வடமாநிலத் தொழிலாளர்களால் ஏற்படும் சமூக, பொருளாதாரத் தாக்கங்கள் குறித்துப் பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இவர்களது வருகையால் ஏற்படும் பண்பாட்டு மற்றும் அரசியல் தாக்கங்களாக நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டவர் அல்லாத (இந்த இடத்தில் நான் நாடு என்கின்ற சொல்லை இனம் என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்துகிறேன். மக்கள் எண்ணிக்கையில் மிகும்போது அதிலும் அம்மக்கள் முற்றிலும் மாறுபட்ட மொழி, பண்பாடு இவற்றைக் கொண்டிருக்கும்போது பண்பாட்டுப் பாதிப்பு, கலாச்சாரப் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கவே முடியாத பொது விதியாகும். இப்படியெல்லாம் நடக்காது என்று யாராவது கூறுவார்களேயானால் அது சிறுபிள்ளைத் தனமானது.

சரி, அப்படியொரு பண்பாட்டுக் கலப்பு நடந்தால்தான் என்ன என்பது வேண்டுமானால் நாம் பரிசீலிக்க வேண்டிய கேள்வியாக அமையலாம். இதற்கு இரண்டு கோணங்களில் நாம் பதிலைக் காண வேண்டியிருக்கிறது.migrant workers 730பண்பாடு

முதலாவதாக இன்று இந்தியா என அறியப்படும் இந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியும் பரவியிருந்தது திராவிடர்களே என்கின்றதொரு கருத்துள்ளது. அதன்பின் அது ஆரிய வசமானது என்றும் படிக்கிறோம். இதில் கடைசியாக ஆரிய ஆதிக்கத்துக்குட்பட்ட மண்ணாக, தென்பகுதி இருந்திருக்கிறது.

அந்த ஆதிக்கம் வடக்கிருந்துதான் இங்கு வந்திருக்கிறது. இந்த ஆரியத்தை எதிர்த்துத் தமிழ்நாடு, கேரளா, மகாராட்டிரம் ஆகிய பகுதிகளில்தான் ஒரு எதிர் அரசியலே நடத்தப்பட்டிருக்கிறது. எனினும் குறிப்பாக ஆரியப்பண்பாட்டை, அதன் மூலமான இந்து மதப் பண்பாட்டை முற்றிலுமாக எதிர்த்த போர் தமிழ்நாடளவுக்கு வேறெங்கிலும் நடைபெறவில்லை.

எனவேதான் வடநாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இது விசயத்தில் பெரிய வேறுபாடு நிலவுகிறது. வடக்கிலிருக்கும் இந்து மத நம்பிக்கையும் தமிழ்நாட்டிலிருக்கும் இந்து மத நம்பிக்கையும் ஒன்றே போன்றதன்று. உதாரணமாக அங்கும் இராமபக்தர்கள் இருப்பார்கள். இங்கும் இராமனை வழிபடுகிறவர்கள் இருப்பார்கள். ஆனால் அங்கு இராமபக்தர்களை வைத்து மசூதியை இடிக்க முடியும். ஆனால் இங்கு இராமர் கோவில் கட்டக்கூட, கூட்டம் சேர்ப்பது கடினம்.

இந்தியாவிலேயே சாதிப் பெயரைத் துறந்த மக்கள் கூட்டம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இதில் நாம் மனதில் தாங்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் இருக்கிறது. சாதிப் பெயர் துறத்தல் போன்ற பண்பாட்டு மாற்றங்களானது தொடர் பிரச்சாரம், முன்மாதிரிகள், அவற்றைத் தொடர்ந்து பிறர் செய்வதைப் பார்த்து பின்பற்றுதல் என்கின்ற படிநிலைகளிலேயே இங்கு நிறைவேறியிருக்கிறது. இப்போது வட இந்தியர் எண்ணிக்கை இங்கு பெருகுவதால் ஏற்படும்பண்பாட்டு மாற்றத்தில் முக்கியமாக இந்த ஆரிய இந்து சனாதன எதிர்ப்பு மனநிலை பாதிக்கப்படும் பெருவாய்ப்பு இருக்கிறது. யாதவ் போன்ற சில சாதிப் பெயர்களை இப்போதே நம் இளைஞர்கள் வைத்துக் கொள்ள விரும்புவதை நாம் காண நேரிடுகிறது. எனவே சுருங்கக் கூறின் நாம் ஆரிய எதிர்ப்புப் பண்பாட்டை இங்கு வளர்த்து வைத்திருக்கிறோம். அந்த எதிர்ப்புணர்வு பெரிதாக பாதிக்கப்படும். எனவே இந்தப் பண்பாட்டுக் கலப்பு நமக்கு நன்மை பயக்காது, நம்மை மீண்டும் பின்னடைவுக்கு எடுத்துச் சென்று விடும்.

பொருளாதாரம்

இரண்டாவதாக மேற்குறிப்பிட்டதன் தொடர்ச்சியாக நமது மாநிலம் வளமிக்க மாநிலமாக வளர்க்கப் பட்டிருக்கிறது. Welfare State என்பதற்கு உதாரணமாக அடித்தட்டு மக்களுக்கு இங்கு வாழ்வாதாரங்களை நமது அரசு மக்களின் பொதுப்பணத்திலிருந்து எடுத்து வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த நியாய விலைக் கடை முறை மற்றும் அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கி வருகின்றன. இத்தகைய வளர்ச்சிகளை தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்தத் தவறிய இந்தி மாநிலங்கள், இப்போது நமது வளர்ச்சியை இது எங்கள் இந்திய நாட்டு உரிமை என்கின்ற பெயரில் அனுபவிக்க அனுமதிப்பது எப்படி சரியாகும்? இதனை யாராவது ஒப்புக் கொள்வார்களா? கிட்டத்தட்ட நீட் தேர்வு எதிர்ப்புக்கு சொல்லப்பட்ட அதே காரணிகள் இங்கும் பொருந்தும்.

இடதுசாரித் தோழர்கள் வடமாநிலத்தவர் வருகையை வர்க்கப் பார்வையை மட்டும் கொண்டே அணுக வேண்டும் என்று சொல்வதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ?

ஆழமான மார்க்சியப் பார்வையில் இந்தப் பிரச்சினையை அணுகும் ஒருவர் நம் கோரிக்கைகளை மார்க்சியத்திற்கு எந்த முரணுமின்றி புரிந்து கொள்ள முடியும். ஆனால் முதலாளி, தொழிலாளி கூலி உயர்வுப் போராட்டமாக வர்க்கப் புரட்சியைக் குறுக்கிப் புரிந்து வைத்திருக்கும் தன்னை, முழுமையான இடதுசாரிச் சிந்தனையாளராகக் கற்பனை செய்து கொள்கின்றவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் போகிறார்கள்.

அவர்கள் கீழ்க்காணும் கேள்விகளை எழுப்பி பதில் தேட வேண்டும்.

1. பொதுவாக ஒரு தொழிற்சாலையில் நமது இடதுசாரித் தோழர்கள் தொழிலாளர்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதலாளிகள் இவர்கள் இடத்தில் நிரப்ப வேறு ஊரிலிருந்து கூலி பேசி ஆட்களைக் கூட்டி வருவார்கள். அப்போது அந்தக் கூலித் தொழிலாளர்களை இடதுசாரி இயக்கத் தொழிற்சங்கள் என்ன சொல்லி அழைத்தார்கள் என்று மூத்த தொழிற்சங்க அனுபவமுள்ள தோழர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மூத்த தொழிற்சங்கவாதிகள் அதற்கு என்ன பதில் சொல்கிறார்களோ அதே பதில், வட இந்தியத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

2. இரண்டாவது, வட இந்தியத் தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகுவது என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை, நாளை இந்த மண்ணில் வட இந்திய முதலாளிகளோடு அவர்கள் கூட்டிணைவார்களா அல்லது தமிழ் தொழிற்சங்கத் தலைவர்கள் பின்னால் வருவார்களா என்று அவர்கள் நடைமுறை சாத்தியம் சார்ந்து சிந்திக்க வேண்டும். அளவு மாறுதல் குண மாறுதலுக்கு இட்டுச் செல்லும் என்பதே இயங்கியல் பொருள்முதல் வாதம்.

மேறும் அண்டை மாநிலமான கேரள மார்க்சிஸ்டு கட்சி அரசு இதில் எவ்வளவு கணக்காக இருக்கிறதோ அதையே நாம் கேட்கும் போது இவர்கள் ஏன் வட இந்தியத் தொழிலாளர்களுக்காகக் கண்ணீர் விட வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை.

இதற்கெல்லாம் மேலாக, உதிரிகளாக, இடதுசாரிச் சிந்தனையாளர்களாகத் தன்னைப் பாவித்துக் கொள்பவர்கள்தான் இப்படி பேசுகிறார்களே ஒழிய, தமிழ் நாட்டின் கம்யூனிஸ்டு கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இப்படிப் பேசவில்லையென்றே கருதுகிறேன்.

வடமாநிலங்களில் வேலையின்மையால் ஏற்படும் இயல்பான தொழிலாளர் வருகையைத் திட்டமிட்டதாகப் பார்க்க வேண்டுமா?

அந்தத் தொழிலாளர்கள் திட்டத்துடன் வரமாட்டார்கள். ஆனால் நான் மேலே கூறியுள்ளது போல் அளவுமாறுதல் காலப்போக்கில் குணமாறுதலுக்கு வழி விட்டு இயல்பாகவே திட்டமிடல் உருவாகி விடும். மேலும் இந்தத் தொழிலாளர் வருகையை தங்கள் திட்டமிடலுக்குள் ஆர்.எஸ். எஸ். மற்றும் பாரதிய சனதா கட்சியினர் கொண்டு வந்து விடுவார்கள்.

வடவர் ஆதிக்கம் குறித்துப் பெரியார் காலம் தொட்டு திராவிட இயக்கம் பேசி வருகிறது. பெரியார் வட மாநில முதலாளிகளை மட்டுமே எதிர்த்தார், தொழிலாளிகளை அல்ல என்ற பார்வை முன் வைக்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

தலைவர் பெரியார், பேரறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், தலைவர் கலைஞர் இவர்களனைவரும் வடவர் எதிர்ப்பு, வடவர் அரசியல் ஆதிக்க எதிர்ப்பு,வடவர் பொருளாதாரச் சுரண்டல் எதிர்ப்பு இவற்றைத்தான் பேசியுள்ளார்கள். இதில் வட இந்திய முதலாளிகளும் அடங்குவர். வட இந்தியத் தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு எதனையும் இவர்கள் அளித்ததில்லை. இவர்களனைவரின் பேச்சிலிருந்தும், எழுத்திலிருந்தும் இதற்கு எடுத்துக் காட்டுகள் கொடுக்கப் போனால் அது தனி நூலாக விரியும். தேவைப்பட்டால் தனி வெளியீடுகள் கொண்டுவரலாம்.

உங்கள் கோரிக்கை என்ன?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குறுதியான மண்ணின் மைந்தருக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு என்பதை அனைத்து மட்டங்களிலும் உறுதிப் படுத்துங்கள் என்பதுதான்.

மேலும் வடஇந்தியருக்கு அரசியல் அதிகாரமளிக்கப் படக் கூடாது. அவர்கள் வாக்குரிமை பெறுவது தடுக்கப் பட வேண்டும்.

- ஓவியா

நேர்கண்டவர்: வெற்றிச்செல்வன்