ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கர்நாடகத்தில் கன்னட ராஜயோத்சவா வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கடந்த சில வருடங்களாகவே இதை நான் பிரமிப்போடு பார்த்து வருகிறேன். ஆனாலும் இவ்வாண்டு ஒரு வேலையாக பெங்களுரிலிருந்து மைசூர் வரை பயணித்துத் திரும்பியபோது நான் பார்த்த காட்சிகள் என் பிரமிப்பைக் கூடுதலாக்கியது. அதனாலேயே அது குறித்து எழுதவும் தோன்றியது.

 அது சரி, அது என்ன கன்னட ராஜயோத்சவா? இது பற்றி இதுவரை தெரியாதவர்களுக்காக ஓர் சிறிய விளக்கம்.

 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைந்தபோது கர்நாடக மக்கள்; வாழ்ந்த பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு மைசூர் மாநிலம் அமைக்கப்பட்டது. பின்னர் 1973 ஆம் ஆண்டு அதே நவம்பர் முதல் நாளில் அது “கர்நாடகா” எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்த வரலாற்று நிகழ்வைப் போற்றும் வகையில் கர்நாடக அரசு கொண்டாடும் நாள்தான் “கன்னட ராஜயோத்சவா”!

 கர்நாடக அரசு இந்நாளை சுதந்திர தினம் போலவே கொண்டாடி வருகிறது. பள்ளிகளில், அரசு அலுவலகங்களில் கன்னடக் கொடி ஏற்றப்படுகிறது.

 ஆம்! அன்றைய நாளில் மஞ்சளும் சிகப்பும் கொண்ட அந்தக் கொடியை கர்நாடகம் முழுக்க நீங்கள் பார்க்கலாம். பெங்களுரில் தம் மாநில முதல்வர் கன்னடக் கொடி ஏற்றுகிறார். கன்னடத் தாய்க்கு ப+சை செய்யப்படுகிறது. அலங்கார அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ராஜயோத்சவா விருதுகள் வழங்கப்படுகிறது.

 கன்னட அரசின் கொண்டாட்டங்களை விட என்னைக் கவர்ந்து கன்னட மக்களின் கொண்டாட்டங்கள்தான். அனைத்து ஊர்களிலும் தெருக்களிலும் கன்னடக் கொடிகள் ஏற்றப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கன்னட இன உணர்வூட்டும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை ராஜ்குமாரின் பாடல்கள். சொல்லப்போனால் இந்தக் கன்னடக் கொடிக் கலாச்சாரத்தைத் தொடக்கி வைத்ததே ராஜ்குமார் எனலாம். எல்லாக் கன்னடப் படங்களிலும் இந்தக் கன்னடக் கொடி பின்னணியில் பறக்கத்தான் கன்னடத் திரைப்படக் கதாநாயகர்கள் அறிமுகப் பாடல்களில் தோன்றி ஆடுகிறார்கள். ராஜ்குமாரைப் போலவே இக்கொடியும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அம்மக்களால் கன்னட அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் கன்னடக் கொடியைப் பயன்படுத்துகின்றன.

 இவை எல்லாம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்க முடியாத நிகழ்வுகள் என்றே நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக தமிழகத்தில் நடக்குமா? கட்சிப் பாடுபாடின்றி ஓர் தமிழ்க் கொடியை உருவாக்க முடியுமா? கழகங்கள் ஒத்துழைக்குமா? காங்கிரசு அதையும் பிரிவினைவாதம் என்று சொன்னாலும் சொல்லும். ஆனால் கர்நாடகத்தில் இந்தியத் தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாரதிய சனதாவும் கன்னட ராஜ்யோத்சவாவைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றன. கன்னடக் கட்சிகளும் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றன. கீழ்த்தரமான அரசியல் பேரங்களிலும் இறங்குகின்றன. ஆனால் இனம், மொழி என வந்துவிட்டால் அனைத்தையும் மறந்துவிட்டு ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அண்மையில் கூட ஆட்சிக் கவிழ்ப்பு நாடகங்கள், அதற்கான பேரங்கள் என மிகக் கேவலமாகக் கன்னட அரசியல்வாதிகள் அடித்துக் கொண்டார்கள். அதே காலகட்டத்தில் காவிரி குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டுத் தந்த முழக்கம்: “தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது”! ஆனால் தமிழகத்தில் அய்யாவும், அம்மாவும் உரிமை மீட்க ஒன்றுபடாமல் யார் முதலில் துரோகம் செய்தது என ஒருவரை ஒருவர் குற்ற அறிக்கை போர் நடத்தி தமக்குள் அடித்துக் கொண்டார்கள். பாவம் தமிழ்நாடு!

 இந்தியாவில் தமிழர்கள்தான், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வழி முதன் முதலில் தனித்துவத்தையும் மொழி வழித் தேசிய உணர்வையும் பதிய வைத்தவர்கள். மற்ற தேசிய இனங்களுக்கு முன்னரே விழித்துக் கொண்ட இனம் தமிழினம். இன்றைய நிலைமையோ தலைகீழ்! இன்றைய தமிழ்ச் சமூகத்தின் இளையோர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தவறோ எனக் கருத முற்பட்டதற்கு திராவிட அரசியலின் வீழ்ச்சியே காரணம். திராவிடக் கட்சிகள் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, விலைபோய் ஆண்டுகள் பல ஓடிவிட்டன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ன? மாநில சுயாட்சி என்பதைக் கூட இவர்கள் மறந்து போய்விட்டார்கள். இத் தளங்களில் இந்தியாவின் பிற தேசிய இனங்கள் தமிழகத்தைத் தாண்டி விழிப்புணர்வோடு முன்னணியில் உள்ளன என்றால் அது மிகையன்று.

 கர்நாடகத்தில் இப்போக்கை என்னால் பிரிவினைவாதம் என்று பார்க்க முடியவில்லை. கன்னட இன விழிப்புணர்வு என்றே பார்;க்கிறேன். கன்னடர்கள் இந்தி எதிர்ப்பு என்றோ இந்திய தேசியத்துக்கு எதிராகவோ எந்த ஒரு நிலைப் பாட்டையும் எடுத்ததில்லை. சொல்லப் போனால் கன்னட ராஜயோத்சவா கொண்டாட்டமெல்லாம் வெற்று அலங்காரங்கள் தான். மெய்யான கன்னடத் தேசிய எழுச்சி அல்ல என்பதை மறக்கவில்லை. அதேநேரம் 'கன்னட ரக்சன வேதிகே' போன்ற பல்வேறு கன்னட அமைப்புக்கள் 'ஐடி' முதல் இரயல்வேதுறை வரை கன்னடர்களின் வேலைவாய்ப்புக்காகப் போராடி வருவதை வெறும் அலங்காரமாகப் பார்த்துவிடவும் முடியாது.

 கன்னடர்களின் இவ்வெழுச்சிக்கு தமிழர்கள் மீதான வெறுப்புணர்வும் காரணம் என்றே கருதுகிறேன். காவிரிப் பிரச்சனையும், கர்நாடகாவில் வாழும் 30 இலட்சம் தமிழர்களும் அவர்கள் கண்ணை உறுத்தாமல் இல்லை. கர்நாடகாவில் தமிழர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகம் உள்ள தெலுங்கர்கள் மீது அவர்களுக்கு அப்படிப்பட்ட வெறுப்புணர்வு இல்லை. அரசியல் பலமும், பணபலமும் பெற்ற தெலுங்கர்களைக் காட்டிலும் உழைப் பாளர்களாக உள்ள தமிழர்கள் மீது ஏன் இந்த வெறுப்புணர்வு எனப் புரியவில்லை. அது வரலாற்று வழி வந்த பகையா? இல்லை தமிழர்கள் அவர்கள் தாக்கப்படும் நிலையில் உள்ளார் களா? அல்லது சில கன்னட அமைப் புகளின் அரசியலா?

 தமிழகத்திற்கு அடுத்தபடியாக கன்னடர்கள் மகாராஷ்டிராவுடன் அதிகம் மோதுகிறார்கள். எல்லைப் பிரச்சனையில் பெல்காம் நகரம் தங்களது எனப் போராடும் மராத்திகளைச் சமாளிக்கக் கர்நாடக அரசு நிறையவே மெனக்கெடுக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை கர்நாடக அரசின் சட்டசபையும் அமைச்சரவைக் கூட்டமும் பெல்காமில் நடக்கிறது. சின்ன விதான சௌதாவும் காட்டப்படுகிறது. மற்றபடி கன்னடர்கள் அன்பானவர்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை நான் அனுபவப்ப+ர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

 இன்று பெங்களுரில் ஏராளமான வாகனங்கள் கன்னட எண்களோடு ஓடுகின்றன. வாகனங்கள் கன்னட எண்களோடு ஓடுகின்றன. கன்னட இயக்கத்தினர் மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுகிற கன்னடர்களும் கன்னட எண்களுடனேயே வாகனங்கள் ஓட்டுகிறார்கள். விலையுயர்ந்த மகிழுந்துகளிலும் கன்னட எண்களே இடம் பெற்றுள்ளன. அப்படி இங்கும் பயன்படுத்து வதா? அல்லது அம்முறை சரியா? தவறா? என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இன்றைய இளைய தமிழ்ச் சமூகம் அப்படிச் செய்யத் தயாராக இருக்கிறதா?....... ஆங்கில மோகத்தால் இங்கே அப்பா,..... அம்மாவே டாடி, மம்மி ஆகிவிட்டார்களே! தமிழ் படத்திற்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற வரலாற்றுச் சிறப் புமிக்க! சட்டத்தை செயல் படுத்த வேண்டியிருக்கிறது. அதையும் மீறி ரெட் ஜெயன்ட்களும், கொலவ்டு நைன்களும் எனப் பெயர் வைத்து தமிழால் வளர்ந்தவர்களின் இன்றைய தலைமுறை தமிழப்பற்று என்றால் என்ன என்று கேட்கிற நிலையே நிலவுகிறது.

 ஆக தமிழர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் கன்னடர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. கற்கச் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு. இது குறித்து நாம் வேகமாய்ச் சிந்தித்து செயல்பட வேண்டியவர்களாய் உள்ளோம்.

Pin It