உலகில் மூன்று பேரில் ஒருவர் குடிசையில் வாழ்கிறார். குறிப்பாக மும்பையில் 54.1 சதவிகித மக்களும், சென்னையில் 25.6 சதவிகித மக்களும் குடிசைகளில் வாழ்கின்றனர். வீடில்லாமல் குடிசைகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் சென்னை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இன்று உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் சமூக, பொருளாதார மாற்றங்களின் விளைவாக நிலம், வீடு உள்ளிட்டவை மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆனால், சொற்ப நிலம் வைத்திருப்பவர்களும் அதை இழந்து கொண்டிருக்கிறார்கள். வீடற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான் "அனைத்து உரிமைகளும் அனைவருக்கும்' என்கிற சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடியும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம், வீடு ஆகியவை கிடைக்கப் பெற வேண்டும் என்ற குரலும் இடையறாது ஒலித்து வருகின்றன.

உணவு, உடை, உறைவிடம் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாகும். அரசமைப்புச் சட்டமும் இதை உறுதிப்படுத்தி யுள்ளது. இதில் உணவு, உடை ஆகியவற்றின் தேவையை அவனால் ஓரளவேனும் நிறைவு செய்து கொள்ள முடிகிறது. உறைவிடம் பெறும் நிலையில்தான் மனிதன் பாதுகாப்பு உணர்வுடனும், வாழ்க்கையை மன நிறைவுடனும் எதிர்கொள்ள முடியும். உறைவிடம்தான் அவனுடைய சமூக உறவுகளுக்கு அடித்தளமாக அமைந்து, அவன் மாண்புடன் வாழ வழிவகுக்கிறது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பாரதியார் நகரிலிருந்து தமிழ் நாடு வீட்டுவசதி வாரியத்தால் மூன்றே நாட்களில் மாற்று இடம் தருவதாகக் கூறி, 189 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அம்பேத்கர் நகரில் உள்ள சமூகக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த சமூகக் கூடத்திலேயே உள்ளனர். மனித மாண்புகள் எதுவுமின்றி, மிக மோசமான சூழலில், துணி, சாக்கு போன்றவற்றால் மறைப்புகளை உருவாக்கி, கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த சமூகக் கூடத்திலேயே வாழ்ந்து வரும் அவர்களுக்கு, அரசு இன்றுவரை மாற்று இடம் வழங்குவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக குடிசைகள் தீ பிடித்து எரியும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 1985 ஆம் ஆண்டில் 8,795 ஆக இருந்த தீ விபத்துகள், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 2008 ஆம் ஆண்டில் மட்டும் 17,433 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு மாதங்களில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைகள் தீ பிடித்து எரிந்துள்ளன. எத்தனையோ குடும்பங்கள் இருந்த குடிசை வீட்டையும் இழந்து, நடைபாதையில் தங்கும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம், மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, சமூகக் கல்வி மனித விழிப்புணர்வு ஆகிய மூன்று அமைப்புகளுடன் மேலும் 16 அமைப்புகள் இணைந்து, 10.11.09 அன்று சென்னையில், குடியிருப்பு உரிமைக்கான மாநில மாநாட்டை நடத்தியது. தமிழகத்தின் குடியிருப்பு நிலைமை, தமிழக அரசின் குடியிருப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலை, குடியிருப்புக் கொள்கை, அதற்கான சட்ட வரைவு, குடியிருப்பு உரிமை, சென்னையில் அகற்றப்படும் குடியிருப்புகள் ஆகியவை குறித்து, இது தொடர்பாகப் பணியாற்றும் ஆர்வலர்கள் உரையாற்றினர்.

வே.அ. ரமேஷ்நாதன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம் : குடியிருப்பு என்பது நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கும், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு நீண்ட கால கனவாகவே இருந்து வருகிறது. இந்தக் குடியிருப்பு நிலைமையினை மாற்றுவதும், ஒரு மனிதனை குடியிருப்புடன் மாண்போடு வாழச் செய்வதும் ஓர் அரசின் கடமையாகும். "குடியிருப்பு என்பது தனிநபரின் சொத்து; அதை அவர்களாகவே பெற்றுக் கொள்ள வேண்டும்; நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்' என்ற பார்வைதான் அரசுக்கு உள்ளது. குடியிருப்பு என்பதை வீடு என்பதிலிருந்து கடந்து அடுத்த கட்டமாக வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி இவ்வாறான அடிப்படைத் தேவைகளை உள்ளடக்கிப் பார்க்கின்ற பார்வை, அரசினுடைய கொள்கையில் நீண்ட காலமாக இல்லை. குடியிருப்பதற்கான 5 சென்ட் நிலத்திற்காக நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமை இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. 1988ஆம் ஆண்டை வீடற்றோருக்கு வீடு அளிக்கும் ஆண்டாக அய்.நா. அவை அறிவித்தது. இந்தியா முழுவதும் இதற்கான பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. குடியிருப்பு என்பதை ஒரு திட்டமாகப் பார்க்காமல் அடிப்படை உரிமையாகப் பார்க்க வேண்டும். குடியிருப்பை ஓர் உரிமையாக அறிவிப்பதற்கு சட்டம் தேவைப்படுகிறது. அதை விவாதிப்பதற்குதான் இந்த மாநாடு.

ரவிக்குமார், சட்ட மன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி : உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமான மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும்போது குடிசை வீடுகளை கணக்கெடுப்பு செய்வதில்லை. இந்த நாடு சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை, ஒரு படிநிலையாகக் கொண்டிருக்கிறது. தலித்துகளுக்கு கீழே யாரும் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிற அமைப்பு இது. நிலம், வீடு இருந்தால் அவர்களுக்கு அந்த இடத்துடன் பிணைப்பு உருவாகி விடுகிறது என்பதால்தான் – இவர்கள் வீடற்றவர்களாகவும், நிலமற்றவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள். இவர்கள் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. சாதி அமைப்பு நிலைப்பெற்ற கடந்த 500 ஆண்டுகளாகத்தான் இந்நிலை. இந்த நாட்டுக்கே சொந்தக்காரர்களாக இருந்தவர்கள், வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மிகவும் ஏழை நாடுகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ளவர்களைவிட, நம் நாட்டில்தான் குடிசை வீடுகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் வாழ்வுரிமை என்பதில்தான் குடியுரிமை என்பதும் அடங்கியுள்ளது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திய பிறகும், வீட்டுமனை கேட்டு மனு கொடுத்து வருகின்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். அரசு சார்பில் எந்தவொரு கட்டடம் கட்டுவதாக இருந்தாலும், ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று பொதுப்பணித்துறை கணக்கிட்டு வைத்திருக் கும். இதனடிப்படையில்தான் ஒப்பந்தம் போடப்படும், கட்டடம் கட்டப்படும். அங்கே ஒரு லட்சம் ரூபாய் என்றால் இங்கே இருபது ஆயிரம் தருகிறார்கள். பொதுப்பணித் துறையின் இதுபோன்ற பல்வேறு வகையான தொகை அளவீடுகள் எப்படி சரியானதாகும்? இந்தப் பாகுபாடுகளைக் குறிப்பிட்டு நாம் நீதிமன்றத்தை அணுகலாம். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 6 மாதங்கள் ஆகியும் "டெண்டர்' எடுக்க ஆள் இல்லை. பொதுப்பணித்துறையின் கட்டணத்தில் தடுப்புச்சுவர் கூட கட்ட முடியாது என்கிறார்கள். ஆனால் 55 ஆயிரம் ரூபாய் டெண்டரில் ஒரு வீடு கட்டித் தர சம்மதிக்கிறார்கள். அது எப்படி? சட்ட ரீதியாக அவர்களை எதிர்கொள்ள நாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இப்பிரச்சனையை அய்.நா. அவைக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுச் சொத்துகளில் உரிமை பெறுவது மற்றும் நிரந்தர வீடு வேண்டிய போராட்டத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

ஜேசுரத்தினம், இயக்குநர், 'சினேகா' : தமிழகத்தில் குடியிருப்பு நிலைமை என்ன என்று பார்ப்பதற்கு முன்பு, நிலம், வீடு ஆகியவையெல்லாம் அரசு ஆவணங்களில் எவ்வாறு உள்ளன என்று பார்க்க வேண்டிய தேவையுள்ளது. அரசு புள்ளிவிவரக் கணக்கெடுக்கும்போது, வீடுகள் குறித்து தேடினால் 2001இல் தான் கொஞ்சம் விவரம் உள்ளது. 1991இல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வீடுகள் குறித்து எந்த விவரமும் இல்லை. 2001 புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 81 லட்சத்து 54 ஆயிரத்து 895 தற்காலிகக் குடியிருப்புகள் உள்ளன. எந்த மாவட்டத்தில் தற்காலிகக் குடியிருப்புகள் அதிகம் உள்ளன என்று பார்த்தால், விழுப்புரம் மாவட்டத்தில்தான் நிறைய உள்ளன. அடுத்து, அரியலூர், நாகப்பட்டிணம், திருவாரூர் ஆகும். எங்கு நிலமில்லாத கூலி விவசாயிகளும், தொழிலாளர்களும் நிறைய உள்ளார்களோ அந்தப் பகுதிகளில் எல்லாம் நிரந்தரமற்ற குடிசை வீடுகள் அதிகமுள்ளன என அரசே சொல்கிறது. புறம்போக்கு, கோயில் புறம்போக்கு, அரசு புறம்போக்கு போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தெளிவான அறிவிப்பும் இல்லை. வீடில்லா அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கான கொள்கையை உருவாக்க வேண்டியது குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.

மோகன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம் : ஏழை எளிய மக்களுக்கு வீடு என்பது ஒரு தலைமுறைக் கனவு. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், "அனைவருக்கும் வீடு' என்ற கொள்கையுடன் 1961 ஆம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இதுவரை 3 லட்சத்து 90ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், அரசாங்கத்திடம் செல்வாக்கு கொண்டவர்கள் போன்றோர் மட்டுமே வீடுகளைப் பெற்றுள்ளனர். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடிசையில் வாழும் மக்களை அவர்களுக்கு தொடர்பில்லாத, வாழ்வாதாரம் இல்லாத பகுதிகளில் குடியேற்றுகின்றனர். குடிசை மாற்று வாரியம் கட்டுகின்ற வீடுகள் வெளியிலிருந்து பார்ப்பதற்கு பெரிதாகவும், நன்றாகவும் உள்ளன. ஆனால் உள்ளே சென்று பார்த்தால் 10 து 10 என்ற அளவில்தான் உள்ளன. இதற்கடுத்து அன்னை இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 157 சதுர அடியில் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என கட்டிக்கொடுக்கிறார்கள். சொந்த இடம், பட்டா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இந்த வீடுகளின் தரத்தை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை.

பெருகிவரும் மக்கள் தொகை, மழை வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் வீடற்றோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களை விட்டு நகரங்களுக்கு மக்கள் இன்று இடம் பெயர் வதும் அதிகரிக்கிறது. அவ்வாறு இடம் பெயர்பவர்கள் நகரங்களின் நடைபாதைகளில், குப்பை மேடுகளில் கழிவு நீர் செல்லும் ஓடைகளின் அருகில் குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். வடமாவட்டங்களில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது. அந்த நேரங்களில் அரசு மக்களுக்கு அரிசி கொடுக்க ஏற்பாடு செய்கின்றதே தவிர, இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு பாதிப்பில்லாமல் எப்படி செயல்படுவது என்று நீண்ட கால திட்டம் எதுவுமின்றி செயல்படுகின்றனர்.

ஆசி பெர்னான்டஸ், மனித உரிமை மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மய்யம் : 1986 ஆம் ஆண்டிலிருந்து குடியிருப்பு உரிமை களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இங்குள்ள மக்களை இணைத்துப் பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள் ளோம். ஆனாலும் இதுவரை உரிமைகள் மட்டும் கிடைக்கவில்லை. நலத்திட்டம் என்று உருவாக்குவார்கள். பிறகு வேறொரு திட்டத்தின் மூலம் குடியிருப்புகளை காலி செய்வார்கள். இப்பொழுது கூட சீனிவாசபுரம் முதல் நொச்சிக் குப்பம் வரை 8000 குடும்பங்களை காலி செய்ய உள்ளார்கள். குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு கொடுக்கச் சென்றால், கொஞ்சம் கூட நம்மை மதிக்காமல் பெயரளவில் மனுவை பெற்றுக் கொண்டு அனுப்பி வைக்கிறார்கள். பட்டினப்பாக்கத்தில் 74 ஏக்கர் குடியிருப்புகளை அங்குள்ள ஏழை, எளிய மக்களுக்குத் தராமல் தனியார் நிறுவனத்திற்கு தந்துவிட்டார்கள். குடியிருப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட்டõல்தான் நமக்கெல்லாம் வீடு.

அரசமைப்புச் சட்டம் 21 வாழ்வுரிமை பற்றி கூறுகிறது. அதே சட்டத்தின் 19 ஆவது பிரிவு குடியிருப்பு குறித்தும் சொல்கிறது. ஆனால், ஏழை மக்களின் குடியிருப்பு குறித்து நீதிமன்றமும் கவலைப்படுவதில்லை. 10 மாடி அளவில் ஒரு பெரிய கட்டடம் கட்டுகிறோம் என்று அரசு சொன்னால், அங்கிருக்கின்ற மக்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், நீதிமன்றம் குடிசைகளை அப்புறப்படுத்த உத்தரவிடுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பெயராலும் மக்களின் நிலம் அபகரிக்கப்படுகின்றன. இப்பொழுது நாம் கேட்பது எல்லாம் மக்கள் இருக்கின்ற இடங்களுக்கு பட்டா கொடுங்கள் என்பதுதான். அந்தப்பட்டாவைக் கூட அரசோ அல்லது வேறு எவருமோ எந்தவொரு ஆக்கிரமிப்பும் செய்ய முடியாத வகையில் கொடுக்க வேண்டும். இத்துடன் அருகில் உள்ள இடங்களையும் அங்குள்ள மக்களுக்குத் தெரியாமல் விற்கக் கூடாது. மூன்றாவது, அடிப்படை வசதிகளை அப்புறப்படுத்துவது அடியோடு நிறுத்தப்பட வேண்டும். இதுதான் நாம் கேட்கின்ற சட்ட வரைவு. இதை அடிப்படையாக வைத்துதான் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

கிராம பஞ்சாயத்தில் நிலம் எடுக்க, கட்டடம் கட்ட, அந்த பஞ்சாயத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இப்போது அச்சட்டத்தை எடுத்து விட்டார்கள். இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடம் கிடைப்பது எளிதாகியுள்ளது. புறம்போக்கு நிலங்களில் 10, 15 ஆண்டுகள் இருந்தாலே பட்டா வழங்க வேண்டும் என்று சட்டத்தில் இருக்கிறது. ஆனால் ஓரிடத்தில் 40, 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் தலித்துகளுக்கு இதுவரை பட்டா இல்லை. தலித்துகளுக்கு மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு? 1961ஆம் ஆண்டு, 5 ஆண்டுகள் கோயில் நிலம் போன்றவற்றில் குடியிருந்தால் பட்டா வழங்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. கோயில் நிலங்களை பஞ்சாயத்து தீர்மானத்தின்படி ஏழை, எளிய மக்களுக்கு பட்டா போட்டு கொடுக்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் இந்தச் சட்டங்களையெல்லாம் செயல்படுத்த அனுமதிக்க மாட்டார்கள்.

சாமுவேல், கையால் மலம் அள்ளுதல் ஒழிப்புப் பிரச்சாரம் : தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துப்புரவுத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வீடுகள் பெரும்பாலும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளன. வீட்டின் அளவு மிகவும் குறுகியதாக இருக்கும். ஒரு கட்டில் மட்டுமே போட முடியும். கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் கிடையாது. ஊரில் உள்ள குப்பைகளை எல்லாம் கொட்டும் இடங்களில்தான் வீடுகட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக, 5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா கொடுக்கலாம் என்கிறார்கள். நாங்கள் 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். ஆனால், எங்களுக்கு பல்வேறு காரணங்களை காட்டி பட்டா தர மறுக்கின்றனர். துப்புரவுப் பணியாளர் உரிமைகளைப் பறிக்கும் நிலையிலும் மறுக்கின்ற நிலையிலும்தான் இருக்கின்றனர். தாம்பரம் பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. 5 தலைமுறைகளாக மின்சாரம், குடிநீர் வசதிகள் என எதுவும் வழங்கப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கான வீட்டு உரிமையில் தனிக்கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.

ஜீவா, சிறப்புப் பொருளாதார மண்டல எதிர்ப்பு இயக்கம் : சிறப்புப் பொருளாதார சட்டம் 2005இல் நில ஆர்ஜிதம் செய்கின்ற பொழுது, அரசு நிறுவனத்தில் பொது சேவைக்காக நிலங்களை கையகப்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. ஆனால், இப்பொழுது மறுவாழ்வு, மறுசீரமைப்பு என்ற பெயரில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். வரி இல்லாத மண்டலங்களுக்கு ரூபாய் 56 ஆயிரம் கோடி இழப்பீடு வரிச்சலுகையாக மத்திய, மாநில அரசுகள் கொடுக்கின்றன. ஒரு லட்சம் கோடி வரிச்சலுகையாக இந்த நிறுவனங்களுக்கு அரசு தருகிறது. சிறப்புப் பொருளாதார நிறுவனங்கள், தமிழ் நாட்டின் பல இடங்களில் நிலங்களை ஆர்ஜிதம் செய்து வருகின்றன. பொது நிலத்தின் தண்ணீர் உட்பட அனைத்தும் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

ஆர். கீதா, கட்டடத் தொழிலாளர் சங்கம் : நான் சார்ந்துள்ள கட்டடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் சில முக்கியமான கோரிக்கைகளை தொடர்ந்து கேட்டு வருகிறோம். சென்னையில் முதலில் குடிசைப் பிரச்சனை வந்தது 1930, 1937, 1940 ஆகிய ஆண்டுகளில்தான். 1937இல் இருந்த அரசாங்கம்தான் குடிசைப் பகுதிகளை பிரிக்கக் கூடாது என ஒரு வரிச் சட்டம் இயற்றியது. அதன் பிறகு 1957 என்று நினைக்கிறேன், அப்போதும் குடிசையை பிரிக்கக் கூடாது என்ற நிலைதான் இருந்தது. அப்போதெல்லாம் "குவார்ட்டர்ஸ்' என்பார்கள். ஆக்கிரமிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள். அப்போதெல்லாம் குடிசைகளில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் என்று மதிக்கப்பட்டார்கள்.

அப்ப வந்தவங்க எல்லாம் வீடு இல்லாமல் வரவில்லை. வேலை செய்வதற்காக வந்தார்கள். எந்த இடத்தில் வேலை உள்ளதோ அந்த இடத்திற்கு அருகில் குடிசை போட்டு தங்குவார்கள். அப்போதுதான் வேலைக்குச் செல்ல முடியும் என்பதற்காக. பணியிடத்திற்கு அருகில் குடிசை போட்டு தங்குவதை "குவார்ட்டர்ஸ் செட்டில்மென்ட்' என்பார்கள். குடிசைகளில் வாழும் அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றக் கூடாது என்பதற்காக மட்டும் இல்லாமல், அவர்கள் நிலையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் குடிசைப் பகுதிகள் சட்டம் என்று, 1971 இல் சென்னை மேயராக இருந்த காந்தியவாதியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொண்டு வந்தார்.

இதற்குப் பிறகுதான், அடிப்படை வசதி செய்துதரப் பட வேண்டும், போதுமான குடியிருப்பு வசதி உருவாக்கித் தரப்பட வேண்டும் என்பதற்காகத்தான் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. குடிசை வீடுகளை கல் வீடுகளாக மாற்றுவதுதான் இதன் நோக்கம். இந்த குடிசை மாற்று வாரியம், இன்று குடிசை அகற்று வாரியமாக மாறியிருக்கிறது. இதுதான் இன்றைய நிலைமை. நம்மை இந்த நகரத்தை விட்டே துரத்துவதைத்தான் நவீன தீண்டாமை என்று சொல்லுகிறோம். எங்களுடைய உழைப்பு மட்டும் இந்த நகரத்துக்கு வேண்டும். ஆனால், நாங்கள் மட்டும் இந்த நகரத்தில் வசிக்கக் கூடாது. கட்டடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யக் கூடியவர்கள், சிறு வியாபாரிகள், ரிக்ஷா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் என இவர்கள் எல்லாம் வசிக்கும் பகுதிதான் குடிசைப் பகுதி.

இன்று கூவம் கரைப் பகுதியில் குடிசைகளில் வசிப்பவர்கள் எல்லாம் எப்படி வந்தார்கள்? கூவம் ஆற்றை சரி செய்வதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் 12 குடும்பங்களைக் கொண்டு வந்து தங்க வைத்தது. இந்த 12 குடும்பங்கள்தான் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 500, 1000 குடும்பங்களாகப் பெருகியிருக்கின்றன. ஒவ்வொரு குடிசைப் பகுதிக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்னவென்றால், அவர்கள் உழைப்பாளர்கள். அவர்களுடைய உழைப்பைப் பெறுவதற்காக கொண்டு வந்து தங்க வைத்தீர்கள். ஆனால், இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? காமராஜர் காலத்தில் குடிசைப் பகுதிகளுக்கு இலவச பட்டா தந்தார்கள். ஆனால் அதற்குப் பின்பு உலக வங்கி உதவியுடன் வந்த சில திட்டங்களில் உங்களுக்கு ரோடு போடுவோம், விளக்கு போடுவோம், தண்ணீர் வரவழைப்போம், பட்டாவும் கொடுப்போம்; ஆனால் நீங்கள் பட்டாவிற்கு பணம் தரவேண்டும் என்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு சென்னை மாநகரத்தில் இலவச பட்டா தருவதற்கும், எல்லா வசதிகளை செய்து தருவதற்காகவும் – ஒவ்வொரு குடிசைப் பகுதியிலும் உள்ள குடிசை வாழ்வோர் சங்கம் எல்லாம் இணைந்து போராடி இலவச பட்டா பெற்றார்கள். இதுதான் சென்னை வரலாறு. ஆனால் இன்று நிலைமை என்னவென்றால் அகற்றப்படுத்துதலுக்கு ஆளாகியிருக்கிறோம்.

முதலில் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதியா என்பதை நாம் பார்க்க வேண்டும். குடிசைப் பகுதி சட்டத்தின் கீழ், 1971இல் 1500 பகுதிகளை குடிசைப் பகுதி சட்டத்தின் கீழ், குடிசைப் பகுதி என்று அறிவித்தார்கள். அதன் பிறகு ஒரு 500 பகுதியை சேர்த்தார்கள். மொத்தம் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் 2000 உள்ளன. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதியை யாராலும் தொட முடியாது அதுதான் அந்தச் சட்டம். ஆனால் அந்தச் சட்டத்தை குடிசை மாற்று வாரியம் மறந்து விட்டது. இதுதான் இன்றைய நிலைமை. குடிசைப் பகுதிகளை அகற்றி நகரை வளர்ச்சி செய்கிறோம் என்பது, மிகவும் கேவலமான ஒரு பேச்சு. இந்த குடிசைப் பகுதி மக்கள்தான் நாட்டின் இன்றைய வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றவர்கள். அவர்களை அகற்றி விட்டு என்னையா வளர்ச்சி பற்றி பேசுகின்றீர்கள் என்ற கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். அதனால்தான் அன்று “வீடு கட்டும் தொழிலாளி, வீதியில் உறங்குகிறான்'' என்று அண்ணாதுரை சொன்னார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் நிலைமை என்னவென்றால், வீடற்று நடைபாதையில் இன்று ஒரு லட்சம் மக்கள் உள்ளனர்.

ஒரு லட்சம் பேர் நடைபாதையில் இருக்கும்போது, எப்படி சென்னையை சிங்கப்பூரா மாத்துவ? உலகத் தரத்துல மேம்பாலம் போடுவ? இது எப்படிப்பட்ட போலித்தனமான பேச்சு, செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையில், கண்ணகி நகர்ல வீடு கொடுத்தா எப்படி அவங்க குடும்பம் நடத்த முடியும்? எங்காவது நடைபாதையில் தங்கிட்டு, ஞாயிற்றுக் கிழமை மட்டும்தான் வீட்டுக்குப் போக முடியும். மற்ற நாட்களில் பூட்டிதான் போடணும். இல்ல வித்துட்டுதான் வேலை இருக்கிற இடத்துக்குப் போகணும். இவனுங்களுக்கு எல்லாம் எதுக்கு வீடுன்னு வாழவே வழியில்லாத இடத்துல கொண்டு போய் போட்டா, விக்காம என்ன செய்வாங்க? தொழிலுக்கு, குழந்தைங்க படிப்புக்கு என்ன செய்வாங்க? ஒண்ணும் செய்ய முடியாது. அதனாலதான் வித்துட்டு மீண்டும் குடிசைக்கே வராங்க. தொழிலாளர்களிடமோ, குடிசைப் பகுதி மக்களிடமோ கலந்து பேசுகின்ற மனோபாவம் கொஞ்சம்கூட அரசாங்கத்திடம் கிடையாது. முன்பு இரண்டு நல்ல சட்டங்கள் இருந்தன.

இதுவரை நான் சொன்னது குடிசைப் பகுதி சட்டம். இப்போது இன்னொரு நல்ல சட்டத்தைப் பற்றி சொல்கிறேன். நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டம். இச்சட்டத்தின்படி எந்தவொரு தனிநபரும் 4 கிரவுண்டுக்கு மேல் வைத்துக் கொள்ள முடியாது. எந்தவொரு கம்பெனியும் 11 கிரவுண்டுக்கு மேல் வைத்திருக்க முடியாது. இதெல்லாம் சட்டத்தில் இருந்தது. அதன் பிறகு நிறைய நிலங்கள் இருந்தன. அந்த உபரி நிலங்களைக் கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம். அதைச் செய்யாமல், அரசு உபரி நிலங்களில் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், வட்டாட்சியர் அலுவலகம் போன்றவற்றை கட்டினார்கள். அரசு நினைத்திருந்தால் அந்த உபரி நிலங்களில் வீடில்லாத அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்திருக்க முடியும். அதற்கான அக்கறை அரசாங்கத்திடம் கிடையாது.

இப்போது பாரிஸ் கார்னர் பக்கத்தில் நடைபாதைகளில் ஏன் நிறைய பேர் இருக்கிறார்கள்? ஜார்ஜ் டவுன் என்பது மிகப் பெரிய ஹோல்சேல் மார்க்கெட்டாக முன்பு இருந்தது. இப்பவும் நிறைய கம்பெனிகள் உள்ளன. ஹோல்சேல் மார்க்கெட்டிங் தொழிலுக்கு நிறைய லோடிங், அன்லோடிங் ஆட்கள் தேவைப்பட்டது. ஹோல்சேல் பொருட்கள் லாரியில் வரும். பகலில் இறக்க முடியாது. இரவில்தான் இறக்க வேண்டும். தொழிலாளிகள் நடைபாதையில் இருந்தால்தான் நல்லது. இது தொழிலாளிகளுக்கு கஷ்டம் என்பதல்ல. முதலாளிகளுக்கு லாபம். வியாபாரிகளின் லாபத்திற்காகத்தான் அவர்கள் இரவில் அங்கு இருப்பார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் அங்கு பூ விற்பார்கள் அல்லது மார்வாடி வீட்டில் வேலை செய்வார்கள். இதுதான் நிலைமை. நீங்கள் போய் பார்த்தால் தெரியும் கீழே கடை இருக்கும், மேலே மார்வாடி வீடு இருக்கும். அவன் நடைபாதையில் இருந்தால்தான் தொழில் செய்ய முடியும். இந்த மழை காலங்களில் நடைபாதையில் இருப்பவர்களின் கஷ்டங்களை நாம் ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும். குடிசைக்குள் தண்ணீர் போகும். அரசு உடனே கார்ப்பரேஷன் பள்ளிகளைத் திறந்து விடும். இப்போது இதைக்கூட முறையாக செய்வதில்லை. இப்போதெல்லாம் குடிசைப் பகுதிகளில் லைட்டோ, தண்ணீர் வசதியோ கேட்டால், உனக்கு எதுக்கு அதெல்லாம்; உங்களதான் தூக்கப் போறோமே என்கிறார்கள்.

இன்றுள்ள அகற்றுதல் என்ற நிலை மாறவேண்டும். அடிப்படையில் சென்னை மாநகரம் தொழிலாளிகளின் நகரமாகும். ஆனால் இன்று முதலாளிகளின் நகரமாகத்தான் உள்ளது. இங்கு தொழிலாளர்களாக இருப்பவர்கள் தலித்துகளும், மீனவர்களும்தான். ஆனால் இன்று அரசாங்கம் மிக மோசமான வேலையை செய்கிறது. தலித்துகளையும், மீனவர்களையும் பிரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. அண்ணா நகரில் நடந்ததை நாம் பார்க்க வேண்டும். முதலில் மீனவர் அல்லாதாரை வெளியேற்றினார்கள். அதன் பிறகு மீனவர்களை தூக்கினார்கள். அதனால் பிரிப்பதற்கு நாம் விடக் கூடாது. மீனவர், மீனவர் அல்லாதோர் என்ற பிரிவினையை நாம் முறியடித்தாக வேண்டும். சீனிவாச புரத்தில் முதலில் பிரிவினை இருந்தாலும், பிறகு பேசி இணைந்த பிறகுதான் தக்க வைக்க முடிந்தது. வீடு கிடைச்சதால தக்க வைக்கல. சேர்ந்ததால்தான் தக்க வைத்தோம். அரசின் நோக்கம், குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவது அல்ல. குடிசை வாசிகளை எப்படி நடைபாதை வாசிகளாக மாற்றுவது என்பதுதான். இம்மக்களுக்கு எந்தவொரு வசதியையும் செய்து தராமலிருப்பது. அதே நேரத்தில் அவர்களுடைய உழைப்பை மட்டும் பெற்றுக் கொள்வது. இவர்களுக்கு எந்தவொரு அடிப்படை உரிமையும் தராமல் மறுப்பது என்பதைத்தான் இன்றைய அரசாங்கம் செய்து வருகிறது. எனவே, நாம் இணைந்து போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும்.

குடியிருப்புச் சட்ட வரைவு வேண்டும்

 தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, இனி வரும் 10 ஆண்டுகளுக்கு குடிசை மற்றும் குடியிருப்புப் பகுதிகளை அப்புறப்படுத்துவது, நிலங்களை கையகப்படுத்துவது ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தொகுப்பு வீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்தி, 325 சதுர அடியில் குடியிருப்புகளைக் கட்ட வேண்டும்.

 தமிழ்நாடு குடியிருப்புச் சட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அரசிடம் அளித்து, அதை சட்டமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 குடியிருப்பை உரிமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, தமிழ்நாடு குடியிருப்பு உரிமைப் பாதுகாப்பு பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்.

– மாநாட்டில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தொகுப்பு : ரா. முருகப்பன்

 

Pin It