ஆசியாவிலிருந்து சாதிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று அண்மையில் என்னைச் சந்தித்து, உடைத்து எறியப்பட்ட பொதுக் கழிவறையின் சுவரிலிருந்த ஓர் செங்கல்லை என்னிடம் அளித்தனர். அந்தச் செங்கலானது, "கீழ் சாதி'யினரை வெறுங்கையால் பொதுக் கழிப்பிடத்தை சுத்தப்படுத்த நிர்பந்திக்கும் அவலமான வழக்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் குறியீடாகும்.

இந்த அவலமான வழக்கம், சட்ட ரீதியான தடைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்த போதிலும் பல பகுதிகளில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்த வேலையை எவரும் விருப்பத்தின் காரணமாக செய்வதில்லை. இது, அவர்களின் சமூக மூலமான சாதியின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. அதன் விளைவாக, ஒதுக்கப்பட்ட இம்மக்கள், வேலையால் மேலும் அழுக்கானவர்களாக்கப்பட்டு – பரம்பரை பரம்பரையாக சமூகத்தில் நிலவக் கூடிய தனிமைப் படுத்துதலில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இன்று சாதியால் பாதிப்பிற்குள்ளான சமூகங்களும், சமூக ஆர்வலர்களும் – இன்னும் பலமாக கட்டப்பட்டுள்ள, கண்ணுக்குப் புலப்படாத "ஒதுக்கப்படுதல்' எனும் பெருஞ்சுவரைத் தகர்த்தெறிய முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதற்காக புதிய சர்வதேச சமத்துவ நிலைகளையும், பாகுபாடற்ற நிலைகளையும் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய மன உறுதியின் மீதும், தைரியத்தின் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மை கறுப்பினப் பெண்ணாக வளர்ந்த எனக்கு "ஒதுக்கப்படுதல்' என்பதின் பொருள் நன்கு புரியும்.

தீண்டாமை என்னும் சமூக அவலம் உலகெங்கும் சுமார் 26 கோடி மக்களை பாதிக்கிறது. இம்மாதிரியான ஒதுக்கப்படுதல் பல்வேறு சமூக, பண்பாடுகளில் ஆழமாகக் காணப்படும் சடங்கு ரீதியிலான கொள்கைகளில் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த அவலம் ஒரு குறிப்பிட்ட பூகோள பகுதியிலோ, குறிப்பிட்ட மதத்தில் மட்டுமோ நடைபெறும் செயல் அல்ல. இது ஒரு சர்வதேச அவலம்.

மனித உரிமையின் அடிப்படைப் பண்புக் கூறுகளான பாகுபாடு காட்டாமை, வேற்றுமையின்மை ஆகியவற்றை சாதி மறுக்கிறது. அது ஒருவனை பிறப்பிலிருந்தே பழிக்கு உள்ளாக்குகிறது. அவன் சார்ந்த சமூகத்தை சுரண்டலுக்கும், வன்முறைக்கும், சமூக ஒதுக்குதலுக்கும், வெறுத்து ஒதுக்கப்படுவதற்கும் உள்ளாக்குகிறது. சாதிய பாகுபாடு – மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அதனால் பாதிக்கப்படுபவர்களின் இன்னும் பிற சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் ஏதுவாகிறது.

"கீழ் சாதியினர்' என முத்திரையிடப்பட்ட நபர்கள், தலைமுறை தலைமுறையாக குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களையே செய்ய கட்டாயப்படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு விவசாயம் செய்ய நிலங்களோ, அதற்கு கடனுதவிகளோ கிடைப்பதில்லை. இவர்கள் மீளமுடியாத கடன் சுமையினால், கொத்தடிமைகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். தற்கால அகராதியில் இதை அடிமை வாழ்வு என்றே அழைக்க வேண்டும். நீதிக்காகவும், இழப்பீடுகளுக்காகவும் இம்மக்கள் கடக்க வேண்டிய தடைகள் அசாதாரணமானவை. பிறப்பின் அடிப்படையில் "கீழ்சாதி' எனப்படுபவர்களின் குழந்தைகளிடையேதான் குழந்தைத் தொழிலாளர் முறையும், அதிக எழுத்தறிவின்மையும் காணப்படுகின்றன. பெண்களுக்கு சாதி என்பது, அவர்களுடைய துயரைப் பன்மடங்காக்கும் கூராகும். இதனால் வறுமையும், ஒதுக்கப்படுதலும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த அவலத்தைத் தடுக்க பல நாடுகளில் சட்டமும், கொள்கைகளும் இருக்கின்றன. சாதி ரீதியான பாகுபாட்டை அரசியல் சட்டங்கள் தடை செய்துள்ளன. "கீழ் சாதி'யை சேர்ந்தவர்கள் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுரண்டலுக்கும், வன்முறைக்கும் எதிரான பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை என சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்படுவோர்க்கு நீதியும், இழப்பீடும் வழங்க நீதித்துறை தலையிட்டிருக்கிறது. நிலைமைகளை கண்காணித்து "கீழ் சாதி' மக்களுக்கு ஆலோசனை வழங்க அர்ப்பணிப்புள்ள நிறுவனங்கள் செயல்படுகின்றன.

அனைத்து வகை இனப்பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தம், இனப்பாகுபாட்டிற்கான அடிப்படை பிறப்பு ரீதியிலானது என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. டர்பன் மாநாட்டுப் பிரகடனமும், 2001இல் இனவாதத்திற்கு எதிராக உலக அரங்கில் கொண்டு வரப்பட்ட செயல்திட்டமும், பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வேறுபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளன. அந்தப் பாகுபாட்டை களைவதற்கு தெளிவான செயல் திட்டத்தையும் அவை அளித்துள்ளன. அச்செயல்திட்டத்தை ஏப்ரல் 2009இல் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

எனினும் சாதிய வேறுபாடுகளைக் களைய, இலக்கு நோக்கிய சமூகக் கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். பிறப்பு, அதிகாரம், பணபலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமாகப் பதிந்துள்ள சமூக, பண்பாட்டு நம்பிக்கைகளை மாற்றுவதற்கு கல்வித் திட்டங்கள் அவசரமான, தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்திற்கும் மேலாக சாதிய பாகுபாட்டிற்கு உள்ளான இனக்குழுக்களுக்கு – அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும், மதிப்பீடு செய்வதிலும் முழு உரிமைகளையும் கொடுக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக பன்னாட்டு சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுத்ததுபோல, இந்த முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.

மக்களை வறுமையிலும், நம்பிக்கையற்ற வாழ்விலும் தள்ளும் வெறுக்கத்தக்க செயல்களான – ஒதுக்கப்படுவதற்கும், விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதற்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது உடனடி தேவை. இது, நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்க சாதி வேட்பாளருக்கு வாக்களிக்க மறுத்து, தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்ததால் ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட "கீழ் சாதி' குடும்பங்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. அரசாங்கத்தின் பொது நலத் திட்டங்களால் பயன் பெற முடியாமல் சாவோடு போராடிய "கீழ் சாதி' மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. பொது இடத்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்ட கீழ் சாதி பெண்ணுக்கும், ஆதிக்க சாதியினரால் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்டு, தன் கழிவையே தின்ன வைக்கப்பட்ட பெண்ணுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை.

சாதியால் பாதிக்கப்பட்ட அனை வருக்கும் நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும். பாரம்பரியம், வழக்கம் என்று கூறியோ "குலத் தொழில்' என்று கூறியோ கோடிக்கணக்கான மக்களின் அவல நிலையை நியாயப்படுத்த முடியாது.

மனித உரிமைகளை காக்கவும், வளர்க்கவும் பல நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பான மனித உரிமைக் குழுவானது, "வேலை மற்றும் பரம்பரை அடிப்படையிலான பாகுபாடுகளை திறம்பட நீக்குவதற்கான வரைவுக் கோட்பாடு மற்றும் வழிகாட்டு நெறிகள் – 2009அய்' ஆதரித்து ஆக்கப்படுத்த வேண்டும். இவ்வறிக்கை இனப்பாகுபாட்டிற்கு எதிராக தற்பொழுதுள்ள நியதிகளையும் கோட்பாடுகளையும் முழுமையாக்குகிறது. இந்த கட்டளை சட்டங்களை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

சாதி எனும் கேவலமான கருத்தியலை அடியோடு அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அழிக்க முடியாது என்று கருதப்பட்ட பிற அடிமை முறை, இனவெறி போன்ற கடும் சவால்கள் எல்லாம் கடந்த காலங்களில் தகர்த்தெறியப் பட்டுள்ளன. எனவே, சாதி எனும் சுவரையும் நாம் தகர்த்தெறிய முடியும். தகர்த்தெறிய வேண்டும். 

-----------------

இக்கருத்துரை 8.10.2009 அன்று வெளியிடப்பட்டது.

தமிழில்: மாணிக்கம்

Pin It