தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!
மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்!
தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் 'ஓன்றே' என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!

விளக்கு வைத்த நேரத்தில் என் வேலைக்காரி
வெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து
களிப்புடனே 'பிரசவந்தான் ஆய்விட்ட' தென்றாள்!
காதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்!
உளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத்தாலே
உயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன் நன்றாய்
வளர்த்துவரக் குழந்தைக்கு வயது மூன்றின்பின்
மனைவிதான் மற்றுமொரு கருப்பமுறலானாள்.

பெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று
பிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்!
கண்ணழகும் முக அழகும் கண்டு நாட்கள்
கழிக்கையிலே மற்றொன்றும் பின் ஒன்றும் பெற்றாள்!
எண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்
எழில் மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்!
உண்ணுவதை நானுண்ண மனம் வருவதில்லை;
உண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.

வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்!
வாராத நினைவெல்லாம்வந்து வந்து தோன்றும்!
துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால்
தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டால் தொல்லை!
அரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேபமில்லை;
ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி?
இரும்பா நான்? செத்துவிட்டால் என் பிள்ளைகட்கே
என்னகதி? ஏன்பெற்றேன்? எனநினைக்கும் நாளில்,

ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்
உணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி
தெருத்திண்ணை மேல்இட்டேன்! நித்திரையும் போனேன்!
சிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்
அருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.
'அயர்ந்தீரோ' என்றுரைத்தாள்! மலர்க்கரத்தால் தொட்டாள்!
'தெருவினிலேபனி' என்றாள், ஆமென்று சொன்னேன்;
தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம். வார்த்தையென்ன
                                                                                               தேவை;

மனைவியாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்
மவுனத்தில் ஆழ்ந்திருந்தோம் வாய்த்ததொரு கனவு;
'கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ!
கதியற்ற குழந்தைகளோர் கோடானு கோடி
மனம் பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்
வந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;
இனத்தவரின் குழந்தைகளோ. ஏ! என்று கொஞ்ச,
ஏறிவந்த சீ மான்கள் சீ! என்று போனார்.'

கனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;
காதல்எனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோம். மெய்யாய்த்
தினம் நாங்கள் படும்பாட்டை யாரறியக்கூடும்?
சீ! சீ!! சீ!!! இங்கினியும் காதல் ஒரு கேடா?
எனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.
இன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ!
தனியறையில் கண்ணொடுகண் சந்திக்க ஆங்கே
தடுக்கி விழுந்தோம் காதல் வெள்ளத்தின் உள்ளே!

பத்துமாதம் செல்லப் பகற்போதில் ஒர்நாள்,
பட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,
சித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்
திடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து
முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல
முகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்!
தொத்துநோய், ஏழ்மை, பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
சாதலுக்கே பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?
சந்தான முறை நன்று; தவிர்க்கும் முறை தீதோ?
காதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்
கருக்தலுத்துப் போனோமே! கடைத்தேற மக்கள்
ஓதலுக் கெல்லாம் மறுப்பா? என்னருமை நாடே,
உணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!

ஆசை தவிர்க்க வந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!

சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!
நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்

கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
தேக்குமரம் கடைந்து செய்ததோரு தொட்டிலிலே
ஈக்கள் நுழையாமல் இட்ட திரை நடுவில்,

பொன் முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச்
சின்ன மணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்;
அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டியழும் வைதீகத்தைப்

போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!
வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப்பழக்கத்தைத் தீ தென்றால் முட்டவரும்

மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
'எல்லாம் அவன் செயலே' என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்

காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும்,
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு!

நீ எனக்கும், உனக்கும் நானும் - இனி
நேருக்கு நேர் தித்திக்கும் பாலும், தேனும் (நீ)

தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம்
நேய மாக அமைவுற உறுதிசொல்! அடி (நீ)

கைம்பெண் என் றெண்ணங் கொண்டே
கலங்கினா யோகற் கண்டே?

காடு வேகு வதை ஒரு மொழியினில்
மூடு போட முடியுமோ உரையடி? ததி (நீ)

பைந்தமி ழைச்சீ ராக்கக்
கைம்மைஎன் னும்சொல் நீக்கப்
பறந்து வாடி அழகிய மயிலே!
இறந்த கால நடைமுறை தொலையவே. (நீ)

பகுத்தறிவான மன்று
பாவை நீஏறி நின்று
பாரடீ உன் எதிரினிற் பழஞ் செயல்
கோரமாக அழந்தொழிகுவதையே (நீ)

கருத்தொரு மித்த போது
கட்டுக்கள் என்ப தேது
கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
செம்மை யாகும் படிசெய மனதுவை! அடி! (நீ)