நாகரிகம் அடைந்த மனித இனம் என்று சொல்லிக் கொள்ளும் மேற்குலக நாடுகள் தங்கள் நாட்டின் நாகரீகமான பார்வையாளர்களுக்கென 35,000 ஆப்பிரிக்க பூர்வகுடி மக்களை கூண்டில் அடைத்து வைத்து காட்சி படுத்தினார்கள் (Human Zoo) என்பது வரலாற்றின் கொடூரங்களில் ஒன்று! அதுவும் 20-ஆம் நூற்றாண்டில் நடந்தேறியது மனித இனம் இன்னும் காட்டுமிராண்டியாகவே உள்ளனர் என்பதை காட்டுகிறது.

15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த பிரபுக்களுக்குக் கேளிக்கை காண்பிக்க ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் விலங்குகள் போல் வேட்டையாடப்பட்டு விற்கப்பட்டனர். அவர்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி வந்து அவர்களுடைய சடங்குகளை நடத்திக் காண்பித்தனர். இது 19-ஆம் நூற்றாண்டில் மக்களிடையே பிரசித்தி பெற்ற பொழுதுபோக்காகவும் பணம் கொழிக்கும் தொழிலாகவும் மாறியது.

“நாங்கள் நாகரிகம் அடைந்த விட்டோம்!” என்று கூறிய ஐரோப்பியச் சமூகம் மிருகங்களை அடைத்து வைப்பதைப் போல மனிதர்களை அடைத்து மனித காட்சி சாலைகளை உருவாக்கினார்கள். கண்காட்சி, திரையரங்கம், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பூர்வ குடிகள் நிலப்பரப்பில் வாழும் கிராமங்களைப் போல் உருவாக்கி அதில் அடைத்து வைத்து பணம் சம்பாதித்தனர்.

congolese girl in human zoo(1958 உலக கண்காட்சியில் ஆப்பிரிக்க காங்கோ நாட்டு சிறுமியை கண்டுகளிக்கும் பெல்ஜிய மக்கள்)

நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி இல்லாத காலங்களில் மனிதர்கள் மிருகக்காட்சி சாலைகள், நாடக அரங்குகளுக்குச் சென்று பொழுதைக் கழித்தார்கள். அது போதாமல், தோற்றத்தில் தங்களைக் காட்டிலும் மாறுபட்ட மனிதர்களைக் காண்பதிலும் ஆர்வம் காட்டியதன் விளைவாக மிருகக்காட்சி சாலைகளில் அவர்களை அடைத்து காட்சிப்பொருளாக்கினர். இது வெறும் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல், வெள்ளையர்களின் தோல் நிற மேன்மையை உலகுக்குக் காட்டவே நடைமுறைப்படுத்தபட்டது.

1904-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் புனித லூயி உலக கண்காட்சியில் (St. Louis world Fair, Missouri) மனித காட்சிக்கென பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இகோர்ட்ஸ் (Igorts) பூர்வ குடி மக்கள் குழுக்களைச் சேர்ந்த 1200 பேர் இழுத்து வரப்பட்டனர். இவர்களை காட்சிப்படுத்திட மட்டுமே 47 ஏக்கர் பரப்பளவில் “மனித” மிருக கண்காட்சி சாலையை அமைத்தார்கள். மற்ற பூர்வ குடி மக்களை விடவும் பிலிப்பைன்ஸ் வாழ் பூர்வ குடி மக்களை அனைவரும் விரும்பி கண்டுகளித்தனர். அதற்கு முக்கிய காரணம் பிலிப்பைன்ஸ் மக்கள் நாயை உணவாக உட்கொள்ளுபவர்கள் எனவும், அவர்களில் சில இனக் குழுக்கள் நரமாமிசம் (மனித மாமிசம்) உண்பவர்கள் என்றும் விளம்பரங்கள் செய்யப்பட்டதே ஆகும்.

filipinos at dreamland(பிலிப்பைன்ஸ் நாட்டு இகோர்ட்ஸ் (Igorts) பூர்வ குடி மக்களை காட்சி சாலையில் கண்டுகளிக்கும் அமெரிக்கர்கள்)

ஆப்ரிக்காவில் வாழ்ந்த பூர்வ குடி மக்களைக் கடத்திக் கொண்டு வந்து மிருகங்களைப் போல கூட்டமாகக் கூண்டில் அடைத்து வைத்து நாகரீக மேற்கத்தியர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டனர். இன்னும் சிலர் கதை வசனம் எழுதி அம்மக்களை நாடகங்களில் நடிக்க வைத்தார்கள். அவர்களைக் காட்டு வாசிகள் போலவும் வெளி ஆட்களை அவர்கள் வாழும் பகுதிகளில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதைப் போலவும் இதைவிடக் கொடுமையாக அவர்கள் நரமாமிசம் (Cannibalism) சாப்பிடுபவர்கள் போலவும் சித்தரித்தார்கள். உண்மையைச் சொல்லப் போனால், ஆப்பிரிக்காவில் தங்களுக்கென்று அரசுகளை உருவாக்கி அம்மக்கள் பல தலைமுறைகளாக அவர்கள் பண்பாடு கலாச்சாரத்துடன் நாகரீகமாக வாழ்ந்து வந்தவர்கள்.

அன்று ஒவ்வொரு இனக்குழுவிலும் ஒர் பூர்வ குடியின் பெயரைப் பிரபலப்படுத்தி வேடிக்கை காண்பித்து வந்தனர்.

“டாம்போ” (Tambo) எனப்படுபவர் ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழ்ந்த பூர்வ குடி இனத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி குடும்பத்தைச் சேர்த்து 17 பூர்வ குடி பெண்கள் குழந்தைகள் அனைவரையும் (Barum & Bailey Circus) விலைக்கு வாங்கி “ஆஸ்திரேலிய காட்டுமிராண்டி” (Australian Savage) என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தியது. யானைகள் மற்ற மிருகங்களுடன் சேர்ந்து அவர்களுடைய பூர்வ குடி கலாச்சார நடனங்கள், பாடல்கள், சடங்குகள் நிகழ்த்திக் காட்ட வேண்டும். அவர்களின் தனித்த அடையாளமாக வளரி (Boomerang) வீச்சு விளங்கியது. இவை அனைத்தும் ஆஸ்திரேலியா நிலப்பரப்பு போன்ற மாதிரி அமைக்கப்பட்டு நிகழ்த்திக் காட்டுவார்கள்.

காங்கோ நாட்டில் வாழ்ந்த பூர்வ குடி மக்களில் ஒரு இனம் “மு பூட்டி” (Mbuti) ஆகும். இந்த மக்கள் உருவத்தில் சிறியவர்களாக உள்ளவர்கள் 1904 மார்ச் மாதம், ஒட்டா பென்கா (Ota Benga) என்ற பூர்வ குடியை சாமுவேல் வார்னர் என்னும் அடிமை வியாபாரி அமெரிக்காவுக்குக் கடத்தி சென்றார். அப்போது அவருக்கு 12 வயது ஆகும். அந்த ஆண்டு நியு ஓர்லென்ஸ் செயின்ட் லூயியில் (New Orleans, St Louis) நடைபெற்ற உலக கண்காட்சியில் காட்சிப்படுத்திட அச்சிறுவனைக் கடத்தி வந்தார்கள். இந்த கண்காட்சியில் ஒட்டா பென்காவை பற்றி அனைத்து பத்திரிகையிலும் எழுதினார்கள். ஒட்டா பென்காவை போல் உள்ள மற்ற “மு பூட்டி” இனமக்களையும் ஊர் ஊராக அழைத்துச் சென்று கண்காட்சி நடத்தினார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 40,000 மக்கள் ஒட்டா பென்காவை காண மனித காட்சி சாலைக்கு வந்து இருந்தார்கள். மிருக காட்சி சாலைகளில் மிருகங்கள் மீது கற்களை எரிந்து அவற்றை எப்படி மனிதர்கள் இன்று தொந்தரவு செய்கிறார்களோ, அதைப் போலவே அச்சிறுவனையும் தொந்தரவு செய்தார்கள். சிகாகோ ட்ரிபியூன் எனும் அமெரிக்கப் பத்திரிகை (Tiny Savage Sees New York) “சிறிய காட்டு மிராண்டி நியூயார்க்கைக் காண்கிறான்” என்று எழுதி இருந்தார்கள். மற்றொரு நாள் “குள்ள மனிதன் ஓராங்குட்டான் குரங்குடன் பேசுகிறான்” என்று எழுதினார்கள். ஒட்டா பென்காவின் பெயர் அனைவருக்கும் பிரபலமான பெயராக மாறியது. ஆனால், ஒரு நாள் இரவு அவருக்கு ஒதுக்கப் பட்ட அறையிலிருந்து தப்பி அருகாமையிலிருந்த காவலர் துப்பாக்கியை எடுத்து தன்னுடைய மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1867 முதல் 1931 வரை, நியூ கலிடோனியாவில் வாழும் கணக் (Kanak) பூர்வ குடி மக்களைக் கொண்டு பிரான்ஸில் உள்ள நகரங்களில் மனித மிருகக்காட்சி சாலை அமைத்தார்கள் 1878 மற்றும் 1889 ஆண்டு பாரிஸ் உலக கண்காட்சியில் அடிமை நகரம் (Negro Village) என்று அமைத்தார்கள். இதை, 2 கோடி 80 லட்சம் மக்கள் வந்து கண்டுகளித்தனர்.

இவர்களைப் பல தார மணம் புரியும், நரமாமிசம் உண்ணும் பூர்வ குடி மக்கள் என்று விளம்பரப்படுத்தினார்கள். இதில் மரியஸ் கோலேய் (Marios Kolaie) என்பவருக்குச் சரளமாகப் பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்தும் அவர் காட்டுமிராண்டியைப் போல நடந்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டார்.

சராசரி வெள்ளையர்கள் மற்ற இனத்தோடு உடல் வலிமை மூளை வலிமை கொண்டவர்கள் கண் பார்வை மிக துல்லியமாக உள்ளவர்கள் என்று அன்றைய ஐரோப்பிய விஞ்ஞானிகள் வில்லியம் மெக்ஜி போன்றவர்கள் பரப்புரை செய்தார்கள்.

மேற்கத்திய நாடுகளின் அரசர்கள், பிரபுக்கள், அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை விரிவாக்கம் செய்திடவும், செல்வங்களைக் குவித்திடும் பேராசையுடன் உலகின் பல்வேறு இனத்து மக்களை அடிமைப்படுத்தியும்; அவர்களின் உடைமைகளை, வளங்களைச் சூறையாடியும் கொழுத்தனர். இப்படியாக அயல் நிலப்பரப்புகளில் சூறையாடப்பட்ட செல்வங்களை, அடிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். தாங்கள் கொள்ளையடித்ததை வெள்ளையர்கள் தங்கள் சமூகத்திடம் நியாயம் கற்பிக்கவும் முனைந்தனர். அந்த போக்கில் உண்மைக்குப் புறம்பாக அயல் நிலப்பரப்புகளைப் பற்றியும் அதில் வாழும் மக்கள் மற்றும் அவர்கள் பண்பாடு கலாச்சாரம் பற்றியும் பல்வேறு இழிவான கட்டுக்கதைகளைப் பரப்பி வந்தனர். 

மேற்குலக மக்களிடையே தாங்கள் நாகரீகமடைந்தவர்கள், உயர்ந்த வெள்ளை இனத்தவர் என்ற கருத்து வலுப்பெறுவதை மேற்கத்திய அரசுகள் விரும்பின. அது, அந்நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளை, சுரண்டல்களை நியாயப்படுத்தி தங்கள் குடிமக்கள் ஆதரவைப் பெற்றிடப் பேருதவியாக இருந்தன. இன்று, “சனநாயகத்தைப் பாதுகாக்கிறோம்” என்கிற போர்வையில் தொடர்ந்து வருகின்றன. இன்றளவும் மேற்குலகு பொதுச் சமூகத்திடையே தாங்கள் மேம்பட்டவர்கள் என்ற கருத்து வலுவாக நீடித்து வருவதை பொதுவாகக் காண முடிகிறது. இதன் விளைவாக, உலகமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்கள் என்ற பெயரில் மறைமுக காலனித்துவ வளச்சுரண்டல் தொடரப்பட்டு வருகிறது.

- மே பதினேழு இயக்கம்

Pin It