உயர் நீதிமன்ற வழக்குகள் ஆரம்பத்திலிருந்தே நமக்கு நம்பிக்கையளிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்திலோ மக்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கப்போவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இறுதியில் மக்களுக்கெதிராக மாறியது. இதுவும் வழக்கமாக நடைபெறுவதுதான். இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் அடிப்படை வெறும் அணுஉலையை மூடுவது மட்டுமல்ல. அது ஆழமாக இந்திய அரசின் அணுஉலை சார்ந்த கொள்கைகளையும் கேள்விக்குட்படுத்தும் போராட்டமாக மாறி உள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் அணுசக்தித் துறை யாருக்குமே, எந்த பதிலும் சொன்னதில்லை.

அது ஓர் இரும்புத் திரையாக இருந்தது. இன்று அது உடைக்கப்பட்டிருக்கிறது. கூடங்குளப் போராட்டத்திற்கு பிறகு அணு சக்தி துறை நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் எல்லாக் கேள்விகளுக்கும் அது பதில் சொல்லவில்லை. எங்களுடைய விருப்பம் இல்லாமல், எங்களுடைய இடத்தில், இயற்கையை அழித்து எங்களுக்குத் தேவையில்லாத அணு உலை கட்டப்படக் கூடாது என்பதே அம்மக்களின் வாதம். அப்படிக் கட்டப்பட்டாலும் எங்களுடைய அடிப்படையான சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் என்கிறார்கள்.

ஆனால் சந்தேகங்கள் இன்று பெரிதாகி உள்ளன. பேரிடர் பயிற்சி அளிக்கப்படவில்லை, அடிப்படை பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மிக ஆதாரப் பூர்வமாக கூடங்குளத்தின் ரஷ்ய உதிரிப் பாகங்கள் தரமற்றவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டன. மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்று இந்தியாவின் 60க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள்

எச்சரித்து தங்களுடைய அறிக்கைகளை வெளி யிட்டுள்ளனர். முன்னாள் அணுசக்தி துறைத் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன் அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இடிந்தகரை மக்கள் கூடங்குளம் அணுஉலை ‘‘இறந்து பிறந்த குழந்தை” என்று அதன் தொழில்நுட்பத்தையும், அணு உலை கட்டப்பட்டபோது நடந்த ஊழல்களையும் அதன் தரமற்ற கட்டடங்களையும் நுட்பமாக அறிந்து அழைக்கின்றனர்.

இவ்வளவிற்குப் பிறகும் அணுஉலையை திறந்தே தீருவோம் என்று அரச பயங்கரவாதம் தன் குரலை உயர்த்துகிறது. ஆனால் மக்கள் அரசையும், அரசவை விஞ்ஞானிகளையும் ஒருபோதும் நம்பவில்லை. ஏனெனில் அவர்கள் காலங்காலமாக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர், போபாலைப் போல...

இனி மக்களின் வியூகங்கள் மாறும், போராட்டங்கள் வலுப்பெறும். அணுஉலையை மூடும் வரை எந்தச் சிந்தனையும் இனி இல்லை.

Pin It