இந்திய வரலாற்றில் 06/08/2019 ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நாள். ஒரு மொழிவழி மாநிலத்தை, அதிலும் குறிப்பாக தனித்த அதிகாரங்கள் கொண்டிருந்த காசுமீரி தேசிய இனத்தை இந்தியத் தேர் சக்கரத்தில் நசுக்கிய நாள்.

இன்றிலிருந்து மொழிவழி மாநிலக் கொள்கைக்கு சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.

மாநில அரசுகளைக் கலைத்த காலம் போய் மாநிலத்தையே கலைக்கும் புதிய பாசிச நடவடிக்கையை பாஜக தொடங்கி வைத்துள்ளது. 

அமித்சாவின் சட்டைபைக்குள் அரசியல் சாசனம் ...!

amit shah in parliament
பல நேரங்களில் நாம் மனசாட்சியை மறந்துவிட்டு சிந்திக்கிறோம். சிக்கிம் என்ற ஒரு நாட்டை ஒரே இரவில் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றியவர்கள் தான் இந்திரா தலைமையிலான காங்கிரஸ்காரர்கள். தமிழீழம் எக்காரணம் கொண்டும் உருவாகி விடக் கூடாது என காங்கிரசு, பாஜக, சிபிஎம் போன்ற இந்திய தேசியவாத சக்திகள் செய்த சதிகளும், இராணுவ நடவடிக்கைகளும் வரலாற்றின் பக்கங்களில் குருதியால் எழுதப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு சோசலிசத்தைவிட பார்ப்பனிய இந்தியா மீது இருந்த பாசமும் இனம் புரியாத தேசிய உணர்வுமே இன்றைய அவலங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை ஒப்புக் கொண்டு பேசுகிறேன்.

ஏதோ பாஜக மட்டுமே காசுமீர் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை. இந்த அதிமுக, ஆந்திரத்தின் இரு கட்சிகளான தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலிங்கானாவை ஆளும் TRS கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சி எனக் கூறிக் கொள்ளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ், தூயவான் கெஜ்ரிவால், சீக்கியர்களின் கட்சியான அகாலிதள் என பட்டியல் நீளுகிறது.

உலக வர்த்தகக் கழகத்திற்கு இந்திய நாட்டையே எழுதிக் கொடுத்தது காங்கிரஸ் என்றால் அதைப் பின்பற்றுவது பாஜக. உலக நிதி மூலதன சக்திகளுக்கு கைகட்டி சேவகம் செய்வதில் காங்கிரஸ், பாஜக இடையிலே போட்டா போட்டி.

காங்கிரஸ் நடத்திய முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை மறந்துவிட்டு பாஜக செய்த காசுமீர் அழிப்பைக் காண முடியவில்லை.

இந்தக் கொடூர வேலைகளுக்கு உறுதுணையாக தமிழகத்தில் திமுக, அதிமுகவும், காசுமீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் துணை நின்றே வந்துள்ளனர்.

இன்று நீலிக் கண்ணீர் வடித்து ஒரு பயனும் இல்லை. ஜனசங்கமாக இருந்தபோதும் சரி, அது பாரதிய ஜனதாவாக பெயர் மாறிய போதும் சரி அவர்களது நிகழ்ச்சி நிரலில் காசுமீரின் சிறப்புத் தகுதியை நீக்குவோம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். அதற்கான முழு தயாரிப்புகளையும் நிலைமைகளுக்கேற்ப செய்து வந்தனர்.

நேற்று வரை மெகபூபா முக்தியுடன் கூட்டு, இன்று அவரை முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறிந்ததுடன் சிறைபிடித்து வைத்துக் கொண்டு மாநிலத் தகுதியைப் பறிக்கும் பயங்கரவாதத்தை பாஜக நாடாளுமன்றத்திலேயே செய்து காட்டிவிட்டது.

காங்கிரசின் வரலாறு முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. பார்ப்பனியத்தையும், ஏகாதிபத்திய நிதி மூலதனத்தையும் பாதுகாக்கிற ஆகச் சிறந்த கட்சியாக பாஜக முன் வந்துவிட்டது.

இது உலகளாவிய வலதுசாரிகளின் ஆதிக்கக் காலம். ஆனால் வரலாறு முன்னோக்கியே செல்லும் என்பது சமூக விதி. இன்றைய நிலைமைகள் ஒரு புதிய வளர்ச்சிக்குத் தளம் அமைத்தே தீரும். இந்த உலகம் பரந்துபட்ட மக்களுக்கே சொந்தமானது. அதை ஒரு சில ஏகபோக
சக்திகள் கைப்பற்ற முடியாது.

சந்தைப் பொருளாதாரம் அதற்கே உரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. முதலாளியத்தின் நெருக்கடியை மக்களின் நெருக்கடியாக மாற்றும் அரசியல் சூழ்ச்சிகளே காசுமீர் நாடகங்கள்.

ஏகாதிபத்திய, பார்ப்பனியக் கூட்டணிக்கு எதிராக அணிதிரள வேண்டிய கடமை புரட்சிகர சக்திகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் வந்துள்ளது.

மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள்!

- கி.வே.பொன்னையன்

Pin It