கும்பகோணத்தில் 94 இளம் மொட்டுகள் கருகி மாய்ந்த கொடிய நிகழ்விற்குப் பிறகு தாம்பரத்தில் நேர்ந்த சுருதியின் சாவு தமிழ் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து அதிரடி ஆணைகளைப் பிறப்பித்து வருகிறது. பள்ளிப் பேருந்துப் பாதுகாப்பிற்காகப் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசிற்கு ஆணையிட்டுள்ளது.

தமிழக அரசும் தன் பங்கிற்குப் பள்ளித் தாளாளர் (என். விசயன்), பேருந்து ஓட்டுநர் (பி.சீமான்), பேருந்து உரிமையாளர் (யோகேஸ்வரன்), பேருந்து நடத்துநர்(சண்முகம்) ஆகியோரைத் தளைப்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது. நடத்துநர் சண்முகம் 17 அகவைப் பையன் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பேருந்துக்குத் தகுதிச் சான்று வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி இடை நீக்கமும் ஊர்தி ஆய்வாளர் இராசசேகர் இடைநீக்கத்துடன் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

students_381கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் பொழுதும் இப்படித்தான் வேக வேகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் தளைப்படுத்தப்பட்டனர். தமிழ்நாடெங்கும் கூரைப் பள்ளிகள் எரியாக் கூரைப் பள்ளிகளாக மாறின. பள்ளித் தாளாளர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் உட்பட பதினேழு பேர் மீது வழக்கு இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.வழக்கை விரைந்து முடிக்கக் கோரி உயர்நீதிமன்றம் அண்மையில்தான் ஆணையிட்டுள்ளது. இவ்வழக்கிலிருந்து அப்போதைய தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் முத்து பழனிசாமி, வட்டாட்சியர் பரமசிவம்,தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது இங்கே நினைவு கூரத் தக்கது.

கும்பகோணம் குழந்தைகள் கொலைக்கும் தாம்பரம் சுருதி கொலைக்கும் இடையே குழந்தைக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் உள்ளன. பள்ளிப் பேருந்து கவிழ்ந்தும், பேருந்திலிருந்து இறங்கும்பொழுது சக்கரத்தில் சிக்கி நசுங்கியும் பள்ளித் தொட்டிக்குள் மூழ்கியும் குழந்தைகள் இறந்துள்ளன. அவற்றை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதில்லை, அல்லது மறைத்துவிடுகின்றன. இதோ சுருதி இறந்து இரண்டு நாள்கள் ஆவதற்கு முன்னரே இன்னொரு மூன்று அகவைக் குழந்தை சுஜாதா பள்ளிப் பேருந்துச் சக்கரத்தில் சிக்கிக் கொடூரமாய் இறந்துள்ளது.சுருதி இறந்த அதே தாம்பரத்தில் ஆகாஸ் என்ற அய்ந்து அகவைக் குழந்தை சுஜாதா போலவே சக்கரத்தில் சிக்கி 08-08-2012 செவ்வாய் அன்று இறந்துள்ளது.இக்குழந்தையின் சாவோடு கடந்த இரு கிழமைகளில் மொத்தம் அய்ந்து குழந்தைகள் பள்ளிப் பேருந்து விபத்தில் இறந்து போயுள்ளதாகக் கணக்குத் தருகிறது இண்டியன் எக்ஸ்பிரஸ்.

குழந்தைக் கொலைகளை விட அன்றாடம் பள்ளிகளில் நடைபெறும் குழந்தை வதைகள் கொடுமையானவை. பலத்த அடிவாங்கி கை கால் வீங்கும் ஒரு சில குழந்தைகள் பற்றிய செய்திகள் மட்டுமே வெளிவருகின்றன. ஒவ்வொரு நாளும் உளச் சிதைவுகளுக்குள்ளாகும் குழந்தைகள் பற்றிய கவலை எவருக்கும் இல்லை.

பொதுவாகக் குழந்தைக் கொலையானாலும் குழந்தை வதையானாலும் மக்கள் கவனத்திற்குட்பட்டு பரபரப்பாகும் பொழுதுதான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பொழுதுதான் விழித்துக்கொண்டதைப் போல அரசும் வேகம் வேகமாக நடவடிக்கை எடுக்கின்றது. பின்னர் படிப்படியாய் எல்லாவற்றையும் ஆறப் போடுகிறது. மக்களும் மறந்து போய்விடுகின்றனர். நடந்தவை அனைத்தும் ஆண்டு நினைவுச் சடங்குகளாய் மாறிவிடுகின்றன. கொலைகளும் வதைகளும் துளிர்விட்டுத் தொடர்கின்றன.

உண்மையிலேயே அரசுக்கும், மற்றவர்களுக்கும் குழந்தைகள் நலனிலும், பாதுகாப்பிலும் கல்வியிலும் அக்கறை இருக்குமானால், மேம்போக்கான நடவடிக்கைகள் எடுப்பதைக் கைவிட்டு, கல்விச் சூழலில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். பள்ளிக் கட்டடங்களை மேம்படுத்துவதும், பேருந்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், ஆசிரியர் ,அதிகாரிகளைத் தண்டிப்பதும் நீடித்த பயனைத் தராது. புரையோடிப் போன புண்ணிற்கு, புனுகு தடவுவது பலன் தராது. அறுவை மருத்துவமே உடனடித் தேவை.

கல்வி முழுமையான வணிகப் பண்டமாய் மாறிப் போனதே சுருதி, சுஜாதா ஆகாஸ்களின் மரணத்திற்குக் காரணம். நடந்தவை மரணங்கள் அல்ல. பொருளீட்டும் போட்டியில் நடைபெற்ற பச்சைப் படுகொலைகள். இனியும் இத்தகைய கொலைகள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் கல்வி வணிகத்திற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். உடனடியாக இது இயலாதெனில், படிப்படியாக அரசுப் பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். 25% கட்டாய இலவயக் கல்வி என்ற கண்ணாமூச்சி விளையாட்டுகளைக் கைவிட்டு அனைவருக்கும் அரசு தரமான இலவயக் கல்வி வழங்க வேண்டும்.

கல்வி வணிகத்திற்கு உரமாயிருப்பது ஆங்கில வழிக் கல்வியாகும். தமிழ்நாட்டில் கல்வி தமிழ்மொழியில்தான் வழங்கப்பட வேண்டும். ஆங்கிலமோ இந்தியோ அல்லது வேறெந்த மொழியானாலும் அவை மொழிப்பாடங்களாக மட்டுமே கற்றுத்தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் சமச்சீர்க் கல்வி அதன் உண்மையான பொருளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அமையும். தனியார் பள்ளிகள் மய்ய கல்விப் பாடத்திட்டத்திற்கோ (சி.பி.எஸ்.இ) வேறு உலகப் பாடத்திட்டத்திற்கோ மாறுவது தடைசெய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் தமிழக அரசால் வகுக்கப்படும் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வோர் ஊரிலும், நகரத்திலும் குழந்தைகள் நடந்து சென்று படிக்கும் நிலையிலான அருகமைப் பள்ளிகள் அமைந்திருக்க வேண்டும். அந்தந்தந்தப் பகுதிக் குழந்தைகள் அந்தந்தப் பகுதிப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். தொலைதூரப் பள்ளிகளில் சென்று சேர்வது தடுக்கப்பட வேண்டும். இப்பொழுது தனியார் பள்ளிகள் பலகல் தொலைவிற்குச் சென்று விடிந்தும் விடியாததுமாகக் குழந்தைகளைத் தூக்கி வருவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் இது ஒரு பெரும் போட்டியாகவே நடைபெறுகிறது. பள்ளிப் பேருந்து விபத்துகள் நடைபெறாமலிருக்க அந்தந்தப் பகுதிக் குழந்தைகள், அந்தந்தப் பகுதிப் பள்ளிகளிலேயே மாற்றிச் சேர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவை போன்ற நடவடிக்கைகள்தான் தமிழ் நாட்டுக் குழந்தைகளைக் காக்கும்; அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வழி வகுக்கும். ஆனால், இன்று ஆட்சி நடத்தும் அ.தி.மு.க.விற்கோ நேற்று ஆட்சி நடத்திய தி.மு.கவிற்கோ இத்தகைய எண்ணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கல்வியாளர்களும் உளவியல் அறிஞர்களும் தாய்மொழிக் கல்வியின் தேவையை வற்புறுத்தி வரும் நிலையில், உலக நாடுகள் அனைத்திலும் அதுவே நடைமுறையில் இருக்கும்போது அதிமுக அரசு இப்பொழுது அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்விமுறையை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் இதையும் தொடங்கி வைத்த பெருமை திமுகவிற்கே உண்டு.

கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே ஆங்காங்கு மாநகராட்சிப் பள்ளிகளிலும் மாதிரிப் பள்ளிகள் என்ற பெயரில் சில அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்கி வைக்கப்பட்டது. மக்களை இலவய மாயையில் போட்டி போட்டுக்கொண்டு வீழ்த்துவதைப் போலவே ஆங்கில மாயையிலும் வீழ்த்த இக்கட்சிகள் போட்டி போடுகின்றன. ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான உறுதியான கொள்கை கொண்ட தேர்தல் அரசியல் கட்சிகள் எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை. ‘அனைவருக்கும் கல்வி! அனைத்தும் தமிழில்!’ என்பதை உறுதியாய்ப் பற்றி நிற்கும் ஆற்றல்கள் ஒன்றுபடுவதன் மூலமே தமிழ் நாட்டுக் கல்விச் சூழலில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ‘அனைவருக்கும் கல்வி! அனைத்தும் தமிழில்! அரசே தருக!’ என்பது நம் முழக்கமாகட்டும்.

Pin It