கர்நாடகாவில் துமகூர் மாவட்டத்தில் குப்பி (Gubbi) என்ற ஊரில் தாய் தந்தையின் நிழலில் சிரித்து மகிழ்ந்து விளையாடி நடந்த அந்த சிறுமி,  ஹுலிகலில் (Hulikal) இருந்து விவாக ஆலோசனையுடன் வந்த சிக்கையாவுடன் அவரது ஊருக்கு பயணிக்கத் தொடங்கினார். சாலுமரடா திம்மக்கா (Saalumarada Thimmakka) என்ற இயற்கையை நேசிக்கும் பெண்மணியின் கதை அங்கிருந்துதான் தொடங்குகிறது.

காலத்தின் கணக்கு சொல்லி கதையை ஆரம்பிக்க வேண்டும் என்றால் நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்புள்ள காலத்திற்கு நாம் பயணம் செல்ல வேண்டும். 1911ல் மைசூர் மாகாணத்தில் இருந்த துமகூர் (Tumakur) மாவட்டத்தில் குப்பியில் பிறந்தார். ராமநகர (Ramanagara) மாவட்டத்தில் மாகடி (Magadi) தாலுகாவில் ஹுலிகல் என்ற கிராமத்தில் இருந்து திருமண ஆலோசனையுடன் சிக்கைய்யா (Chikkaiya) வந்தார்.

பதிமூன்றாவது வயதில் சிக்கையாவின் கையைப் பிடித்து அவருடைய கிராமத்துக்குப் போனார். கிராமத்தில் குவாரியில் இருவரும் கூலி வேலை செய்தார்கள். சிக்கைய்யாவுக்கு சொந்தமாக இருந்த இடத்தில் விவசாயமும் நடந்தது.thimmakaகல்யாணமாகி நாட்களும், வாரங்களும், வருடங்களும் பல கடந்து போயின. தம்பதியருக்கு குழந்தை இல்லை. இருவரும் ஒரு குழந்தைக்காக பிரார்த்தனைகளும் நாட்டுப்புற சிகிச்சைகளுமாகக் காத்திருந்தனர். சிக்கைய்யாவின் சொந்தக்காரர்கள் மற்றும் அவரின் சொந்தக் குடும்பத்தாரிடம் இருந்து வேதனை தரும் வார்த்தைகள் திம்மக்காவின் நெஞ்சில் அம்புகளாகப் பாய்ந்தன. தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட யோசித்த எத்தனையோ ராத்திரிகள்.

குழந்தை பெற அருகதையில்லாதவள் என்று பலரும் மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து திம்மக்காவை தள்ளி வைத்தனர். அழுத அந்த நாட்களை நினைக்கும்போது இப்போதும் அவருடைய கண்கள் கண்ணீரால் நிறைகின்றன. ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல. இருபது ஆண்டுகள் இருவரும் குழந்தையில்லாமல் மனதிற்குள் துயரத்தை மறைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். வாழ்வின் வசந்தகாலம் முழுவதும் துக்கத்தில் கரைந்து போனது.

புதிய பாதை

குழந்தை இல்லாத துக்கத்தை மறைக்க இருவரும் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தனர். மரங்களை நடுவது! குழந்தைகளாக நினைத்து கண்ணின் மணி போல வளர்ப்பது! சிறிய வயது முதலே பச்சை நிறத்தை விரும்பிய திம்மக்காதான் இந்த யோசனையைக் கூறினார். வீட்டைச் சுற்றிலும் சிறிய சிறிய பழமரங்களை நட்டு வளர்த்து வந்த அவர், மற்றவர்களுக்கும் பயன்படும் விதத்தில் மரங்களை நடலாம் என்று நினைத்தார்.

நிழல் தரும் மரங்களை நட்டால் ஊருக்கு குளிர்ச்சியும், பறவைகளுக்கு வாழ இடமும் கிடைக்கும் என்று இருவரும் கருதினர். குப்பியில் இருந்து ஹுலிகளுக்கு வந்து சேர்ந்த புதிதில் திம்மக்கா ஒன்றைக் கவனித்தார். கிராமத்தில் பறவைகளின் சத்தம் அதிகம் ஒன்றும் கேட்பது இல்லை. பொதுவாக காய்ந்துபோன பூமி அது. மழை குறைவு. அடுத்த ஊருக்குச் செல்லும் சாலைகளில் எங்கும் நிழல் தரும் மரங்கள் இல்லை.

இந்தப் பிரச்சனைக்கு பரிகாரம் தேடுவதும் இருவரின் முயற்சியாக இருந்தது. ஹுலிகல் ஊர் சாலையோரம் ஒரு நாள் இருவரும் சேர்ந்து ஒரு ஆலமரக் கன்றை நட்டனர். அந்த சம்பவம் 1948ல் நடந்தது. மரக்கன்றை நடத் தேர்ந்தெடுத்த இடத்தை சுத்தப்படுத்தி சிக்கைய்யா பெரிய குழியைத் தோண்டினார். "நாங்கள் இருவரும் சேர்ந்துதான் மரக்கன்றை நட்டோம். அன்று தண்ணீர் ஒரு பெரிய பிரச்சனை. தொலைதூரம் நடந்துபோய் தண்ணீரைச் சுமந்துகொண்டு வரவேண்டும். என்னுடைய உள்ளுக்குள் ஒரு புதிய சிசு உருவானது போல தோன்றிய சந்தோஷமே இதற்குக் காரணம்" என்று திம்மக்கா நினைவு கூறுகிறார்.

"ஆண்டிற்கு ஆண்டு மரங்களின் எண்ணிக்கையை அதிகமாக்கினோம். ஆரம்பத்தில் நட்ட மரம் வளர்ந்தது. நிழற்பந்தல் போட்டு படர்ந்தது. நிழல் குடை விரித்தது. பிறகு ஒவ்வொரு மரமும் ஊரைப் பசுமையாக்கின. அங்கு பறவைகள் வரத் தொடங்கின. குடியேற ஆரம்பித்தன. கூடு கட்டின."

இருவரும் மரங்களுக்கு காவல் இருந்தனர். குழந்தைகளை வளர்ப்பது போல மரங்களை வளர்த்தனர். அவற்றைக் கட்டிப் பிடித்தனர். அவற்றுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தார் திம்மக்கா. நான்கு கிலோமீட்டர் நடந்து போய் நீரை எடுத்துக்கொண்டு வந்து மரக்குழந்தைகளுக்கு கொடுத்தனர். தாகம் தீர்த்தனர். கன்றுகளை ஆடு மாடுகள் தின்னாமல் இருக்க அவற்றைச் சுற்றி முள் வேலியைப் போட்டனர்.

தலை நிமிர்ந்து நிற்கும் மரங்களின் வரிசை

முழு நேரமும் மரம் நட, அவற்றை வளர்க்க செலவிட விரும்பிய திம்மக்கா குவாரி வேலையைக் கைவிட்டார். 1948ல் தொடங்கிய மரம் நடும் மகத்தான வேலை தொடர்ந்து கொண்டேயிருந்தது. இதற்கிடையில் நாடும், நகரமும் வளர்ந்தது. ஹுலிகலில் கிராமப்பாதை முக்கிய சாலையானது. முன்னேற்றமடைந்தது. 45 கிலோமீட்டர் ஹுலிகல் குடுர் (Kudur) சாலையில் இப்போதும் இருவரும் நட்ட மரங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

ஒன்றிரண்டு இல்லை, 385 ஆலமரங்கள். இவற்றின் இன்றைய மதிப்பு 1.5 மில்லியன் ரூபாய். இன்று கர்நாடக அரசு இவற்றின் பராமரிப்பை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளது. ஃபைகஸ் (Ficus) என்ற குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரத்தின் கன்றுகளே சுலபமாகக் கிடைத்தன என்பதால் இவர்கள் இருவரும் இதை நட்டு வளர்த்தனர். சிக்கைய்யாவிற்கு விவசாயம் நன்றாகத் தெரியும். காலநிலைக்கேற்ப விவசாயத்துடன் தொடர்புடைய விவரங்கள் அவரிடம் இருந்தே திம்மக்காவிற்குக் கிடைத்தன.

கன்றாக இருக்கும்போது இவற்றிற்கு நன்றாக நீர் ஊற்ற வேண்டும். தொடக்கத்தில் தோன்றும்போதெல்லாம் கன்றுகளை நட்டனர். பிறகு மழைக்காலம் வரும் வரை காத்திருந்து நட்டனர். நடும் கன்றுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு நடவில்லை. இருவருக்கும் கால்நடையாகப் போய் பராமரிக்கக் கூடிய தொலைவுவரை மரம் நட்டனர். அரசு கணக்கெடுப்பு நடத்தியபோதே நட்ட மரங்களின் எண்ணிக்கை தெரிந்தது.

சிக்கைய்யாவின் மறைவு

1991ல் திம்மக்காவையும், மரக் குழந்தைகளையும் தனிமையின் துயரத்தில் கைவிட்டுவிட்டு சிக்கைய்யா காலமானார். துக்கத்தை மறைக்க திம்மக்கா மரக் குழந்தைகளின் மடியில் வந்து இருந்துவிட்டுப் போவார். அவர்களிடம் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வார். சிக்கைய்யாவின் மரணத்திற்குப் பிறகே இருவரும் நிழல் குடை விரித்த நன்மையை வெளியுலகம் தெரிந்து கொண்டது. முடங்கிப் போகாமல் கணவரின் நினைவுகள் தந்த உத்வேகத்தில் திம்மக்கா மீண்டும் செயலில் இறங்கினார்.

கோடாரிக்கு பதில் சொல்லும் திம்மக்காவின் வாள்!

பாதையோரங்களைத் தேர்ந்தெடுத்து மரங்களை நட்டார். வளர்ச்சியின் பெயரால் மரங்களைப் பிடுங்கி எறிய கோடாரியுடன் வந்தவர்களுக்கு நேராக திம்மக்கா வாளோங்கினார்! எந்த அரசின் எந்தத் திட்டமாக இருந்தாலும் மரத்தை வெட்டி ஏற்படும் வளர்ச்சிக்கு உடன்பட திம்மக்கா தயாராக இல்லை.

கணவர் போன பிறகு இவர் எட்டாயிரம் மரங்களை தன்னந்தனி ஆளாக இருந்து நட்டார். இதனுடன் திம்மக்கா ஊருக்கும், உலகிற்கும் சாலுமரடா திம்மக்கா ஆனார். சாலுமரடா என்ற கன்னட சொல்லுக்கு மரங்களின் வரிசை என்று பொருள். ஆலமரங்களை அதிகம் நட்டதால் சிலர் அவரை ஆலமரடா திம்மக்கா (Aala Marada Thimmakka) என்று அழைத்தனர். மரங்கள் வளர்ந்து பெரிதானவுடன் குழந்தைகள் இல்லாத துக்கம் மறைந்தது.

ஒவ்வொரு மரமும் என் குழந்தை

மிகக்குறைந்த சொந்த வருமானத்திலேயே இருவரும் கன்றுகளை நட்டுப் பராமரித்தனர். "சொந்தக் குழந்தைகளைப் போல வளர்க்கிறேன் என்று நான் சும்மா சொல்லவில்லை. உண்மையில் பெற்றெடுத்த குழந்தைகளைப் போலவே ஒவ்வொரு மரத்தையும் நான் வளர்த்தேன். என்னுடைய குழந்தைகளின் ஒரு சிறிய கிளை ஒடிந்தால் கூட அது எனக்கு வேதனையைத் தரும். யாராவது சொந்தக் குழந்தையை கொலை செய்ய விரும்புவார்களா? நானும் அதையேதான் செய்தேன்.

என் குழந்தைகளை சுயநலத்திற்காக பலி கொடுக்க நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டேன். எனக்கு மட்டும் இல்லை. ஊருக்கே நிழல் தரும் குழந்தைகள் மரங்கள்" என்கிறார் அவர். பேக்கெபள்ளி (Baggepalli) - ஹலகுரு (Halaguru) சாலையின் விரிவாக்கத்திற்கு 2019ல் அரசு திட்டமிட்டது. அப்போது திம்மக்கா நட்ட 385 மரங்களை வெட்ட உத்தரவிடப்பட்டது.

உடனே திம்மக்கா அன்றைய முதல்வர் ஹெச் டி குமாரசாமியையும், துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவையும் நேரில் சென்று பார்த்தார். பலனாக 70 ஆண்டு வயதுடைய ஆலமரங்களை வெட்டும் திட்டத்தை அரசு கைவிட்டு மாற்று வழிகளைப் பரிசீலித்தது.

மனதின் பசுமையே ஆயுள் இரகசியம்

ஆயுளின் நூறாண்டைக் கடந்து 112ம் வயதை அடைந்திருக்கிறார் திம்மக்கா. நீண்ட ஆயுளுடைய இரகசியத்தைக் கேட்டால் மனது எப்போதும் பசுமையாக இருப்பதே காரணம் என்கிறார் அவர். முதுமையின் தொந்தரவுகள் உள்ளன என்றாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இளம் தலைமுறைக்கு சூழல் முக்கியத்துவத்தை உணர்த்த கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் இந்த மூதாட்டி பயன்படுத்துகிறார்.

திம்மக்கா என்ற இந்த நன்மை மரத்தைத் தேடி ஏராளமான விருதுகள் அங்கீகாரங்கள் வந்து குவிந்தன. 2019ல் பத்மஸ்ரீ விருது. 2019 மார்ச் 16 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா நடைபெற்றது. அன்று குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்திடம் இருந்து திம்மக்கா விருது பெற்றார்.

அப்போது திம்மக்கா குடியரசுத் தலைவரின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். இது செய்தியானது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விருது வாங்க செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கைவிட்டு விட்டே திம்மக்கா குடியரசுத் தலைவரின் தலையில் தொட்டார். ஆனால் இதை பிரச்சனையாக்காமல் அவர் தனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாக இதனை நோக்கினார்.

முந்தைய கர்நாடக மாநில பாஜக அரசு திம்மக்காவை கேபினெட் அந்தஸ்துடன் கர்நாடகாவின் சூழல் தூதுவராக நியமித்தது. ஆட்சி மாறியபோதும் இப்போதுள்ள காங்கிரஸ் அரசு, மரங்களின் மூதாட்டியான திம்மக்காவை இதே பதவியில் தொடர அனுமதித்துள்ளது.

ஹம்பி பல்கலைக்கழகம் 2010ல் நடோஜா (Nadoja) விருது வழங்கி கௌரவித்தது. 1995ல் தேசிய குடிமகள் விருது, 1997ல் இந்திரா ப்ரியதர்சினி விருக்ஷமித்ரா விருது, அதே ஆண்டில் வீர சக்ரா ப்ரசாஸ்டி (Veerachakra Prashasthi) விருது, கர்நாடகா அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினரின் மதிப்பு சான்றிதழ், பெங்களூர் இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் பாராட்டுச் சான்றிதழ், 2000ம் ஆண்டிற்கான கர்நாடகா கல்பவலி (Kalpavalli) விருது, 2006ல் காட்ப்ரீ பிலிப்ஸ் (Godfrey Phillips) வீரதீரச் செயல்களுக்கான விருது போன்றவை இதில் ஒரு சில.

மேலும் வாழும் கலை அமைப்பினர் வழங்கிய விசாலாட்சி விருது, 2015ல் ஹூவினஹோல் (Hoovinahole) அறக்கட்டளையால் வழங்கப்பட்ட விஸ்வாத்மா (Vishwathma) விருது, 2016ல் உலகின் தலைசிறந்த பெண்களில் ஒருவராக உலகப் புகழ் பெற்ற பி பி சி நிறுவனத்தின் தேர்வு, பரிசாரா ரத்னா (Parisara Rathana) விருது, கிரீன் சாம்பியன் (Green champion) விருது, விருக்‌ஷமாதா (Vrikshamatha) விருது என்று அங்கீகாரங்களின் பட்டியல் நீள்கிறது.

1999ல் 'Thimmakka Mathu 284 Makkalu' என்ற பெயரில் இவரது பணிகள் பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்கப்பட்டது. இப்படம் 2000ம் ஆண்டில் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது இவரின் புகழை உலகறியச் செய்தது.

இனியென்ன?

இனி என்ன ஆசை என்ற கேள்விக்கு ஹுலிகலில் கணவரின் நினைவாக அவரது பெயரில் ஒரு மருத்துவமனை உருவாக்கப்பட வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். இதற்காக ஒரு அறக்கட்டளையும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

"கிராம மக்கள் இப்போதும் மருத்துவ வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். கணவரும் நானும் சேர்ந்தே மரங்களை நட்டோம். ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போது இது எதுவும் நடக்கவில்லை. எங்களைப் பற்றி வெளியுலகிற்குத் தெரியவில்லை. அவர் போய் சேர்ந்தபிறகே இந்த விருதுகள் என்னை மட்டும் தேடி வருகின்றன. அவரும் நினைவுகூரப்பட வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரில் மருத்துவமனை வேண்டும்" என்று தன் கனவு பற்றி கூறுகிறார். இது தவிர அவரது கிராமத்தில் நடக்கும் வருடாந்திர திருவிழாவிற்காக மழைநீரை சேமிக்க ஒரு மேல்நிலை நீர்த்தொட்டியை அமைக்கும் பணியில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

நல்லது செய்ய படிப்பும், பட்டங்களும் தேவையில்லை. நன்மை செய்யும் மனது இருந்தால் போதும். இந்த ஆலமரங்களின் தாயே இதற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/special-pages/world-environment-day-2023/story-about-saalumarada-thimmakka-world-environment-day-2023-1.8614550

&

https://en.m.wikipedia.org/wiki/Saalumarada_Thimmakka

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It