காபெர் அஸ்ஃபோர், எகிப்தின் ”பண்பாட்டு உயர் கழகம்” (Supreme Council of Culture) என்ற எழுத்தாளர் அமைப்பின் தலைவராக இருப்பவர். இக்குறிப்புகள் New Perspective Quarterly-யின் சிறப்பாசிரியர் லைலா கானர்சிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து தொகுக்கப்பட்டவை.

****

அடிப்படைவாதம் வேகம் பெற்றுவரும் சூழலில், எமது மரபுகளை திறந்த மனதுடையதாக வைத்திருப்பதற்கு நாங்கள் செய்துகொண்டிருக்கும் முயற்சிகளை மேற்குலகம் எமது உள்விவகாரமாகவே காணவேண்டும். இது இஸ்லாத்திற்கும் கிறித்தவத்திற்கும் இடையிலான நாகரீகங்களின் மோதல் அன்று; இஸ்லாத்தைப் பற்றிய இருவிதமான பொருள்கோடல் முயற்சிகளுக்கிடையிலான வரலாற்று ரீதியிலான மோதல்.

எப்போதும் போலவே, நாம் இன்று காணும் இந்த மோதல், நைல் நதியின் வளமான கழிமுகப் பகுதிகளில் செழித்து வளர்ந்த, ஒப்புரவாளும் நெறி மிகுந்த மக்களின் “நதிகளின் இஸ்லாத்திற்கும்”, சவுதி அரேபியாவின் கட்டிடத்தொழில் பெரும்புள்ளி ஒருவரின் கோடீஸ்வரப் பிள்ளையான ஒசாமா பின் லேடன் பின்பற்றும் ஒப்புரவாளும் நெறியற்ற “பாலைவன இஸ்லாத்திற்கும்” இடையிலான மோதலே.

பாலைவனப் பண்பாடு, நைல் பண்பாட்டிற்கும், பன்முகத்தன்மை நிரம்பிய, சலசலப்பு மிகுந்த நகரச் சந்தைகளின் உயிரோட்டமான வாழ்விற்கும் எதிரானது. அது மூர்க்கத்தனமானது. மாறுபட்ட கருத்துக்கள், அபிப்பிராயங்களை அது மதிப்பதில்லை. மக்களுக்கு ஒரே கருத்து, ஒரே சமயக்கொள்கை, மதம் குறித்த ஒரேயொரு விளக்கம் மட்டுமே இருக்கவேண்டும் என்று அது நம்புகிறது.

“மற்றமை”யை அது எப்போதும் வெறுக்கிறது; எப்போதுமே அது அதற்கு எதிரிதான். குறிப்பாக, மேலை நாகரீகத்தை, சாத்தானின் அவதாரம் என்பதாகவே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறது; வெறுக்கிறது. பாலைவனத்தில் பெண் - ஆண் சமத்துவம் மதிக்கப்படுவதில்லை. தீமைக்குள் இழுக்கும் ஒரு வடிவமாகவே பெண்கள் அங்கு பார்க்கப்படுகிறார்கள். ‘காளாபேயா' ஆண்களின் நீண்ட அங்கிகளும், ஏன் அவர்களது தாடிகளுமே இந்தப் பாலைவனத்தின் குறியீடுகள்தாம்.

இஸ்லாத்தில் எப்போதுமே இரண்டு விதமான போக்குகள் இருந்துவந்துள்ளன. எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நதிக்கரை நாகரீகங்களோடு தொடர்புடைய ஒப்புரவாள்கை நெறி ஓங்கிய “அறிவுப் போக்கு”. வறண்ட பாலைவனத்தோடு தொடர்புடைய ஒப்புரவாள்கை நெறியற்ற “பிரச்சாரப் போக்கு”. சற்று விரிவாகப் பொருள்கொண்டால், “பிரச்சாரப் போக்கு” என்பது கடவுளின் குற்றமற்ற சொல்லாக அருளப்பட்ட ஒன்றாக குர் - ஆனைக் கருதி அதன் வசனங்களை கண்மூடித்தனமாக நம்பும் போக்கு.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், நாகரீகங்கள் செழித்தோங்கிய காலங்களில் ஒப்புரவாள்கை நெறியுள்ள போக்கு நிலவியது. வீழ்ச்சிக் காலங்களில் ஒப்புரவாளுகையற்ற போக்கு எழுந்தது.

1967 -ன் ஆறு நாட்கள் போரில், இஸ்ரேலிடம் எகிப்து இராணுவம் தோல்வியுற்றதற்குப் பிந்தைய தலைக்குனிவு மிகுந்த சூழலில் ஒப்புரவாளுகையற்ற அடிப்படைவாதம் அரபு உலகில் வளரத் தொடங்கியது. எகிப்தில் இதனால் எழுந்த அடையாள நெருக்கடிக்கு இணையாக, அதே காலகட்டத்தில், எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளில், மிகப்பெருமளவிற்கு செல்வம் கொழிக்கத் தொடங்கியது. இது பாலைவன இஸ்லாத்திற்கு பணம் கிடைக்க வழி செய்தது; பணம் அதிகாரமும்கூட. பணத்தைக் கொண்டு உங்கள் பண்பாட்டை மற்றவர்கள் மீது வலிந்து திணிக்கமுடியும். நன்கு நிதியளிக்கப்பட்ட பாலைவன இஸ்லாத் எகிப்தின் வீழ்ச்சியால் உருவான வெற்றிடத்தை இட்டு நிரப்பியது.

இப்படியாக, வளைகுடா நாடுகளிலிருந்து, குறிப்பாக ஒசாமா பின் லேடனிடமிருந்து அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் குவிந்த பணம், பாலைவன அடிப்படைவாதத்தை எகிப்திற்கு ஏற்றுமதி செய்வதிலும், அதன் அபாயகரமான நடவடிக்கைகளை இங்கும் மற்ற இடங்களிலும் தூண்டிவிடுவதிலும் முக்கிய பங்காற்றியது. எகிப்தின் பண்பாட்டு அமைச்சகம், இந்த முயற்சியை முறியடிக்க மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுள் ஒன்றாக, அறிவொளிப் புத்தகங்கள் என்ற ஒரு நூல் வரிசையையையும் வெளியிட்டது. ஆனால், பின் லேடனுக்கு இருப்பதைப் போன்ற நிதியாதாரங்கள் எமக்கில்லை என்பதால், அவரைப் போல மிகக்குறைந்த விலையிலோ மிகவும் விரிவாக விநியோகம் செய்யவோ எங்களால் இயலாமற்போனது. சூடானில் இருந்தபோதே பின் லேடன் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இணையாக பயங்கரவாத நடவடிக்கைகளை உலகெங்கும் வலுப்படுத்தவும் முடிவு செய்தார்.

இன்று, எகிப்தில் உள்ள அடிப்படைவாத இயக்கங்களிலேயே மிகவும் வலுவானது, ”இஸ்லாமிய சகோதரத்துவம்” என்ற அமைப்பு. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எழுச்சிக் காலத்தில் சூயஸ் கால்வாய்ப் பகுதியில் ஹசன் அல் பன்னா என்பவரால் "இஸ்லாமிய சகோதரத்துவம்" நிறுவப்பட்டது. காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது என்ற கருத்தாக்கத்தை “தூய இஸ்லாத்”திற்குத் திரும்புதல் என்பதோடு அவர்கள் கலந்தார்கள். ஹசன் அல் பன்னா, ஹன்பாலி அறிஞர்களிலேயே மிகவும் புகழ் பெற்றவராகத் திகழ்ந்த பின் தன்வீர் - இவரும் ஒரு பாலைவனக்காரர் - என்பாரின் கருத்துக்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்.

சிலுவைப் போர்களின்போது, ஐரோப்பாவிலிருந்து வந்த படையெடுப்பிற்கு எதிராக முஸ்லீம்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, தாக்குதலைத் தாக்குப்பிடித்து நிற்க, கருத்தியல் தீவிரத்தின் எல்லைகளுக்குச் செல்லவேண்டியிருந்ததன் விளைவாக எழுந்த ஒன்றே “பிற்கால ஹன்பாலி இஸ்லாத்”. பின் தன்வீரின் மதச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே சவுதிக் குழு உருவானது. அந்தக் கருத்துக்களே சவுதி அரேபியாவில் அரசின் ஆதாரத் தூண்களாயின.

தொடக்கத்தில், எகிப்துச் சூழலின் செல்வாக்கின் காரணமாக, "இஸ்லாமிய சகோதரர்கள்" சற்று ஒப்புரவாள்கை நெறியுள்ளவர்களாகவே இருந்தனர். ஆனால், காலப்போக்கில், கமால் அப்தெல் நாசரின் எழுச்சி, 1952 வாக்கில் எழுந்த அராபிய தேசியவாதத்தின் புதிய அலை, பாலைவனத்திலிருந்து ஒரு எதிர்வினையை உருவாக்கியது. சவுதி முடியாட்சி நாசரின் செல்வாக்கை அழிக்க விரும்பியது. அடிப்படைவாதத்துடனான எகிப்தின் போராட்டம் தொடங்கியதும் இதிலிருந்துதான். 1967 -ல் நாசர் தோற்கடிக்கப்பட்டதும், அராபிய தேசியவாதம் வீழ்ந்துபட்டதும், பாலைவன முஸ்லீம்கள் “இஸ்லாத் ஒன்றே தீர்வு” என்ற முழக்கத்தின் வழியாக தமது கருத்தியலை முன்வைக்கத் தொடங்கினர். கடுமையானதொரு இஸ்லாத்திற்குத் திரும்புவது மட்டுமே ஜியோனிசத்திற்கும் இஸ்ரேலிற்கும் எதிரான இறுதி வெற்றியைப் பெறுவதற்கான வலிமையைத் தரும் வழி என்பதே அவர்களது மிகப்பெரும் நம்பிக்கை.

இன்று, ஆக்கிரமித்து வரும் பாலைவன இஸ்லாத்தால் நைல் பண்பாடு ஆபத்திற்குள்ளாகியிருக்கிறது. நைல் பக்குவத்தை மறுஉறுதி செய்யும் பொருட்டு நாங்கள், ஒப்புரவாள்கை நெறி, வித்தியாசங்களை மதிக்கக் கற்றுக்கொள்வது போன்ற எகிப்திய கருத்தாக்கங்களில் குவிந்த பண்பாட்டுக் கல்வியை வலியுறுத்தி வருகிறோம். இந்த அறிவொளி இயக்கம், அடிப்படைவாதிகளின் தாக்குதல் இலக்குகளுள் ஒருவராக இருந்த, மறைந்த நாவலாசிரியர் நக்வீப் மஹஸ்பௌஸ் போன்ற கலைஞர்களால் வழிநடத்தப்படுவது.

இருபது வருடங்களாக, மக்களின் செல்வாக்கை மெதுமெதுவாகப் பெற்று இன்று வலுவடைந்துள்ள போக்கிற்கு எதிராக அலையைத் திருப்புவதற்கு எங்களுக்குக் காலம் தேவைப்படும். அது அவ்வளவு சுலபமான ஒன்றாகவும் இருக்காது. எங்களுடைய நீண்ட வரலாறு ஒரு வழிகாட்டியாக இருக்குமென்றால், நைல் பண்பாடு மீண்டும் ஒருமுறை ஒப்புரவாள்கை நெறி ஓங்கிய இஸ்லாத்தை செழிக்கச் செய்யும்.

------------------------------------------------------------

*Tolerance என்பதற்கு வழமையாக ”சகிப்புத்தன்மை” என்ற சொல்லாட்சியே தமிழில் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லில் பொதிந்திருக்கும் அதிகாரத்தை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதற்கு மாற்றாகவே இங்கு ”ஒப்புரவாள்கை” என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறேன். பொருத்தமான வேறு சொற்களையும் வாசகர்கள் பரிந்துரைக்கலாம்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பாக:

சென்னை அமெரிக்க நூலகத்தில் கிடைக்கும் New Perspective Quarterly என்ற இடது சார்புள்ள இதழின் Winter 2002 இதழ் இஸ்லாமியச் சிறப்பிதழாக வந்திருந்தது. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பலருடைய கட்டுரைகளைத் தாங்கி வந்திருந்த அச்சிறப்பிதழில் இருந்து சிலவற்றை கவிதாசரண் இதழுக்கு மொழியாக்கம் செய்து தந்தேன். முதல் கட்டுரைக்கு ஒரு அறிமுகக் குறிப்பும் தந்திருந்தேன். சில மாற்றங்களோடு அக்குறிப்பை இங்கும் வைக்கிறேன்.

இஸ்லாமியர்களிடையே அரசியல் விழிப்புணர்வும் புதிய இயக்கங்களும் அரும்பத் தொடங்கியிருக்கும் காலமிது. தி.மு.க.வுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டிருந்த ஒரு தலைமுறை இஸ்லாமியர்கள் இப்போது அதன்பால் வைத்த நம்பிக்கைகள் சிதறி, கையறுநிலையில் தம்மை உணர்ந்திருக்கிறார்கள். ஒரு புதிய தலைமுறை - இளைஞர்கள், தம்மைத் தனித்துவமாக இணைத்துக்கொள்ளும் முயற்சியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் என்பது ஒருபுறமிருக்க, சில பலவீனமான அம்சங்களையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

புதிய, தனித்துவமான இஸ்லாமிய இயக்கங்களில் இணையத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள், இந்திய/தமிழக இடதுசாரி இயக்கங்களின் அனுபவங்களை முற்றிலும் அறியாதவர்கள். இதற்கு அவர்களைக் குற்றம் சொல்லவும் இயலாது. பொதுவில், நமது சூழலில் இருந்த/இருக்கும் இடதுசாரி இயக்கங்கள் எவையும் இஸ்லாமியர்களுக்கு ஒரு தனித்துவ அடையாளம் உண்டு என்பதையோ, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தனித்த அக்கறையோ செலுத்தியதில்லை, அங்கீகரித்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டை நிறுவுவது இங்கு எனது நோக்கமில்லை. இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது, இந்த இயக்கங்களின் சாதகமான, பாதகமான அனுபவங்கள் எதுவும் இஸ்லாமியர்களுக்கு - குறிப்பாக தற்போதைய தலைமுறையினருக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை மட்டுமே.

இந்த இயக்கங்கள் முன்வைத்த சமூகப் பார்வைகளிலிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதே நேரத்தில், இவற்றில் சிலவற்றின் வறட்டுத்தனமான நிலைப்பாடுகள், செயல்பாடுகள் (குறிப்பாக, மா - லெ இயக்கங்களுடைய) எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளவும் உதவக்கூடும்.

ஒரேயொரு கோணத்தில் இருந்து மட்டுமே விஷயங்களை அணுகுவது என்பது, அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்பால் மாற்றமுடியாத நம்பிக்கையையும் இறுதியில் வெறியையும் அதைச் செயல்படுத்துவதற்காக எந்தவிதமான வழிமுறையையும் கையாளவும் இட்டுச் செல்லும். ஆர். எஸ். எஸ் தொடங்கி இடதுசாரி அமைப்புகள், தமிழ்த் தேசிய இயக்கங்களின் உதாரணங்கள் இதற்கு எடுப்பாகத் தெரிபவை.

முந்தைய தலைமுறைகளின் இந்தத் தவறுகளிலிருந்து விலகி, பல கோணங்களில் இருந்து விஷயங்களை அணுகக் கற்றுக்கொள்ள வேண்டியது இன்றைக்கு நம் எல்லோர் முன்னும் உள்ள சவால் என்பதே யதார்த்தம். அரசியல் விழிப்புணர்வும் வேகமும் பெற்று அரங்குக்கு வரத்தொடங்கியிருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள், இளைஞர்கள் இத்தகைய முயற்சியில், பயிற்சியில் தம்மை ஆழ்த்திக் கொள்ளவேண்டியதே இன்றைக்குத் தேவையான செயல்பாடு என்பதும் எனது துணிபு. அதன் பொருட்டே இந்த மொழியாக்கங்களைத் தரமுனைந்திருக்கிறேன். பல்வேறு நோக்குகளிலிருந்து வரும் இக்கட்டுரைகள் மேற்சொன்னது போன்றதொரு பயிற்சிக்கு ஒரு உதாரணமாகவும் இருக்கலாம்.

நன்றிகள்.

- வளர்மதி.

Pin It