சிப்கோ இயக்கம் துளிர்விட்டதற்குப் பிந்தைய 40 ஆண்டுகளில் நமக்குக் கிடைத்தது என்னவோ மாசுபட்ட வான்வெளி, இறந்த நதிகள், அழிந்துபோகும் காடுகள், விவசாயிகள், பழங்குடிகள் இடப்பெயர்வு போன்றவைதான்.

1973ஆம் ஆண்டு மார்ச் 27ந் தேதி, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், இமயமலையின் உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் ஒரு விவசாயிகள் குழு, குறிப்பிட்ட பகுதியில் மரம் வெட்டப்படுவதை தடுத்தது. அன்றைக்கு சிப்கோ இயக்கம் பிறந்தது. அதன்மூலம், நவீன இந்திய சுற்றுச்சூழல் இயக்கமும் துளிர்விட்டது.

சிப்கோ இயக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம், அது தனித்த நிகழ்வு அல்ல என்பதுதான். 1970கள், 1980களில் நிகழ்ந்து வந்த இயற்கை வளத்துக்கான பல்வேறுபட்ட மோதல்களில், அது ஒரு பிரதிநிதி மட்டுமே. காடுகள், மீன்கள், மேய்ச்சல் நிலம் போன்றவற்றை பயன்படுத்த நிகழ்ந்த மோதல்கள், பெரும் அணைகளை எங்கு கட்டுவது என்பது தொடர்பான மோதல்கள், முறைப்படுத்தப்படாத கனிமச் சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல், சமூகத் தாக்கங்கள் உள்ளடங்கிய மோதல்கள், அப்போது நிகழ்ந்து கொண்டிருந்தன.

இந்த விவகாரங்கள் அனைத்திலும், நகர்ப்புற, தொழில் வளர்ச்சி பிரிவினர் ஏற்படுத்திய நெருக்குதல், உள்ளூர் மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்த இயற்கை வளங்களை, அவர்கள் துய்ப்பதைத் தடை செய்யும் வகையில் இருந்தது. காடுகளை வணிகச் சுரண்டலுக்காக அரசு திறந்தவிட்டதை விவசாயிகள் கண்டார்கள், மேய்ப்பர்கள் தங்கள் மேய்ச்சல் நிலங்களை தொழிற்சாலைகளும் பொறியியல் கல்லூரி களும் கூறுபோட்டதைக் கண்டார்கள், பாரம்பரிய மீனவர்கள், பெரும் இழுவை வலைக்காரர்களால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

வளங்குன்றாத வளர்ச்சியும் சமூகநீதியும்

மேற்குலகில் சுற்றுச்சூழல் இயக்கங்கள், இயற்கை வாழிடங்களையும், அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான் பிறந்தன. ஆனால் அதேநேரம், இந்தியாவில் மனித குலம் பிழைத்திருப்பதற்கான தவிர்க்க முடியாத தேவையில் இருந்து அது உருவானது. இது ஏழை களுக்கான சூழலியல். அது சமூகநீதியை தன் ஒரு கரமாகவும், வளங்குன்றாத வளர்ச்சியை மறு கரமாகவும் கொண்டுள்ளது. வளத்தை தற்போது நாம் பயன்படுத்தும் முறைகள், உள்ளூர் மக்களுக்கு தீமை விளைவிப்பதாகவும், இயற்கை சூழலை சீர்கெடுப்பதாகவும் இருக்கிறது என்று அது வாதிட்டது.

1970களில் பொருளாதாரத்தில் அரசு பெரும் உச்சங்களைத் தொட்டபோது, அதாவது இந்தியா கிட்டத்தட்ட சோவியத் பொருளாதாரத்தைத் தொட்டிருந்தது. அப்போது சிப்கோ போராளிகள், அவர்களைப் போன்ற இதர போராளிகளை விமர்சனம் செய்தவர்கள், இவர்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என்றே விமர்சனம் செய்தனர். இந்தியா பின்தங்கி இருக்க வேண்டும் என்று நினைத்த அயல்நாட்டவர்கள் இவர்களுக்கு நிதி அளித்து, ஊக்கு வித்ததாக அந்த விமர்சகர்கள் குறறஞ்சாட்டினர்.

இருந்தபோதும், மெதுவாகவேனும் இந்த போராட் டங்கள் தொடர்ச்சியாக நீடித்த ஒரே காரணத்தால், அரசு சில சலுகைகளைக் கொடுத்தது. 1980இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, மத்திய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறையை தோற்றுவித்தார். அடுத்த சில ஆண்டுகளில் அது முழுமையான ஓர் அமைச்சகமாக மாறியது. மாசை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள், இயற்கைக் காடுகளைக் காக்க சட்டங்கள் இயற்றப்பட்டன. சமூகத் தண்ணீர், சமூகக் காட்டு மேலாண்மையை மீட்பது குறித்தும்கூட அப்போது பேச்சு அடிபட்டது.

அதேநேரம், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் இந்தியா முழுவதும் சமூக வாழ்க்கையில் சுற்றுச்சூழல் சீர்கேடு எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை முறைப்படுத்தப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். அவர்களில் முன்னோடிகளான அனில் அகர்வால், டேரில் டிமான்டே, கல்பனா சர்மா, உஷா ராய், நாகேஷ் ஹெக்டே உள்ளிட்டோர், இந்தப் பிரச்சனைகள் பற்றி மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றி உள்ளனர். மாதவ் காட்கில், ஏ.கே.என். ரெட்டி உள்ளிட்ட அறிவிய லாளர்கள், காடுகள், ஆற்றல் பயன்பாட்டை நிலைத்த ரீதியில் மாற்றுவதற்கான பணிகளைத் தொடங்கினர்.

இதுபோன்ற பல்வேறு முயற்சிகளால் ஏழைகளின் சூழலியல், பிறகு பள்ளி, கல்லூரி கல்வித்திட்டத்துக்குள்ளும் நுழைந்தது. இப்போது எழுதப்படும் பாடப்புத்தகங்களில் சிப்கோ, நர்மதை அணை எதிர்ப்பு இயக்கங்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது. பல்கலைக்கழகத் துறைகள் சுற்றுச்சூழல் சமூகவியல், சுற்றுச்சூழல் வரலாறு பற்றி பயிற்சித்திட்டங்களை நடத்துகின்றன. இந்தத் துறைகள் சார்ந்து சிறப்பு இதழ்கள் தற்போது வெளியாகி, வாசிக்கப்படுகின்றன. கடைசியாக, சுற்றுச்சூழல் உணர்வின் கூறுகள், மத்தியதர வர்க்கத்துக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளன.

மாறும் பார்வை

1991இல் இந்திய பொருளாதாரம் தாராள மயமாக்கப்பட ஆரம்பித்தது. புதுமை படைத்தலையும், தொழில்முனைவையும் மூச்சுத்திணற வைக்கும் வகையில் லைசன்ஸ், -பர்மிட், -கோட்டா போன்ற கட்டுப்பாடுகள் அவ்வளவு காலம் வலியுறுத்தி வந்த அரசு, அவற்றை தளர்த்துவதை வரவேற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக, அரசு சோஷலிச ஆதாரவாளர் களைவிட, தாராளமய பக்தர்கள் சூழலியலாளர்கள் மீது அதைவிட கொடூரத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளை முன்பு உணர்ச்சிகரமாக அணுகி வந்த ஊடகங்கள், நர்மதை அணை எதிர்ப்பு இயக்கத் தலைவர் மேதா பட்கர் போன்றவர்களை பேயைப் போன்று உருவகப்படுத்தி சித்தரிக்கின்றன. மேதா பட்கரும், அவருடைய சக தோழர்களும், கடந்த காலத்தின் நினைவுச் சின்னங்கள், இந்தியாவை பின்தங்கியதாக இருக்க வைப்பதே பழைமைவாத இடதுசாரிகளான அவர்களது நோக்கம் என்று செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள், குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரே ஒரு தலைமுறை இடைவெளியில், முதலாளித்துவத்தின் நண்பர்கள் என்று பார்க்கப்பட்ட மனோநிலை மாறி, தற்போது சோஷலிசத்தின் உடந்தைகள் என்று சூழலியலாளர்கள் தூக்கி எறியப்படுகின்றனர்.

அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில், பதில் அளிக்க முடியாத கேள்விகளை சூழலியலாளர்கள் கேட்பதால், அவர்கள் தாக்கப்படு கின்றனர். எப்பொழுது ஒரு புதிய தொழிற்சாலை, நெடுஞ்சாலை, கனிமச் சுரங்கம் போன்றவை முன்மொழியப்படும்போது, அவர்கள்தான் இதற்கான தண்ணீரும், நிலமும் எங்கிருந்து வருகின்றன?, காற்றின் தரத்தில் அவை ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் என்ன?, காடுகள், மக்களின் வாழ்வாதாரம் மீது அவை என்னவிதமாக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர்.

தாராளமய குடையின் கீழான வளர்ச்சி நகரம், கிராமம் இடையிலான ஏற்றத்தாழ்வை இன்னும் மோசமாக்கப் போகிறதா? மத்திய இந்தியாவில் கனிமச் சுரங்கங் களுக்கான ஓட்டுமொத்த அங்கீகாரம் அல்லது இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியில் செயல்படுத்தப்படும் பெரும் நீர்மின் திட்டங்கள் போன்றவற்றின் பின்னணியில் அவை ஏற்படுத்தும் சமூக, சுற்றுச்சூழல் ரீதியிலான பாதிப்புகள், லாபங்கள் பற்றி யாராவது முறைப்படி மதிப்பிட்டு இருக்கிறார்களா?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது, குறிப்பிட்ட ஒரு திட்டத்தை முன்மொழிபவரே சுயமாக எழுதிக் கொள்வதாக இருக்கும் நிலையை, நமது ஜனநாயகம் இனிமேலும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா? இந்தக் கேள்விகளும், இது போன்ற மற்ற கேள்விகளும் அவை கேட்கப்படும் நேரத்திலேயே துடைத்து எறியப்பட்டு விடுகின்றன.

நீடிக்கும் சீர்கேடு

அதேநேரம், சுற்றுச்சூழல் தொடர்ச்சியாக சீர்கெட்டே வருகிறது. இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டு நிலை அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. நகரங்களிலும், அவற்றை ஒட்டியும் ஓடும் நதிகள் கிட்டத்தட்ட மரித்துவிட்டன. இந்தியாவின் உணவுக் கிண்ணம் என்று உருவகப் படுத்தப்படும் பஞ்சாபில் நிலத்தடி ஆறுகள் மோசமாக வறண்டுவிட்டன. கர்நாடக மாவட்டங்கள் திறந்தவெளி கனிமச் சுரங்கங்களால் சூறையாடப்பட்டுவிட்டன. இந்தியா முழுமையும், நகரங்களில் உருவாகும் கழிவு, சுத்திகரிக்கப்படாமல் கிராமங்களில் கொட்டப்படு கின்றன. காடுகள் தொடர்ச்சியாக அழிந்து வருகின்றன. சில நேரங்களில் முற்றிலும் காணாமல் போகின்றன. ஏன் நமது தேசிய விலங்கான புலியின் எதிர்காலம், தற்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தொடர்ச்சியான சிதைவுக்கு முக்கிய காரணமாக இருப்பது அரசியல் வர்க்கத்தின் அக்கறையின்மையும் லஞ்ச ஊழலும்தான். இந்திரா காந்தி பறவை நோக்குதலில் ஆர்வம் கொண்டவர். அத்துடன் சாலிம் அலி போன்ற முற்போக்கு இயற்கை பாதுகாவலர்களுடன் நட்புடன் இருந்த இந்திரா காந்திதான் சூழலியல், நிலைத்த வளர்ச்சி சார்ந்த விவகாரங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்ட பிரதமர் என்று கூறலாம்.

அப்படி இல்லை என்று வைத்துக்கொண்டாலும்கூட, அவர் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையை மிகமிகக் குறைவாக வெளிப்படுத்தியவர் என்றாவது சொல்லலாம். அதேநேரம், இதுவரையிலான அனைத்து கடந்தகால பிரதமர்களில், டாக்டர் மன்மோகன் சிங்தான் மிக மோசமான பிரதமர் என்று கூறலாம். இந்தக் கேள்வி அவரது கல்விப் பின்னணி சார்ந்ததும்கூட.

ஏனென்றால், சந்தைகள் அனைத்துவிதமான பற்றாக்குறையையும் சந்தைகள் வெற்றி கொண்டு விடும் என்னும் வகையில் சிந்திக்க பொருளியலாளர்கள் தயார் செய்யப்பட்டிருக் கிறார்கள். தன் கொள்கை மீதான அவரது நம்பிக்கை யையும் இது வெளிப்படுத்துகிறது. முன்பு நிதியமைச் சராகவும், தற்போது பிரதமராகவும் இருந்த நேரங்களில் அவர், சூழலியல் நிலைத்ததன்மை குறித்த கேள்வி எழுப்பிய போதெல்லாம் பொருளாதார வளர்ச்சிக் குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் சூழலியல் அறிவு பெற்ற ஒரு பிரதமர் கட்டாயம் வித்தியாசமாக இருப்பார். இப்படிச் சொன்னாலும்கூட, மாநில அரசியல்வாதிகள்தான், கனிமச் சுரங்கம், அடிப்படை கட்டுமானத் திட்டங்கள் போன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையறைகளை மீறுபவர்களாகவும், உள்ளூர் மக்களுக்கு மதிப்பளிக்காமல் இடப்பெயர்வு செய்ய வைப்பவர்களாகவும் உள்ளனர்.

இத்திட்டங்களில் மாநில அரசியல்வாதிகள்தான் பெரிதும் ஈடுபட்டு வருகின்றன. எனது மாநிலமான கர்நாடகத்தில் கனிமச் சுரங்க பெருமுதலாளிகள், இந்த மாநில அரசின் நேரடி பங்கு வகிக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் அவர்கள் காங்கிரஸ், பா.ஜ.க, மாநில கட்சிகளின் வழியாக இதை செயல்படுத்துகிறார்கள்.

சிப்கோ இயக்கம் பிறப்பதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்னால் 1928இல் காந்தி சொன்னது: மேற்கத்திய முறையில் தொழில்மயமாக்கத்தை இந்தியா எப்போதும் கைகொள்ளாமல் இருப்பதை, கடவுள் உறுதி செய்ய வேண்டும். இங்கிலாந்து என்ற சிறிய தீவு நாடு பொருளாதார ஏகாதிபத்தியத்தை கடைப்பிடித்ததால், உலகம் இன்றைக்கு அடிமைச் சங்கிலியில் வீழ்ந்து கிடக்கிறது. 30 கோடி பேர் கொண்ட இந்த ஒட்டுமொத்த நாடும், அதே வகையிலான பொருளாதாரச் சுரண்டலில் ஈடுபட்டால், அது வெட்டுக்கிளிகளுக்கு தின்னக் கொடுத்த உலகம் எலும்புக்கூடானது போலாகிவிடும்.

இந்த மேற்கோளில் முக்கியமான விஷயம். “மேற்கத்திய முறையில்”. இந்திய மக்கள் வறுமையில் இருந்து விடுபட வேண்டும், நாகரிகக் கல்வி வேண்டும், மதிப்புமிக்க வேலை, பாதுகாப்பும் பத்திரமுமான வீடு போன்றவையும் நோய்களில் இருந்து சுதந்திரம், விருப்பச் சுதந்திரம் போன்றவை வேண்டும் என்று காந்தி நினைத்தார் என்பதுதான்.

அவரைப் போலவே, இந்தியாவின் சிறந்த சூழலியலாளர்களான - சிப்கோ இயக்கத்தின் நிறுவனர் சண்டி பிரசாத் பட்டை போன்றவர்கள் அனுபவம் பெற்ற யதார்த்தவாதிகள். அவர்கள் கடந்த காலம் திரும்ப வேண்டும் என்று கூற வில்லை. இந்த சமூகத்தை, பொருளா தாரத்தை வளர்க்க வேண்டும், அது தற்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் அதேநேரம், எதிர்காலத் தேவைகளை காவு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

1980, 1990களில் சூழலியல் இயக்கத்தைச் சேர்ந்த சிறந்த அறிஞர்கள், அறிவியலுடன் வளங்குன்றாத வளர்ச்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரினர். காடு, ஆற்றல், தண்ணீர், போக்குவரத்து கொள்கைகள் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் பொருளாதார உற்பத்தியையும், மனிதகுலத்துக்கு நன்மையையும் தரும் வகையில் வடிவமைத்து, நடை முறைப்படுத்தப்பட வேண்டும். மேற்குலகுக்கு மாறாக, இந்தியா தொழில்புரட்சி மூலம் தனது காலனி நாடு களில் இயற்கை வளத்தை சுரண்டுவதற்கு வாய்ப்பில்லை என்ற அறிவுடன் அவர்கள் செயல்பட்டனர்.

1980களின் மத்தியில், எனது ஆராய்ச்சிப் பணியை ஆரம்பித்த நேரத்தில், கர்நாடக அரசு ஆண்டுதோறும் அற்புதமான “ஆண்டு சுற்றுச்சூழல் நிலைமை அறிக்கை”யை, முன்னணி உயிரியலாளரான செசில் சால்டானா தலைமையில் வெளியிட்டு வந்தது. முன்னணி பொருளியலாளர்கள், சூழலியலாளர்கள், ஆற்றல் அறிஞர்கள், நகர்ப்புற வடிவமைப்பாளர்கள் அதில் பங்களித்தனர்.

அரசின் கொள்கைகள் வளங்குன்றாத, நிலைத்த வகைகளில் இருக்க வேண்டும் என்பதை அந்த அறிவியல் கட்டுரைகள் வலியுறுத்தின. அது போன்றதொரு முயற்சி இப்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கர்நாடகத்தில் மட்டுமல்ல. பொருளாதார தாராளமயமாக்கலின் முதன்மைப் பலி, சுற்றுச்சூழல் நிலைத்த தன்மைதான்.

கார்பரேட் நலன்கள்

நமது சூழலியல் விஞ்ஞானிகளின் முன் ஜாக்கிரதையான, எதிர்கால விளைவுகள் குறித்து வெளிப்படுத்தும் பார்வைகளை ஆழப்படுத்துவதாக புத்திசாலித்தனமான, அக்கறையான ஓர் அரசின் பணி இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, பகுத்தறிவு சார்ந்த, ஆதாரப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சி என்பது, தங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று அரசியல் வர்க்கம் தற்போது கருதுகிறது. எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழ் சமீபத்தில் குறிப்பிட்டது போல, இந்திரா காந்தி உருவாக்கிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் என்பது, கார்பரேட், தொழில் நலன்களுக்கு “முற்றிலும் அடிபணிந்து விட்டது”. மாநிலங் களிலோ நிலைமை, இன்னும் மோசம்.

இந்தியாவின் இன்றைய சுற்றுச்சூழல் என்பது முற்றிலும் வீணானதாக, மீட்டெடுக்க முடியாததாக மாறிவிட்டது. மாசுபட்ட வானம், மரித்த நதிகள், நிலத்தடி நீர்மட்டச் சரிவு, சுத்திகரிக்கப்படாத கழிவுகள் அதிகரிப்பு, காடழிப்பு போன்றவை நிரம்பியதாக இருக்கிறது. அதேநேரம், அக்கறையின்றி உருவாக்கப்பட்ட திட்டங்கள், அழிப்புத் திட்டங்கள் மூலம் பழங்குடி, வேளாண் சமூகங்கள் தங்கள் நிலங்களில் இருந்து தொடர்ச்சியாக துரத்தப்படுகிறார்கள். ஒரு புதிய சிப்கோ இயக்கம் பிறப்பதற்காகக் காத்திருக்கிறது இந்தியா.

தமிழில்: ஆதி வள்ளியப்பன்

Pin It