“ஓய்! குத்தூசியாரே! உம்மைப் போலப் பிற்போக்குப் பேர்வழி கிடையாது, ஓய், உம் கொள்கையிலே ஒரு அங்குல வளர்ச்சி கூடக் காணோமே! உம் நண்பர் சங்கதியைப்பாரும்! மூன்றே ஆண்டில் முறுக்கு மீசையைப்போல வளர்ந்திருக்கிறார்! இதோ! இவைகளைப் படித்துப் பாரும்!”-
- என்று கூறி சில மாதப் பத்திரிகைகளை எடுத்து என் முன்பு வீசி விட்டுக் கனைத்தார், எனக்குத் தெரிந்த பள்ளியாசிரியர் ஒருவர். அவைகளில் இரண்டொன்றை எடுத்துப் புரட்டினேன். சில பக்கங்களில் கோடு கிழித்திருந்தார்! படித்தேன்! பத்திரிகையின் பெயரை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்! அவர் முகத்தையும் பார்த்தேன்! பிறகு சிலவரிகள் படித்தேன். பத்திரிகையில் பெயரை மீண்டும் ஒரு முறை படித்தேன்! திகைத்துப்போய் விட்டேன்!
உங்களுக்கு மயக்கம் வராமலிருக்குமென்றால், இதோ, சிலவற்றைத் தருகிறேன்! படித்துப் பாருங்கள்:-
“தமிழகத்தின் நிலப்பரப்பு பெருகிவிடுவதனால் மட்டும் அதிலுள்ள மக்கள் வளத்துடன் வாழ்ந்துவிட முடியாது. தமிழகத்தின் வளத்தைப் பிற இனத்தவர் சுரண்டிச் செல்லும் பகற் கொள்ளை போன்ற பாதகச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தின் அரசியல் பிற இனத்தவரின் தலையீடின்றி நடைபெற வேண்டும்.”99 இது “சாம்பிள்” நம்பர் -1.
“பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு முனை, வடஇந்திய பாசிஸ எதிர்ப்பு முனை, ஆகிய இரண்டிலும் வெற்றி கண்டாலொழிய தமிழகத்துக்குப் பூரண விடுதலை இல்லை, தமிழ் இனத்துக்குப் புது வாழ்வு இல்லை” இது “சாம்பிள்” நம்பர் -2.
“பிற இனத்தவரின் சுரண்டலுக்குத் தமிழ் நாடு இரையாகக் கூடாது என்பதே தமிழரசுக் கழகத்தின் தலையாய கொள்கை.” இது சாம்பிள் நம்பர்-3.
“டாட்டா, பிர்லா, டால்மியாக்கள் இனி மேல் தென் நாட்டைச் சுரண்டப் புதியதொரு திட்டம் இடப்போவது திண்ணம்.” இது “சாம்பிள்” நம்பர்-4.
“ஏகாதிபத்தியச் சுரண்டலால் இந்தியா வறுமையடைந்து விட்டது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, வட இந்தியப் பண மூட்டைகளின் சுரண்டலால் தென் இந்தியாவின் பொருளாதார வளம் குன்றிவிட்டது என்பது.” இது “சாம்பிள்” நம்பர் -5.
- இவ்வளவுதானா? இன்னமும் உண்டா? என்று கேட்காதீர்கள்! இன்னும் கூடை கூடையாக உண்டு! இப்படி யெல்லாம் எதில் வந்திருக்கிறது, தெரியுமா? வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்பு முயற்சியை எதிர்ப்பதற்காக வடநாட்டாரைச் “சுரண்டிக்” கொண்டிருக்கிறார்களே ஒரு சிலர்! அவர்களில் முக்கியமான ஒருவரின் பழைய ஏடுகளில்தான்! 1947இல் இப்படி!
அய்யோ பாவம்! மூன்றே ஆண்டில் கிருஷ்ணாம் பேட்டைக் கிளி எப்படிக் கழுகாக மாறிப் பறந்து விட்டது, பார்த்தீர்களா?
- குத்தூசி குருசாமி (29-12-50)
நன்றி: வாலாசா வல்லவன்