கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- விஞ்ஞானி க.பொன்முடி
- பிரிவு: புவி அறிவியல்
இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப்பட்டது. ஆனால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?
இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை.
குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் மிதக்கிறது.
இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிக் கொண்டிருப்பதால் பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது அதிலிருந்து நீரும் வாயுக்களும் பிரிவதால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் பாறைத் தட்டுகளின் கன அளவும் அதிகரிக்கின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன.
இவ்வாறு பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயரும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் அப்பகுதியில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பழைய பாறைத் தட்டுகளை மேல் நோக்கி தள்ளுகின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன. இவ்வாறு ஒரு இடத்தில பாறைத் தட்டுகள் உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அப்பகுதியில் உள்ள மற்ற பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
மற்றபடி சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகருவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மையென்றால் இந்தியாவில் எல்லா இடத்திலும் ஒரே நாளிள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்
1679 ஜனவரி 28 அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 10 அன்று சென்னையில் நில நடுக்கம்.
1816 செப்டம்பர் 16 அன்று சென்னையில் லேசான நில நடுக்கம்.
1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.
1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.
1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.
1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.
1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம்.
1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
1841 ஜூன் 26 அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
1988 ஜூலை 7 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு.
1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம்.
2000 டிசம்பர் 12 அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் லேசான நில நடுக்கம்.
2001 ஜனவரி 7 அன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 ஜனவரி 26 குஜராத்தில் ஏற்ப்பட்ட கடுமையான நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 செப்டம்பர் 26 அன்று புதுவை கடலோரத்தில் லேசான நில நடுக்கம்.
2001 செப்டம்பர் 26 அன்று சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம்.இரண்டு பேர் பலி.
2001 அக்டோபர் 28 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் நாகர்கோவிலில் லேசான நில அதிர்ச்சி.
-மூலம்: இணையம்.
மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன, டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.(தினத்தந்தி-19.07.2009)
தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம். எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும். சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
- விஞ்ஞானி.க.பொன்முடி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
வேட்டையாடி பிழைத்துவந்த வாழ்க்கையை விட்டு வேளாண்மை செய்து பிழைக்கும் நிலைக்கு மனிதன் வாராதிருந்தால் நாடு, நகரம், அறிவியல் தொழில் நுட்பம் என்று எதுவுமே ஏற்பட்டிருக்காது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் வேட்டைக்காரனாகத் தானிருந்தான். அவனது பற்களின் பலத்தையும், பெரிய தாடையின் அளவையும் இன்றைய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நவீன மனிதனின் பற்கள் வெறும் அவலுக்கு சமம். தாடை கூட சிறியதாகி உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
பல்துலக்காமல் இருந்தும், பல்சொத்தையில்லாமலேயே வேட்டை மனிதன் வாழ்ந்தான். இன்று பல்லுக்கென்று மனிதன் எத்தனை நேரத்தையும் பொருளையும் செலவு செய்கிறான்! இந்த மாற்றத்திற்குக் காரணம் வேகவைத்த அரிசி, கோதுமை உணவை சாப்பிடுவதுதான். அதிக கார்போஹைட்ரேட் மிகுந்த உணவின் மூலம் நாம்பெற்ற தீமைகள் இவை. வேலைக்காக மனிதன் பெருங்கூட்டமாக நகரத்தில் வாழ ஆரம்பித்ததும்தான் சிப்பிலிஸ், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் தோன்ற ஆரம்பித்தன. நாகரிகத்தில் முன்னேறிச் சென்றால், ஆரோக்கியம் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மஞ்சளும் தவிட்டு நிறமும் கலந்த ஒரு ஈயின் படமும், அதற்குக் கீழே “லுக் அட் திஸ்” (Look at This) என்று எழுதப்பட்டிருந்தது, அந்த போஸ்ட்டரில்! இது சிட்னி ஆஸ்திரேலியன் அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு அறையின் வாசலில் சிறிது காலம் முன்பு வரை இருந்தது.அது டேவிட் கே மக்கால் பைன் (David K. McAlpine) என்ற பூச்சியியல் நிபுணரின் ஆய்வு அறை. அவர் உலகப் புகழ்பெற்ற டிப்ட்டராலஜிஸ்ட் (Dipterologist) விஞ்ஞானி. இரண்டு இறக்கைகள் மட்டுமே உள்ள பூச்சிகளே டிப்ட்டர (Diptera). மற்ற பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உண்டு. இந்தப் பிரிவில் பலதரப்பட்ட ஈக்கள், கொசுக்கள் என ஒன்றரை இலட்சம் உயிரினங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இதில் உள்ளன.
மக்கால் பைன், கெல்ப் ஈக்கள் (Kelp flies) பிரிவில் ஆய்வு செய்தார். கெல்ப் என்பவை ஒரு வகை கடற்பாசிகள். கடலோரப் பகுதிகளில் குவியும் இவற்றில் இந்த ஈக்கள் முட்டையிடுகின்றன. புழுக்கள் வளர்கின்றன. கடற்பாசிகள், கடற்புற்கள், மற்ற கழிவுகள் குவியும் பகுதி ராக் மண்டலம் (Wrack Zone) என்று அழைக்கப்படுகிறது. இது இவற்றின் வாழிடம்.
இந்த ஈக்கள் அடங்கியுள்ள சீலோப்பிடி (Coelopidae) என்ற சிறிய குடும்பத்தில் 13 பேரினங்களும் 40 இனங்களும் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. 1981ல் வெளிவந்த ஆய்வு முடிவுகளின் ஊடாக, மக்கால் பைன் ஆஸ்திரேலியாவில் இருந்து ஐந்து புதிய பேரினங்களை கண்டுபிடித்தார். இவற்றில் ஒன்றுதான் திஸ் (This).
இந்த புதிய பேரினத்தில் திஸ் கானஸ் (This canus) என்ற ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது.
இவை ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வாழ்கின்றன. எண்ணிக்கை அதிகரிக்கும்போது நாட்டின் உள் பிரதேசங்களுக்கும் பயணம் செய்கின்றன. எடுத்துக்காட்டு கடற்கரை இல்லாத கேன்பரா நகரம்.
திஸ் கானஸ் உடல் அளவில் மிகச் சிறியவை. ஆண் ஈக்களின் இறக்கைகள் சற்று பெரியது. பெரும்பாலான ஆண் ஈக்கள் பெண் ஈக்களை விட அளவில் பெரியவை. இவற்றின் சராசரி அளவு 2 முதல் 3 மில்லிமீட்டர் மட்டுமே.
உடலமைப்பும் பண்புகளும்
வெளிறிய சாம்பல் நிறமுள்ள தலை, ஆரஞ்சு தவிட்டு நிறம் கலந்த சவ்வாலான சிறிய கழுத்து பகுதி, உணர்வு நீட்சிகள், கறுத்த உரோமங்களால் பொதிந்த இளம் சாம்பல் நிறமுள்ள தோராக்ஸ் என்ற பகுதி, மஞ்சள் நிர நரம்புகள் உள்ள இறக்கைகள் போன்றவை இவற்றின் உடலமைப்பில் காணப்படும் சிறப்பு அம்சங்கள். இது போலவே இணை சேர்வதிலும் திஸ் கானஸ், மற்ற கெல்ப் வகை ஈக்களில் இருந்து வேறுபடுகின்றன.
பெரும்பாலான கெல்ப் வகை ஈக்களிலும் பெண் ஈக்கள் இணைசேரும் ஆரம்ப விநாடிகளில் ஆண் ஈக்களை அடித்து விரட்ட முயல்கின்றன. ஆண் ஈக்கள் பெரிய அளவு உள்ள பெண் ஈக்களுடன் இணை சேர அதிகம் விரும்புகின்றன. ஆனால் திஸ் கானஸ் இத்தகைய பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. உடளலவில் சிறிதாக இருந்தாலும் ஆஸ்திரேலியன் கெல்ப் ஈக்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகம்.
இவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகும்போது இவை கடற்கரைக்கு செல்பவர்களுக்கு பெரிய தொல்லையாக மாறுவதுண்டு. ஆனால் இவை கடிப்பதோ, நோய்களை பரப்புவதோ இல்லை. இவை சில முக்கிய சூழல் சேவைகளை செய்கின்றன. கடலோரப்பகுதியில் குவியும் கடற்பாசிகளை உணவாக உண்பதன் மூலம் இவை அவற்றை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கடலோரத்தில் வாழும் பறவைகள், மற்ற உயிரினங்களுக்கு இவற்றின் புழுக்கள், இளம் உயிரிகள் ஒரு முக்கிய உணவாகப் பயன்படுகின்றன.
மக்கால் பைன் நகைச்சுவை உணர்வு உடையவர் என்றாலும், இந்த ஈ இனத்திற்கு வெறும் தமாஷுக்காக அவர் இந்தப் பெயரைக் கொடுக்கவில்லை. இந்த ஈ-இன் பெயரில் இருக்கும் திஸ் என்ற சொல் ஆங்கிலத்தில் வரும் வெறும் திஸ் என்ற சொல்லைக் குறிக்கவில்லை. மாறாக புராதன கிரேக்க மொழியில் உள்ள திஸ் என்ற சொல்லே இந்த திஸ்! இதன் பொருள் கடற்கரை (Sea shore). கடலோரத்தில் வாழும் இந்த உயிரினத்திற்கு இந்தப் பெயர் மிகப் பொருத்தமானதுதானே?
வாழ்க்கைமுறை
பாக்டீரியாக்கள் நிறைந்த அழுகிய கடற்பாசிகளே இவை முட்டையிடும் இடங்கள். ஏப்ரல், ஜூநாகஸ்ட், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மற்ற மாதங்களிலும் இவை காணப்படுகின்றன. என்றாலும் அந்த சமயங்களில் இவற்றிக்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடலோரப் பகுதிகளில் குவியும் கடற்பாசிகள் அழுகும்போது பலவித வாயுக்களை வெளிவிடுகின்றன. அந்த வாயுக்களால் இந்த ஈக்கள் கவரப்படுகின்றன.
கழிவுகளில் கூட்டமாக இடப்படும் முட்டைகள் விரிந்து வெளிவரும் புழுக்கள் அழுகிய கடற்பாசிகளையும் அதில் உள்ள பாக்டீரியாக்களையும் உண்டு வளர்கின்றன. இளம் உயிரியாக மாறுவதற்கு முன் கடற்பாசி குவியல்களில் இருந்து வெளிவரும் புழுக்கள் மணற்பரப்பிற்கு வருகின்றன. பின் இவை இளம் உயிரிகளாக மாறுகின்றன. முழு வளர்ச்சி அடைய ஆறு முதல் ஒன்பது வாரங்கள் எடுத்துக் கொள்கின்றன.
இந்த ஈக்களின் வண்ணப்படங்கள் பொது இடங்களில் காணப்படுவதில்லை. கறுப்பு வெள்ளையில் உள்ள ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மக்கால் பைனின் அறை வாசலில் காணப்பட்ட இந்த ஈயின் படத்தை அவருடைய சக ஆய்வாளர் டானியல் பிக்கல் (Daniel Bickel) வெளியுலகிற்கு வழங்கினார்.
1977ல் தெற்கு ஆஸ்திரேலியா ரோஃப் மாவட்டம் (Robe district) லாங் கல்லி (Long Gully) என்ற இடத்தில் மக்கால் பைன் சக ஆய்வாளர் ஷீனருடன் இணைந்து இந்த ஈயின் படத்தை எடுத்தார். இந்த ஆய்வுகளுக்கு பிறகு 1991ல் தெற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த ஈக்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள் நடந்தன.
பெயரில் மட்டும் வினோதமானதில்லை இந்த ஈ! இதன் வாழ்க்கை கதையும் பல விசித்திரங்கள் நிறைந்ததே. இவை பற்றி அதிகம் ஆராயப்பட வேண்டும். இயற்கையின் படைப்பில் உள்ள அதிசயங்களில் இன்னமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன என்பதை இந்த சின்னஞ்சிறிய ஈ நமக்கு உணர்த்துகிறது.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/creature-chronicles-on-this-canus-1.9532270
&
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை