நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே நடந்த ஜாதிவெறி தாக்குதல் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நன்றாக படிக்கக் கூடிய தலித் மாணவனை ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சக மாணவர்கள் எடுபிடிகளாக, இழிவுபடுத்தி வந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அந்த மாணவன் பள்ளிக்குப் போக மறுத்த நிலையில் ஆசிரியர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தி மீண்டும் பள்ளிக்கு வரச் செய்திருக்கிறார்கள்.

ஆத்திரத்தில் ஆதிக்க ஜாதி பள்ளி மாணவர்கள் தலித் மாணவனை வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள். தடுக்க வந்த சகோதரியையும் வெட்டியிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களிடையே கூட ஜாதிவெறி தலை தூக்குகின்ற அளவிற்கு தமிழகம் மிகக் கேவலமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்.nanguneri dalit boyநீண்ட காலமாக ஜாதி எதிர்ப்பு இயக்கங்கள் செயல்படவிடாமல் முடக்கப்பட்டு வருகின்றன. பெரியார் ஜாதியைக் காப்பாற்றும் அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார். ஜாதி எதிர்ப்பு பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தார். அதற்குக் காரணமாக இருக்கிற கடவுள், மதம், ஜாதியை மக்கள் மன்றத்தில் போட்டு உடைத்தார். இப்போது பெரியார் இயக்கங்கள் அப்படிப்பட்ட கருத்துகளை பரப்புகின்ற தொண்டில் இந்துத்துவா வாதிகள் இந்துமதத்தை புண்படுத்துகிறார்கள் என்று சொல்லி உடனே கூக்குரல் போடுகிறார்கள், நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அரசும் பயந்து இந்த பரப்புரைகளுக்குத் தடைபோட்டு வருகிறது. இந்து ராஷ்டிரம் பேசுகிற இந்துத்துவாவாதிகள் ஜாதிக்கு கருத்தியலை வழங்குவதே இந்த சனாதன கொள்கைகள் தான் என்பதை அப்படியே மூடி மறைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு என்ற முகமூடியோடு மக்களிடம் வருகிறார்கள். அதோடு இஸ்லாமிய வெறுப்பையும் அவர்கள் முன்னிறுத்தி வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் குலத் தொழிலை செய்து கொண்டிருந்தவர்கள் தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்பட்ட சமூகநீதித் திட்டங்களால் பயன்பெற்று வளர்ந்தவர்கள். அந்த இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் இப்பொழுது ஜாதியை கையில் எடுத்துக் கொண்டு தங்களுக்குக் கீழே இருக்கிற ஜாதியை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு அரசியல் கட்சிகள் துணை போகின்றன, ஜாதிக் கட்சிகளின் பெயர்களில் ஜாதியை மறைத்துக் கொண்டு தேர்தல் களத்துக்கு வந்து விடுகின்றன. பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி அடையாளத்தைக் குறிக்கும் கயிறுகளை கைகளில் கட்டிக் கொண்டு வகுப்புக்கு வருகிறார்கள். ஜாதி தலைவர்கள் படம் போட்ட டீசர்ட் அணிந்து கொண்டு – ஊரில் வலம் வருகிறார்கள். கோயில் விழாக்களில் ஜாதி அமைப்புகளின் கொடிகள் ஏற்றப்படுகின்றன.

ஜாதிக் கட்சிகள் இதை ஊக்குவிக்கின்றன, தங்களின் ஜாதிக்குரிய இந்துக் கோயிலில் தீண்டப்படாத மக்களை அனுமதிக்க மாட்டோம் என்று - ஜாதிவெறியைத் தூண்டி கடவுள்களையும் ஜாதி சங்கத்தில் உறுப்பினராக்கி வருகிறார்கள்.

ஆகமக் கோயில்களில் கருவறையில் பார்ப்பன புரோகிதர்கள் அரங்கேற்றி வரும் தீண்டாமையை கிராம கோயில்களில் இடைநிலை ஜாதியினர் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் இந்த ஜாதிவெறி குறித்து ஆராய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்திருப்பது வரவேற்கத் தக்கதாகும்.

எனவே இந்த ஜாதிவெறி அரசியல் உருவாக்குகிற ஆபத்துகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான தீர்வுகள் பற்றியும், அதற்கான வழிமுறைகளைப் பற்றியும் இந்த குழு ஆராயும் என்று நம்புகிறோம். ஜாதிவெறிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு இனிமேல் இட ஒதுக்கீடு தர முடியாது, அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கக் கூடாது என்பது குறித்தெல்லாம் நீதிபதி சந்துருவின் குழு பரிசீலிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை.

ஜாதி என்பது அறிவியலுக்கு எதிரானது, சமூகத்தில் ஜாதியின் சுரண்டல், வளர்ச்சிக்கு போடும் முட்டுக்கட்டைகளை எல்லாம் பாடநூல் வழியாக பள்ளி மாணவர்களிடையே நாம் பாடத்திட்டத்தின் வழியாக விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ்நாடு ஜாதியற்ற, ஜாதிவெறி அற்ற மாநிலமாக மாறும் போது தான் தமிழ்நாடு அதற்கான அடையாளத்தோடு, சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It