மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் சரி, சட்டமும் சரி ஒருபுறம் கார்பரேட்டுகள் - தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கும், மற்றொருபுறம் பெருவாரியான உழைக்கும் மக்கள் - நடுத்தர மக்களை பிழிந்தெடுப்பதற்குமான வகையிலே உள்ளது. கார்ப்பரேட்  நலன்,   மாநில அரசின் அதிகாரத்தை பறித்தல் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துக்கொள்கிறது. அதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு சமீபத்தில் கொண்டு வந்துள்ள சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா 2015 தான்.

போக்குவரத்து சட்டம்-1998ன் படி போக்குவரத்து துறையை அமைக்கவும், அதற்கான அதிகாரிகளை நியமிக்கவும் முழு அதிகாரம் பெற்று இருந்தது மாநில அரசு. தற்போது அதனை ஒழித்துக்கட்ட தேசிய போக்குவரத்து ஆணையம்  ஒன்றை அமைக்க உள்ளது இந்திய அரசு. இவ்வாணையம் அமைக்கப்பட்டால் மாநில அரசின் கீழ் இருக்கும் போக்குவரத்து துறை டெல்லியின் ஆதிக்கத்திற்கு உட்படுவதுடன் முழுக்க தனியார்மயமாக்கப்படும். மேலும் தேசிய போக்குவரத்து ஆணையம் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து வழித்தடங்களையும்  தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து அதனை தனியாருக்கு ஏலம் விடும். ஏலத்தில் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பேருந்து கட்டணங்களை தாங்களே தீர்மானித்துக் கொண்டு தங்களுக்கு லாபம் வரும் வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்கும். இதனால் கிராமப்புற மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள்.

மேலும் இச்சட்டத்தின்படி ஓட்டுநர் உரிமம்,  வாகன தகுதிச் சான்றிதழ்,  என அனைத்தும் தனியார் வசம் சென்றுவிடும். அதன்பின் அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம். தற்போது ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் எத்தனை ஆண்டு அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும், புதிதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் மூலம் புதிய ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். 39 வயதுக்கு மேல் ஓட்டுநர் உரிமம் கிடையாது.  பின்னிருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

சாலை போக்குவரத்தில் செய்யும் சிறு தவறுகளுக்குக் கூட மிக அதிகமான  அபராதம் கட்ட வேண்டி இருக்கும். முதல் தவறாக இருப்பின் 5 ஆயிரமும், தொடர் தவறாக இருப்பின்  6 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதமும், 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மூன்று முறை மீறினால் 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும்.  பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டினால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதோடில்லாமல் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்கும். மேற்கண்ட விதிமுறைகளை பார்த்தாலே தெரியும் இவை அனைத்தும் கொள்ளையடிப்பதற்கு  உருவாக்கப்பட்ட சட்டங்கள் என்பது.

மேலும் இம்மசோதாவில் வாகனங்கள் பராமரிப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வாகனங்களின் உதிரிபாகங்கள் பழுதடையும்போது,  அவ்வாகனம் தயாரித்த  நிறுவனத்தின் உதிரிபாகத்தை மட்டுமே பொருத்த வேண்டும். வேறு உதிரிபாகங்களை பொருத்தினால் அது சட்டப்படி குற்றம் ஆகும். வாகனம் பழுதடையும் போது, வாகனம் தயாரித்த நிறுவனத்தின் பணிமனையில்தான் நாம் பழுது பார்க்க வேண்டும். உதாரணமாக ஹோண்டா நிறுவனம் தயாரித்த இரு சக்கர வாகனத்தில் ஏதேனும் உதிரிப்பாகம் பழுதடைந்தால், ஹோண்டா நிறுவனத்தின் பணிமனைக்கு சென்று ஹோண்டா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களையே பொறுத்த வேண்டும். இதன்முலம் சிறு, குறு  உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், உதிரிபாகங்கள் விற்கும் கடைகள், பணிமனைகள் அனைத்தும் இழுத்துமூட வேண்டிவரும். இந்நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் வாகன பழுதுபார்ப்பவர்கள், வண்ணம் பூசுபவர்கள் என அனைவரும் வேலையிழந்து நடுத்தெருவுக்கு தள்ளப்படுவர்.                          

இச்சட்டத்தின் படி ஓட்டுநர் பயிற்சி பள்ளி 15 ஏக்கர் நிலப்பரப்பில்  மருத்துவ சோதனைக்கூடம், பணிமனை (ஒர்க்சாப்) போன்றவையுடன் இருக்க வேண்டும். இதற்கு மூலதனம் அதிகம் தேவைப்படும். எனவே, வாகனம் தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே இதை நடத்த முடியும். தற்போது இருக்கும் பயிற்சி பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். இதன்மூலம் நாடு முழுவதும் இதை சார்ந்து பிழைத்து வந்தவர்களின் வாழ்க்கை அழியும். வாகனங்களுக்கு உரிமம், எப்.சி, வரிகட்டுதல் போன்ற அனைத்து வகையான பணிகளும் தேசிய போக்குவரத்து ஆணையம் மூலம் தனியாருக்கு சென்றுவிடும். அவர்கள் அதிகக் கட்டணம் வைத்து  கொள்ளை அடிப்பார்கள். அரசு  கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என விலகிக் கொள்ளும்.

இதுமட்டுமல்ல, வாகனத்தை இயக்குவதற்கு குறைந்த கால அளவே அனுமதி வழங்கப்படும். பின்னர் அவைகளை பழைய இரும்புக் கடைக்கு தான் போட வேண்டும். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூக்கை நுழைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு இம்மசோதாவின் ஒவ்வொரு வரியும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுக்கும் வகையிலும், மாநில உரிமைகளுக்கு ஆப்படிக்கும் வகையிலும் உள்ளது. 

Pin It