காஷ்மீர் குறித்த நேருவின் அணுகல்முறையும் பா.ஜ.க வின் அணுகல் முறையும் எதிர் எதிரானவை
ஜம்மு காஷ்மீர் மற்றும் லதாக் என காஷ்மீர் இப்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளுமே இன்று மத்திய அரசின் அதிகாரத்திற்குள் (Union Territories) கொண்டு செல்லப்பட்டு விட்டது. காஷ்மீரை இவ்வாறு இரண்டாக மட்டுமல்ல ஜம்மு /காஷ்மீர் பள்ளத்தாக்கு / லதாக் என மூன்றாகப் பிரிப்பதே ஆர்.எஸ்.எஸ் – ஜனசங் அமைப்புகளின் நோக்கங்களாக இருந்து வந்தன. இதை அவர்கள் வெளிப்படையாகவே கோரி வந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் பின்னணியுடன் செயல்பட்ட பால்ராஜ் மதோக்கின் “பிரஜா பரிஷத்” அமைப்பு இந்தக் கருத்தை முன்வைத்தது. இயக்கம் நடத்தியது. இந்திய ஆட்சி அதிகாரம் வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்திய அரசுக்கு மாறியபோது அந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்குள்தான் இன்றைய பா.ஜ.கவும் அன்று இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதோடு,
(i)வல்லபாய் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி, குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி எனப் பலரும் நேரடியாக இந்து மகாசபையில் இல்லாவிட்டாலும் கூட இந்துத்துவக் கருத்து உடையவர்களாகவே இருந்தனர் என்பதையும்,
(ii)பொதுவாகக் காங்கிரசே அப்போது பெரிதும் உயர்சாதி ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரிப் பண்புடன்தான் விளங்கியது என்பதையும்,
(iii)காந்தியும் நேருவும் உண்மையில் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக மட்டுமின்றி இவர்களையும் எதிர்த்துத்தான் அரசியல் செய்ய நேர்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
காந்தி கொலைக்குப் பின்தான் இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகளில் உள்ளோர் காங்கிரசுக்குள் இருக்க இயலாது எனும் முடிவெடுக்கப்பட்டபோது காங்கிரசிலிருந்து பிரிந்தவர்கள்தான் இன்றைய பா.ஜ.கவின் முன்னோடியான “பாரதீய ஜனசங் கட்சி” யாக உருவெடுத்தனர்.
காஷ்மீர் குறித்த என் நூலில் (என்ன நடக்குது காஷ்மீரில்?) நேரு இந்தியாவுடனான இணைப்பின்போது காஷ்மீருக்கு அளித்த வாக்குறுதியை எவ்வாறெல்லாம் மீறினார் என்பதை விரிவாகச் சொல்லியுள்ளேன். ஒப்பந்தப்படி 370வது பிரிவின் கீழான உரிமைகளை நீர்க்கச் செய்ததிலும், கருத்துக் கணிப்பு நடத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து ஷேக் அப்துல்லாவைச் சிறையிட்டதிலும் நேருவின் செயல்பாட்டை யாருமே நியாயப்படுத்திவிட இயலாது என்பதிலும் ஐயமில்லை.
ஆனால் அதே நேரத்தில் நேருவின் அணுகல்முறை நூறுசதம் ஆர்.எஸ்.எஸ், ஜனசங் அணுகல் முறையிலிருந்து மாறுபட்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். எக்காரணம் கொண்டும் ஜம்மு காஷ்மீரை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்பதை நேரு ஏற்கவில்லை. இன்று மோடியும் அமித்ஷாவும் வெறிகொண்டு பள்ளத்தாக்கு முஸ்லிம் மக்களை கொடுஞ்சிறைக்குள் முடக்கி அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என முயல்கிறார்களே, அப்படியும் அவர் நினைத்ததில்லை.
காஷ்மீர் பிரச்சினையை மிக விரிவாகத் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்து அம் மக்களின் நியாயங்களை மகா துணிச்சலுடன் பேசிவரும் அறிஞர் ஏ.ஜி.நூரானி இதை விரிவான ஆதாரங்களுடன் தொடர்ந்து கூறி வந்துள்ளார். இப்போது Frontline இதழில் எழுதியுள்ள கட்டுரையிலும் அதை விரிவாகச் சொல்லுகிறார். அதை இங்கு, இன்று அவர் சொல்வதென்பது நேருவைக் காப்பாற்றும் நோக்கில் அல்ல. மாறாக இன்று மோடி- அமித்ஷா ஆட்சி காஷ்மீரில் மேற்கொண்டுவரும் வரலாறு காணாத ஒடுக்குமுறை எவ்வகையிலும் அவர்கள் நினைக்கும் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.
சற்று விரிவாகப் பார்க்கலாம்.
“ஒடுக்குமுறையும் இராணுவ அடக்குமுறையும் மக்களை ஒருங்கிணைக்கப் போவதில்லை” - நேரு
ஜவஹர்லால் நேரு அடிப்படையில் ஒரு ஜனநாயகவாதி. அவர் தவறுகளே செய்யாதவர் என்பதல்ல. அவரைக் கொண்டாடுவதோ கும்பிடுவதோ நம் நோக்கமல்ல. ஆனால் வைகோ வைப்போல ஒரே அடியாக மோடியையும் நேருவையும் ஒன்றாக்கிவிட முடியாது. 2002 குஜராத் படுகொலைகளுக்குப் பின்னும் குஜராத்திற்குச் சென்று, தமிழர்கள் வாழும் பகுதியில் நரேந்திர மோடிக்காகப் பிரச்சாரம் செய்தவர்தான் வைகோ என்பதை நாம் மறந்துவிட இயலாது.
ஷேக் அப்துல்லாவின் முன்னிலையில் நேருவும் மன்னன் ஹரிசிங்கும் செய்துகொண்ட இணைப்பு ஒப்பந்தத்திற்கு (Instrument of Accession, 1949 Dec 31). பின்னர் பாகிஸ்தானுடன் இந்தியா செய்துகொண்ட அசையாநிலை ஒப்பந்தத்திற்கும் (Stand-still Agreement-, 1947, Oct 26) மத்தியில்தான் நேருவின் இந்தியா அய்.நா அவையில் ஒரு முறை அல்ல இருமுறை இந்த ஒப்பந்தங்களை முன்வைத்து இது ஒரு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டது. அதன் மூலம் அய்.நா மத்தியஸ்தத்திற்கு ஒரு வரலாற்று பூர்வமான ஆதாரத்தையும் பதிவு செய்தது என்பதை எல்லாம் நாம் மறந்துவிடலாகாது. நேருவுக்குப் பின்வந்தவர்கள் இது மூன்றாவது முகமை ஏதும் தலையிடமுடியாத உள்நாட்டுப் பிரச்சினை எனச் சொல்வதற்கு நேருவின் இந்தச் செயல்பாடுகள்தான் இன்றளவும் ஒரு தடையாக உளளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிச் சொல்வது எதுவும் நேருவைக் குற்ற நீக்கம் செய்து இந்தப் பிரச்சினையிலிருந்து விலக்குவதாகாது. ஆனால் இந்திராகாந்தி உட்பட நேருவுக்குப் பின்வந்தவர்களின் அணுகல்முறைக்கும் நேரு இந்தப் பிரச்சினையை அணுகியதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
நேரு காலத்திலேயே ஒப்பந்தம் மீறப்பட்டது. நேருவும் காஷ்மீரை விட்டுவிடத் தயாராக இல்லை. ஆனால் நேருவின் அணுகல்முறை காஷ்மீர மக்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுவதன் மூலம் அவர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டி, ஒரு ஒப்புதலை அவர்களிடம் உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தது. எக்காரணம் கொண்டும் அவர்களது உரிமைகளைப் பறிப்பதோ, இராணுவத்தைக் கொண்டு அவர்களை அடக்குவதோ அவரது அணுகல் முறையாக இல்லை. நேரு அப்போது பேசிய இரண்டு உரைகளைச் சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.
“காஷ்மீர மக்களை நம்மை நோக்கி ஈர்ப்பதற்கு நமது மதச்சார்பற்ற அணுகல்முறை மற்றும் நமது அரசியல் சட்டம் ஆகியவற்றைக் காட்டிலும் வேறென்ன சாட்சியங்கள் இருக்க முடியும்? ஜனசங்கம் (அதாவது பா.ஜ.க) அல்லது வேறேதும் ஒரு மதவாதக் கட்சி மேலுக்கு வரும் ஒரு சூழ்நிலையில் என்ன ஆகும் என ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். கணந்தோறும் ஜனசங்கம் அல்லது ஆர்.எஸ்.எஸ் தம்மைப் பிறாண்டித் தொல்லை செய்யும் நாட்டில் ஏன் அவர்கள் (காஷ்மீரிகள்) இருக்க வேண்டும்? அவர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் போவார்கள் நம்மோடு இருக்க மாட்டார்கள்.” (ஜனவரி 01, 1952ல் கொல்கத்தாவில் பேசியது. தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 17, பக் 78))
பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர் பேசியது:
“நமது அரசியல் சட்டத்தின் மீதான எல்லா மரியாதைகளுடனும் சொல்கிறேன். உங்கள் அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பது பெரிதல்ல. காஷ்மீர் மக்கள் அது வேண்டாம் என்றால் அது அங்கே செயல்படுத்தப் படாது. ஏனெனில் அவர்கள் ஏற்காத பட்சத்தில் பிறகென்ன மாற்றாக இருக்க முடியும்? அவர்கள் அதை ஏற்கவில்லை என்பதாகக் கொண்டு கட்டாயமாக அவர்கள் மீது திணிப்பதும் வற்புறுத்துவதும்தானே? அப்படி நாம் அவர்களை வற்புறுத்தப் போகிறோமா? அதன்மூலம் தவறாக வழிநடத்தப்பட்ட சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நமக்கு எதிராகப் பரப்பும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தப் போகிறோமா?
“உத்தரப் பிரதேசம், பீஹார் அல்லது குஜராத் போன்ற ஒரு பகுதியைக் கையாள்வது போல காஷ்மீரையும் அணுகலாம் என நினைக்காதீர்கள். வரலாற்று ரீதியாக மட்டுமின்றி புவி இயல் ரீதியாகவும் இன்னும் எல்லா வகைகளிலும் ஒரு குறிப்பான பின்னணியுள்ள பகுதி அது. நமது பகுதிக்குப் (local) பொருத்தமான கருத்துக்கள் மற்றும் முன் அனுமானங்களை (prejudices) எல்லாப் பகுதிகளுக்கும் நாம் கொண்டுசெல்ல முயன்றால் நாம் எந்தக் காலத்திலும் ஒருமைப்பாட்டைக் கட்ட (consolidate) முடியாது. எல்லோரையும் ஒருங்கிணைப்பதில் நாம் உண்மையாக இருந்தால் விசாலமான மனத்துடன் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உடையவர்களாக நாம் இருக்க வேண்டும். உண்மையான ஒருங்கிணைப்பு என்பது உள ரீதியாகவும் இதயபூர்வமாகவும் நிகழ வேண்டும். ஏதேனும் உங்களின் ஒரு சட்டப்பிரிவை பிற மக்கள் மீது திணிப்பதால் அது சாத்தியப்படப் போவதில்லை.” (நாடாளுமன்ற உரை, ஜூன் 26, 1952).
நேரு உலக வரலாற்றை அறிந்தவர். உலக வரலாற்றை எழுதியவர். இங்கு அவர் இதை உளமாறச் சொல்வதை நாம் விளங்கிக் கொள்கிறோம். இந்தச் சொற்களை அவர் இதோ இன்று நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் நோக்கிச் சொல்லிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறோம்.
மக்கள் விரும்பாவிட்டால் துப்பாக்கி முனையில் காஷ்மீர மக்களை நாம் வைத்திருக்க முடியாது” - நேரு
காஷ்மீரை இரண்டாக அல்ல மூன்றாகப் பிரிப்பதே சங்கிகளின் நோக்கம் என்பதையும் இன்று அதில் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி இக்கட்டுரை தொடங்கியது. இப்படி காஷ்மீர் துண்டாடப் படுவதை ஷேக் அப்துல்லாவும் பின்னாளில் ஃபரூக் அப்துல்லாவும் கடுமையாக எதிர்த்தனர். பெரும்பான்மை முஸ்லிம்களாக இருக்கும் ஒரு பகுதியில் தாம் சிறுபான்மையாக இருக்க சங்கிகள் விரும்பவில்லை. முடி இழந்த மன்னன் கரன்சிங்கும் இதை ஆதரித்தார்.
ஜம்முவுக்கு மட்டுமாவது தான் தொடர்ந்து தலைவராக இருக்கலாம் என்கிற நப்பாசை அவருக்கு. ஆனால் இப்படியான முயற்சி இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு இரண்டரை மாவட்டம் போக மீதமுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பூராவையும் வெள்ளித் தட்டில் வைத்து பாகிஸ்தானுக்கு அளிப்பதிலேயே இது முடியும் என அப்துல்லா தரப்பில் எச்சரிக்கப்பட்டது. அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலிடம் நேருவும் இது குறித்து எச்சரித்தார்.
ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் பால்ராஜ் மதோக்கின் பிரஜா பரிஷத் இயக்கம் ஜம்மு காஷ்மீரை மூன்றாகப் பிரிப்பதற்கான போராட்டத்தைத் தொடங்கியபோது ஜவஹர்லால் நேரு தனது நண்பரும் அப்போதைய மே.வங்க முதல்வருமான பி.சி ராய்க்கு எழுதிய கடிதத்தில் (ஜூன் 29, 1953),
“இந்து வகுப்புவாதிகள் இப்படியான ஒரு இயக்கத்தை ஜம்முவில் தொடங்கினால் முஸ்லிம் வகுப்புவாதிகள் காஷ்மீரில் ஏன் செயல்படக் கூடாது? இன்றைய நிலை என்னவெனில் இப்போது நாம் கருத்துக் கணிப்பை நடத்தினால் காஷ்மீரில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் நமக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். சிறிய அளவில் சில வன்முறைகளும் கூட நிகழலாம்ஞ் எனவே காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான பிரஜா பரிஷத்தின் இந்த இயக்கம் நேர்மாறான விளைவைத்தான் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
ஜம்மு பகுதியைப் பொருத்த மட்டில் பெரும்பான்மையான இந்துக்கள் (இந்தியாவுடனான) நெருக்கமான இணைப்பையே தாம் விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். என்ன நடந்தாலும் ஜம்மு இந்தியாவை விட்டுப் போகாது. யாருக்கும் அதில் அய்யம் ஏதுமில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான் நாம் பெரிய அளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் போகிறோம். பிரஜா பரிஷத் இயக்கத்தின் விளைவாக அதை இன்று நாம் இழக்கும் நிலையில் உள்ளோம். உளவியல் மட்டத்தில் நாம் அதை ஏற்கனவே இழந்துவிட்டோம்.
பழைய நிலையைத் திரும்ப அடைவது இப்போது கடினமாகி விட்டது. காஷ்மீரில் வாழும் மக்களின் நம்பிக்கையை வென்றால்தான் நாம் காஷ்மீரை வெல்ல முடியும். இறுதி ஆய்வில் நாம் வந்தடைவது இதுதான். மக்கள் நம்மை விரும்பவில்லை என்பது தெளிவானால் துப்பாக்கி முனையில் அதை நாம் வைத்திருக்க முடியாது என்பது தெளிவு. முதல்முறையாக காஷ்மீரில் இப்போது ‘இந்தியப் படைகளே வெளியேறு’ எனும் மக்கள் குரல் ஒலிக்கிறது.” (ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 22ம் தொகுதி, பக் 203- 220.)
காஷ்மீர் குறித்த ஒரு ஆழமான புரிதல் உடைய ஆய்வாளரும் சட்டவியல் நிபுணருமான ஏ.ஜி.நூரானி சொல்வார்: “நேருவுக்குப் பின் வந்த மத்திய அரசுகள் எல்லாம் காஷ்மீர் மக்களை வெளிப்படையாக உதாசீனம் செய்தன. இந்தியாவுடனான இணைப்பை காஷ்மீர் மக்கள் தொடக்கம் முதலாகவே விரும்பவில்லை. பாகிஸ்தானிலிருந்து வந்த ஆயுதம் தாங்கிய குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள்தான் ஷேக் சாகிபின் (ஷேக் அப்துல்லா) கைகளை அழுத்தி இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் கையப்பமிட வைத்தன...”
பிரிவினைக் கலவரத்தின்போது பாக்கிலிருந்து இரு திசைகளில் வந்த இரண்டு தனியார் படையினரின் தாக்குதலிலிருந்து தற்காலிகமான ஒரு பாதுகாப்பிற்காக தன் விருப்பத்தை மீறி ஷேக் அப்துல்லா இணைப்பு ஒப்பந்தத்தில் கையப்பமிட்டார் என்பதுதான் இதன் பொருள்.
பேட்ரிக் கார்டன் வாக்கர் எனும் பிரிட்டிஷ் அமைச்சர் ஒருவரிடம் நேரு காஷ்மீர் மாநிலத்தை இரு நாடுகளுடனும் இணைப்பது என்றொரு கருத்தை முன்வைத்தார் எனவும் நூரானி குறிப்பிடுகிறார். இணைப்பிற்கு முன்னதாக 1947 அக்டோபர் 25 அன்று நடந்த அமைச்சரவைப் பாதுகாப்புக்குழு (Defence Committee of the Cabinet) ஆலோசனைக் கூட்டக் குறிப்பு (minutes of the meeting) சொல்லும் செய்தி முக்கியமான ஒன்று. காஷ்மீரை இந்தியாவுடன் கட்டாயமாக இணைத்துக் கொண்டவராக இன்று கருதப்படும் நேரு சொன்னார்: “கேள்வி என்னவெனில் இந்தத் தற்காலிக இணைப்பு என்பது பொதுவில் காஷ்மீர் மக்களை இந்தியாவுக்கு ஆதரவாக இட்டுச் செல்லுமா இல்லை அது ஒரு எரிச்சலூட்டும் அனுபவமாகத்தான் அவர்களுக்கு அமையுமா என்பதுதான்.”
ஏன் நேரு அப்படிச் சொன்னார்?
ஏனெனில் மக்கள் அப்போது இந்தியாவுடன் இணையத் தயாராக இல்லை. இன்றுள்ள மன நிலையில்தான், அதாவது இந்தியாவுடன் இணைந்திருப்பது சாத்தியமில்லை எனும் மனநிலையில்தான் அப்போதும் காஷ்மீர் மக்கள் இருந்தனர். முன்னாள் ஜம்மு – காஷ்மீர் திவானும், தற்போது குப்பைக் கூடையில் தூக்கிக் கடாசப்பட்டுள்ள 370வது அரசியல் சட்டத்தின் பிரிவை வடிவமைத்தவருமான கோபால்சாமி அய்யங்கார் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடந்த அடுத்த நாள், “இந்தியாவுடனான உடனடியான இணைப்பு மேலும் அதிக எதிர்ப்பிற்கே வழிவகுக்கும்” எனக் கூறியது குறிப்பிடத் தக்கது. பிரிவினையை ஒட்டி இங்கு மேலெழுந்த முஸ்லிம் வெறுப்பு அரசியல் காந்தியின் படுகொலை, வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் திரட்சி ஆகியன காஷ்மீர முஸ்லிம்களை நம்பிக்கை இழக்க வைத்தன.
வரலாறு நேருவை விடுதலை செய்யும்
தொடக்கத்தில் இருந்த இந்த மனநிலை பிரஜா பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் நடவடிக்கைகளால் போகப்போக இன்னும் அதிக இந்திய வெறுப்பாக மாறியது என்பதற்கு நூரானி பல வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கிறார். கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தினால் ஷேக் அப்துல்லா வெல்வார் எனத் தொடக்கத்தில் நம்பப்பட்டது. அன்று ஷேக் அப்துல்லா வெல்வார் என்றால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் என்பது பொருள். மே 14, 1948 அன்று இந்திரா அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்திலும் ஷேக் அப்துல்லா வெல்வார் எனும் நம்பிக்கையையே காண்கிறோம்.
ஆனால் ஐந்தாண்டுகளில் நிலைமை மாறியது. ஜூலை 14, 1953 அன்று குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், ஷேக் அப்துல்லா நம்பிக்கை இழந்துவிட்டதாக நேருவிடம் குறிப்பிட்டார். “95 சத காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் இருக்க விரும்பவில்லை” என நேருவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் (மே1, 1956) பதிவு செய்கிறார்.
இடையில் இப்படி காஷ்மீர மக்கள் மத்தியில் இந்திய வெறுப்பு உருவானதில் ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலில் ‘பிரஜா பரிஷத்’ மேற்கொண்ட வெறுப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்தன. இவர்களின் செயல்பாடுகள் இந்த நிலைக்குத்தான் கொண்டு செல்லும் என்பதை நேருவும் உணர்ந்திருந்தார். தனது எழுத்துக்களிலும் உரைகளிலும் அதை அவர் பதிவு செய்துகொண்டே இருந்தார்.
1952 புத்தாண்டு தினத்தில் கல்கத்தாவில் நடந்த பேரணி ஒன்றில் பேசும்போது, “நாளை ஷேக் அப்துல்லா காஷ்மீர், பாகிஸ்தானுடன்தான் சேரவேண்டும் என விருப்பம் தெரிவித்தால் நானோ இல்லை நமது படைகள் அனைத்துமோ ஒன்றும் செய்ய இயலாது. அவர்களின் தலைவர் அப்படித் தீர்மானித்தால் அதுவே நடக்கும். ஜனசங் மற்றும் ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஆகியவற்றின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்த அம்சத்தில் பாகிஸ்தானின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவே அமைகின்றன. இவர்களின் வகுப்புவாத நடவடிக்கைகளால் தாம் வெறுத்துப் போயுள்ளோம் என காஷ்மீர மக்கள் கூறுகின்றனர். ஜனசங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்சால் தொடர்ந்து தாம் முற்றுகை இடப்படும் ஒரு நாட்டில் அவர்கள் ஏன் இருக்க வேண்டும்? அவர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் போவார்கள். நம்மோடு இருக்க மாட்டார்கள்.” (ஜவஹர்லால் நேருவின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், 17ம் தொகுதி, பக்.77-78).
ஆம். காஷ்மீர் பிரச்சினையின் வரலாற்றை நாம் ஊன்றி ஆய்வு செய்தால் அது நேருவை அவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்வதாகவே அமைகிறது. காஷ்மீர் முழுமையாகச் சிதையாமல் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என எல்லோரையும் போலவே நேருவும் விரும்பினார். காஷ்மீர் மட்டுமென்ன பாகிஸ்தானும் கூட எல்லோருடனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதானே காந்தி உட்பட எல்லோரது விருப்பாகவும் இருந்தது.
ஆனால் இந்தத் துணைக் கண்டத்தை ஒரு மதச்சார்பற்ற அடையாளத்திலிருந்து பிரித்தெறிந்து குறிப்பான மத அடையாளத்துடன் கூடிய நாடாக மாற்றும் நோக்கம்தானே இன்றைய இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஊற்றுக் கண்ணாய் இருந்தது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன்பு கூட ஆர்.எஸ்.எஸ்சின் செய்தித் தொடர்பாளர் எம்.ஜி வைத்யா, காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரிப்பது “பள்ளத்தாக்கில் மேலெழும்பியுள்ள நச்சு நடவடிக்கைகளை (virulence) கட்டுக்குள் கொண்டுவர உதவும்” எனச் சொல்லவில்லையா? (Times of India, Sept 04, 2000). அதாவது இன்று ஆக்கப்பட்டுள்ளது போல பள்ளத்தாக்கிலுள்ள முஸ்லிம் மக்களை ஒரு மிகப்பெரிய அடக்குமுறை முகாமாக மாற்றிவிடலாம் என்பதுதானே இதன் பொருள்.
நேருவைப் பொருத்தமட்டில் இயல்பில் அவர் ஒரு ஜனநாயகவாதி. ஒரு நாத்திகர். இயல்பான மதச்சார்பற்ற மனநிலை கொண்ட முற்போக்குச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். அவரது இரு முக்கிய நூல்களும் அதற்குச் சான்றாக அமைகின்றன. இங்கிருந்த சங்கிகள் எல்லோரும் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஹிட்லர், முசோலினி ஆகியோருடன் தொடர்பு வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முசோலினியின் அழைப்புகளை உதாசீனப் படுத்தியவர். பாபர் மசூதிக்குள் இராமர் சிலை வைக்கப்பட்டபோது முஸ்லிம்களைக் காட்டிலும் அதிகம் கலங்கியவர். எதிர்காலத்தில் இது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பதறியவர். ஆனாலும், இந்த நாட்டின் பிரதமராகவும், பெரும் மக்கள் ஆதரவு பெற்றவராக இருந்தபோதும் அன்று அந்தச் சிலைகளை அப்புறப்படுத்த இயலாதவராக இருந்த அன்றைய அரசியல் சூழலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான், ஆர்.எஸ்.எஸ்சும் ஜனசங்கமும் காங்கிரசுக்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் இருந்த நிலையில்தான் காஷ்மீர் ஒப்பந்தம் கையப்பமிடப்பட்டது. காஷ்மீர் சிதையாமல் முழுமையாகவும் சுதந்திரமாகவும் இந்திய யூனியனில் இணைந்திருக்க வேண்டும் என்றே நேரு விரும்பினார். அவர் காஷ்மீர் இந்தியாவுடனேயே இருக்க வேண்டும் என விரும்பியதும் முயற்சித்ததும் உண்மை. ஆனால் இப்படிச் சிதைத்தோ இல்லை, முஸ்லிம்களை ஒரு பெரிய இரணுவ முகாமிற்குள் அடைத்தோ இந்த ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டும் என அவர் கனவிலும் நினைத்தார் இல்லை.
நேரு காஷ்மீர் மக்களுடனான ஒப்பந்தத்தை மீறியதும், வாக்கெடுப்பு நடத்தாமல் அரசைக் கலைத்து அப்துல்லாவை நெடுநாட்கள் வீட்டுக் காவலில் வைத்திருந்ததும் உண்மை. ஆனால் இந்தச் செயல்பாடுகள் மட்டுமே அன்றைய வரலாறு அல்ல என்பதைச் சொல்லத்தான் ஏ.ஜி.நூரானி போன்ற அறிஞர்கள் நம்முன் இத்தனை ஆதாரங்களுடன் அன்றைய வரலாற்றை அவிழ்க்கின்றனர். வரலாறு நேருவை விடுதலை செய்யும்.
ஒரு பின் குறிப்பு: இந்தக் கட்டுரையை நான் திருத்தி அனுப்பும் இக்கணத்தில் (செப் 23, 2019 2 மணி) அமித்ஷா 370 வது பிரிவை தாங்கள் அழித்தொழித்ததை நியாயப்படுத்தி மும்பையில் நடத்தும் பேரணியில் பேசிக் கொண்டுள்ளார். “நேருவே இன்றைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அன்று பாகிஸ்தானுடனான போரை அவர் இடை நிறுத்தம் (cease-fire) செய்திராவிட்டால் இன்று காஷ்மீர் பிரச்சினையே இருந்திருக்காது. நேருவின் இடத்தில் வல்லபாய் படேல் இருந்திருந்தால் அது (போர் நிறுத்தம்) நடந்திருக்காது..” – எனக் கூறிக் கொண்டுள்ளார்.
(மேற்கோள்கள் பல ஏ.ஜி நூரானியின் Kashmir: Murder of insaniyat எனும் (Frontline Aug 30, 2019) கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன)