சாதி வெறி தலைக்கேறிய 17 வயது மாணவர்கள் தங்கள் சக மாணவன் தலித் சமுகத்தைச் சேர்ந்தவன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டின் சமத்துவத்தையே பெருங்கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பெருந்தெரு பகுதியில் சுமார் 150 தலித் குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குத் தலித் சமுகத்தைச் சேர்ந்த சத்துணவு உதவியாளரான அம்பிகாபதி என்பவர் 17 வயது மகன் சின்னதுரை மற்றும் 13 வயது மகள் சந்திரா செல்வியுடன் வசித்து வருகிறார். இம்மக்கள் சுற்றியுள்ள ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதால், அம்பிகாபதி தன் குழந்தைகளை வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்துள்ளார்.

அங்கு, 12-ஆம் வகுப்பு படிக்கும் சின்னதுரை தொடர்ந்து ஆதிக்கச் சாதி மாணவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் ஆதிக்கச் சாதி மாணவர்கள் சின்னதுரையை வேலை ஏவுவது, அவனிடமுள்ள பணத்தைப் பிடுங்குவது, கடைக்குச் சென்று சிகரெட் வாங்கச் சொல்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சின்னதுரை பொதுவாக நன்றாகப் படிக்கும் மாணவன். அதனால் அவனை முன் உதாரணம் காட்டி மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை கூறியுள்ளார். ஒரு தலித் மாணவனை முன் உதாரணமாகக் கூறியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சாதி மாணவர்கள் சின்னதுரையிடம் தகராறு செய்துள்ளனர்.nanguneri dalit student houseஇதனால் மனமுடைந்த சின்னதுரை, தான் இனி பள்ளி செல்லமாட்டேன் என்றும் சென்னைக்கு வேலைக்குப் போகப் போவதாகக் கூறி 10 நாட்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான். ஆனால் அவனின் அம்மா தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பள்ளி ஆசிரியர், தாய் அம்பிகாபதியை அலைபேசியில் தொடர்புகொண்டு சின்னதுரையைப் பள்ளிக்கு அழைத்து வருமாறுக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சின்னதுரையும் அம்பிகாவும் காலை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரைச் சந்தித்துள்ளனர். ஆசிரியர்கள் சின்னதுரையை விசாரித்ததில் தான் சக மாணவர்களால் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டதை சின்னதுரைக் கூறியுள்ளான். அதற்கு அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர் உறுதியளித்துள்ளார்.

இதைத் தெரிந்த சக ஆதிக்கச் சாதி மாணவர்கள் சின்னதுரை மேல் கடும் கோபத்திலிருந்திருக்கின்றர். அதில் ஒரு மாணவனான செல்வ ரமேஷ் அன்று மாலை தன் பாட்டியுடன் சின்னதுரையின் வீட்டிற்குச் சென்று பேசியுள்ளனர். அம்பிகாபதியும் இயல்பாகப் பேசியுள்ளார். ஆனால் செல்வ ரமேஷ் வீட்டை நோட்டம் பார்க்கவே வந்துள்ளதாக இப்பொழுது தெரிகிறது. அவர்கள் பேசி சென்ற பின் இரவு 10.30 மணி அளவில் 6 ஆதிக்கச் சாதி மாணவர்கள் கையில் அரிவாளுடன் தலித் குடியிருப்புக்குள் புகுந்துள்ளனர். சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் சாதிரீதியாக ஆபாசமாகப் பேசி தன் தாயின் கண் முன்னே அவனைச் சரமாரியாகக் கொலைவெறியுடன் வெட்டியுள்ளனர். தன் அண்ணனைக் காப்பாற்ற வந்த சந்திரா செல்வியைக் கையில் பலமுறை வெட்டியுள்ளனர். அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார் தாய் அம்பிகாபதி. சத்தம் கேட்டு ஊர்மக்கள் வருவதை அறிந்த மூவரும் வெளியில் நின்ற மூவரின் உதவியுடன் தப்பிச்சென்றனர். வீடு முழுக்க இரத்த வெள்ளத்துடன் குழந்தைகளைப் பார்த்த, இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான கிருஷ்ணன் (55 வயது) அதிர்ச்சியில் மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதல் உதவிக்காக ஊர்மக்கள் குழந்தைகளை வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். உயிருக்குப் போராடிய நிலைமையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இரு குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சின்னதுரை கை, கால், தோள்பட்டை முதல் பாதம் வரை வெட்டுகளுடனும், சந்திரா கை மற்றும் விரல்களில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சம்பவம் நடந்தவுடன் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவலர்கள் யாரும் நீண்ட நேரம் வரவில்லை என்றும் அதைத்தொடர்ந்து ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பிறகே காவலர்கள் நடவடிக்கை எடுத்ததாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பின் செல்வ ரமேஷ், சுப்பையா, சுரேஷ் மற்றும் தப்பிக்க உதவிய கல்யாணி, செல்லதுரை, வான்முத்து உட்பட 7 பேரும் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளுக்கான மருத்துவ உதவி மற்றும் படிப்பிற்கான செலவைத் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை ஏற்றுள்ளது. ஆனால், இது சின்னத்துரை என்ற தனி நபருக்கு வழங்கப்படும் தற்காலிக தீர்வாக அமையுமே ஒழிய, சமூகத்தில் நிலவும் ஆதிக்க சாதிவெறி ஒழிக்கப்படாமல் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது. அரசு அந்த தீர்வை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

தங்கள் கிராமத்து பள்ளியில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாலே வெளியூருக்கு சின்னதுரையைப் படிக்க அனுப்பியதாகத் தாய் அம்பிகா கூறியுள்ளார்.

மேலும், பெருந்தெருவைச் சுற்றியுள்ள ஆதிக்க சாதியினரால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் சிலர் ஊரை விட்டே வெளியேறியுள்ளதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்றும் பொது குளத்தில் இறங்கத் தடை, கோவிலுக்குள் நுழையத் தடை போன்ற பல சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ளனர் பெருந்தெரு மக்கள்.

இந்த சாதிய சமுக சுழலே 16 வயது மாணவர்களின் மனதில் கொலை செய்யும் அளவிற்கு நஞ்சை விதைத்துள்ளது. இத்துடன் தற்போது சாதிமத பெருமை, ‘குடி’பெருமை போன்ற அரசியல் ஆதாயத்திற்காகப் பேசப்படும் மேடைப்பேச்சு பிரச்சாரங்களால் தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீதான வெறுப்பு மனப்பான்மையை விதைக்கின்றனர்.

நண்பனின் சாதியை வீட்டில் யாரோ கேட்டால் கூட அவமானமாக நினைத்த முந்தைய தலைமுறையை விடத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய இந்த இளம் தலைமுறை சர்வசாதாரணமாக சாதிப்பெருமையைப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. கையில் சாதி வண்ணக் கயிறு, இருசக்கர வாகனங்களில் சாதிக்கு ஒரு வண்ண ரிப்பன், புகைப்படம், வீடுகளில் குறியீடுகள் முதல் விழாக்களுக்கு வைக்கும் பேனர்கள் வரை சுயசாதி பெருமையை உயர்த்திப் பிடிக்கிறது இன்றைய இளம் தலைமுறை.

இதைவிட எத்தனையோ ஆக்கப்பூர்வமான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கும் போதும் இஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களிலும் சாதிப் பெருமை பேசுவதும் மற்றும் தன் சாதியைக் குறிக்கும் வகையில் சில வண்ணக் குறியீடுகளுடன் பெயர்கள் வைப்பது போன்ற செயல்களைப் பார்க்கும் போதே இளைய சமுதாயத்திற்கு மனதில் எந்த அளவிற்குச் சாதிவெறி ஏறி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாடு முழுவதும் இவ்வாறான சாதிய ஒடுக்குமுறைகள் நடந்தாளும் தென்மாவட்டங்களில் இது மிகக் கொடூரமான வன்முறையாக மாறிவருவதற்குச் சாட்சி, இன்று சின்னதுரையைச் சாதி விளிம்புவரைக் கொண்டு சென்றுள்ளது. 13 வயது தங்கை சந்திரா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எனக்கு ஊருக்குப் போகப் பயமா இருக்கிறது. எங்களுக்குப் பாதுகாப்பு வேணும், ஊர் மக்களுக்குப் பாதுகாப்பு வேணும்” என்று கூறியுள்ளார். 13 வயது சிறுமி 2023ல் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்டுப் பாதுகாப்பு கேட்கும் வார்த்தைகள் இந்த சமுகத்தின் சாதிய ஒடுக்குமுறையை உரக்கச் சொல்கிறது.

சமுகத்தின் தாக்கமே மாணவர்களை அரிவாள் எடுக்கவைக்கிறது. வெறும் ஆட்சி அதிகார மோகத்தினால் சாதி, மத, குடி பெருமை பேசும் பொறுப்பற்றவர்களே இந்த நிலைக்கு முக்கிய காரணம். சமுக நலனுக்காகப் பேசுவதாகச் சொல்பவர்கள், சமுக நலனுக்காகச் சாதி மதத்தைக் கடந்து சகோதரத்துவத்தையும் சமத்துவத்தைப் பற்று பேசுவது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம். மேலும் சுயநலத்திற்காக இவ்வாறு இழிச் செயலில் ஈடுபடுபவர்களைச் சமுகத்திலிருந்து களைவதும், இவர்களைப் புறக்கணிப்பதும் நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் செய்யும் பெரும் உதவி.

அதேபோல் அரசும் இவ்வாறான சாதிய வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை மாணவர்களிடம் சமத்துவத்தை மேம்படுத்தத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். சமத்துவ விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த புதிய திட்டங்களைக் கொண்டு வருவதும், மேலும் அதற்குத் தேவையான பாடத்திட்டங்களை இணைப்பதும் தற்போதைய சுழலில் மிக அவசியம். மாணவர்களிடையே இவ்வாறான உளவியல் ரீதியான தீர்வைக் கொண்டுவருவதன் மூலமே சாதியற்ற தலைமுறையை உருவாக்க முடியும்.

அதுமட்டுமின்றி எத்தனையோ சமூக செயல்பாட்டாளர்களைக் கண்காணிக்கும் அரசு, இவ்வாறு சமூகத்தில் நஞ்சை விதைக்கும் சாதிவெறிக் கும்பலைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி சட்டரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மேலும் வன்கொடுமை வழக்குகள் விரைந்து நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் வேங்கை வயல், நாங்குநேரி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

- மே பதினேழு இயக்கம்

Pin It