர எழுந்துகொண்டிருந்தது. காற்று வாங்க வந்தவர்களுக்கு அது புது அனுபவம். ஆனால் பறையிசை அவர்களை ஈர்த்து, கடற்கரை யில் அமைந்திருந்த அந்த அரங்கத்துக்குள் நுழைய வைத்தது.

அரங்கு முழுவதும் இளைஞர்கள். பறையிசை மட்டுமல்லாமல், ஜாஸ், பாப், வில்லுப்பாட்டு என்று களைகட்டியிருந்தது சூழல். குதூகலமான சூழலுக்கிடையில் இருவர் மாற்றி மாற்றி சைக்கிளை சுற்றிக்கொண்டிருந்தார்கள். விசாரித்தபோது, நிகழ்ச்சிக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டி ருப்பதாகச் சொன்னார்கள். அங்கே பாடியவர்கள் அனைவரும் மின்சாரப்பற்றாக்குறை பற்றி பாடினார்கள். “தலைவர் படம் பார்க்க உட்கார்ந்தேன்; பவர்கட்” என்று ஜாஸ் குரலில் கிண்டலடித்தார்கள். ஆனால் மின்வெட்டு பற்றி வரும் மற்ற ஜோக்குகள் போல இல்லை அவை. அவர்கள் ஒரு கொண்டாட்டத்தின் ஊடாக உண்மையான காரணங்களைத் தேடினார்கள், கண்டுபிடித்தார்கள், கொண்டாட்டத்தின் ஊடாகவே அதைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ஓர் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக இருந்த பிறகும் கூட மின்வெட்டுக்கு இன்னமும் சரியான தீர்வைக் கண்டடையவில்லை தமிழகம். மின் வெட்டைத் தீர்க்க முடியாததற்கான காரணங்களாக பெரும்பாலான சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்திருப்பவை கூடங்குளம் போராட்டமும் போதிய மின் உற்பத்தி இல்லை என்பதும் மட்டும்தான்.

கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்தால்கூட மின் பிரச்சனை தீராது என்பது தனிக்கதை. அதைப் பிறகு பார்ப்போம்.

இன்றைய நிலையில் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதை கூடங்குளம் மட்டுமல்ல, புதிதாக ஏற்படுத்தப்படும் மின்நிலையங்களாலும் முழுமை யாகச் சரிக்கட்ட முடியாது. காரணம், தமிழக மின் வாரியம் என்பது ஓர் ஓட்டை வாளியைப் போல.
தமிழ்நாடு மின்வாரியம் என்பது ஓர் ஓட்டை வாளியைப் போல என்ற செய்தியைத்தான் பாடல்கள், ஆடல்கள் என்று கொண்டாட்டத்துடன் அந்த இளைஞர்களும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் பல இளைஞர் அமைப்புகளை இணைத்து மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார் சுற்றுசூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்.

வாளி ஓட்டையாக இருக்கும்போது அதில் எவ்வளவுதான் நீர் ஊற்றினாலும் வாளியில் தங்குமா? இன்று தமிழக மின்சாரச் சூழலும் அப்படித்தான் இருக்கிறது. எவ்வளவுதான் மின் சாரத்தை உற்பத்தி செய்தாலும் அது வேறொரு ஓட்டை வழியாக வீணாகிக் கொண்டுதானிருக்கும். அதிலும் ஓர் ஓட்டை மட்டுமல்ல, தமிழக மின்சார வாளியில் பல ஓட்டைகள் இருக்கின்றன.

மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து அதை நுகர்வோருக்குக்கொண்டு சேர்ப்பதுவரையிலான பயணத்தில் சுமார் 20 சதவிகிதம் மின்சாரம் வீணாகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. முறையற்ற பரிமாற்றம் மற்றும் திறனற்ற வினியோகத்தால் இந்த 20 சதவிகித இழப்பு. இதில் மின் திருட்டோ வணிக இழப்போ அடங்காது. இவை அனைத்தும் அதிகாரப் பூர்வ தகவல்கள். இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 201213ஆம் ஆண்டில் தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை, 12,700 மெகாவாட். நமக்குக் கிடைத் ததோ 11,000 வாட் மட்டுமே. 1700 மெகாவாட் தட்டுப்பாடு. உற்பத்திசெய்யப்பட்ட மின்சாரம், 13,200 மெகாவாட். இதில் 20 சதவிகிதம் &அதாவது 2.200 மெகாவாட் பரிமாற்றத்தின்போது வீணானது.

மின் பரிமாற்றத்தின்போது இழப்பு என்பதைத் தடுக்க முடியாது. ஆனால் ஜப்பான் போன்ற ஒரு நாட்டில் இந்த இழப்பு வெறும் 4 விழுக்காடுதான். இங்கு 20 விழுக்காடு இருப்பதற்குக் காரணம், மோசமான மேலாண்மை மற்றும் தரமற்ற உபகரணங்கள்தான். இதைச் சரிப்படுத்தினால் போதும். வெறும் 500 மெகா வாட்டையே இழந்திருப்போம். பற்றாக்குறையேஏற்பட்டிருக்காது.

அதேபோல, சென்னையிலுள்ள வணிக வளாகங்களுக்கான மின் தேவையை முறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகவே மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒளி வெள்ளத்தில் மிதந்து உயர்தர நகரவாசிகளை மகிழ்ச்சியில் வைத்திருக்க சென்னையின் மத்தியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்குத் தேவைப்படும் மின்சாரம் ஒரு மணி நேரத்துக்கு 7000 யூனிட்டுகள்.

அதுவே, சென்னையைத் தாண்டி இருக்கும் ஒரு கிராமத்தின் ஒருநாள் மின்தேவை 700 யூனிட் மட்டுமே. ஓட்டை எங்கே இருக்கிறது என்று தெரிகிறதா? இந்த வணிக வளாகம் மட்டுமில்லை, சென்னையிலுள்ள பெரும்பாலான வணிகக் கட்டடங்கள், சொகுசு உணவகங்கள், ஐ.டி நிறுவனங்கள் போன்றவை கூடுதலான மின்சாரத்தைப் பயன்படுத்துபவை. ஆனால் இவ்விடங்களில் எல்லாம் மின்வெட்டே இருக்காது.

மின்சார விரயத்துக்கென்றே கட்டப்பட்ட கட்டடங்கள் இவை. பல கட்டடங்களில் நவீன கண்ணாடிகளே வெளிப்புறமாக பயன்படுத்தப்பட் டுள்ளன. அந்த கண்ணாடிகள் வெப்பத்தை உள்வாங்கி குளிரூட்டும் செலவை அதிகப்படுத்துபவை. கண்ணாடிகளில் கருப்பு நிற ஃபிலிம்களைப் பொருத்துகிறார்கள். தமிழகத்தில் எப்போதும் தாராளமாக இருக்கும் சூரிய வெளிச்சத்தை இந்த கருப்புக் கண்ணாடிகள் தடுத்துவிடுகின்றன. அதனால் 24 மணி நேரமும் விளக்குகள் எரிய வேண்டும். இவையெல்லாம் எல்லாம் ஆடம்பரமும் விரயமும்தானே.

எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மறுக்கப்படும் மின்சாரம் எங்கு விரயமாகிறது என்று பார்த்தீர்களா?

ஆனால் இப்படி ஏற்படும் இழப்புகளை விவசாய இழப்புகளாகக் காட்டிவிடுகிறது மின்சார வாரியம். முறையான மீட்டர்கள் இல்லாததால் விவசாயத்தில் ஏற்படும் இழப்புகளைக் கணிக்க வழியில்லை. ஆனால் விவசாய பம்புசெட்டுகள் மின்சாரத்தை உறிஞ்சுகின்றன என்பதையும் மறுக்க முடியாது. மீட்டரைப் பொருத்தி திறன் மிகுந்த பம்புசெட்டுகளை பயன்படுத்த வழி வகுத்தால் விவசாயப் பயன் பாட்டில் 30&40 சதவிகிதம் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங் களை விவரம் தெரியாதவர்கள் கவனித்திருந்தால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்கிறது என்று சத்தியம் செய்தால்கூட நம்ப மாட்டார்கள். பேனர்கள், மின்விளக்குகள் என கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தமிழகத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தன. இதெற்கல்லாம் எங்கிருந்து மின்சாரம் வந்திருக்கும்? திருட்டு மின்சாரம்தான்!

ஒரு மாதத்திற்கு ஒரு சராசரி வீட்டின் மின் தேவை 100 யூனிட்தான். ஆனால் அதே அளவை ஒரே நாளில் 25 விளம்பரப் பலகைகள் பயன்படுத்துகின்றன. பணம் செலுத்தும் வசதி இருக்கிறது என்பதற்காக மின்சாரத்தை இப்படி வீணடிப்பதை என்னவென்று சொல்ல?

குண்டு பல்புகளுக்குப் பதில் சிஃப்.எல் பல்புகள் உபயோகிப்பது ஓர் எளிய தீர்வு. கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது என்று ஒரு சொலவடை உண்டு. நமது மின்சார வாரியமும் அதைத்தான் செய்கிறது.

புதிய மின் நிலையங்களை அமைப்பதைவிட மிக முக்கியம் மின் இழப்புகளைக் குறைக்கவும் விரயங்களைக் கட்டுப்படுத்தவும் புதிய முயற்சிகள் எடுப்பதுதான். அதற்குத் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசு தேவை.

அன்று ஸ்பேசஸ் அரங்கத்திற்கு வந்து இளை ஞர்களின் கொண்டாட்டங்களில் பங்கு கொண்ட எல்லோருக்கும் இந்த உண்மை புரிந்திருக்கும். தமிழக அரசுக்கு எப்போது புரியும்?

Pin It