டெல்லியில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று அரசியலமைப்பு  சட்டப்பிரிவு 35ஏ-வை  நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையே சாக்காக வைத்துக் கொண்டு 35 ஏ  பிரிவு நீக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது பாஜக. உண்மையில் அக்கட்சியின் நீண்டநாள் கோரிக்கையும் இதுதான். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 35ஏ-ல் அப்படி என்னதான் உள்ளது? அதை நீக்க பாஜக இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?

எத்தனையோ சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய நிலையிலிருந்தும் அவற்றின் மீது எந்த விவாதத்தையும் தொடங்காத பாஜக  இதில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? காரணம், அச்சட்டம் காஷ்மீர் மக்களின்  இன அடையாளத்தையும் அவர்களின் தாயகத்தையும் சிறிதளவேனும் பாதுகாப்பதாக உள்ளது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் மக்களின் இறையாண்மை உரிமையை அடிப்படையாகக் கொண்டது.

kashmir protestagainst35A 6001954 ஆம் ஆண்டு, அன்றைய இந்திய பிரதமராக இருந்த நேரு தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவர் உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இச்சட்டம். இச்சட்டத்தின்படி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அசையாச்  சொத்துக்கள் வாங்கும் உரிமை அம்மாநில  மக்களுக்கே  உண்டு. அதுமட்டுமல்லாமல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனைத்து வகையான வேலைவாய்ப்புகளிலும் காஷ்மீரிகளுக்குதான் இடம். பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இடமில்லை. மேலும் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யும் பிற தேசிய இன ஆண்களுக்கு சொத்துரிமை இல்லை. இதுதான் இச்சட்டத்தின் சாராம்சம்.

அதாவது, இச்சட்டம் குறைந்தபட்சமாவது காஷ்மீரிகளின் வேலைவாய்ப்பு, நிலம் போன்றவற்றை பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் வாங்குவதற்கு தடையாக உள்ளது. அகண்ட பாரத கனவுடன் உள்ள பாஜகவிற்கு இச்சட்டம் கண்ணை உறுத்துகிறது. அதனால் தான் இதனை நீக்க வேண்டும் என்று கூச்சலிடுகிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 அனைவரும் சமம் என்று கூறுகிறது. ஆனால், சட்டப் பிரிவு 35ஏ படி காஷ்மீரில் காஷ்மீரிகளுக்கு முன்னுரிமை என்றாகிறது என்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19 படி வாழ்வதற்கான உரிமை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளது என்றும் இச்சட்டம் பெண்களுக்கான உரிமைகளை மறுக்கிறது என்றும் இந்துத்துவ வாதிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.  

ஆனால் 35ஏ சட்டப்பிரிவு தனிமனித உரிமை பற்றியதல்ல, அது காஷ்மீரிய தேசிய இனத்தின் மண்ணுரிமை பற்றியது. ஒரு தேசிய இனத்துக்கு அதன் மொழியும் அம்மொழி பேசும் மக்களின் தாயகப் பகுதியும் அடிப்படையானது. இந்தியன் என்ற இல்லாத - பொய்யான தேசியத்தின் பேரில் மார்வாடி, குஜராத்தி சேட்டுகள் உட்பட வேற்றினத்தவர் காஷ்மீரில் சொத்து வாங்கி குவித்து காஷ்மீரிகளின் தாயகம் என்ற அடையாளத்தையே அழித்துவிடாமல்    பாதுகாக்கிறது 35ஏ சட்டம்.                                          

இந்திய மார்வாடி, பனியா, சேட்டு முதலாளிகளைப் பொருத்தளவில் தேசியஇன, மொழி அடையாளங்களை அழித்து விட்டு ஒற்றை இந்தியாவை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதன்மூலம் தனக்கு மிகப்பெரிய பரந்துவிரிந்த சந்தை கிடைக்கும் என்பதை மையமாகக் கொண்டு செயல்படுகின்றனர். ஆர்எஸ்எஸ் - பாஜக பார்ப்பனிய சக்திகளைப் பொறுத்தளவில்  அதன் இந்து பார்ப்பனிய - அகண்ட பாரத கனவுக்கு தேசிய, மொழி, இன அடையாளங்கள் மிகப்பெரிய தடைக்கல்லாக உள்ளது. எனவே, இத்தகைய தேசியஇன அடையாளங்களை ஒழித்துவிட்டு அகண்ட பாரதத்தை உருவாக்கும் வெறியோடு செயல்பட்டு வருகின்றன.

kashmir petition35a 600ஏற்கனவே, இந்தியாவிலிருந்தும்,  பங்களாதேசத்திலிருந்தும் அதிக அளவு இடம்பெயர்ந்தவர்கள் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மண்ணின் மைந்தர்கள் சிறுபான்மையினராக மாறியுள்ளனர். அதுபோலவே  தேசிய இன போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் திட்டமிட்டே பிற தேசிய இனத்தைச் சார்ந்தவர்களை அதிக அளவு    குவித்து அம்மக்களின்  விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது இந்திய அரசு.

மேற்கண்ட பிரச்சனை காஷ்மீருக்கு மட்டுமல்ல தமிழகத்துக்குதான். காஷ்மீரில்  குறைந்தபட்சம் ஒரு சட்டப் பிரிவு அவர்களின் தாயக உரிமையை பாதுகாக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு இதுபோன்ற  எந்தவொரு சட்டப்பிரிவும்  இல்லை. இதனால்தான் தமிழகத்தில் வகைதொகையில்லாமல் மார்வாடிகள், பனியாக்கள்  வந்து தமிழர்களின் நிலங்களையும், சிறு தொழில்களையும், வணிகத்தையும் கைப்பற்றி உள்ளனர். 

மேலும், அதிக அளவில் வந்து குவியும் வடமாநிலத்  தொழிலாளர்களால்  தமிழக மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்மொழி அரசு அலுவலகங்களில் இருந்தும் கல்விக்கூடங்களில் இருந்தும் விரட்டப்பட்டு வருகின்றது. தாயகப் பகுதியையும் தமிழினம் இழந்து வருகிறது. எனவேதான் சொல்கிறோம் 35ஏ சட்டப்பிரிவை காஷ்மீரத்துக்கு மட்டுமின்றி தமிழ் தேசம் உட்பட இந்திய ஏகாதிபத்தியத்தில் கட்டுண்டுள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் கொண்டு வரவேண்டும்.

Pin It