அந்த கானகத்தில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. புகைமண்டலத்தின் விளைவால் சற்றுத் தொலைவில் உள்ளவற்றைக்கூட காண்பது சிரமமாக இருந்தது. கானகத்தின் அனைத்து விலங்குகளும் பீதியுடன் புகையை வெறித்தவாறு இருந்தன. புகை மண்டலத்திற்கு இடையே ஒரு புள்ளி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்வதும் வருவதுமாக இருந்தது. சற்று உற்று நோக்கிய பிறகே அது ஒரு சிட்டுக்குருவி என தெரிந்தது, அந்தக் குருவி அருகில் இருந்த குளத்திலிருந்து தன் சிறிய அலகினில் நீரை எடுத்துச் சென்று தீயின் மீது தெளித்தவாறு இருந்தது. சற்றுப் பிசங்கினாலும் தீயில் கருகும் அபாயத்தை உணர்ந்தும் அந்த சிட்டுக்குருவி தன் பணியை செய்துகொண்டிருந்தது

பசுமைப் பட்டை (Green Belt) என்ற ஓர் இயக்கத்தை ஆரம்பித்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களை மரம் நட்டு வளர்க்க தூண்டுகோலாக இருந்த வங்காரி மத்தாய் அவருடைய சுற்றுச்சூழல் பணியின் தன்மை குறித்து ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு கூறிய பதில் தான் மேலே கூறிய கதை. இயற்கை வளத்தை கொள்ளை அடிக்கும் பேராசை மிகுந்த பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களின் இடைத்தரகர்களாக இருந்த அரசு அதிகாரிகள் இருவருக்குப் பாலமான அரசியல்வாதிகள் ஆகியவர்களின் அட்டூழியங்களை காட்டுத்தீயாக உருவகப்படுத்தினால், இந்த அதிகாரக் கொடுங்கோன்மைக்கு எதிராக தன்முனைப்புடன் அயராது பாடுபட்ட வங்காரியின் செயல்பாடு ஒரு சிட்டுக்குருவியின் பங்களிப்புக்கு ஈடானதே

1940ஆம் வருடம் கென்ய தேசத்தில் பிறந்த வங்காரி பள்ளிப் படிப்பிற்கு பிறகு அமெரிக்க அரசின் உதவித்திட்டத்தின் கீழ் கேன்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம் பெற்றார், பின்னர் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து தாயகம் திரும்பிய வங்காரி நைரோபி பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் படித்தார், பின்னர் அதே துறையில் முனைவர் பட்டம் பெற்றார். கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மனி என்ற பெருமையும் பெற்றார்.

தன் தாய்மண்ணின் மைந்தர்கள் விவசாயத்தின் பாரம்பரிய முறையை கைவிட்டு வளப்பயிர்களை நாடி பன்னாட்டு நிறுவனங்களை நம்பி வழி தவறிச் செல்வதை கூர்ந்து அவதானித்து வந்தார். ’ஆப்பிரிக்க கண்டத்தில் வெட்டப்படும் 100 மரங்களுக்கு 9 மரக் கன்றுகளே நடப்படுகின்றன’ என்ற ஐ.நா. அறிக்கையும் எதிர்காலம் பற்றிய சங்கடமான கேள்விகளை அவர் மனதில் விதைத்தது. அதன் விளைவுதான் பசுமைப்பட்டை இயக்கம்.

1977ஆம் ஆண்டு புவிதினத்தன்று கென்ய சுற்றுச்சூழல் பெண் முன்னோடிகளை இணைத்து தன் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஏழு மரக்கன்றுகளை நட்டு பசுமைப்பட்டை இயக்கத்தை ஆரம்பித்தார் வங்காரி.அதுவே பின்னாளில் மாபெரும் பெண்கள் இயக்கமாக உருவெடுத்தது. ஆப்பரிக்க கண்டம் மட்டுமின்றி தென் அமெரிக்க நாடுகளுக்கும் கிளைபரப்பி வேர்விட்டது.

வங்காரி பசுமைப்பட்டை இயக்கத்தை ஆரம்பித்ததற்கான பின்னணியும் சூழலும் நம் நாட்டின் தற்போதைய சூழலுடன் ஒத்துப்போவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சொல்லப்போனால் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் இதே நிலைதான். ஆனால் கென்யாவிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் தான் கவனிக்கத்தக்கது. அங்கு இயற்கையை நேசித்த, போராடிய வங்காரிக்கு உள்ள புகழும் மரியாதையும் இங்கு இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார், அணுவுலை எதிர்ப்புப்போராளி சுப.உதயகுமாரன், நர்மதா பாதுகாப்பு இயக்கப்போராளி மேதா பட்கர் போன்றவர்களுக்கு இல்லை. மாறாக மண்வளத்தை இழந்து மலடாகக் காரணமான எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் மக்கள் பாதுகாப்பிற்கு எதிரான அணு உலையை ஆதரிக்கும் அப்துல் கலாம் போன்றவர்களுக்கும் இத்தகைய புகழும் மரியாதையும் சென்று சேர்கிறது.

அன்னிய பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அதிகாரிகளும் மாறிவிட்ட சூழலில் இதைத்தவிர வேறெதையும் எதிர்ப்பார்க்க முடியாது. நேர்மையும் இயற்கையின் பால் அக்கறையும் கொண்ட ஊடகங்கள் இன்றும் அருகிவிடவில்லை என்பதை பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள “மாற்றத்திற்கான பெண்கள்” என்ற நூல்களின் வரிசையில் வங்காரி மாத்தாய் பற்றிய புத்தகம் நிரூபிக்கப்படுகிறது. இப்புத்தகம் சர்வதேச பெண்கள் தினத்தன்று வெளிவந்தது மேலும் சிறப்பானது.

எப்போதும் அரசியல் அரங்கை மையப்படுத்தி வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு முதன்முதலாக ஓர் இயற்கைப்போராளிக்கு வழங்கப்பட்ட போது அதன் மதிப்பு பலமடங்கு கூடியது. 2004ஆம் ஆண்டில் வங்காரிக்கு விருது வழங்கிப்பேசிய நோபல் கமிட்டி தலைவர் “பூமியில் அமைதி நிலவுவது என்பது நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நமக்குள்ள திறனைப் பொருத்தே அமைகிறது” என்ற ஒற்றை வரியில் உலக அமைதிக்கும் சுற்றுச்சூழல் மேன்மைக்கும் உள்ள அடிநாதத்தை தொட்டுச்செல்கிறார்.

பசுமைப் பட்டை இயக்கத்தைத் தொடங்கி 30 ஆண்டுகள் அயராது உழைத்த அந்த சிட்டுக்குருவி ஓய்வெடுக்க தன் சிறகுகளைக் குறுக்கி மீளாத்துயிலில் 2011ஆம் ஆண்டு முகிழ்ந்த போது 12 நாடுகளில் 14 கோடி மரக் கன்றுகளை நட்டு வைத்திருந்தது.

Pin It