நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

விவாதத்தில் பலரும் அவர்களது கருத்துக்களை பதிவிட்ட நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்கள் பேசும்போது பெரியார் கூறிய "ஒவ்வொரு இனத்திற்கும் தங்கள் சொந்தமான சட்டங்களை வகுக்க உரிமை உண்டு" என்ற மேற்கோளை காட்டி இது காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும் என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர், பாஜக அமைச்சர்கள் கூக்குரல் எழுப்பினர்.

mm abdullahஅமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை நோக்கி "இதை காங்கிரஸ் ஏற்கிறதா?" என்று கேள்வி எழுப்ப..

கார்கே "ஏற்பது எதிர்ப்பது என்பது அவரவர் நிலைப்பாடு. பாராளுமன்ற உறுப்பினர் தனக்கான பேச்சுரிமை கொண்டு அவரது கருத்தை பதிவிடுகிறார். அவரை பேச அனுமதியுங்கள்" என்கிறார்.

மீண்டும் மீண்டும் பாஜகவினர் ஏதோ மாபெரும் தேச துரோகி போன்று சித்தரிக்கிற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைக்கு பின் இருந்த ஜெய்ராம் ரமேஷ் "அப்துல்லா அவர்களின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை" என்கிறார்.

உட்கட்சி ஜனநாயகம் இருக்கவேண்டும் தான். அதற்காக பாராளுமன்றத்தில் ஒரே நேரத்தில் இருவித கருத்துக்கள் எதற்கு? பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பேசிக்கொண்டு இருக்கும்போது ஜெய்ராம் ரமேஷ் இடைமறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? எப்போதும் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர் ஜெய்ராம் ரமேஷ் (ஜல்லிக்கட்டு, சுற்றுசூழல்) என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். இவர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏற்கனவே பாராளுமன்ற கூட்டத்தொடர் மதிய இடைவேளைக்கு பின் எப்போதும் 2.30 என்பதை மாற்றி 2.00 மணியாக மாறியதை எதிர்த்து திருச்சி சிவா, M.M.அப்துல்லா ஆகியோர் இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்வதை தடுக்க இந்த நேர மாற்றம் என்று காரசாரமாக பேசியது சபாநாயகர், பாஜகவினர் கோபத்தில் இருந்தனர். அதை வெளிக்காட்ட பெரியார் பேசியதை பேசிய உறுப்பினருக்கு எதிராக ஒட்டு மொத்த பாஜகவினர் நான்கு கால் பாய்ச்சலில் ஓடி வந்ததை பார்க்க முடிந்தது.

இறுதியாக திருச்சி சிவா அப்துல்லா பேசிய பெரியார் மேற்கோளை விளக்க எழுந்த போது மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. அதையும் மீறி "எங்களை தேச விரோதிகள் போல காட்ட முனைவது கண்டிக்க தக்கது. "Each Race has its own rights to formulate their Rules and Regulation" என்று விளக்கம் அளித்ததுடன் "சீன போரின் போது எங்களது தனி நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு இந்திய ஒற்றுமைக்கு நின்ற இயக்கம் திமுக. பங்களாதேஷ் பிரிவினையின் போது அதிகமாக நிதி உதவி செய்தவர்கள் நாங்கள்" என்றார்.

இத்தனைக்கும் பின்பும் அப்துல்லா அவர்கள் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கியதாகவே சபாநாயகர் அறிவித்தார்.

பாஜகவினர் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி, இந்திய இறையாண்மைக்கு எதிரான கட்சி என்றும், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அவ்வாரானது என்ற பிம்பத்தை கட்டமைக்க முயலுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வட இந்தியர்களிடம் இந்த பிம்பம் மூலம் பாஜகவினர் வாக்கு வேட்டைக்காக திட்டமிடுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு வரும் 2024 போது தேர்தல் வரை பாஜகவை விமர்சிக்க மத விரோத கருத்துக்களை திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவிர்த்து ஊழல், வன்முறை, கலவரம் என்பதை மட்டும் முன் வைத்து பேசினால் மட்டுமே நாம் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதோடு இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் இன்னும் நேரம் செலவிட்டு ஒருமித்த குரலில் அரை கூவல் விடவேண்டும்

- ஆர்.எம்.பாபு

Pin It