தமிழ்நாட்டில் தீண்டப்படாத மக்கள் கோயில்களில் நுழைய இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து ஆங்காங்கே உரிமைப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி இருக்கின்றன, இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல திருப்பமாகும். விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் ஒரு சாதிக்காரர்கள் கோயில் எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி தலித் மக்களை உள்ளே விட மறுத்தார்கள். இதை எதிர்த்து போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தியும், சாதிக்காரர்கள் இதை ஏற்க மறுத்த காரணத்தினால் அதிகாரிகள் அந்த கோயிலுக்கு சீல் வைத்து விட்டனர்.

கோயிலுக்கு எப்படி சீல் வைக்கலாம்? தலித் மக்களையும் உள்ளே அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா? என்று சிலர் சில கருத்துக்களை முன் வைக்கிறார்கள். ஜாதித் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் என்பது ஒரு நீண்டப் போராட்டம், அது பல மைல்கற்களை தாண்டி தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கிறது. கோயில்களில் வழிபாட்டு சடங்குகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது, எனவே புனிதம் கெட்டுவிட்டது எனவே கோவிலை திறக்க வேண்டும் என்று தனிநபர் வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. ஆனால் அந்த வழக்கின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க வில்லை. கோயில் திறப்பதை அறநிலையத்துறை தான் முடிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறுவிட்டது. கோயிலை பூட்டி வைத்த காரணத்தினால் தான் அடுத்த கட்ட நிகழ்வை நோக்கி இந்த பிரச்சனை நகர்த்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

அதேபோல் கரூரில் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் உள்ளூர் சாதிக்காரர்கள், தலித் மக்களை கோயிலுக்கு உள்ளே விட மறுத்தார்கள். இந்த கோயில் தங்கள் சாதிக்கு மட்டும்தான் சொந்தமானது என்று கூறினார்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், சமரசம் ஏற்படவில்லை, பிறகு கோயில் சீல் வைத்து மூடப்பட்டது. அதற்குப் பிறகு கோயிலை திறக்க வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் போராடினார்கள், பிறகு மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், இப்போது தலித் மக்களை நாங்கள் கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புக் கொள்கிறோம் என்று முன்வந்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. எனவே கோயிலை பூட்டுகிற ஒரு நடவடிக்கையை எடுத்த காரணத்தினால் தான் அடுத்த கட்டத்தை நோக்கி இந்த முயற்சி நகர்த்தப்பட்டிருக்கிறது. கோயிலை பூட்டக்கூடாது உடனே தலித் மக்களை உள்ளே அழைத்துச் செல்வதுதான் நியாயம் என்று பேசுகிறவர்கள் அதில் படிப்படியான நிலைப்பாடுகளை எடுத்து முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது என்ற கள எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

அதே போல் இந்த கோயில் தங்கள் சாதிக்கானது, மற்றவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று கூறுகிறார்கள் அவர்கள் நடத்துகிற வணிக நிறுவனங்களில், ஹோட்டல்களில், பல்வேறு தொழில்களில் தங்கள் சாதிக்காரர்களுக்கு மட்டும்தான் பொருட்கள் விற்கப்படும் என்று சொல்வார்களா? ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தங்கள் சாதி மருத்துவர் தான் கவனிக்க வேண்டும், வேறு சாதி மருத்துவர் தங்களது உடலுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று சொல்வார்களா என்று கேட்டால் ஒரு போதும் அப்படி சொல்ல மாட்டார்கள்.

சமூகத்தில் சாதியைக் கடந்த அனைவருக்கும் சமவுரிமைக் கோரும் அரசியல் சட்டத்தின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்துமதம் பெற்றெடுத்த சாதி - கோயில் சடங்குகளில் மட்டும் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் பார்ப்பனியம் உயிரோடு இருக்கும் என்பதே அடிப்படையானக் காரணம். இந்து ஒற்றுமையை இந்து மதத்தை பேசிக் கொண்டிருக்கிற சங்கிகள், இந்து மதத்திற்கு உள்ளேயே இப்படி ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அவமதித்துக் கொண்டிருக்கிறார்களே என்பதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல முன் வராமல் பதுங்கிக் கிடப்பதையும், இவர்கள் போடுகிற இந்து வேடம் என்பது வெறும் சாதி வெறி வேஷம் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.