இரத்தச் சகதியில் காஷ்மீர் போராட்டம் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகால விடுதலைப் போராட்டம் வெளி உலகுக்கு தெரியாமல் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் சிங்கள அரசு பல லட்சக்கணக்கான தமிழர்களை, விடுதலைப் போராளிகளைக் கொன்று ஈழ விடுதலையை எப்படி நசுக்கியதோ, முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களை முடக்கியதோ அப்படி இந்திய அரசு காஷ்மீரை ஒரு முள்ளிவாய்க்காலாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்ற புரிதலோடும், இந்த நிலைமை நமக்கு வந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடும் இந்தக் கட்டுரைக்குள் நுழைவோம்

கடந்த வாரம் காஷ்மீர் சென்ற குலாம் நபி ஆசாத் ஜம்முவில் தடுத்து நிறுத்தப்பட்டார். டி.ராஜா, ஸ்ரீநகர் விமான நிலையம் வரை சென்று அனுமதி கிடைக்காத காரணத்தால் திரும்பினார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களை அந்த மாநிலத்துக்குச் செல்ல மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது "ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பக்ரீத் பண்டிகைக்காக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் சந்தைகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர். காஷ்மீர் முழுவதும் திங்கள்கிழமை பக்ரீத் மிகவும் அமைதியாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை கூறியுள்ளார். ராகுலுக்காக நாங்கள் சிறப்பு விமானத்தை அனுப்ப தயாராக உள்ளோம். அந்த விமானத்தில் அவர் காஷ்மீருக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிடலாம். மருத்துவமனைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேசலாம். காஷ்மீரில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை. ஒருவர் கூட காயமடையவில்லை. காஷ்மீருக்கு வருவதற்கு ராகுல் தயாரா?" என்று கடந்த 13ஆம் தேதி ஆளுநர் அவர்கள் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

opposition leaders at kashmirஇந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்ய எதிர்க்கட்சியான காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று அந்த மாநில மக்களை சந்திக்கவுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா ஆகியோருடன் ராகுல் காந்தியும் செல்கிறார் என தகவல்கள் வெளியானது.

இதையடுத்து தற்போதைய நிலைமையில் ஜம்மு-காஷ்மீருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வர வேண்டாம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர்களின் வருகை காஷ்மீர் பள்ளத்தாக்கில் படிப்படியாக திரும்பிவரும் அமைதியும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்க காரணமாகிவிடும்.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அவர்கள் செல்ல முயற்சி செய்வதும் விதிமீறலாகும் என்று அறிவுறுத்தி அந்த மாநில அரசு நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு முன்பாக அறிக்கை வெளியிட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம் காசுமிருக்கு வாருங்கள், உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆளுநர் அழைப்பு விடுக்கிறார். ஆனால், அரசு நிர்வாகமோ எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீருக்குள் நுழைந்த சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்கிறார்கள் அப்படி என்றால் இப்போது காஷ்மீரில் ஆட்சி நடத்துவது யார்? சரி அது இருக்கட்டும்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்யவதற்காக ராகுல் காந்தி தலைமையில் 12 எதிர்க்கட்சி தலைவர்கள் தில்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்றவர்களை அந்த மாநில அரசு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்தியாவிற்குள் இருக்கக்கூடிய ஒரு மாநிலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அதுவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது.

தொலைபேசி இணையதளங்கள் துண்டிக்கப்பட்டு தங்களுடைய உறவினர்களுடன் தொடர்புகள் அற்று வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ராணுவ முற்றுகையில் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது என்று சொல்லுகிற அரசாங்கம் அந்த இயல்பு வாழ்க்கையை காண்பதற்கு ஏன் இவர்களுக்கு அனுமதி மறுக்கிறது. ஏனென்றால் அங்கே கடுமையான ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டிருக்கிறது.

காஷ்மீர் உரிமைகளுக்காக போராடியவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது இந்த அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது என்றாலும் குறிப்பாக தலைமை தாங்கிய தோழர்களை திட்டமிட்டு கொலை செய்ததை நாம் அறிவோம் இப்போது காஷ்மீரில் அது நடந்து கொண்டிருக்கிறது.

காஷ்மீரின் ஸ்ரீநகர் சௌரா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டம் வெடித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

உடனே, பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். பெல்லட் குண்டுகளால் காயமடைந்த பலர் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் உள்ளனர்.

இந்த வன்முறையின்போது, கண்ணில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த ஒருவரை தாம் பார்த்ததாக அப்போது களத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஸாதா குறிப்பிட்டுள்ளது முக்கியமானது.

இன்று காஷ்மீர் சென்று திருப்பி அனுப்பப்பட்ட திரு.டி.ராசா அவர்கள் "விமானத்தில் செல்லும்போது சாதாரண காஷ்மீர் மக்களை சந்தித்து பேசினோம். அப்போது அங்கு நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது என்பது தெரிய வந்தது. அங்கு நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட சாத்தியமில்லாமல் இருக்கிறது.

காஷ்மீருக்கு வெளியே இருக்கக்கூடிய மக்கள், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தங்களின் பெற்றோர்கள், உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. அங்கு தொலைபேசி, இணையதளம் வேலை செய்யாமல் உள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அங்குள்ள மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஆளுநர் பொய் சொல்கிறார், பிரதமர் பொய் சொல்லுகிறார். அரசே இப்படி பொய் சொல்லும்போது, நாங்கள் யாரை நம்புவது என்று அந்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரசு சொல்வது அப்பட்டமான பொய் என்பதை நாம் உணர வேண்டும். அங்கு நிலைமை சகஜமாக இல்லை. அங்கு அமைதி திரும்ப எத்தனை நாள் பிடிக்கும்? அடுத்து என்ன ஆகும்? என்பதை இப்போது சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

எனவே மோடி அரசு சொல்வது போல அங்கு இயல்பு நிலை வரவில்லை என்பதை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும், இந்திய ராணுவத்திற்கு எதிராக காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொலை செய்து கொண்டிருக்கிறது.

காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக காஷ்மீரிகள் ஆண்களும் பெண்களும் இணைந்து இந்திய ராணுவத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர்.
பிரிவினைவாதிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்று கொண்டிருக்கிறது ராணுவம்.

ஊடகங்களும் காஷ்மீர் மக்களுடைய போராட்டத்தை மறைத்தும் திரித்தும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் காஷ்மீரின் உண்மை தன்மையை வெளியே கொண்டுவராமல் இந்திய அரசின் பாதந்தாங்கிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் என்று காஷ்மீரிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துகிறது இந்திய அரசு காஷ்மீர் எந்த நாளில் இந்தியா ஒரு இணைக்கப்பட்டது அன்றில் இருந்து காஷ்மீருக்கு இந்தியா துரோகம் செய்து கொண்டேதான் இருக்கிறது அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி இந்திய அரசு காஷ்மீரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் தான் இருந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் காங்கிரசும் பாஜகவும் ஒரே தட்டில் வைத்து எதிர்க்கக் கூடிய சூழ்நிலையில் நாம் இல்லை என்பதையும் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ஈழ விடுதலையை எந்த சிங்கள கட்சிகளும் ஆட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. யார் தலைமையில் சிங்கள ஆட்சி நடந்தாலும் விடுதலைப்புலிகளின் மீதும் ஈழ மக்களின் மீதும் தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருந்தார்கள் அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் இருக்கும்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் ராஜபக்சே இருக்கும்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் அந்த வேறுபாடுதான் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் உள்ள வேறுபாடு.

இந்தப் புரிதலோடு காஷ்மீர் சிக்கலை நாம் அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். "காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே" என்று முழங்கும் காஷ்மீர் மக்கள் எவ்வளவு ஒடுக்கப்படுகிறார்களோ அதே நிலைமை தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழுங்கும் போது நமக்கு ஏற்படும். தமிழக உழைக்கும் மக்களாகிய நாம் காஷ்மீரில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கு துணை நிற்க வேண்டும், இதுதான் காலத்தின் கட்டாயம்.

ஐநா அவையில் தற்காலிகமாக இணைக்கிறோம் என்று ஒப்பந்தம் போடப்பட்ட ஒரு தேசத்தையே சர்வாதிகார முறையில் இணைத்துக் கொண்டு அங்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்கிறது என்றால் மற்ற போராடும் தேசங்களின் நிலைமை என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள்.

தெற்காசியப் பகுதியில் தனது அரசியல் விரிவாதிக்க வெறியோடு செயல்படுகிற இந்தியாவிலிருந்து தேச விடுதலையை கோரக் கூடிய இயக்கங்கள் தங்களுடைய போராட்டம் முறையை எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை காஷ்மீர் நிலைமையில் இருந்தது கற்றுக் கொள்ள வேண்டும்.

(தொடர்வோம்)

- க.இரா.தமிழரசன்

Pin It