எப்போதும் நகைச்சுவையுடன் இருக்கும் அவருடைய மனதில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது. புதிதாக கண்டுபிடித்த குளவியைப் பார்த்தபோது ஆச்சரியத்தில் வாயில் இருந்து வெளியில் வந்த சத்தமே அதற்குப் பெயராக இருக்கட்டும் என்று அவர் நினைத்தார். இவ்வாறு புதிய குளவி இனத்தின் பெயர் ஆஹா (Aha) என்று ஆனது.

ஆஹா குளவியும் பெயரிட்ட ஆர்னால்டு மென்கேயும்

சாதாரண மனிதர்கள் போலவே விஞ்ஞானிகளும் நகைச்சுவை உணர்வுடையவர்கள். அதை ரசிக்கவும் செய்வர். சிலர் ஒரு படி மேலே போய் ஆய்வுகளில் நகைச்சுவையைக் கலந்து செயல்படுவர். அப்படிப்பட்ட ஒருவர்தான் பிரபல அமெரிக்க பூச்சியியல் நிபுணர் ஆர்னால்டு மென்க் (Arnold Menke). 1976ம் ஆண்டு. அன்று அவர் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.Arnold Menkeமற்றொரு உலகப் புகழ்பெற்ற பூச்சியியல் நிபுணர் ஹவர்டு எவ்வான்ஸ் (Howard Evans) ஆர்னால்டின் நெருங்கிய நண்பராக இருந்தார். இவரும் இவருடைய சக ஆய்வாளர் மாத்யூஸும் உலகம் முழுவதும் சுற்றி குளவிகளை சேகரித்து ஆராய்வதில் பிரபலமானவர். 1970களில் இவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து ஏராளமான குளவிகளை சேகரித்தனர். அதில் சிலவற்றை விரிவான ஆய்வுக்காக ஆர்னால்டுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

அந்த குளவிகள் கூட்டத்தில் ஒன்றைப் பார்த்தபோதே அது ஒரு புதிய பேரினம் என்று ஆர்னால்டுக்கு தோன்றியது. பட்டென்று அவரின் வாயில் இருந்து “ஆஹா! ஒரு புதிய பேரினம்!” (Aha, a new genus) என்ற சொற்கள் வெளிவந்தன. அந்த சமயத்தில் அவருக்கு அருகில் சக ஆய்வாளர் எரிக் க்க்ரிசெல் (Eric Grissel) நின்று கொண்டிருந்தார். ஆர்னால்டு கூறியதில் நம்பிக்கை இல்லாமல் க்ரிசெல் ஒரு சத்தத்தை ஏற்படுத்தினார். ”ஹா ஹா” (Ha Ha)!

மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே மாதிரி தோற்றத்துடன் எட்டு குளவிகள் அந்தக் கூட்டத்தில் இருந்தன. ஆனால் நுணுக்கமாக ஆராய்ந்தபோது அவை ஒரே பேரினத்தைச் சேர்ந்த இரண்டு இனங்கள் என்று தெரிந்தது.

பெயர்கள் பிறந்தன

புதிய உயிரினங்களுக்குப் பெயரிடுவது சுலபமான செயல் இல்லை. அந்தப் பெயர் அதுவரை பயன்படுத்தாததாக இருக்க வேண்டும். பல சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். நகைச்சுவை உணர்வுடைய ஆர்னால்டின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. புதிய இனத்தைப் பார்த்தபோது வாயில் இருந்து வந்த சத்தமே அதற்குப் பெயராக இருக்கட்டும் என்று நினைத்தார். இப்படி புதிய குளவி பேரினத்தின் பெயர் ஆஹா என்றானது. மற்றொரு பேரினத்திற்கு ஹா (Ha) என்று பெயரிட்டு தன் சக ஆய்வாளரின் பெயரையும் அதனுடன் இணைத்து வைத்தார்.

மிக விசித்திரமான பெயராக ஆஹா ஹா (Aha Ha) என்ற அறிவியல் பெயர் பிறந்தது. மற்றொரு பேரினத்திற்கு அவர் தன் நண்பரின் பெயரை சேர்த்து ஆஹா இவான்சி (Aha evansi) என்று வைத்தார். இது பற்றி பிறகு ஆர்னால்டு கூறியபோது “மது அருந்தி வீங்கிப்போன எவான்சின் வயிற்றைப் பார்த்தபோதுதான் இப்படி ஒரு பெயர் என் மனதில் தோன்றியது” என்றார்.

குழி தோண்டும் குளவிகள் வகையைச் சேர்ந்த இவை முன்பு ஸ்பெசிடே குடும்பத்தில் இருந்தன. இப்போது இவை ப்ராப்ரேயானிடே என்ற குடும்பத்தில் உள்ளன. க்ராஃபனிடி மிஸ்கபினி (Crabronidae Miscophini) என்ற இனத்தில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மண்ணில் சிறிய குழிகளைத் தோண்டி முட்டையிடுகின்றன. இதனால் இவை மணலில் குழி தோண்டும் குளவிகள் (Sand wasps) என்று அழைக்கப்படுகின்றன. முட்டையிடுவதற்கு முன்பு பெண் குளவிகள் குழியில் குழந்தை உயிரினங்களுக்காக உணவு சேகரித்து வைக்கின்றன.

பிறந்த குளவிப் புழுக்களுக்கு கால்கள் கிடையாது. இவற்றின் உணவு சிறிய பூச்சிகள், சிலந்திகள். பெண் குளவிகள் உடலின் பின்பக்கம் இருக்கும் நஞ்சுள்ள முள்ளால் குத்தி இரைகளை நினைவிழக்கச் செய்து உயிருடன் கூட்டுக்கு கொண்டு வருகின்றன. மற்ற ஆண் குளவிகள், தேனீக்கள் போலவே இவற்றின் ஆண் இனத்தைச் சேர்ந்தவற்றுக்கு நஞ்சுடைய முட்கள் இல்லை. முதிர்ந்த ஆண் மற்றும் பெண் குளவிகளின் உணவு பூந்தேன் மற்றும் இனிப்பு சுவையுள்ள திரவங்கள்.

இவற்றின் நீளம் 7.5 மில்லி மீட்டர் மட்டுமே. உடல் கறுப்பு நிறம் என்றாலும் இறக்கைகள் ஸ்படிக நிறத்தில் காணப்படுகின்றன. தலை மற்றும் கால்களில் வெள்ளி நிறத்தில் பல சிறிய உரோமங்கள் உள்ளன. எவான்சி குளவி இனம் ஆஹாஹாவை விட பெரியது. இதன் நீளம் 10 மில்லி மீட்டர். இறக்கைகள் கறுப்பு நிறத்தில் உள்ளன.

ஆஹாவின் முகம்

பெம்பிக்ஸ் (Bembix) ராப்ரேயானிடே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு குளவி. சாதாரண அளவுடையவை. மிஸ்கோபினி குளவிகள் போன்ற இயல்புடையவை. 1972ல் எவான்ஸும் மாத்யூஸும் மேற்கு ஆஸ்திரேலியாவில் கனனர (Kununurra) என்ற இடத்தில் மட்டும் வாழும் ஒரு புதிய பெம்பிக்ஸ் குளவியை ஆராய்ந்தனர். இந்த இனம் பிற்காலத்தில் பெம்பிக்ஸ் மோமா (Bembix moma) என்று பெயரிடப்பட்டது. 1983ல் எவான்ஸ் முன்பு நடந்த ஆய்வு அனுபவங்கள் பற்றி எழுதினார்.

அது நடந்தது 1972 செப்டம்பர் 16 அன்று. ஆராய்ந்து கொண்டிருந்த குளவிகள் இருந்த கூட்டின் நம்பர் ஏ449. அதற்குள் இருந்தவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் கொட்டி அவர்கள் அதை ஆராய்ந்தனர். நன்பகல் வெய்யில் மின்னும் நேரத்தில் அதில் ஏராளமான ஈக்கள், தேனீக்கள், குளவிகளுக்கு நடுவில் இந்த குளவிகள் இருந்தன. ஒரு பெண் பெம்பிக்ஸ் மோமா மற்ற குளவிகளை நினைவிழக்கச் செய்து தன் குழந்தைகளுக்கு உணவாக கொண்டு வந்திருந்தது. அந்த கூட்டத்தில் ஏழு குளவிகள் இருந்தன.

அவை அனைத்தும் ஆண் குளவிகளாகவே இருந்தன. எதிர்ப்பை காட்ட உதவும் நஞ்சுள்ள முட்கள் இல்லை என்பதால் பெம்பிக்ஸ் பெண் குளவி ஆண் குளவிகளையே பிடித்து வந்திருந்தது.

மீண்டும் தமாஷ்

பெயரிடுவதுடன் ஆர்னால்டின் நகைச்சுவை உணர்வு நிற்கவில்லை. அவர் தன் காரின் நம்பரை ஆஹா ஹா என்று மாற்றினார். அமெரிக்காவில் கூடுதல் கட்டணம் செலுத்தினால் நாம் விரும்பும் பெயர்களை நம்பர் தட்டுகளில் பயன்படுத்தலாம். காரின் நம்பர் தட்டில் பெயரைப் மாற்றியது பற்றி கேட்டபோது ஆர்னால்டு “புதிதாக கண்டுபிடிக்கும் உயிரினத்திற்கு நான் “ஓ நோ நோ” (Oh No) என்று பெயரிடுவேன்” என்றார்.

இந்த குளவியினத்தைப் பற்றி அதற்குப் பிறகு முழுமையாக எந்த ஆய்வும் நடைபெறவில்லை. அதனால் 1980ல் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இருந்த ஆஹா எவான்சியின் கறுப்பு வெள்ளையில் காணப்படும் ஒரு படம் மட்டுமே இப்போது உள்ளது. ஆஹா ஹா குளவியின் ஒரே ஒரு வண்ணப்படம் சயன்ஸ் 82 இதழில் வெளிவந்தது. இதன் மூலம் ஆர்னால்டின் புகழ் பரவியது.

சயன்ஸ் 82 என்பது உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்படும் ஒரு இதழான சயன்ஸின் (Science) துணை இதழ். சயன்ஸ் இதழில் முழு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும்போது சயன்ஸ் 82ல் மக்கள் அறிவியலுடன் தொடர்புடைய கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் இதன் பெயர் மாறிக் கொண்டிருந்தது. சயன்ஸ் 1986 வரை வெளிவந்தது.

இன்று இவற்றில் ஒரு இதழ் கூட ஆன்லைன் நூலகங்களில் இல்லை. பல விருதுகளைப் பெற்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரிச்சர்ட் கோனிஃப் (Richard Conniff) சயன்ஸ் 82ல் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். அவருடைய கட்டுரையிலும் ஆஹா ஹாவின் முகம் மட்டுமே உள்ள படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

பூமியில் மனிதன் இன்று சுகமாக வாழ குளவிகள் உள்ளிட்ட எண்ணற்ற பூச்சிகள் பேருதவி செய்கின்றன. இந்த உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணராமல் நாம் அவற்றை அல்பமாக நினைக்கிறோம். ஒரு குளவிதான் என்றாலும் அது குறித்த விஞ்ஞானிகளின் ஆய்வுகள் இடர்களும் விசித்திரங்களும் நிறைந்தது என்பதை ஆஹா ஹாவின் கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

மேற்கோள்: https://tinyurl.com/4bs7kx67

சிதம்பரம் இரவிச்சந்திரன்